ஞம் ஸர்வோன்மாதினீ
அனைவரது களிப்பிலும் மகிழ்ந்திருப்பவளே, அன்னையே! இவ்விழிகள் ஒரு மலரை காண்கையில், அவ் எளிய அனுபவத்தில் பகலவனின் ஓளியும், அழகிய வடிவமைப்பும், மலரிதழ்களின் மனம்மயக்கும் வண்ணமும், அழகை காண்கையில் ஏற்படும் கிளர்ச்சியும் என இவையெல்லாம் பொதிந்துள்ளன. விண்ணும் மண்ணும் அகமும் ஒன்றாகி ஏற்படும் உவகையில் எது அகம் எது புறம் என்று எவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. எளிய மலரொன்று, மண்ணையும் விண்ணையும் அகத்தின் ரசனையையும் ஒன்றிணைக்க முடியும் என்றால், ஞாயிறும, திங்களும், மினுங்கும் விண்மீன்களும், நிலவுலகக் காட்சி விரிவுகளும், அக எண்ணங்களாலும் புறக் காட்சியாலும் களிப்பெய்தும் எண்ணற்ற கோடி மாந்தரும் ஒன்று சேர்கையில் உண்டாகும் ரசனை எத்துணை பெருமையுடைத்தாய் இருக்கும்! அப்பெரு உலகின் எல்லையில்லா தரிசனமும் அனைத்துப் புலனுயிரிகளில் உண்டாகும் கூட்டுக் களிப்பும் ‘நான்’ எனும் நனவால் ஒரு எல்லைக்குள் அடைக்கப்படவில்லை என்றால் ஒருவரை மற்றொருவரிலிருந்து வேற்படுத்துவது ஏதுமில்லை.
ஓவியரது தூரிகை, பிரகாசமானது, இருண்டது, இளவெம்மையானது, தண்ணியது என அனைத்து வண்ணங்களையும் தொட்டெடுக்கிறது. அவர் காட்டும் வண்ண வேறுபாடுகள் காட்சி இன்பத்தை குலைப்பதற்காக அல்ல. தீற்றல்களுக்கிடையேயும் வண்ணங்களுக்கிடையேயும் ஒன்றையொன்று நிறைவுசெய்யும் எதிரிணைகளை உருவாக்கி காட்சியின் அழகை மேலும் கூட்டுவதே அவரது நோக்கமாக இருக்கிறது. இதே போல், பொருட்களின் தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒழுங்கமைவிலும் இன்பங்களும் துன்பங்களும் தோன்றி மறைந்துகொண்டே இருக்கின்றன. உனது அன்பு நிறைந்த அக்கறையின் ரகசியத்தை, இன்பம் வெளிப்படும் புன்முறுவல்களிலிருந்தும் வலியால் தோன்றும் கண்ணீரிலிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம். எங்கள் ஒவ்வொருவரது மனப்பாங்குக்கும் ஏற்ப வெவ்வேறு விதமாக கடந்துசெல்லும் கணங்களை வடிவமைக்கிறாய் நீ. எங்களுக்கென நீ அண்டை வீட்டில் விருந்தொன்றை தயார்செய்து வைத்திருக்கையில், துரதிருஷ்டவசமாக, நாங்கள் எமது கதவுகளை மூடிக்கொள்கிறோம்.
