ஶ்ரீசக்ர தியானம் – 35

டம் ஸர்வார்த*ஸாத*னீ

அன்னையே, நோக்கங்களை மெய்ப்படச் செய்பவளே, நீ அமைந்த மையப்புள்ளியை (பிந்துஸ்தானம்) தியானிக்கையில், நான் என் புருவமத்தியில் உள்ள ஆஞாவில் நிலைகொள்கிறேன். அங்கிருந்து மனம் விசாரணைகளாக குமிழ்ப்பதாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து எண்ண ஓடைகள் எழுகின்றன. இயல்பிலேயே நீ இசைத் துடிப்புகளாக (நாதரூபிணி) இருக்கின்றாய். அப்பாலிருக்கும் விண்வெளியிலிருந்து (பராகாஶம்) நீ தோன்றுகிறாய் என்று சொல்லப்பட்டாலும், அண்டம் முழுதும் நீ பரவிக் கடந்து செல்கிறாய். ஒவ்வொரு மூலக்கூறிலிருந்தும் கலைநயமிக்க படைப்புகளை உருவாக்குகிறாய். அவற்றிலுள்ள போற்றுதற்குரிய பேரழகு வெளிப்படும்படி, விண்ணோடுரசும் பனியுச்சி சிகரங்களையும், எழுந்தடங்கும் அலைகள் கொண்ட கடலையும், மின்மினியில் ஒளிரும் தண்மையான நெருப்பையும், சூரியனில் சுட்டெரிக்கும் நெருப்பையும், மலரிதழ் தடவிச்செல்லும் மெல்லிய தென்றலையும், நகர்களையே பெயர்த்துச் செல்லும் சூறாவளியையும் படைக்கிறாய். பிரபஞ்சத் தழுவலென முழு உலகையும் உன் மார்போடணைக்கிறாய். 

உனது இந்த ஆடலே உன்னை கலையின் இறைவி (கலாவதி) என்றாக்குகிறது. உனது படைப்பின் விரிவிற்கு ஏற்றபடி என் மனதை மாற்றிக்கொள்ளும் ஆற்றலைக்கூட என்னுடன் பகிர்ந்துகொள்ளும் கருணை கொண்டிருக்கிறாய். நான் பாடும் காப்பியங்களிலும் தியானிக்கும் மந்திரங்களிலும் உன்னை பொருத்தமான சொற்கள் கொண்டு வர்ணிக்கும் திறனையும் எனக்கருளியிருக்கிறாய். விண்வரை எழும் வானம்பாடி, மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஒலிக்கும்படி தன் பாடலை இசைக்கிறது. பின் தானறிந்த மரமொன்றில் சேக்கேறி மௌனத்தில் ஆழ்கிறது. அதுபோலவே, நானும் என் சிறகுகள் விரித்து நீ படைத்த துறக்கங்களில் பறந்து திரிந்து, பின் திரும்பி வந்து எனது இதய மையத்தில் கூடணைகிறேன்.  எண்ணங்களனைத்தையும் என் மையத்தில் சேகரித்து, உன் மௌனத்தின் ரகசியத்தை கண்டடைந்தபின் மீண்டும் வெளிப்பட்டு அறிவின் இனிமையை உலகு நோக்கி பாடுகிறேன். என் அர்ப்பணிப்பில் மகிழும் நீ என் எண்ணங்களை தூயதாக்குவதால் நான் மெய்மையின் பாடலை மனஉறுதியோடு பாடுகிறேன்.

இவ்வுலகில் உடல் கொண்ட உயிரிகள் பற்பல. ஆனாலும் எல்லாவற்றையும் உயிர்ப்பிக்கும் உயிர் மூச்சு ஒன்றே. ப்ராணேஶ்வரியாக, நாங்கள் உள்ளிழுக்கும் மூச்சாகவும் வெளிவிடும் மூச்சாகவும் இருப்பவள் நீயே. நாங்கள் மூச்சிழுக்கையில் மொத்தப் பிரபஞ்சத்தின் நறுமணமும் எங்கள மையத்தில் நுழைகிறது. அனைத்துப் பண்பாடுகளும் எமது உள்ளொளியோடு கலக்கிறது. அதேபோல், நாங்கள் மூச்சு விடுகையில் பல்லாயிரம் பிறவிகளில் நாங்கள் பெற்றதனைத்தும் சூரியனின் கதிர்கள் போல் ஒளிர்ந்து எமது சாரத்தை, அறிந்ததும் அறியாததுமான உன் இருப்பெனும் விரிவில் பரவுகின்றன. எனது இதயத்தின் அநாஹதத்தில் நிகழும் இந்த லயமாற்றங்களில் எந்தத் தடையும் இருப்பதில்லை. வாழ்வளிக்கும் இம்மூச்சு விடாமல் இயங்குவதை நீ கண்காணிப்பதை காண்கையில் உன் குழந்தைகள் மேல் எத்துணை அர்ப்பணிப்புடன் இருக்கிறாய் என்பது தெரிகிறது. எம்மில் எவராலும் உன்னை அந்த அளவு நினைப்பதோ உனக்கெனப் பரிவதோ இயலவே இயலாது.

