சௌந்தர்யலஹரீ – 40

தடித்வந்தம் ஶக்த்யா திமிரபரிபந்தி*ஸ்பு*ரணயா

ஸ்பு*ரன்னானாரத்னாப*ரணபரிணத்தே*ந்த்த*னுஷம்

தவ ஶ்யாமம் மேக*ம் கமபி மணிபூரைகஶரணம்

நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபு*வனம்

பாடல் – 40

அணிகலன்களும் அருமணிகளும் பதித்த இந்திரவில்லேந்தி

அனைத்திருளையும் அகற்றும் மின்னல் மிடைந்த கருமேகமென 

மணிபூரகத்தில் உறையும் சக்தியான உன்னையும்

உன்னுடன் இணைந்த பசுபதியையும் வணங்குகிறேன்.

அரனின் எரிநெருப்பில் சாம்பலென எரிந்த முப்புரங்களும்

உன் மழையால் குளிர்கின்றன

**

முதிர்கரு கருப்பையில் இருக்கையில், வளரும் குழந்தை எதையும் பார்ப்பதோ கேட்பதோ இல்லை. அது சுவாசிப்பதில்லை, உண்பதில்லை. அதற்கென தனி நனவும் இல்லை. என்றபோதும் அதற்குத் தேவையான உயிராற்றல்கள் எல்லாம் அன்னையின் சுவாசம் வழியாகவும், அவள் உண்ணும் ஊட்டச்சத்துக்கள் வழியாகவும் கிடைத்துவிடுகின்றன. உயிர்வாழத் தேவையான அனைத்தையும் அது தன் தொப்புள்கொடி வழியே பெறுகிறது. அன்னையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வரை குழந்தை அன்னையின் ஒரு பகுதியேதான். தொப்புள்கொடி இருந்த இடத்தில்தான் மணிபூரகம் அமைந்துள்ளது. அது பிறப்புறுப்புகளுக்கும் (ஸ்வாதிஷ்டானம்) இருதயத்திற்கும் (அநாஹதம்) இடையில் அமைந்துள்ள பகுதி. உடலின் வெகுரகசியமான செயல்பாடுகளான ஊன்ம ஆக்கச்சிதைவு (metabolism) இப்பகுதியில்தான் நிகழ்கின்றது. ரசவாதம் போல் பல்வேறு நெருப்புகளும் நீர்களும் ஒன்றுகலந்து ஒரு உடலை வடிவமைத்து அதற்குத் தேவையான ஊட்டத்தை அளித்துக்கொண்டே இருக்கின்றன. உண்ணப்பட்ட அனைத்தும் எரிக்கப்பட்டு நுண்ணிய கூறுகளாக பகுக்கப்படுகின்றன. அதன் சாரம் வடித்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு அணுவுக்கும் உணவாக்கப்படுகிறது. முழு உடலையும் வயலென்று கொண்டால், உயிரளிக்கும் மழையால் அதற்கு நீர் பாய்ச்சப்படுகிறது எனலாம். எனவே, வாழ்வளிக்கும் தந்தையும் தாயும் மணிபூரகத்தில் உறையும் சூல்கொண்ட மேகமென கருதப்படுகின்றனர்.

இப்பகுதிக்கென பல்வேறு செயல்பாடுகள் உள்ளன. தேவையின் பசியும் மனநிறைவும் இங்குதான் உணரப்படுகின்றன. உணவு, உடை, இருப்பிடம், குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பு என அனைத்தையும் பெறுவதற்கென உடலுறுப்புகளெல்லாம் செயல்பட வைக்கப்படுகின்றன. மணிபூரகத்தில் உள்ள நெருப்பு வேள்வித் தீ போன்றது. ஒருபோதும் அணைக்க முடியாதது அது. ஒவ்வொரு நாளும் அதற்கு எரிபொருள் இடப்பட வேண்டும். இடப்பட்ட அனைத்தும் விழுங்கப்பட்டு மேலும் மேலும் கோரப்படுகிறது. வாழ்வில் தொடரும் ஆர்வம், அனைத்தையும் விழுங்கும் மணிபூரகத்தால் உயிர்ப்புடன் வைக்கப்படுகிறது. இரண்டு வகையான தேவைகள் நிறைவேற்றம் தேடியபடி இருக்கின்றன. ஒன்று, மணிபூரகத்திற்குக் கீழே, பகுத்தறிவுக்கு எட்டாத காமமென ஸ்வாதிஷ்டானத்தில் தோன்றுவது. இன்னொன்று, கனலும் இதயமான அநாஹதத்திலிருந்து வருவது.

ஒரு சூழலை வைத்து இதை புரிந்துகொள்ளலாம். இளையவள் ஒருத்தி தன் கணவனோடு நெருங்கியிருக்கையில் அவளது பாலியல் இச்சை தூண்டப்படுகிறது. தான் காம வேட்கையில் எரிவதாக அவள் உணர்கிறாள். ஸ்வாதிஷ்டானத்தின் தீயில் எறியப்பட்டவள் போலாகிறாள். விரைவில் அவள் கருவுறுகிறாள். இப்போது அவளது பிறப்புறுப்புப் பகுதியில் உள்ள நெருப்பு தணிகிறது. ஆனால் வேறொரு நெருப்பு இதயப்பகுதியில் ஏற்றப்படுகிறது. தன்னுள் வளரும் குழந்தை குறித்த எதிர்பார்ப்புகளிலிருந்து தன் மனத்தை அவளால் விலக்க முடிவதில்லை. குழந்தை பார்க்க எப்படி இருக்கும்? ஆணாயிருக்குமா? பெண்ணாயிருக்குமா? அதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதற்கு எப்படி கல்வியளிப்பது? அதற்கென என்ன இலக்குகளை நிர்ணயிக்கலாம்? அதன் தகப்பன் எப்போதும் தனக்கு உண்மையாய் இருப்பானா? அவனை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது? தகப்பனுக்கும் குழந்தைக்கும் இடையிலான ஒருவகை பகை உணரப்படுகிறது. இவையெல்லாம் இதயத்தின் வேதனைகள். ஸ்வாதிஷ்டானமும், மணிபூரகமும், அநாஹதமும் ஒரு செங்குத்துக் கோட்டில் அமைந்துள்ளன. மனம் இங்கே மேலும் கீழுமாக போய்வந்துகொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு பகுதியே நனவுக் கோளத்திற்குள் நிகழ்வது. பெரும்பாலானவை இருளிலேயே நிகழ்கின்றன. 

