தவ ஸ்வாதி*ஷ்டா*னே ஹுதவஹமதி*ஷ்டா*ய நிரதம்
தமீடே ஸம்வர்தம் ஜனனி மஹதீம் தாம் ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோத*கலிதே
தயார்த்ரா யாத்ருஷ்டி: ஶிஶிரமுபசாரம் ரசயதி
பாடல் – 39
அன்னையே
வேள்வி நெருப்பை உன் ஸ்வாதிஷ்டானத்தில் வைத்து
உன்னை போற்றுகிறேன்
எப்போதும் அதை பேரழிவைக்கொணரும்
தீயாகவே காண்கிறேன்
அவனது பெருஞ்சினம் உலகுகளை எரிக்கையில்
உன் கருணை கண்பார்வை வழியே
உலகம் இளவேனிலின் தண்மைகொள்ளட்டும் என
அங்கே ஸமயத்தையும் வைக்கிறேன்.
**
அவிழ்க்க முடியாத புதிரென நாம் வாழ்ந்து மறைகிறோம். இரவில் படுத்துறங்குவதற்கெனவே பகலில் விழித்தெழுகிறோம். வெளிவிடுவதற்காகவே மூச்சை உள்ளிழுக்கிறோம். இனிய உணவு சமைத்து உண்டு மகிழ்கிறோம், பின் அதனை மலமென வெளியேற்றுகிறோம். அறியாதவர் அச்சத்துடனும் ஐயத்துடனும் சந்திக்கின்றனர். இவையே நட்பெனவும் தோழமையெனவும் மலர்கின்றன. தோழமை கசந்துபோகிறது, பல வருடங்கள் நெருங்கி வாழ்ந்தவர்கள் ஒருவரையொருவர் கடுப்பேற்றுகின்றனர், அடுத்தவர் இருப்பையே வெறுக்கின்றனர். இந்தப் புதிரை ஒருவர் தன் சொந்த வாழ்வின் அடித்தளத்திலேயே எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வடமொழியில் இந்த அடித்தளம் ஸ்வாதிஷ்டானம் எனப்படுகிறது. துணியின் மெய்மை ஊடும் பாவுமாக அது நெய்யப்படும் நூல்களிலிருந்து வருகிறது. நூலின் மெய்மை அதன் இழைகளில் உள்ளது. இழையின் மெய்மை அதன் மூலப்பொருளின் அணுத்திரண்ம அமைப்பில் (molecular arrangement of the material of the fibre) உள்ளது. இப்படியாக, அது முடிவிலாது சென்றுகொண்டே இருக்கிறது. எதற்கும் ஒரு அடித்தளமும் வெளிப்படையாகத் தெரியும் மேலீடும் (apparent superimposition) உண்டு.
வாழ்வும் மரணமுமே சிக்கலின் இரண்டு விளிம்புகள். நாம் சுவாசிக்கையில்தான் உயிர்வாழ்வதாக கருதப்படுகிறோம். உயிர்மூச்சுக்கென ஒரு ஆற்றல் உண்டு. யோகியர் ஐம்மடிப்பு கொண்ட ஆற்றல்கள் (ப்ராணன்கள்) குறித்து விளக்கியுள்ளனர். உள்ளிழுக்கப்படும் மூச்சு ப்ராணன் என்றும் வெளிவிடப்படும் மூச்சு அபானன் என்றும் அழைக்கப்படுகின்றன. உள்ளிழுத்தல் வெளிவிடல் எனும் இரண்டு முனைகளுக்கிடையே சுவாசம் நிகழ்கிறது. ஆக, வாழ்வுடன் தொடர்புடைய அனைத்திலும் எதிரிணைகள் உள்ளன. அன்பு வெறுப்பை ஏற்படுத்துகிறது; வெறுப்பு அன்பை உருவாக்குகிறது. ஒன்று மற்றொன்றாக உருமாறுவதை எளிதில் புரிந்துகொள்ளமுடிவதில்லை. இடது-வலது, நெஞ்சுப்பையின் விரிவாக்கம்-சுருக்கம், நேர்மறை-எதிர்மறை என்பவற்றைப் போலவே படைப்புக் கொள்கையும் அழித்தல் கொள்கையும் இணைகளாக கொள்ளப்படுகின்றன. ஸ்வாதிஷ்டானத்தில் (பிறப்புறுப்புப் பகுதியில்), படைக்கும் அன்னையையும் அழிக்கும் தந்தையையும் வழிபடுகிறார் யோகி.
