தவாஞாசக்ரஸ்த*ம் தபனஶஶிகோடித்*யுதித*ரம்
பரம் ஶம்பு*ம் வந்தே பரிமிலிதபார்ஶ்வம் பரசிதா
யமாராத்*யன் ப*க்த்யா ரவிஶஶிஶுசீனாமவிஷயே
நிராதங்கே லோகே நிவஸதி ஹி பா*லோகபு*வனே
பாடல் – 36
அன்னையே,
கோடி சூரியசந்திரர்கள்போல் ஒளிரும்
உன் ஆஞா சக்ரத்தில் முழுமுதலாய் அமைந்திருக்கும்
ஶம்புவை வணங்குகிறேன்
அவனது இரு புறங்களும்
மீநனவால் ஒளியூட்டப்படுகின்றன
சூரியனும் சந்திரனும் அக்னியும்
தீண்டமுடியாத இடத்தில் இருப்பதை
புரிதலுக்கப்பாற்பட்டதை
தனித்திருப்பதை
வழிபடுபவர்
தூய அக உலகில் வாழ்கிறார்
**
மானுடனின் வயிறெனும் குழியுள் உறையும் நெருப்புக்கு எரிபொருள் தேவைப்படுகிறது. பசியெனும் அந்நெருப்பு அணைக்கப்படாதபோது அவன் உடலும் மனமும் கொந்தளிக்கின்றன. இன்றும், உலகத்தோர் அனைவருக்கும் பசி என்பது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதற்கொரு அழிவிலாத் தன்மை உள்ளது. என்னதான் அது அடக்கப்பட்டாலும் சில மணிநேரத்தில் மீண்டும் தோன்றுகிறது. மானுடன் தன் உணவை ஈட்ட தன் சுதந்திரத்தை பண்டமாற்று செய்கிறான். இவ்விஷயத்தில், மனிதனுக்கும் பிற விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மனிதனை இன்னும் அதிகமாக பரிதவிக்கச் செய்யும் மற்றுமொரு நெருப்பு உள்ளது. அதன் கொழுந்துகள் மேலும் நுண்ணியவை. அதுவே பாலுணர்வு. உணவுகொண்டு பசியெனும் நெருப்பை அணைத்துவிடலாம். ஆனால் பாலுணர்வு அதிக சிக்கலானது. அதன் நாவுகள் பண்பற்றவை, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை. மானுடன் பசி, பாலுணர்வு என்னும் இவ்விரு தீ நரகங்களுக்கிடையே சிக்கியிருக்கிறான்.
பசி, பாலுணர்வெனும் இவ்விரு நெருப்புகளோடு பொருந்தும் நிஜ நெருப்பை மானுடன் தன் அடுப்பங்கரையில் வைத்திருக்கிறான். அன்னை உணவு சமைக்கும் அடுப்படிக்கே ஒவ்வொரு மனிதனும் பணிமுடித்து திரும்புகிறான். உள்ளும் புறமும் உள்ள நெருப்புகளே மனிதனை ஒரு குடும்பத்தில் பிணைக்கின்றன. சமைத்ததையும் அன்பையும் பகிர்ந்துகொள்வதே குடும்பம் என்பதன் அடிப்படை. நெருப்பைச் சுற்றியமர்ந்துதான் மக்கள் குடும்பம் எனும் அலகாகின்றனர். குறிப்பாக, நம் முன்னோர் வேட்டையாடிகளாக, நாடோடிகளாகத் திரிந்தபோது இதுவே இயல்பாக இருந்தது. ஆனால், சிறிது பண்பட்ட வகையில் இன்றும் தொடர்வது.