காமம் எங்கிருந்து வருகிறது? ஏன் அது வல்லந்தம் கொண்டதாய் இருக்கிறது? தன் முகத்தை ஏன் அது கவர்ச்சியாகவும் அருவருப்பாகவும் மாற்றிக்கொள்கிறது? அன்பு-வெறுப்பு என்ற இருமனப்போக்கை உண்டாக்குவது எது? பனிப்பாறையின் நுனி மட்டுமே தெரிகிறது. மற்றதெல்லாம் பெரும்புதிராக உள்ளது. உண்ணும் உணவு என்னவாகிறது? உப்புக்களாகவும், அமிலங்களாகவும், புரதங்களாகவும், ஊட்டச்சத்துக்களாகவும் அது பகுக்கப்படுவது எங்ஙனம்? சாரத்தை எலும்பணுக்களுக்கும், நரம்பணுக்களுக்கும் எடுத்துச் செல்வது யார்? இது எதையும் அறியாத ஒருவரின் மணிபூரகத்தில் அருள்நிறை முகமை ஒன்று அமைந்துள்ளது. உடல்தேவைகளை எல்லாம் அது அறிந்திருக்கிறது. வாழ்க்கைக்கென ஒரு ரகசிய மேலாளர் யாரோ இருப்பதுபோல எல்லா தேவைகளும் கவனித்துக்கொள்ளப்படுகின்றன.

உழவர் விதைகளை விதைத்துவிட்டு காத்திருக்கையில், ஒரு மேகம் வந்து அவர் வயலில் பொழிகிறதல்லவா? உழவர் எவரும் ஏமாற்றப்படுவதில்லை. ஒவ்வொருவரும் தன் பங்கை பெறும்படி மேகங்கள் பரவுகின்றன. அதேபோல், மணிபூரகத்தின் மேகமும் சிறந்த தோழராக விளங்குகிறது. அது வாழ்வின் தந்தை, அன்னை என இருவருக்குமான களமாக உள்ளது. எனவே தியானத்தில் ஆழ்பவர் இவ் ஒளிமிகு பகுதியில் திளைக்க தன் மனதை செலுத்துகிறார். அது, இங்குமங்கும் மினுங்கும் ஒளிகள் கொண்ட அந்ததாமிஶ்ரம் (முற்றிருள்) எனப்படுகிறது. வாழ்வெனும் கொடை ஒரு அருளென வருகிறது. ஒருவர் தான் பெற்ற அருளை எத்துணை அறிகிறாரோ, அவரது புரிதல் அத்துணை ஒளிபெறுகிறது. முற்றிருளில் வரும் ஒளி மிகக்குறுகிய காலமே இருப்பது. என்றாலும் சோர்வடைந்த பயணி தனது அடுத்த அடிவைப்பைக் காண அது உதவுகிறது. அந்த ஒளி மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருப்பது.

நம் அன்றாடப் பிழைப்பு அவ்வாறிருக்கிறது. பொதுவாக எப்போதும் இருண்டிருக்கும் உலகில், நம்பிக்கையும், நன்மையும், உதவியும் மினுமினுக்கும் ஒளிகள் போல வருகின்றன. அவற்றின் ஊற்றுமுகம் எது என்று நாம் அறிவதில்லை, ஆனால் அப்படி ஒன்று இருப்பதை மட்டும் அறிகிறோம். அனுபவங்கள் வழியே நம்பிக்கை வலுப்படுகிறது.  வெப்பமும் புழுக்கமும் உள்ள நாளில் மழை வருமென, அனைத்தையும் குளிர்விக்குமென அறிகிறோம். அதேபோல், மழையும் வருகிறது. காமம், மேன்மையான விழைவுகள் என இரண்டுவகை நெருப்புகளுக்கும் இது மிகவும் பொருந்தும். அழகியல் ஊட்டம் நிறைந்த வானவிற்களால் இதயம் மீளமீள மகிழ்கிறது. மேன்மையான தேவைகளுக்கும் ஒரு லய ஒழுங்கு அமைகிறது. ஆக, ஸ்வாதிஷ்டானத்திற்கும் அநாஹதத்திற்கும் இடையே அமைந்துள்ள மணிபூரகம் வாழ்வுக்கு நிறைவளிக்கிறது. நம்பிக்கையும் அருளும் இரண்டு சிறகுகள். இந்தப் பாடலில் நாம் பறந்தெழுவதில்லை. இவ்விரு சிறகுகளையும் விரித்து மெல்ல கீழிறங்கி நிலத்தில் கால்பதிக்கிறோம். அறுதி ரகசியங்கள் மூலாதாரத்தில் கண்டடையப்பட வேண்டியவை. அழகும் நன்மையும் நம்முள்ளேயே ஊறுவதைக் கண்டடைவது பெருவியப்பு தருவது. 

ஒன்றுள் ஒன்றாக பிணைக்கப்பட்ட இரண்டு முக்கோணங்களின் உள்ளே அமைந்த ட*ம் எனும் மந்திரம் தியானிக்கப்படுகிறது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s