இரண்டு விண்மீன்களுக்கிடையே உள்ள தூரம் ஒளிவருடங்களின் அடிப்படையில் கணக்கிடும்படி நீண்டதாகக் கூட இருக்கும் என்று சொல்லப்படுகிறது. என்றாலும் ஒரே சமயத்தில் பல்லாயிரம் நட்சத்திரங்களை எங்கள் பார்வைக்கு வைக்க நீ தயங்குவதில்லை. பெருஞ்செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் உன் பெருங்கருணை அத்தகையது. பகலிலோ இரவிலோ, விழிப்புநிலையிலோ கனவிலோ, உறக்கம்வராத இரவிலோ ஊழ்கத்தில் ஆழ்ந்த பேரின்ப கணத்திலோ – எப்போதாயினும் – எம் அனைவருக்கும் நீ ஒரு துளி இன்பத்தைக் கொடுத்துவிட தவறுவதே இல்லை. அதன் ஊற்றுமுகம் எது என்பது ஒரு பொருட்டே அல்ல. ஒரு சமயம் சோலையில் பாடும் குயில், இன்னொரு சமயம் கதை சொல்லும் பாட்டி. அறிவியலறிஞரின், தொழில்நுட்ப வல்லுனரின் கண்டுபிடிப்புகளின் வழியே, படைப்புகளின் வழியே எங்களை அது வந்தடைகிறது. காற்றில் சுழன்றிறங்கும் ஒரு இலையை பார்ப்பதுகூட எம்மை இன்பத்தில் ஆழ்த்துகிறது. சில சமயங்களில், எதற்கென்றே தெரியாமல், எம் நினைவை நீ கிளறிவிடுகையில், மனதிற்கினிய பெயரொன்று நினைவிலெழுகிறது. எம் மீதான கட்டுப்பாட்டை இழந்து நாங்கள் உறங்குகையில், எம்மைச் சுற்றி நடப்பது எதுவும் எமக்குத் தெரியாமல் ஆகும்போது, இனிய கனவொன்றை அனுப்பி வைக்கிறாய்; அல்லது ஒரு விளையாட்டென, கொடுங்கனவின் மூலம் எங்களை நடுங்க வைக்கிறாய்.
ஆக, உனது நிரலமைப்பு முடிவற்றதாக இருக்கிறது. அது ஒருவரோடு அல்லது ஒரு உயிரினத்தோடு நின்றுவிடுவதில்லை. இயங்குபவை இயங்காதவை என இவ்வுலகத்தில் உள்ள அனைத்தும் உன்னால் புரக்கப்படுகின்றன. ஒருவர், நிலையற்ற பொருள்களில் மகிழ்கிறார் என்பதற்காக அவரை நீ இழிபிறவியாகக் கருதுவதில்லை. அவரிடம் அன்புகாட்டாமல் இருப்பதில்லை. ஒருவர் நொய்மையானவராக, ஆற்றல் அற்றவராக இருப்பதால் நீ அளிக்கும் ஆபத்து நிறைந்த பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதவராக இருப்பாரேயானால், அவரை ஓய்வெடுக்க, உறங்க அனுமதிக்கிறாய். வேறொருவர், பிடிவாதமாக உலகிலேயே உயரமான மலையுச்சிக்கு ஏறுவேன் என்று உறுதியாக இருப்பாரேயானால் அவரது ஆர்வத்தைத் தூண்டவும் நீ தயாராக இருக்கிறாய். உறுதியுடையோரின் இலக்குகளை மேலும் மேலும் கடினமானதாக ஆக்கும் ஆடலில் நீ மகிழ்ந்து திளைக்கிறாயோ?
இவ்வுலகு தோன்றிய காலம் முதல் இப்பேராடல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. உன் விருப்பத்திற்கேற்றார் போல் மானுடகுலம் அந்தச் சவாலை முழு அர்ப்பணிப்போடு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் விளைவாக, உலகில் பல நகரங்கள் எழுப்பப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கும் தகவல்தொடர்புக்கும் பற்பல வலைப்பின்னல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பு, கடல்கள், வான்வெளி என அனைத்தும் அளவைக்குட்படுத்தப்பட்டு பயணவழி வரைபடங்களாக அளிக்கப்பட்டுள்ளன. இதனால் சின்னஞ்சிறு உவகையைக் கூட ஒருவர் எளிதில் பலரோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது. இன்றுள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்திற்கென களிப்புகள் பதிவுசெய்யப்படுகின்றன.