மனித உடல் என்பது ஒரு சோதனைக் கலம் போன்றது. இதில் வேதிவினைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. வெவ்வேறு நெருப்புகள் தூண்டப்பட்டு, அணைக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. பெரும் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்த காதல்நிறை சொல்லொன்றோ, சிறு சைகையின் சாயலோ போதும். சினமோ, காமமோ மிகும்போது உடல் மிக வெம்மைகொண்டுவிடுகிறது, தோல் எரிகிறது, வாய் உலர்ந்து போகிறது. பொறாமை, பூசல் எனும் நச்சரிப்புகள் நம்முள் உறையும் அமைப்புகளில் உள்ள பகுத்தறிவுக்கெட்டாத நெருப்புகளில் சேர்கின்றன. உள்ளுணர்வால் தோன்றும் இந்த உயிரியல், உளவியல், சமூகவியல்சார் தேவைகளில் உரசல் ஏற்படுகையில் மனம் பாதிக்கப்படுகிறது. உடனடித் தீர்வுகள் காணப்படவேண்டிய அவசியம் உண்டாகிறது. நனவுத் தளத்தில் வாழ்வை நடத்திச் செல்லும் இணைந்தியங்கு மையமாக இருப்பது ஆஞா. இந்த மையம் ஒழுங்குபடுத்தப்படாத போது, ஒரு சிக்கலுக்கு பொருத்தமான தீர்வு காணப்படுவதில்லை. மாறாக தன்னிச்சையான ஒரு எதிர்ச்செயலே எதிர்வினையாக நிகழ்கிறது. ஆக, நம்மில் பலர் செயல்-எதிர்ச்செயல் என்ற தளத்திலேயே வாழ்கிறோம். ஒழுக்கம் கொண்டவரில்கூட முன்வரையறை செய்யப்பட்ட எதிர்வினைகள் பல உள்ளன. அவர்கள் சினமோ, அச்சமோ கொண்டு எதிர்வினையாற்றியபிறகே தாம் நடந்துகொண்ட விதத்தை எண்ணி அருவருப்படைகின்றனர். நெருப்பின் களம் என்பது ஒரு குடும்ப விவகாரம் போன்றது. பெரும்பாலும் அது அந்தரங்கமாக திரைமறைவிலேயே நிகழ்கிறது. உளக்கொதிப்புகள் மக்களை தனியர்களாக, நம்பிக்கையிழந்தவர்களாக ஆக்குகின்றன. தம் அந்தரங்கத் தவிப்புகளை தமது நெருங்கிய நண்பர்களிடம்கூட அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. உணர்ச்சிப் பிழம்புகள் காட்டுத் தீ போல பற்றிக்கொள்கையில் அறிவாற்றல் கொண்டு அதை அணைக்க முடிவதில்லை.
சமூக பரிணாம வளர்ச்சியில், சூரிய ஒளியால் வெளிப்படுத்தப்படும் உண்மையை உணரக் கற்றுக்கொண்டுள்ளனர் மானுடர். இரவில் ஒரு மரத்தடி பேய் உருவெனத் தோன்றக்கூடும். பகலொளியில் அதுவே மரத்தடி என தன்னை வெளிப்படுத்தும். ஒளியின் தெளிவு வழியே மனிதன் காட்டாளனாக தன்னை வைத்திருந்த பல மூட நம்பிக்கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டான். பொதுக் கல்வி என்பது சூரிய ஒளியில் ஒரு சிறு துளியை ஒவ்வொரு வாழ்விற்கும் கொண்டு வருவது போன்றது. அறிவென்பது பொதுவாக தரப்படுத்தப்படும்போது, அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கக் கூடியதாக ஆகும்போது பசி, காமம் போன்ற உள்ளுணர்வுசார்ந்த வேட்கைகளால் வரக்கூடிய சிக்கல்களுக்கு பல விடைகள் கிடைக்கின்றன. ஆனால் மானுடனில் உள்ள அனைத்தையும் ஆய்வுமேசையில் கிடத்தி அறிவியல்பூர்வமாக ஆராய முடியாது. மிகச் சிறந்த விஞ்ஞானிக்குக் கூட, நுண்ணிதான தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருக்கக் கூடும். நெருப்பு, சூரியன் ஆகிய தளங்களில் மக்கள் பல விஷயங்களை பிறருடன் பகிர்ந்துகொள்கின்றனர். என்றாலும் அவர்கள் தனித்தவர்கள் என்பதே உண்மை. நம் உள்ளுணர்வுகள் ஒன்றேபோல் இருப்பதில்லை; ஒரே அளவு தீவிரமோ அல்லது ஒற்றைப் பண்போ கொண்டிருப்பதில்லை. இதனால் பிறரை நாம் முழுதாக நம்புவதில்லை. நமது அறிவாற்றல்கள் பல வகைகளில் முன்வரையறை செய்யப்பட்டவை. நம்மை அடையும் தகவல்களும் பலவகைப்பட்டவை.
