சௌந்தர்யலஹரீ – 37

விஶுத்தௌ* தே ஶுத்த*ஸ்ப*டிகவிஶம் வ்யோமஜனகம்

ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமானவ்யவஸிதாம்

யயோ: காந்த்யா யாந்த்யா ஶஶிகிரணஸாரூப்யஸரணேர

விதூ*தாந்தர்த்*வாந்தா விலஸதி சகோரீவ ஜதீ

பாடல் – 37

உனது விஶுத்தி சக்ரத்தில் 

படிகம் போன்ற தூயவனும்

ஆகாயத்தை தோற்றுவிப்பவனுமான

சிவனையும் 

அவனுக்கிணையான சக்தியையும் 

துதிக்கிறேன்

இந்த இணையரிடமிருந்து பெருகி ஒழுகும்

அழகிய நிலவொளியில்

திளைக்கும் உலகு

அக இருள் அகன்ற சகோரப் பறவை போலிருக்கிறது

**

பூமியைப் பொறுத்தவரை சூரியன் கடுமையான பணி ஏவுநன். நாள் முழுவதும் அவளது குழந்தைகள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. இரவில் வரும் சந்திரனோ, அனைவரையும் அணைத்துக் கொஞ்சி, கனவுகளோடு உறங்கச் செய்யும் காதலன் போன்றவன். இவ்வாறு புறவயமான பணியும் அகவயமான எண்ணமும் மாறி மாறி வருவது அனைவருக்கும் பொதுவானது. கிறிஸ்தவத்தில் கடவுட்பற்றும் பணியும் மாறி மாறி வருபவை. இந்து மதத்தில் இந்த இணை ஞானம்-கர்மம் எனப்படுகிறது. ஒவ்வொன்றிலும், இரண்டு கூறுகளுமே ஒரே இறைமையால் ஆளப்படுபவை. அடிப்படைக் கருவாக இருப்பது, சிவ-சக்தி போல, காதலரும் காதலிக்கப்படுபவரும் ஒன்றிணைவதே. இரு மாந்தரிடையே சேய்மையும், விலக்கமும், வெறுப்பும் இருக்கலாம். அதே போல அண்மையும், நெருக்கமும், காதலும் கூட இருக்கலாம். எனவே, கொண்டுகொடுத்தல் மிகப்பரந்த தளத்தில் நிகழவேண்டியுள்ளது. அது பெரும்பாலும் சொற் பரிமாற்றம் வழியே நடைபெறுகிறது. சொற்கள் விஶூத்தியிலிருந்து (தொண்டைப் பகுதி) வருகின்றன. சொல்-குரல் பண்படுதலில், கல்வியும் சமூக உறவும் பெரும்பங்கு வகிக்கின்றன. உண்மையை தெளிவாக வெளிப்படுத்த சொற்கள் உதவுகின்றன. அதே சமயம் அவை சூழ்ச்சிக்கும் வஞ்சனைக்கும் முகத்திரை போலவும் பயன்படுத்தப்படலாம். ஆக, மெய்-மெய்யற்றது என்பவற்றின் நடப்பு, உண்மையும் போலியுமான சொற்புழக்கத்தை அடியொற்றி இருக்கிறது. 

இதனால், ஆன்மிகமான ஒருவர் தனது குரலமைப்பிலுள்ள சொல்லுருவாக்கும் ஆகாயத்தை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறார். நாதம் (ஒலி) என்பதே ஆகாயத்தின் (வெளி) பண்பாக உள்ளது. ஒவ்வொரு உடலும் திகழ்வதற்கான வெளியை அளிப்பது ஐந்து மூலக்கூறுகளில் முதன்மையான ஆகாயமே. அனைத்து திசைகளிலும் செயலெதிர்ச் செயல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பரிமாற்றம் வ்யவசாயம் எனப்படுகிறது. இருவருக்கிடையே நிகழ்வதும் அதற்கப்பாற்பட்டதுமான பரிமாற்றங்களில் கொண்டுகொடுத்தலுக்கு காரணமாக இருப்பவர்கள் சிவனும் சக்தியும். உடல்-உள்ளம் எனும் தொகுதியுடன் ஆன்ம ஒளி இணைகிறது. எனவே, சொற்களின் ஊற்றுமுகமான விஶுத்தியில் (தொண்டைப் பகுதி) சிவன், சக்தி இருவருமே திகழ்கின்றனர். 

