ணம் ஸர்வஸித்தி*ப்ரதா
இவ்வுலகின் பேரன்னையே! எமது உலகு எத்தனையோ ஆயிரமாண்டுகளாக கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த ஒரு தீப்பந்தென இருந்திருக்க வேண்டும் என அறிகிறோம். எமது சகோதரக் கோள்கள் கூட, சூரிய விபத்திற்குப் (solar catastrophe) பிறகு அதேபோல் இருந்திருக்கக் கூடும். சூல்மேகங்கள் உருவாகி நீர்பொழிந்து ஒவ்வொன்றையும் குளிர்வித்து தற்போதைய நிலையை எய்த, சூரியனின் இந்தக் கங்குகள் எத்தனை ஆயிரமாண்டுகள் பொறுத்திருந்திருக்க வேண்டும்! இவ்வுலகை குளிரச் செய்தது மட்டுமன்றி இதில் உயிரினங்களும் தோன்றி வாழும்படி செய்திருக்கிறாய். இயற்கை கலையை நகலெடுப்பதாகத் தோன்றுகிறது! கவிக்கூற்றுகளின்படி, உன் இறைவன் தன் ஊழ்கத்தில் தீவிரமாக இருந்தபோது ஒளிருடல் தேவர்கள் பேரிறையின் விதையை உன் அருளப்பெற்ற கருப்பையில் விதைக்க வேண்டி சூழ்ச்சி செய்தனர். அதற்கென, இறைவனின் ஸ்வாதிஷ்டானத்தில் பாலியல் வேட்கையைத் தூண்டுவதற்கென, காலந்தப்பிய இளவேனிலை உருவாக்கினர்.
இறைவனுக்கு உன்னை முழுதளிக்க நீ செய்த ஊழ்கமும் வழிபாடும் ஈஶ்வரனின் தீவிரத்திற்கு எவ்விதத்திலும் குறைந்தவை அல்ல. அது அனைத்தையும் உண்டாக்கும் மோகநெருப்பெனவே திகழ்ந்தது. காதல் ஆர்வம்நிறை அக்கணத்தில் கூட, மன்மதனின் மலரம்புகள் துளைக்கையில் உனது இறைவன் எவ்விதம் எதிர்வினையாற்றுவான் என்றே தேவர் பதைத்தனர். எதிர்பார்த்தபடியே, உன் இறைவன் கடுஞ்சினத்துடன் தனது நெற்றிக்கண்ணை திறந்தான், அவனது சீற்றமெனும் நெருப்பில் காமதேவன் சாம்பலென எரிந்துபோனான்.
ஆயிரமாண்டுகள் கழிந்தபின்னர், உமது இணைவின் கணம் நெருங்கியபோது, அவனது விதை உனது கருப்பையில் இடப்படும் ஊழ் அமையவில்லை. பதிலாக, ஆயிரமாண்டுகளுக்கு தீயால் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது. அக்னிதேவன் அயர்ந்துபோனபோது, அனைத்தையும் தண்ணியதாக்கும் கங்கையன்னை அக்கருவைப் பெற்று ஆயிரமாண்டுகள் வைத்திருந்தாள். இறுதியில், அனைத்தையும் விழுங்கும் இறையின் நெருப்பை கங்கையால் தாங்கமுடியாமலானபோது, மானசரோவரம் எனும் விண்ணக ஏரி அதை பெற்றுக்கொண்டது. இன்னுமொரு ஆயிரமாண்டுகள் கழிந்தபின்னர் அக்கருவிலிருந்து தோன்றிய ஆறு பொற்கதிர்கள், உனது நல்லூழால், ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. துயரம் நீங்கியதை அறிந்த நீ சரவணப் பொய்கையை அடைந்து அங்கு கார்த்திகைப் பெண்கள் அறுவர் குழவிகளுக்கு முலையூட்டியதைக் கண்டாய். உன் தண்ணணைப்பில் சிவனின் ஆறுமகன்களும் ஆறுமுகம் கொண்ட அறுமுகனென ஆயினர். சரவணப் பொய்கையில் பிறந்ததால் அவன் சரவணபவன் எனப்பட்டான். கார்த்திகைப் பெண்டிரால் முலையூட்டப் பட்டதால் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்பட்டான். ஆறு தனிக் குழவியரின் ஒட்டுமொத்தம் அவன் என்பதால் ஸ்கந்தன் ஆனான். இறைவனின் இதயமெனும் குகையில் செல்வமென நிரம்பியுள்ளதால் அவன் குகன் என்றழைக்கப்படுகிறான். முழுமை ஞானத்தை மதிப்பிடுபவன் அவன், எனவே சுப்ரமண்யன் என்பதும் அவன் பெயர்.