நெருப்பினுடையதைப் போல் அவ்வளவு வெப்பமும், சூரியனுடையதைப் போல் அவ்வளவு தீவிரமும் இல்லாத மற்றொரு ஒளி மனிதருக்கு கிடைக்கிறது. நிலவின் மெல்லொளி. புற உலகை சூரியன் ஒளியூட்டுகையில் கூட மக்கள் தம் மனமெனும் நிலவொளியில் திளைக்கின்றனர். புற உலகை படைப்பது கடவுளாக இருக்கக் கூடும். ஆனால் தனியராக ஒரு மனிதர், தான் காணும் ஒவ்வொன்றையும் தேவையான கருத்துருக்களோடு இணைத்துப் பார்த்து கண்டறியவேண்டியுள்ளது. மனதின் நிலவுப் பகுதியில் கருத்தாக்கமும் எண்ண ஓட்டமும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்தப் பகுதியில் அவலக் கூறுகளும் நிறைந்துள்ளன. நிலவின் பாதிப்புகளைவிட நெருப்பும் சூரியனும் ஏற்படுத்தும் பாதிப்புகள் நன்றாக வெளிப்படுபவை. எண்ணங்கள் தனியரை மயங்கச் செய்யக்கூடியவை. கற்பனையின் சூறாவளி, வேறுவகையான தனிமையின் கண்ணியில் சிக்கவைக்கும். மாந்தர், நிகழ்வுகள், இடங்கள் என அனைத்தும் ஒருவரது அகத்திலேயே தோன்றக்கூடும். பிறருடனான தொடர்புகளை அறுத்துக் கொள்ளத் தோன்றும். தற்காதல் மீதூற அனைத்திலும் விலக்கம் தோன்றும். அது ஒரு நோயாக முற்றியபிறகே கண்டறியப்படும்.
இவற்றிலெல்லாம் நம் வாழ்வை நடத்திச் செல்வது ஆஞாவில் அமைந்துள்ள தனிப்பட்ட நனவு. இப்பணியை வேறொன்றிடம் கையளிக்க முடியாது. துரதிருஷ்டவசமாக, பெரும்பாலானவர்கள் தன்னைத் தான் ஆள்வதில் திறனற்றவர்களாக இருக்கின்றனர். எப்போதும் குழம்பியவர்களாய், மனக்கசப்புடன் வாழ்கின்றனர். கைவிடப்பட்டவர்களாக உணர்கின்றனர். ஒன்று அழுது அரற்றுகின்றனர்; இல்லையெனில் நம்பிக்கை இழந்து கதறுகின்றனர். சூரியனாலும், நிலவாலும், நெருப்பாலும் ஒளியூட்டப்படும் களத்தில் நமது வாழ்வு இத்தகைய துன்பியல் நாடகமாகவே உள்ளது. உண்மையின் முகம் ஒரு பொற்தகடால் மறைக்கப்பட்டுள்ளது, கற்பனையான சூழ்ச்சியாளன் ஒருவன் ஒவ்வொரு அடிவைப்பிலும் தலையிடுகிறான். இதனால்தான், ஈஶாவாஸ்ய உபநிடதத்தில் உண்மையை மறைக்கும் பொற்தகடை விலக்கும்படி வேண்டப்படுகிறது.