பரஸ்பரக் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இருவரிடையே பரிமாற்றம் என்பது மௌனத்தில் தொடங்குகிறது. பொருத்தமான சொற்கள் கிடைக்காமல் திணறுகின்றனர். மெல்ல மெல்ல உரையாடல் தொடங்குகையில், பல உள்ளுணர்வுகள் கிளறப்படுகின்றன. அடுத்தவர் நண்பரா பகைவரா? இருவருக்குமே ஐயம் எழுகிறது. தீயவராக இருந்தால் என்ன செய்வது? எனவே இருவருக்கிடையே சுவர்களும் அகழிகளும் உருவாக்கப்படுகின்றன. ஒருவரையொருவர் வென்றெடுக்க, பாதுகாப்பான கோணத்திலிருந்து சொற்கள் எய்யப்படுகின்றன. நோக்கங்கள் ஐயத்துக்கிடமளிக்கக் கூடும். ஒவ்வொரு சொல்லும் சந்தேகத்தை எழுப்பலாம். தவறுதலாக வெளிப்பட்டுவிட்ட ஒரு சொல் அச்சத்தையும் நிலைகுலைவையும் ஏற்படுத்தக்கூடும்.  ஆக, நட்பெனும் வெளியில் பெரும் இருள் உருவாக்கப்படுகிறது. நல்லெண்ணத்தோடு தொடங்கப்பட்ட உரையாடல் விரைவிலேயே பூசலாக மாறுகிறது. சொற்கள் மனிதரின் ஆகச்சிறந்த நண்பர்களாகவும் இருக்கலாம், கேடுகெட்ட படைவராகவும் ஆகலாம். ஆனால், இத்தடைகளை எல்லாம் மீறி அடுத்தவரது அகத்திற்குள் நுழைகையில், சொற்கள் பயனற்றுப் போகின்றன. கண்ணொடு கண் நோக்கும் ஒற்றைப் பார்வை போதுமானதாகிறது. காதல், சொற்களின்றி பேசக்கூடியது, தன் முழு ஆன்மாவையும் பிறர் முன் திறந்துவைக்கச் செய்வது. அதுவே இங்கு ஶுத்த ஸ்படிக விஶதம் (படிகம் போன்ற தூய வெளி) எனப்படுகிறது. தெள்ளத் தெளிந்த தூய சொற்கள் உறையும் இடமே விஶுத்தி.

ஆன்மிக சாதனையில் மிக முக்கியமானது சொல்லிலும் நோக்கத்திலும் முழுமையான உண்மை. சிவனும் சக்தியும் விஶுத்தியில் உறைகின்றனர். அவர்களை வழிபடல் என்பது போற்றத்தக்க உண்மையை வழிபடலே. இந்தியக் கவிகள், நிலவொளியைப் பருகும் சகோரப் பறவையைப் போன்றே காதலின் செவ்வியல் அணுகுமுறை இருக்கவேண்டும் என எண்ணினர். இங்கு கடினமான உடலுழைப்பு ஏதுமில்லை. கானகத்தின் இருள்நிழலிலிருந்து நிலவொளி நோக்கி நகர்வது மட்டுமே சகோரப் பறவை செய்யவேண்டியது. அதேபோல், காதலர் காதலின் கவர்ச்சிக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுகிறார். நிலவினடியில் அனைத்தும் அவ்வொளியில் கரைவதுபோல் தோன்றும். சகோரம் தன்னையே நிலவொளியில் கரைத்துக்கொள்கிறது. தன்முனைப்பென ஏதும் எஞ்சுவதில்லை. எதையும் பற்றிக் கொள்வதில்லை. எதுவும் நிறுவப்பட வேண்டியதில்லை. மெல்லிய அணைப்பில் எஞ்சியிருத்தல் மட்டுமே செய்ய வேண்டியது. ஒருவருக்கு மிக நெருக்கமானது தனது ஆன்மா தவிர பிறிதொன்றில்லை. காதலிக்கப்படுவதோ மீஆன்மாவைக் காட்டிலும் பெரியது வேறொன்றில்லை. இந்நிகழ்வில், மீஆன்மா என்பது சிவ-சக்தியாக, ஆழ்படிமக் காதலர்-காதலிக்கப்படுபவராக, விஶுத்தியில் திகழ்வது. நமது ஊற்றுமுகத்திற்குத் திரும்பி, அவர்களது இணைவின் பரஸ்பர அணைப்பில் நாமும் கலக்கிறோம். 

இந்த இணைவை ஶ்ரீ ராமகிருஷ்ணர் பல வகையாக விளக்குகிறார்.  பசித்தவர்கள் உண்டாட்டுக்குச் செல்வதோடு இதனை ஒப்பிடுகிறார். அறுசுவை உணவு பரிமாறப்படுவது வரை அவர்கள் ஓசையிட்டுகொண்டே இருக்கிறார்கள். ஆனால், உண்ணத் தயாரானதும் அமைதியடைகிறார்கள். ரசித்து உண்பதைக் குறிக்கும் சில ஒலிகள் எப்போதாவது எழுகின்றன. இதைப் போலவே, காதலிக்கப்படுபவரால் ஈர்க்கப்பட்டதும் காதலர் புகழ்ச் சொற்களை சொல்கிறார், துதிப்பாடலை பாடுகிறார், கெஞ்சுகிறார். அது ‘வைகரீ’ எனப்படுவது. பின்னர் அவர் ‘மத்யமா’வின் மெய்மறந்த நிலையை எய்துகிறார். அது ஆன்மிக தரிசனத்தை (‘பஶ்யந்தி’) அவருக்களிக்கிறது. அறுதியாக, அனைத்தும் மறக்கப்பட்டு காதலெனும் பேரின்ப நிலையை (‘பரா’) அடைகிறார். சொற்களிலிருந்து மௌனத்திற்கும், வேதனையிலிருந்து களிவெறிக்கும் செல்லும் காதல் உணர்வெனும் அதிசயம் இதுவே. இறைக்கு முழுதளிப்பதே மீகாதல். 

யந்திரத்தில் அமைந்த ‘ர’ தியானிக்கப்படுகிறது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s