சௌந்தர்யலஹரீ – 35

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருஸி மருத்ஸாரதி*ரஸி

த்வமாபஸ்த்வம் பூ*மிஸ்த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்

த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வவபுஷா

சிதானந்தாகாரம் ஶிவயுவதி பா*வேன பிப்*ருஷே

பாடல் – 35

ஆஞாவில் மனமாக, விஶுத்தியில் வெளியாக

அநாஹதத்தில் வளியாக

ஸ்வாதிஷ்டானத்தில் காற்றின் சாரதியாக

மணிபூரகத்தில் நீராக இருக்கிறாய்

உன் தோற்றம் எனும் வடிவன்றி வேறொன்றும் இல்லை

உனது சுயத்திலிருந்து தோற்றம் கொள்வதற்கென

இந்தப் பிரபஞ்ச வடிவு கொண்ட நீ

பேரின்ப நனவெனும் வடிவு கொண்ட நீ

சிவனை மணம்கொள்ளும் இளமங்கையென

கோலோச்சுகிறாய்

**

ஆரோக்கியமான, படைப்பூக்கம் கொண்ட மனம் என்பது ஒரு இளைய மணப்பெண் போன்றது. அது உவகை கொண்டது, கற்பனையால் நிறைந்தது, அன்பு பூணுவது, தன்மீது அன்பு செலுத்தப்பட வேண்டும் என விழைவது. ஒரு மணப்பெண் என்பவள் தனதேயான ஒரு உலகு குறித்த கனவுகளால் நிரம்பியவள். அடையவேண்டியவை பல உள்ளன; படைக்கப்பட வேண்டிய கருவிகள் பல; ஒவ்வொன்றும் ஒருங்கிணைக்கப்பட வேண்டியுள்ளது. அவள் இனி, தான் பிறந்தவீட்டின் குழவி அல்லள். அவளுக்கென ஒரு சுயம் உண்டு இப்போது. அவளே படைப்பாளியாகவும் அதிகாரியாகவும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறாள். விரிந்த விழிகளோடு அவள் சுற்றுமுற்றும் நோக்குகிறாள். சூழ்ந்துள்ளவற்றை மனதில் கொள்கிறாள். அறிபவள் என்னும் வேடத்தை ஏற்கிறாள். முழுமையாக அறியப்பட்டதையும், அறியப்படவேண்டியவற்றையும் அவள் அறிகிறாள். அறிவெனப்படுவது, தேவைப்படுகையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் தகவலாக மனதில் ஒழுங்கமைக்கப்படுகிறது. ‘அவள்’ எளிய, சாதாரண மணப்பெண் அல்லள்; பிரபஞ்ச மணப்பெண் (ஶிவயுவதி – முழுமுதலான இளைய மங்கை). அவளது அறிவுலகம் அடிப்படையானது – அறிபவர், அறிவு, அறியப்படுவது (ஞாதி, ஞானம், ஞேயம்) என்ற மூன்றின் உலகம். அறியப்படும் எதுவும் ‘இங்கோ’ ‘அங்கோ’ உள்ளது. அதற்கு ஒரு உறுதிப்பாடு உள்ளது. ‘இது’ என உறுதியாகச் சொல்கிறாள் மணமகள். அம்மொழியில் ஒரு மெய்மை உள்ளது. அதுவே ‘சத்யம்’ (இருப்பு). உண்மையை சுட்டிக்காட்டும் அந்தத் தன்னம்பிக்கை, சுயமாகத் தோன்றும் ஒரு விழிப்புணர்வால் வருவது. உண்மையைக் கண்டடைந்து, இருப்பை ஒரு நம்பத்தகுந்த காரணியாக்கும் அறிவு அது. (It is the knowledge that discovers truth and sustains existence as a reliable factor). அதுவே ‘சித்’ எனப்படுவது. இனி அது ஒரு கனவல்ல, யதார்த்தமான, போற்றத்தக்க மெய்மை – ‘ஆனந்தம்’. உயிர்த்துடிப்பு கொண்ட அந்த உவகையே அவ்விளம் மணமகளின் சாரம். அவள் மனதில் பெருகும் அந்தப் பேரானந்தம் அனைத்துத் திசைகளிலும் பரவுகிறது. அவள் கையாளும் அனைத்திலும் அவளது எழில் துலங்குகிறது. பேரின்ப நனவே (சிதானந்தம்) அவளது சாரம் என்பதால், பெருங்குழப்பத்திலிருந்து ஒழுங்கை கொணர்கிறாள் அவள். வாழ்வுக்கு வண்ணமும் இசையும் சேர்க்கிறாள். அவளது அறிவு ஒரு இசைக்கருவியாக, ஒரு ஊர்தியாக, ஒரு படைக்கலனாக, ஒரு கருவியாக இருக்கிறது. படைப்பதற்கு அவள் பயன்படுத்தும் கருவி அது. விழைவின் மூலம் படைப்புச் செயலை புரிகிறாள் அவள். அறிவின் இயக்காற்றல், விழைவின் இயக்காற்றல், படைப்பின் இயக்காற்றல் என்ற மும்மையால் ஆனவள் அவள்.