மேகத்தின் விளிம்பில் தோன்றும் ஒளிக்கீற்று, பின்னால் சூரியன் இருப்பதை குறிக்கிறது. அதேபோல், இக்கற்பனைக் காட்சியின் பின்னால், அமைதியை, களிப்பை, ஒத்திசைவைக் கொணரும் ஶம்பு திகழ்கிறான். அன்றாட வாழ்வின் எண்ணற்ற சிக்கல்களால் சோர்ந்துபோகின்ற நாம், வெளியேற வழியொன்றிருக்குமோ என்று ஐயம்கூட கொள்வதில்லை. உண்மையில் அது வெளியேறும் வழியல்ல, அகம் நோக்கிய செல்வழி. ஆன்மிகத்தையும் பருப்பொருள்வாதத்தையும் ஊடறுத்துச் செல்வது அது. கோடி சூர்யசந்திரர்களின் ஒளியை விஞ்சும், உள்ளுணர்வுகளாலோ, பகுத்தறிவாலோ, கற்பனையாலோ புரிந்துகொள்ள முடியாத தூய அகநிலையான ஶம்புவை தியானிக்க வேண்டும். அறிவுகடந்த விருப்பார்வத்தோடு தடைகளகற்றி முன்னேற வேண்டும். தனிமை நோக்கி செல்லும் தனிமையின் புனிதப்பயணம் போன்றது அது. நெருப்பும், நிலவும், சூரியனும் நெருங்க இயலாத உலகெனப்படுவது அது.
மெய்யுலகு எங்கோ தொலைவிலிருப்பதாய் தோன்றலாம். உண்மையில் அது ஒருவரது இதயத்துடிப்பைவிட அருகில் உள்ளது. இப்பாடல், நம் நனவுறையும் ஆஞாவில் ஶம்பு உறைகிறான் என்று சொல்கிறது. விழிப்புநிலை, கனவு, ஆழுறக்கம் என நனவுநிலைகள் மூன்றை நாமறிவோம். இவற்றுக்கும் மேலாக அறிவெல்லை கடந்த நிலை என நான்காவதாக ஒன்றுள்ளது. மலர் மொக்கை வலிந்து அலரச் செய்ய முடியாது. அதேபோல், கடந்தநிலையின் வாயில்களை வலிமைகொண்டு உடைத்துத் திறந்து உள்நுழைய முடியாது. பொறுமை காக்க வேண்டும். மீமெய்மை அகத்தில் தோன்றுவது. ஆனால் ஊழுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு சோம்பி அமர்ந்திருப்பருக்கு அல்ல, விழித்திருப்பவருக்கு மட்டுமே அது நிகழும். இதனை யேசு கிறிஸ்து, நடுநிசியில் விளக்கொளியில் மணவறையில் காத்திருக்கும் மணமகள்கள் என்கிறார். அன்றாட உலகில் வெற்றிக்கென பாடுபடுவதிலிருந்து வேறுபட்டவை இந்த முயற்சியும் முனைப்பும். இதில் தேடலுக்கான, கண்டடைவதற்கான மெய்யார்வம் ஒன்றுள்ளது. கட்டுக்கடங்காத மனதின் அமைதியற்ற கொந்தளிப்பல்ல இது. எதிர்பார்ப்புகளற்ற, மிக மிக மென்மையான அக அடிவைப்பு.
மெய்மை குறித்து முன்னரே கட்டமைக்கப்பட்ட (prefabricated) எண்ணங்கள் நம் மனதை நிறைக்கையில், நம் கற்பனையில் உதிக்கும் மடத்தனங்களை எதிர்கொள்ள நேர்கிறது. ‘உன்னை படைத்தவரது கருணையில் நம்பிக்கை வை. பொறுமையாக இரு. உன் தேடல் உண்மையான அன்போடிருக்கட்டும். நெருப்பின் ஒளியாலும், சூரிய ஒளியாலும், சந்திர ஒளியாலும் வெளிக்காட்டப்படும் ஒவ்வொன்றின்மீதும் ஒரே மாதிரியான பொறுமையை கடைபிடிப்பாயாக! இறையின் மிக அரிய கொடையைப் பெறத்தகுதியுள்ள ஒருவராக உன்னை தயார் செய்துகொள்!’ என்று மட்டுமே அறிவுறுத்த முடியும். பின்னர் அமைதி தோன்றுகிறது. ஶம் என்பது அமைதி, ஶம்பு என்பது அமைதியை உருவாக்குவது. அமைதி தவழட்டும்! ௐ சாந்தி!
இப்பாடலுக்கென, தும், ட*, ஷ, ஶ என்ற நான்கு மந்திரங்களும் ஒரு வட்டத்திற்குள் அமைக்கப்படுகின்றன.