படிகம் ஒன்று வளர்வதை யாரும் கவனிப்பதில்லை. தாய்கூட தன் மக்கள் வளர்ந்து முதிர்வதை நோக்குவதில்லை. ஒரு கருவாலிக் கொட்டையிலிருந்து முளைக்கும் மரம் வானளவு உயர்வது எப்போது? புதிய கிளைவிடுவதும் புத்திலைகள் பூப்பதும் எப்போது? நாம் காணுவதில்லை. அதே போல், எம்மில் ஒரு ரகசிய அணுமையத்தை (மணிபூரகம்) வைத்திருக்கிறாய். அதைச் சுற்றி எமது முழுமை ஒரு பனிப்பந்து போல் கணம் கணமென வளர்கிறது. ஆக, எம் ஒவ்வொருவரையும் அருமணியென ஆக்குவதில் நீ பேருவகை கொள்கிறாய். ஒரு இனம் முழுமைக்கும் ஒரே வகையான உடலைச் செய்தபின், எமது பிறப்புறுப்புகளின் வேரில் எமது தனித்தன்மையை வைக்கிறாய். அதன் பின்னர், ஆயிரம் பேரால் சூழப்பட்டிருப்பினும், என் எண்ணங்களை தனியே எண்ணுகிறேன். என் விருப்பு வெறுப்புகளை தனியாக உணர்கிறேன். என் முடிவுகளை நானே எடுக்கிறேன். அப்படியெனில், என்னில் மெய்யாக இருப்பது எது? என் பிரபஞ்சத் தன்மையா அல்லது என் தனித்தன்மையா? அனைவருடன் சேர்ந்து ஆடும் அரிய திறனை எம் அனைவருக்கும் கொடுத்துள்ள நீ, விலகிச்சென்று தனிமையில் அமர்ந்துகொள்ளும் ஆற்றலையும் அளித்துள்ளாய். எம் உடல்களின் தனித்தன்மையையும், மனங்களின் பொதுத்தன்மையையும் நீயே அமைத்துள்ளாய்.

உடலோடு நாங்கள் பிறந்தபின்னர், எம் உடல் ஆக்ரமித்துக் கொள்வதற்கான வெளியையும் நீ அருளியிருக்கிறாய். ஒரு உடல் தன் நோக்கத்தை நிறைவேற்றியபின், எரிக்கப்பட்டாலும் புதைக்கப்பட்டாலும், அதனை மீண்டும் ஐம்மூலக்கூறுகளில் ஈர்த்துக்கொள்கிறாய் நீ. எந்த ஆன்மாவைக் கொண்டு நாங்கள் சிந்தித்தோமோ, உணர்ந்தோமோ, தியானித்தோமோ அந்த ஆன்மாவின் ஒளிப் பொறி உன்னில் ஈர்த்துக்கொள்ளப்படுகிறது. ஆக, இவையெல்லாமாக நீ பிறக்கிறாய், நாங்கள் எல்லாம் உன்னில் மறைகிறோம். வாழ்வும் மரணமும் ஒரே துடிப்பின் இரு கூறுகளாகியிருக்கின்றன. நீயே பிரபஞ்ச உயிர்த்துடிப்பு (விஶ்வஸ்பந்தா). உன்னை துடிப்பென தியானித்து, துடிப்பற்ற இருப்பில் ஈர்த்துக்கொள்ளப்படுவேனாக! உனது பேரமைதியில் புகலடைகிறேன். ஓம் நிஸ்பந்தம்.

|| டம் ஸர்வார்தஸாதனீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s