ஶ்ரீசக்ர தியானம் – 40

தம் ஸர்வஸம்பத்ப்ரதா

ஆன்ம தீக்கை அளிப்பவளே, அன்னையே, நீ உன் இறைவனோடு இணைகையில் ஆழி தன்னை உயர்த்திக்கொண்டு ஆதவனிடம் செல்கிறதா அல்லது பகலவன் கடல் மீது ஒளிர்கின்றானா? சிறிய நீர்த்துளி சூரியனைக் கண்டதும் சிறகு முளைத்து நீராவியென வளிமண்டலத்தில் ஏறும் பிரபஞ்ச முக்கியத்துவம் வாய்ந்த சின்னஞ்சிறு நிகழ்வை யார் கவனிக்கிறார்கள்? ஒரு துளியின் மேலேற்றம் மழைமேகம் உருவாவதை தொடங்கி வைக்கிறது. கணம் கணமென, ஒவ்வொரு நாளும் கீழ்நோக்கிப் பொழியும் சூரியனின் கருணை, ஆழியை மேலெழும் மேகமாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது. கருமேகங்களால் வானம் மூடப்பட்டிருக்கையில் சூரியனின் ஒரு கதிர்கூட உறைந்துநிற்கும் பூமியைத் தொட அனுமதிக்கப்படுவதில்லை. இருட்கணத்தில், கருமேகங்களின் அப்புறத்தே அருள் வெள்ளம் காத்திருப்பதை எவரும் ஐயுறுவதில்லை. 

மின்மினிப் பூச்சி போல தெரியும் சிறிய ஒளி மின்னல்… அவ்வளவே! அதைத் தொடர்ந்து மின்னல்கீற்றுகள் குருடாக்கும் வெள்ளி ஒளியுடன் கருமேகத்தை கிழிக்கின்றன. அதைத் தொடர்ந்து தேவர் தேவனான இந்திரன் மேலிருந்து இடியேற்றை எறிந்ததுபோல் இடிமுழக்கம் எழுகிறது. நிலம் அதிர்ந்து வானம் பிளந்து மழையெனப் பொழிகிறது. கயிலையிலிருந்து ஒரே சமயத்தில் பல்லாயிரம் கங்கைகள் இழிவதுபோல் மழை. உலகு முழுவதும் உள்ள பாலைகளை மறைக்கும்படி வெள்ளம் பெருகுகிறது. பூவுலகின் ஒவ்வொரு தோட்டத்திற்கும் நீர் பாய்கிறது. மீதமுள்ள மேகங்கள் வெள்ளிச்சரிகை பூணுகின்றன. வெள்ள நீரின் மேல் வீழ அனுமதிக்கப்படாத சூரிய ஒளியில் மெல்லச் சரியும் அலைகள் மின்னுகின்றன. உனது மணிபூரகத்தில் உள்ள சிந்தாமணி தன் ஒளிக்கதிர்களை அனைத்தின் மீதும் படரவிட்டது போல் தோன்றுகிறது. விண்ணும் மண்ணும் மீயொளிர் விண்மீன் வெடிப்புகளால் (supernovas) நிறைகின்றன. அவை ஒவ்வொன்றும் தமது வண்ணமிகு கதிர்களை அனைத்து திசைகளிலும் வீசுகின்றன.

அன்னையே, அனலெனப் பொழியும் சூரியன் உலகின் மேலுள்ள அனைத்தையும் எரித்தழிக்கையில், உன் இறைவனால் சாம்பலாக்கப்பட்டவற்றுக்கெல்லாம் புத்துயிர் அளித்து, ஆழியையும் உலகையும் விண்ணையும் உன் வண்ணமிகு தோற்றமெனும் ஆனந்தக் களிப்பால் நிறையச் செய்வதற்கென, எழில்மழைமேகங்களை நீ சேகரிப்பதை எவரும் ஊகிப்பதில்லை.  நீயும் உன் இறைவனும் இணைகையில் ஒரு துடிப்பு (ஸ்பந்தம்) மட்டுமே தோன்றும் என கவிஞன் உரைத்தான். இப்போதோ, உயிர் எங்கும் நிறைந்து துடித்துக்கொண்டிருக்கிறது. வானில் மீன்கள் மின்னிக்கொண்டிருக்கின்றன. பூவுலகில் பல்லாயிரம் பூக்கள் மலர்கின்றன. அன்றலர்ந்த மலர்களின் இதழ்களுக்குள் நுழைய வண்ணத்துப்பூச்சிகளுடன் வண்டுகள் போட்டியிடுகின்றன.

அனைத்து ஓடைகளும், சிற்றாறுகளும், நதிகளும் களகளத்தபடி உவகையோடு ஓடிச் சென்று கடலை அடைகின்றன. காற்று வந்து மரக்கிளைகளை தழுவிச் செல்கிறது. மரங்களோ, நீயும் உனது இறையும் ஆடும் லாஸ்யத்தையும் தாண்டவத்தையும் தாமும் ஆடிப்பார்க்கின்றன. பலரும், இறைவனை உலகை அழிப்பவனாக மட்டுமே காண்கின்றனர். இப்போது, அவன் தன்னை ஒளிரும் ஆன்மாவாக அனைத்து உயிர்களின் ஆழத்திலும் பொதிந்து வைத்திருப்பதை காணமுடிகிறது.

சிப்பி, ஆழியின் கீழ்தளத்தில் ஊரும் எளிய உயிரி. அதனுள்ளே முத்தின் கரு உண்டாகி மெள்ள மெள்ள ஒரு அதிசயமாக வளர்கிறது. தூய அழகுகொண்ட முத்தை ஆழத்திலிருந்து பெறுகிறது உலகு. அதே போல் மானுடரின் தசைப்பிளவின் இருளில் மறைந்திருக்கும் சிவனின் சிறு ஒளிப்பொறி முழுமைகொண்ட ஒளிரெழிலாக (சிவஜோதி) வளர்கிறது. ஒருவர் விடுதலை பெறுகையில் ஞானம் அவரில் அரு முத்தென (சிந்தாமணி) முகிழ்க்கிறது. அதுவரை, உனது எளிய தோற்றத்தின் ரகசியத்தைக் கூட எவரும் அறிவதில்லை.

கோடையின் வறண்ட வெம்மையில், மேலிருந்து எரிக்கும் சூரியனையும் எந்நேரமும் பற்றியெரியக் காத்திருக்கும் காய்ந்த மரங்களையும் சோர்வுடன் பார்க்கின்றனர் மக்கள். அச்சமயம், நீ விண்ணின் மதகுகளை திறந்துவிடுகிறாய், அனைவரும் உன்னை போற்றிப்பாடுகின்றனர். உன் முலைப்பாலென இனிக்கும் தண்மழை பொழிகிறது. எரிக்கும் வெயிலில் ஊட்டம்நிறை மழையின் அருளுண்டு என்பதை எவரும் எண்ணியிருக்கவும் கூடுமோ? வளத்தைக் கொணர்பவள் நீ. உனது லாஸ்யத்தின் ஒவ்வொரு அடிவைப்பிலும் ஒரு புத்துவகை, புதிய அருள் ஒன்று எமக்கென காத்திருக்கிறது. அருளன்னையே, உனது ஆழ்மறைகளை, பெருரகசியங்களை எமக்கு அறிவிப்பாயாக! உனக்கெமது மீவணக்கம்.

|| தம் ஸர்வஸம்பத்ப்ரதா ||

Leave a comment