ஶ்ரீசக்ர தியானம் – 38

ட*ம் ஸர்வத்வந்த்வக்ஷயங்கரீ

முழுமையை இசைவிக்கும் அன்னையே, தாமரை மலரின் மகரந்தத்தை உண்டு, அதன் தேனைப் பருகி, அதன் இதழ்களுக்குள்ளேயே வசிக்கும் வண்டுடன் ஞானியை ஒப்பிடுவதுண்டு. நீயும் உன் இறையும் உமது இணைவுக்கென ஆயிரமிதழ்த் தாமரையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். சேற்றில் மலர்ந்தாலும், படைப்புகளிலேயே அதி தூயதாய் கொண்டாடப்படுவது செந்தாமரை. அதேபோல், மாசும், அறியாமையும், துயரும் நிரம்பிய இவ்வுலகில், நனவெனும் விண்ணக ஏரியில் திளைக்கும் சிவ-சக்தியைப் போல, ஞானம் ஒரு பெரும் விந்தையென மலர்கிறது. 

கடந்தநிலையிலான சஹஸ்ராரத்திலிருந்து எண்ணங்களும் கவிதைகளும் நிரம்பிய இசையுலகுக்கு இறங்கி வரும் நீ, விடாது இசைக்கப்படும் பண்களில் திளைக்கிறாய். விஶுத்தியிலிருந்து நீ இதய மையத்திற்கு (அநாஹதம்) வருகிறாய். ஞான இலக்கியங்களில், இதயம் என்பதும் ஒரு ரகசியக் குறியீடாக விளக்கப்படுகிறது. அது ஒரு தாமரை மலரைப் (புண்டரீகம்) போல தனக்குள் உள்ள ஒரு சின்னஞ்சிறு வெளியில் இவ்வுலகில் உள்ள அனைத்தையும், இங்கு இல்லாததையும் கூட பொதிந்து வைத்துள்ளது. அவ்வுலகுக்குள் நுழைந்து இணையிலாததை அறிந்துகொள்வது பூமா எனப்படுகிறது. ஞானம் எனும் உலகில் எய்தக்கூடிய ஆகச் சிறந்த நிலை அதுவே. அதனுடன் ஒப்பிடுகையில் மானுடர் எய்தவிழைவது அனைத்துமே ‘துச்சம்’ எனக் கருதப்படுகின்றன. கடந்தநிலையை ஆயிரமிதழ்த் தாமரையிலிருந்து இதயமெனும் தாமரைக்குக் கொணர்வது அகவயமாக கடந்தநிலையை உணர்வது போன்றது.

சிவனது சடைமுடியிலிருந்து இழியும் கங்கையைக் காண்கையில், அன்னையின் ஆஞாவிலிருந்து வழியும் ஆனந்தக் கண்ணீரோ அது என வியக்கிறேன் நான். உனது ஆஞாவிலிருந்து தெறிக்கும் ஒருமை ஞானத்தில், பல்வகையாகப் பரவிய அனைத்தையும் இணைப்பவள் நீயே என்பதால், எங்கள் இதயத்தில் (அநாஹதம்) விடாது ஒலிக்கும் இனிய இசை எமது அகக் களிப்பிலிருந்து தோன்றும் பண்ணிசையே என்பதில் வியப்பொன்றும் இல்லை.

விஶுத்தியில் இருந்துதான், மந்திரங்களின் அக இயக்காற்றல் அனைத்து மெய், உயிரெழுத்துக்களுக்கும் சொல்லாற்றலை அளிக்கிறது. சொல்பவரையும் கேட்பவரையும் அவர்களது கூட்டு நனவில் ஒன்றிணைக்கக் கூடிய ஆற்றலை மொழியப்பட்ட சொல்லுக்கு வழங்குகிறது. எனவே, சிவன் எனும் நனவு பற்றிய விழிப்புணர்வை – சிவஞானபோதத்தை – இறைவன் தன் சடைமுடியில் சூடியிருக்கும் பிறைநிலவின் ஒளியை ஒத்ததாகக் கொள்வது பொருத்தமே. அந்த நிலவொளியையே சகோரப் பெண் பறவை தன் தொண்டைப் பகுதியில் வாகேஶ்வரியாக, படைப்பூக்கத்தின் அன்னையாக  அருந்தி மகிழ்கிறது.

தொண்டைப் பகுதியில் (விஶுத்தி) சொல்லும் (வாக்) மூச்சும் (பிராணன்) இணைந்து ஒலியும் (சப்தம்) பொருளும் (அர்த்தம்) உண்டாகின்றன. அங்குதான் ஒரு பெரும் அதிசயமென மெய்மையின் வெளிப்பாடு நிகழ்கிறது. உலகில் தேடல் கொண்டவர்களுக்கு, நீயும் உன் இறையும் கருணையோடு அளிக்கும் பதினெட்டு கலைகளும் கிடைக்கின்றன. நான்கு வேதங்கள், ஆறு தத்துவ தரிசனங்கள், மூன்று புராணங்கள், தர்ம சாத்திரங்கள், ஆயுர்வேதம், தனுர்வேதம், கந்தர்வவேதம், அர்த்தவாத சாத்திரங்கள் என்ற பதினெட்டு கலைகளையும் அறிவோருக்கு சகோரப் பெண்பறவை குறியீடாகிறது. உன்னிடமிருந்தும் உன் இறைவனிடமிருந்தும் வெளிப்படும் ஞானம், ஞானத்தின் நிலவொளியாக கருதப்படுகிறது. பேரருளே, உனக்கு எமது வந்தனங்கள்.

|| டம் ஸர்வத்வந்த்வக்ஷயங்கரீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s