ஆக, மனித வாழ்வென்பதே நம்பிக்கை எனும் நற்செய்தியை எல்லோருக்கும் பறைசாற்றும் செயலென்றாகிவிட்டது. பல வழிகளிலும் செல்வந்தராகலாம் என்ற நம்பிக்கை ஏழைகளுக்கு அளிக்கப்படுகிறது. பணம், அறிவு, இதயம், நட்பு என அனைத்திலும் செல்வந்தராக முடியும் என்ற நம்பிக்கையூட்டப்பட்டுகிறது. மெலிந்தவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் அளிக்கப்படுகிறது. புரிதல் குறைந்தவர்களுக்கு சரியான பார்வை அளிக்கப்படுகிறது. அன்பின் இனிமையறியாமல் சோகையானவர்களுக்கு நேசத்தின் பாதை காட்டப்படுகிறது. தெளிவற்ற எண்ணங்களால், புகைமூட்டம்கொண்ட கருத்துக்களால் நிறைந்த மனம் கொண்டோருக்கு தூய அறிவு புகட்டப்படுகிறது. அது அவர்களுக்கு உறுதிப்பாட்டையும் மெய்மை நோக்கி புதிய பாதைகளில் பயணிக்கத் தேவையான விருப்பையும் அளிக்கிறது. கொடுமைகளுக்கு ஆளாகியும், அனுபவமின்மையாலும் சுரணைகெட்டுப் போனவர்களுக்கு புதிய நனவொன்று வழங்கப்படுகிறது. அதன்மூலம் அவர்கள் அழகை அனுபவிக்கும் உணர்வை பெறுகிறார்கள். காழ்ப்பும் கொடிய எண்ணமும் கொண்டவர்கள் தம் ஆற்றலை கருணையாகவும் தீவிரத்தை அன்பாகவும் மாற்றி பிறருக்கு உதவும் எளியோராக ஆவது எப்படி என கற்பிக்கிறாய்.
பரபரப்பான எமது அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து ஒரே ஒரு கணத்தை பற்றியெடுத்து நோக்குகையில், உன் கருணை எத்தனை மகத்தானது என்பது எமக்கு விளங்குகிறது. மேலும் மேலும் உன் அன்பிற்கு ஆளாகின்றோம். இறை எங்ஙனம் அனைத்திலும் விளங்குகிறது என்பது எங்களுக்கு புரியத் தொடங்குகிறது. ஒரு மெல்லிய தொடுகையிலிருந்துகூட மொத்த உலகம் தரும் செய்தியை எம்மால் உணரமுடிகிறது. நட்பார்ந்த நம்பிக்கை மொழி கிசுகிசுப்பாக காதில் விழுந்தால்கூட நாங்கள் கிளர்ச்சியடைகிறோம். அதனை சுற்றியுள்ள அனைவருக்கும் கடத்தும் பேறுபெறுகிறோம். வாழ்விடங்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்படுகையில் மொத்த உலகே எமது இருப்பிடமென்றாகிறது. அதன் பின்னர், உன் முகத்தை – அப்படி ஒன்று உனக்கு உண்டென்றால் அதனை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எமக்கில்லை. இவையெல்லாம், ஒரு ஓவியன் தூரிகை கொண்டு சித்திரத்துணியில் வரையும் தீற்றல்கள்போல, இசைக்கலைஞன் தன் கருவியில் இசைக்கும் ஸ்வரக்குறிப்புகள் போல நிகழ்கின்றன. அவையெல்லாம் கூடி ஒரு ஓவியத்தில் அழகு போல, இசைக்கோவையில் இனிமை போல உருக்கொள்கின்றன. எமது பொது நனவின் கூட்டறிவாக (collective knowledge of our common awareness) நீ அறியப்படுவதில் வியப்பேதும் இல்லை.
அத்தகு வண்ணமயமான செயல்களுக்கும் மென்மையான ஆடல்களுக்கும் அடியில் அகவயமான பரந்த களன் ஒன்று உள்ளது. கனவுகள் வழியே நீ உண்டாக்குவது அது. நீ எமது உள்ளத்தில் விதைத்த கனவுகளே எமது நாகரிகங்களாக, பண்பாட்டு விரிவாக்கங்களாக முளைத்துள்ளன. ஆக, எங்கள் விழிப்புநிலையில் மட்டுமல்லாது நனவிலி நிலையிலும் எம்மை களிப்படையச் செய்துகொண்டிருக்கிறாய் நீ. நாங்கள் சோர்ந்துவிட்டோம், இதற்கு மேல் தாள மாட்டோம் என்பதை காணும்போது எங்களுக்கு பெரும் ஓய்வை அளிக்கிறாய். எம் எண்ணங்களென்னும் சிற்றலைகளை அகற்றி, ஓய்ந்த கடல் போல நாங்கள் ஆழுறக்கத்தில் அமைதியடையும்படி செய்கிறாய். வலிமையும் ஆற்றலும் மீண்டும் கைவரப்பெற்றவர்களாய் நாங்கள் விழித்தெழுகிறோம். எங்களில் சிலர், அன்றாட வாழ்வின் எண்ணற்ற செயல்பாடுகளையும், இன்பதுன்பம் எனும் இருமைகளையும் கடந்து பேரமைதிகொண்டவர்களாக வாழ்த்தப்பட்டிருக்கிறோம். அனைத்தையும் நிறையச் செய்யும் உன் கருணை அத்தகையது.
சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதும், ஒன்றிசைந்து பாடிக்கொண்டோ, ஒன்றாக விளையாடிக் கொண்டோ இருக்கும்போதும் நாங்கள் எண்ணற்ற சிறுசிறு உலகுகளில் வாழ்கிறோம். அந்த உலகங்கள் ஒவ்வொன்றும், ‘ப்ரமோதம்’ எனப்படும் எமது சிறு மகிழ்வின் வண்ணமயமான ஒளிபோன்றிருக்கின்றன. அத்தகைய தருணங்களிலும், சாரமற்ற உடல்சார் எல்லைக்குள் அடங்காத, நோக்கிநிற்கும் நனவொன்று எம் ஒவ்வொருவரிலும் இருக்கிறது. அக நனவுக்கு சிறப்புத் தருணம் என எதுவும் இல்லை. அது உள்ளும் புறமும் இருப்பது. ஒரு விளையாட்டிலிருந்து இன்னொன்றிற்கு, ஒரு நகைச்சுவைத் துணுக்கிலிருந்து இன்னொன்றிற்கு தாவும்போதும் இந்த நனவு, வாழ்வை மகிழ்வோடு நோக்கி நின்றபடி இருக்கிறது. இது, பல புலன்சார் செய்திகள் ஒரு மனதிற்குள் சென்று, அனைத்தோடும் ஒன்றி வாழும் நனவை உருவாக்குவது போன்றிருக்கிறது. அதை ‘மோதம்’ என்கிறோம்.
நாங்கள் மகிழ்ந்திருக்கும்போதும், அவ்வாறில்லாதபோதும் வாழ்க்கை இயக்கமின்றி தேங்கி நின்றுவிடுவதில்லை. அது எப்போதும் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் புதிய கணத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும், உன்னிடமிருந்து ‘நாளை’ எனும் நற்செய்தியை எமக்கு கொண்டுவரும் ஒரு தூதராகவே உள்ளது. அது வந்தவுடன் நாங்கள் விழிப்படைகிறோம். ஒரு புதிய கணத்திற்கென பல உள்ளுறை ஆற்றல்களும் இயல்கைகளும் உள்ளன. அவை எல்லாம் உன்னால் வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் எவற்றையெல்லாம் துணிச்சலோடு தேர்ந்தெடுத்து மெய்ப்படச் செய்யலாம் என்பது எம் கையில் உள்ளது. வாழ்வின் தூண்டல்களும் மெய்ப்படல்களுமான ஈட்டிமுனையில், வாழ்க்கையின் நோக்கம் நிறைவேற நாங்கள் கையாளும் எமது அன்றாட அணுகுமுறை அமைந்திருக்கிறது. அதனை நாங்கள் ‘சுகம்’ என்கிறோம். எம்மை செலுத்தும் விசையாக, ஓய்வறியா உற்சாகமாக எமக்குப் பின்னிருந்தபடி, பொது நன்மைக்கெனவும் அனைவரின் நன்மைக்கெனவும் தனியர் ஒவ்வொருவரின் பங்களிப்பு வழியே இவ்வாழ்வை பெரும் வெற்றியாக்க, எம்மை முன்செலுத்திக்கொண்டே இருக்கிறாய். அதை நாங்கள் ‘ஆனந்தம்’ என்கிறோம்.
|| ஞம் ஸர்வோன்மாதினீ ||