ஶ்ரீசக்ர தியானம் – 36

ட*ம் ஸர்வஸம்பத்திபூரனீ

அருள்நிறை அன்னையே, மெய்யறிவரும் மெய்யியலாளரும் படைப்பு குறித்து சிந்தித்து மூன்று தரிசனங்களை அடைந்துள்ளனர். அவர்களில் சிலர் இறை என்பதை, பிரபஞ்சத் தந்தையெனக் காண்கின்றனர். அவன், பல்வகை உயிரினங்களைக் கொண்ட உலகுகளைத் தோற்றுவிக்க எண்ணி ஆழ்படிம உருமாதிரி எனும் கருத்தை உண்டாக்கி அதனை இயற்கையின் பிரபஞ்சக் கருப்பையில் செலுத்தியவன். அதிலிருந்து பல்வகை உயிரினங்கள் தோன்றின; ஒவ்வொன்றும் ஒரு இனத்தைச் சேர்ந்தவையாக அமைந்தன; அவை தம் இனத்தை பெருக்கின. மாறிக்கொண்டே இருக்கும் காரண-காரியச் செயல்பாடு வழியே அவை இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் அதற்கேயான ஒரு வடிவும் பெயரும் இயல்புக்கேற்ற மனப்பாங்கும் உண்டு. இது ஒரு தரிசனம். இதில் காரணமும் விளைவும் என இரண்டுமே இவ்வுலகு சார்ந்தவை. எனவே, இதன் பொருத்தப்பாடு இங்கு-இப்போது உள்ளது.  

மற்றொரு மெய்த்தரிசனம் மேலும் நுண்ணியது, ஆழமானது. இதன்படி இறையின் அரசாட்சி ஒருவரது இருதயத்திற்குள் அமைந்திருக்கிறது. இருத்தல், பிழைத்தல், பேரானந்தம் என்பவையே முழுமுதல் எனப்படுவது. அது ஒவ்வொன்றின் இதயத்திலும் அழிவிலாதுறைவது. இவ்வாறு நோக்குகையில், இறை என்பது மீஆன்மாவாக இருக்கிறது; இவ்வுடலை உயிர்ப்பிக்கும் ஆன்மாவாக தனியர் இதனுள் உறைகிறார். ஒவ்வொன்றும் இறையின் சொல்லால் படைக்கப்பட்டது என்பதே மூன்றாவது தரிசனம். புனித ஜானும், மாண்டூக்ய, சாந்தோக்ய, மைத்ரீ உபநிடதங்களும் இதை ஆதரிப்பவை. 

உலகுகுறித்த இம்மூன்று தரிசனங்களில் ஒன்று மேலீட்டு தரிசனம் (vision of superimposition) என்றும், இரண்டாவது பரிணாம தரிசனம் (vision of evolution) என்றும், மூன்றாவது மேலீடும் பரிணாமமும் கலந்த தரிசனம் என்றும் கூறலாம். எம்முள் உறையும் பற்பல உலகுகளை, படிநிலைகளிலாக நோக்குகையில், புருவமத்தியில் அமைந்துள்ள ஆஞாவிலிருந்து எழும் நனவெனும் சுயத்தை அடைகிறோம். நீரூற்று ஒன்றில் உற்பத்தியாகும் நதிமூலத்தைக் காண்கையில் அதற்கென ஒரு தொடக்கமே இல்லாதது போல் தோன்றுகிறது. இடைவிடாது நீர் ஒழுகிக்கொண்டே இருக்கிறது. புருவ மையத்தில் எம் மனம் குவிகையில், தொடர்ந்து எழும் எண்ணங்கள் மறைந்தொழுகும் நதிபோலத் தோன்றுகின்றன. 