மூன்றாம் விழியின் ஞானத்தோடு ஆஞாவில் (ஆணைக்கான இயங்கு மையம்) அமர்ந்திருக்கிறாள் அவள். தனதேயான உலகின் இறந்தகாலத்தை, நிகழ்காலத்தை, எதிர்காலத்தை ஏந்தியிருக்கிறாள். ஒரு இறைவியென, கடந்தகாலத்தின் நிறைவேற்றமான நிகழ்காலத்தை எதிர்காலத்தின் முழுமையான தொடர்ச்சியாக வடிவமைக்கிறாள். (she fashions the future to be a perfect continuation of the present which is the fulfilment of the past). உள்ளுறையும் முதிரா நினைவொன்றிலிருந்து ஒரு கனவின் கற்பனைக்கும், கற்பனையிலிருந்து அதன் மெய்ப்படலுக்கும் அவளால் எளிதாகச் செல்ல முடியும். அனைத்தையும் முழுமைபெறச் செய்யும் ஓவியர் அவள். அவளது இருப்பெனும் அழகே வண்ணங்களில், வடிவங்களில், கருத்தைக் கவரும் அர்த்தத்தில் ஒழுகுகிறது. அதுவே, விண்மீன்கள் பதிக்கப்பட்ட வானும், வண்ணமிகு தொடுவான்களும், மலைகளும், பொய்கைகளும், மலர்களும், புட்களும் நிறைந்த இப்பெரும் பிரபஞ்சம். இவ் ஓவியத்தை அவள் தீட்டியபடியே இருக்கிறாள். 

படைப்பின் பிரபஞ்ச மனமாக இருக்கும் இவ்விளைய இல்லாள், ஊமையோ மௌனியோ அல்ல. சொற்களின் இறைவி அவள்: ஞானம் வழங்கும் சொற்களுக்கு, தூய்மை நிறைந்த சொற்களுக்கு, அருட்கிளர்ச்சியளிக்கும் சொற்களுக்கு, அவள் மனத்தையும் அனைவர் மனத்தையும் குளிர்விக்கும் சொற்களுக்கு தேவி. அவள் மெய்மையெனும் பேரில்லத்தில் நுழைந்து சொற்களாலான இசைக்கோவையை தன் யாழில் மீட்டுகிறாள். அவள் விஶுத்தியில் உறைகிறாள். அவளிடமிருந்து அவள் அருளெனும் மணத்தையும் உவகையெனும் பாடலையும் சுமந்து அனைத்துத் திசைகளிலும் வீசுகிறது காற்று. அவளது உவகை நாளை எனும் உறுதிப்பாட்டை, தொடர்ந்து செல்வதற்கான தூண்டலை, நாளைக்கான எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. பேரண்டத்தின் இருதயம் அவளே; அன்பும் கருணையும் பொங்கிப்பெருகும் இருதயமது. அனைவரையும் காத்து புரப்பதில் உறுதியோடிருக்கிறாள் அவள். தன்னைச் சுற்றி அவள் படைக்கும் உலகின் மேல் அவள் கொண்ட இடையறா காதல் அத்தகையது. அவளே அநாஹதம்.

தெளிந்த நீராகட்டும், வாழ்வின் நீராகட்டும், மரமொன்றின் ஊட்டம் நிறைந்த உயிர்ச்சாறாகட்டும் – எதிலும் தெளிமையை விரும்புகிறாள் அவள். வாழ்வும் அவளே, வாழ்வை கொணர்பவளும் அவளே. கனவுகளின் விதைகளுக்கும், படைப்பாளிகளின் மனங்களுக்கும் நீரூற்றுபவள் அவள். அடிப்படையில் வாழ்வென்பது மாறிக்கொண்டே இருக்கும் மனப்பாங்குகளால் (moods) ஆனது.  உவகையை அளித்து மனச்சோர்வுகளைக் களைவதில் மகிழ்பவள் அவள்.  இனிமையோடு எழும் அன்பின் அலைகளே அவள் இயல்பு (சௌந்தர்யலஹரீ). மணிபூரகத்தில் (முழுநிறைவெனும் முத்து) அமர்ந்தபடி அவள் ஒரு ரசவாதிபோல் இயங்குகிறாள். ஒவ்வொன்றிலும் முழுமையை நிறைக்கிறாள். இவ்வுலகெனும் தன் இல்லத்தை முழுநிறைவடையச் செய்வதே இப் பிரபஞ்ச மணப்பெண்ணின் நோக்கம். வடிவமைப்பதற்கென, தூய்மைப்படுத்துவதற்கென, சோதித்துப்பார்ப்பதற்கென ஸ்வாதிஷ்டானத்தின் நெருப்பைத் தூண்டுகிறாள் அவள்.

அறுதியாக, படைக்கப்பட்ட ஒவ்வொன்றின் மீதும் யதார்த்த மெய்மையின் முத்திரை இடப்பட வேண்டும். திண்ணிலம் (terra firma)  போல் அது உறுதியாக இருத்தல் வேண்டும். இம் மணப்பெண், படைப்பின் இப்பிரபஞ்ச மனம், நின்றிருக்கும் உறுதியான நிலம் போல் மெய்மையானது வேறொன்றில்லை. அவள், யதார்த்த உண்மையின் அடித்தளமான மூலாதாரத்திற்கு வருகிறாள். ஒரே சமயத்தில் பருண்மை கொண்டதும், நுண்ணியதும், விளைவுகளுக்குக் காரணமாகவும், அறிவெல்லை கடந்ததாகவும் இருக்கும் இவ்வுலகு ஶிவதூதியினுடையது. அவ்வுலகில் அவள் உவகைநிறைந்த இல்லாளாகவும் அன்னையாகவும் திகழ்கிறாள். அவ்வில்லத்திற்குள் அவளுடைய இனிய, கள்ளமிலா மகளென அவளே ஓடியாடுகிறாள். ஏனெனில், அவளே பாலா; அவளே லலிதா; அவளே ராஜராஜேஶ்வரீ – குழந்தை, மதிகொண்ட மங்கை, படைக்கும் பேரரசி. ஓம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s