ஆக, படைப்பவனின் பாலுணர்ச்சியெனும் நெருப்பிலிருந்து வெளிப்பட்டு பல்லாயிரமாண்டுகள் ஒரு துன்பநிகழ்வென எரிந்துகொண்டிருந்தது, உனது அருட்செயலால் பெருங்கொடையென ஆனது. அழிக்கும் இறைவனுக்கு தோன்றாத் துணையென இருந்துகொண்டு, அண்டங்கள் தோன்றி மறையும் சுழற்சியை எப்போதைக்குமென காத்துக்கொண்டிருக்கும் உன் அருளால்தான் யாம் கடந்துவந்த மரணவாயில்களை, எரிநெருப்பை நாங்கள் திரும்பிப் பார்ப்பதில்லை. எதிர்வருவதை நோக்குகையில், நெருங்கும் சிதைநெருப்பால் விழுங்கப்படுவதை அன்றி வேறெதனை நாங்கள் காணமுடியும்?
ஒரு விந்தணுவென பல்லாயிரம் சகோதர விந்தணுக்களுடன் எனது தந்தையின் விதைப்பைகளில் நான் உறங்கிக்கொண்டிருந்தேன். பின்னர், பாலியல் வேட்கை எம்மை எமது தந்தையின் விதைப்பையிலிருந்து வெளியேற்றியது. பித்தெழுந்த அக்கணத்தில் நாங்கள் ஓடிச்சென்று எமது அன்னையின் கருச்சினையில் அடைக்கலம் தேடினோம். பல்லாயிரவரில் நான் மட்டுமே எஞ்சினேன் என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது. எனக்குப் பின்னால், நம்பிக்கையுடன் அகதிகளெனத் தொடர்ந்தவர்களின் பெருங்கூச்சலை கேட்டேன். என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. எனக்குப் பின்னால் வாயில் அடைக்கப்பட்டது. அன்னையின் கருச்சினை! கணப்பு அடுப்பேதான் அது. என்னவொரு வெம்மை! நான் வளைந்துநெளிந்து பிளவுபட்டேன். எனது உறுப்புகளை நான் எப்படி விலக்க முடியும்? விடாப்பிடியாக ஒவ்வொன்றையும் பற்றியபடி, கொடுமையான வேதிப்பொருள்கள் வந்தபடி இருந்த அந்த நரகவெம்மையில், எனது ஒருமையை காப்பாற்றிக்கொண்டேன்.
விரைவிலேயே எனது கோள வடிவை நான் இழந்தேன். பல நீட்டல்களும், பள்ளங்களும், ஒட்டுகளும் என்னில் வளர்ந்தன. அகன்ற வாய் ஒன்று கிட்டியது. அதற்கு கொடுக்கப்பட்ட முதல் பணி, முடிந்தவரை உரக்க அழுவது. நல்ல வேளையாக, நீ எனக்கு பற்களை அளிக்கவில்லை. இருந்திருந்தால், சிலந்திக்குட்டியைப் போல என் தாயையே நான் உண்டிருப்பேன். என் அன்னையின் கருப்பையென்னும் சிறையில் வாழ்ந்ததே நரகத்தில் இருக்கப் பழகிக்கொண்டதுபோல்தான். அதன்பின்னர் சமூக வாழ்வெனும் இரண்டாவது சிறைக்குள் வந்தேன். அங்குதான் எத்தனை வகையான நெருப்புகள் எரிகின்றன? பசி, விடாய், சூழல் வசதிக்குறைவு, போட்டி, வாழ்க்கைப் போராட்டம், பிள்ளைபெற்று இனத்தைப் பெருக்குதல், ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் உணர்ச்சிப் போராட்டங்கள்…
விவரிக்கப்படாத இந்தத் தழல்களெல்லாம் இருந்தபோதும், அன்னையே, என்னைத் தேற்றுவதற்கென, ஆறுதல்படுத்த, இனிய உணவூட்ட, உறங்க வைக்க நீ இருக்கிறாய். என்னைவிட்டு நீ அகலமாட்டாய் என்பதை நான் உறுதியாக அறிவேன். எனது பிறப்புறுப்பில், பெரும் கலவரங்களை ஏற்படுத்தக்கூடிய பல்லாயிரம் வெடிமருந்துகள் வைக்கப்பட்டுள்ளதை நானறிவேன். ஆனால், அன்னையே, ஸ்வாதிஷ்டானத்திற்கு முறிமருந்தாக மணிபூரகம் இருக்கிறது. சிந்தாமணியைப் போல என்னை முழுமைபெறச் செய்வதே உன் நோக்கம். மணிபூரகத்தில் எனக்கென எப்போதும் காத்திருக்கிறாய் நீ. உன் அருளில் அடைக்கலம் தேடுகிறேன் நான். முழுமையின் அன்னையே, என்னை ஏற்பாயாக! உனக்கு எனது வணக்கங்கள்.
|| ணம் ஸர்வஸித்திப்ரதா ||