பெருநதிகளான சிந்து, கங்கையைப் போலவே, நிலத்தடியில் சரஸ்வதி எனும் மூன்றாவது நதி ஒழுகிச்செல்வதாக ஒரு நம்பிக்கை இந்தியாவில் இருக்கிறது. ஆஞா சக்ரம் அந்த சரஸ்வதியை ஒத்தது. புதிய எண்ணம் ஒன்று எழுந்தவண்ணம் உள்ளது. புருவமையத்தில் உள்ளதுபோன்ற கூருணர்வு நமது உறுப்புகள் பிற எதிலும் இருப்பதில்லை. ஆஞாவில் அனைத்துக் கருத்தாக்கங்களும் எண்ணங்களாகவும் உணர்ச்சிகளாகவும் தோன்றுகின்றன. எமக்குள் நிகழும் எதிர்வினைகளுக்கும், பிறரை எதிர்கொள்கையில் ஆற்றவேண்டியவைகளுக்குமான ஆணைகள் இங்கிருந்தே பிறப்பிக்கப்படுகின்றன.  ‘ஆஞா’ என்பதற்கு ‘ஆணை வழங்கல்’ என்பதே பொருள். ஒருவகையில் எம் வாழ்வு ஆஞா வழியே கண்காணிக்கப்படுகிறது என்றுகூட சொல்லலாம். மறைந்தொழுகும் சரஸ்வதியைப் போலவே எம் எண்ணங்களும் பிறரிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சமூகத்தில் வாழ்வதால், எமது வெளிப்பாடுகளில் ஒரு ஒழுக்கம் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாங்கள் எங்களது சொற்களையும் எண்ணங்களையும் தரம்பிரிக்கிறோம். உலகுக்கு நன்மை பயக்கும் சொற்களே சொல்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. பேச்செனும் கருவிகொண்டு, எமது நயமிகு எண்ணங்களை வெளிப்படுத்த சொற்கள் பெருகியவண்ணம் உள்ளன. இந்த சக்ரம் விஶுத்தி எனப்படுகிறது. வாழ்வின் தூய்மையை பாதுகாக்க, அமைதி தவழும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள உண்மைநிறைந்த சொற்களை இனிமையாகப் பேசவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம். ஆஞாவில் எழும் எண்ணங்களும் விஶுத்தியில் தோன்றும் சொற்களும் இருதயத்தால்தான் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

எண்ணங்கள் மூளையால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதால் எமது தார்மீக அக்கறைகள் இருதயத்திலிருந்து எழுகின்றன. இருதயம் என்பது அன்பின் இருப்பிடம். அதிலிருந்து வரும் இடையறா தூண்டல் எப்போதும் திகழவேண்டிய ஒன்று. அந்தப் பகுதி அநாஹதம் (உடைபடாதது) எனப்படுகிறது. பகுத்தறியும் புலத்தையும் பேச்சுப் புலத்தையும் இருதயம் கவனித்துக் கொண்டே இருக்கிறது. இருதயத்தின் ஒப்புதலோடுதான் அவ்விரண்டுமே ஒழுங்குபடுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, வெளிப்படுத்தப்படுகின்றன. எண்ணங்கள், பேச்சு, மதிப்பீடு என்ற மூன்றும் மிக முக்கியமான புலங்கள். எம் வளர்ச்சியிலும் முழுமையடைதலிலும் அவற்றின் பாதிப்பு உண்டு. எமது வளர்ச்சியை கட்டுப்படுத்தும் பகுதிக்கு மணிபூரகம் என்பது பெயர். அது முழுமைபெற்ற முத்தைப் போன்றது.

இன்னும் இரண்டு பகுதிகள் உள்ளன. எமக்கு நனவுடன் கூடிய மனமொன்று உள்ளது. அது விழைவுகளாலும் ஊக்கங்களாலும் தூண்டப்படுவது. அது எம்மில் உள்ள இயற்கை நிரலின் தோற்றமாக, எம் இனத்தை தொடர வைப்பவையாக, இயற்கையின் முகமைகளாக தோன்றுகிறது. இந்தப் பகுதியில்தான் எமது ஆளுமையின் அடித்தளம் உள்ளது. இது ஸ்வாதிஷ்டானம் எனப்படுகிறது. ‘ஒருவருடையதேயான அடித்தளம்’ என்பதே அதன் பொருள். கடைசி பகுதியில் எமது அனைத்து உயிரியல் தேவைகளும் உறைகின்றன. எமது நனவிலியின் ரகசிய இல்லமாகத் திகழும் அதன் பெயர் மூலாதாரம். எமது செயல்பாடுகளில் மிகச்சிறிய பகுதியே எமது நனவுள்ளங்களிலிருந்து தோன்றுவது. 

உலகு குறித்த இந்த தரிசனத்தில், மூலாதாரத்தில் தொடங்கி ஆஞா வரை படிநிலைகளிலான ஒரு ஒழுங்கமைப்பை காண்கிறோம். தனித்தனி பகுதிகளும், தனிப்பட்ட செயல்பாடுகளும் இருந்தாலும் நீ எமை முழுமையாகவே படைத்திருக்கிறாய். அதனால் நாங்கள் எம்மில், எமது மெய்யுணர்தலில் உடைவுறாமலே திகழ்கிறோம். மொத்த உலகும் எமதேயான ஆன்மாவைப் போன்றிருக்கிறது. அதற்கு வெளியே எதையும் நாங்கள் காண்பதில்லை. எம்மை முழுமையாகவே இருக்கச் செய்யவேண்டும், மொத்த உலகும் ஒன்றே என நாங்கள் எண்ண வேண்டும் என்பதே எமது வேண்டுதல். உன்னருளையே என்றும் நாடுகிறோம். உனக்கு எங்கள் பணிதல்கள்.

|| டம் ஸர்வஸம்பத்திபூரனீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s