வாழ்வுக்கும் மரணத்திற்கும் மிகச்சரியான குறியீடாக இருப்பது நெருப்பு. Entropy மற்றும் negentropy போல பிராணனில் நெருப்பு சமநிலை கொள்ள வேண்டும். சுவாசத்தின் தொடக்கத்தோடு துவங்கும் வாழ்வு அது நிற்கும்போது முடிவடைகிறது. சுவாசத் துவக்கம் அல்லது உள்ளிழுக்கப்படும் மூச்சு ப்ராணன் எனப்படுவது. அது முழுமையாக விரிவடைவதற்கு முன்பாக அபானன் என்ற வடிவில் ஒரு லயத்தோடு வெளியேற்றப்படுகிறது. கடைசியில் அறுதியாக வெளியேற்றப்படுவது உதானன் எனப்படுகிறது. ஆக, அபானன் என்பது உதானனின் சிறு அடையாளம் போல் செயல்படுகிறது. உண்மையான இருதுருவாக்கம் என்பது ப்ராணனுக்கும் உதானனுக்கும் நடுவே நிகழ்வதுதான். சுவாசிக்கும் உடலில் நிகழும் இரு எதிர்துருவப் பாங்குகளை சமன் செய்ய ப்ராணனின் வேறு இரு வகைமைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை வ்யானன், சமானன் எனப்படுபவை. உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் ப்ராணனால் நிரம்பியுள்ளது. அவை ஓவ்வொன்றும் அபானன் வழியே உறிஞ்சி வெளியேற்றப்பட வேண்டியவை. உடல் முழுவதும் ப்ராணனும் அபானனும் இணையும் புள்ளிகளிலெல்லாம் இருப்பவை வ்யானன்கள். உண்மையில் அவையே உடலென இருப்பவை. ஆற்றல் என்பது ஒரே அளவில் பரவியிருக்க வேண்டும். இது சமானனின் பணி. ஸ்வாதிஷ்டானத்தை, உள்நுழைந்து வெளியேறும் ஆற்றலை கட்டுப்படுத்தும் மையப் பகுதியாகக் கொள்ளலாம்.
கணம் கணமென எரித்தல், அறுதிமுடிவுக்கு இட்டுச் செல்லும் எரித்தல் என எரித்தல் செயல்பாடு இருவகைப்படுகிறது. இதனை, எரியும் மெழுகுவர்த்தி கொண்டு புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு கணமும் மெழுகுவர்த்தியில் ஒரு சுடர் இருக்கிறது. முந்தைய கணம் இருந்த சுடரல்ல இக்கணம் இருப்பது. கடந்துசெல்லும் ஒவ்வொரு கணத்தின் சுடரும் ஒரு தொடரில் அமைந்தது போலிருக்கிறது. மெழுகுவர்த்தி முழுதும் எரிந்து முடிகையில் அந்தத் தொடர் நிறைவுபெறுகிறது. விண்மீன்களைப் போன்ற பெரிய “மெழுகுவர்த்திகள்” கூட எரிந்து அழிகின்றன. இப்பாடலில் ஒருவர் தன் அன்றாட இலக்குகளை எய்த ஒவ்வொருநாளும் தன் ஆற்றலை ஒரு வேள்வி நெருப்பில் இடுகிறார். இறுதியாக எரிபொருள் தீர்ந்துபோக அது முடிவுக்கு வருகிறது. அவரை எரித்தழிக்கும் அந்தத் தீயே விண்மீன்களை முழுதாக எரித்தழிக்கிறது. ருத்ர சிவன் பேரழிவைக் கொணரும் தீயென முன்வைக்கப்படுகிறான்.
ஆணெனப் பெண்ணெனப் பிறக்கும் ஒவ்வொருவரும் பிறப்புறுப்பின் தணலை அறிவர். ஒரு தற்செயல் பார்வை, ஒருகணத் தொடுகை, ஒற்றை ஒரு சொல் போதும், மோகத்தை எழுப்பிட. படைக்கும் அன்னை பிறப்புறுப்புப் பகுதியில் வெடிமருந்தென அமைந்திருக்கிறாள். பலியிடுபவரும், வேள்வியும், பலியைப் பெறுபவரும் அந்தப் பார்வை அல்லது தொடுகை மூலம் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். விந்தணுவைச் சுமக்கும் ஆண் கிளர்ச்சியுறுகிறான். பெண்ணின் பிறப்புறுப்பில் நிகழும் சடங்கு வழிபாட்டில் நுழையும் ஒரு பூசகனாகிறான் அவன். அவளோ, ஆணின் விந்தெனும் பலிப்பொருளை ஏற்கக் காத்திருக்கும் கனலும் வேள்விக்குண்டமென ஆகின்றாள். கலவி தொடங்குகையில், இனி என்றென்றும் பிரிய முடியாது எனும்படியாக அவளைப் புல்குகிறான் ஆண். அவளது உயிர்மூச்சு அவனில் புகுந்து பரவ அவனது ப்ராணன் அவளில் நிறைகிறது. இறுதியில் அபானன் அவனை வெளித்தள்ளுகிறது. அவனது இறுகிய அணைப்பு தளர்கிறது. அதற்குப் பிறகு அவளை அணைக்க அவன் விரும்புவதில்லை. அருவருப்புடன் எழுந்து விலகிச் செல்வதும் நடக்கலாம். அன்னை காதலுடன் படைக்கிறாள், தந்தை கழிவிரக்கம் கொண்டு அழிக்கிறான்.
அன்னையின் பிறப்புறுப்பெனும் வேள்விக்குழியில் விதைக்கப்பட்ட விதை கருப்பையால் உறிஞ்சப்பட்டு அவளது கருமுட்டையில் கவனமாக பொதிந்துவைக்கப்படுகிறது. உயிரை ஏந்தும் ஆவியில் அழிவிலாக் கூறு ஒன்றுண்டு; ஆனால் அத்துடன் அழிவின் கரமொன்றும் சேர்ந்தே உள்ளது. அந்த ஒற்றை அணு இரண்டாக பிளக்கப்படுகிறது. பகுக்கப்பட்ட அணுக்கள் தன்னாட்சி பெறுகின்றன. பெருகும் அணுக்களை ஒழுங்கமைத்து முழுமையான செயல்பாடுள்ள ஒரு பிறவியாக்க முயன்றுகொண்டே இருக்கிறாள் அன்னை. முதிர்கருவுக்கு காப்பளித்த கருப்பை இனி அதை வைத்திருக்க இயலாது என்ற நிலையில், அபானன் இறுதியாக அதை வெளித்தள்ள, குழந்தை அன்னையிலிருந்து வெளிவருகிறது. உலகில் நுழையும் குழவி பசியெனும் திறந்த வாயுடன், அனைத்தையும் விழுங்கிவிடும் வேட்கையுடன் வருகிறது. அனைத்துத் தாவரங்களும், அனைத்து விலங்கினங்களும் இரக்கமே இல்லாமல் வெட்டிவீழ்த்தப்பட்டு, சமைக்கப்பட்டு, விழுங்கப்படுகின்றன. இவ்வாறாகக் கழியும் பல வருடங்களில், வாழ்பவரது முக்கியச் செயல்பாடாக இருப்பது உயிர்களை விழுங்குவதே. பின்னர் ஒருநாள் அவருக்கும் முடிவு எய்துகிறது; உரமென, பிறருக்கு உணவென ஆகிறார். ஆக, வாழ்வு மரணத்தை அடைகிறது, மரணம் மீண்டும் வாழ்வென உயிர்த்தெழுகிறது.
இவ்வுலகில் வாழும் உயிரினங்களுக்கு சிறிய அளவில் நிகழ்வதே விண்மீன்கள் நிறைந்த விண்ணகங்களுக்கும் நிகழும். நமது கோள்கள் எல்லாம் மண்ணுருளைகளே. அவை வெடித்துச் சிதறி அழிபவை. பேரிறைவன், அழிவின் தந்தை அனைத்து அண்டங்களையும் தூளாக்குவதில் வெற்றிகண்டவன். இந்த முற்றழிவு அருள்நிறைந்த பேரன்னையின் முழு ஒப்புதலோடும், உதவியோடும்தான் நிகழ்கிறது. தன் இறைவன் துடைத்தழிப்பதை அனுமதிக்கிறாள், ஆனாலும் தன் தாயமையை அவள் ஒருபோதும் மறப்பதில்லை. அறியமுடியா ஆற்றலென கலைந்து சிதறிய உலகங்கள் அனைத்தும் உவகையுடன், ஒரு ஆடலென சுருண்டெழுந்து விண்ணகங்களாய், விண்மீன்களாய், கோள்களாய், உயிர்வடிவங்களாய் ஆகின்றன. இத்தகையப் பெருநாடகம் ஒன்றுதான் ஸ்வாதிஷ்டானத்தில் தியானிக்கப்படுகிறது. தந்தையே அன்னை, அன்னையே தந்தை. தந்தையரெனவும் அன்னையரெனவும் ஆவதற்கே மகன்களும் மகள்களும் பிறக்கின்றனர். தொடரும் இந்த ஆடல் தரும் வியப்பு தீர்வதே இல்லை.
செவ்வகமான யந்திரத்தினுள் அமைந்துள்ள ட*ம், பம், ப: ஷம் ஸம் எனும் மந்திரங்கள் தியானிக்கப்படுகின்றன.