சௌந்தர்யலஹரீ – 34

ஶரீரம் த்வம் ஶம்போ*: ஶஶிமிஹிரவக்ஷோருஹயும்

தவாத்மானம் மன்யே ப*கவதி நவாத்மானமனக*ம்

அத: ஶேஷ: ஶேஷீத்யயமுப*யஸாதா*ரணதயா

ஸ்தி*த: ஸம்ந்தோ* வாம் ஸமரஸபரானந்பரயோ:

பாடல் – 34

ஶம்புவின் உடலே நீ

சூரிய சந்திரரே உன் இரு முலைகள்

உன் ஆன்மாவையே 

பா*வத்தின் தூய ஆன்மாவாகக் கொள்கிறேன்

அருளப்பட்டவளே

நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் நிறைவுசெய்து

ஒருவரது சாரமே மற்றொருவர் என உணர்ந்து

ஒன்றேபோல் பேரின்பத்தில் திளைக்கிறீர்கள்

**

உடல் கொண்ட மனிதர்கள் நாம். ஒருவர் தன் கண்களைத் திறந்து பல பொருட்களை காண முடிகிறது. அப்பொருட்கள் பார்க்கப்படுபவை, அவர் நோக்குபவர். அவரால் தன் கைகால்களையும், கண்ணுக்குத் தெரியும் பிற உடலுறுப்புகளையும் பார்க்க முடியும். அவ்வாறெனில் அவையும் பொருட்களே; பார்க்கப்படுபவையே. இங்கு ஒரு கேள்வி எழுகிறது: நோக்குபவர் யார்? பார்க்கப்படுபவை எவை? ஒருவர் தன்னுடலையே புறவயமாகக் காண்கிறார் என்றால் பார்க்கப்படும் பொருள் எங்கே? உடலுக்குள்ளேயே தனியாக ஒரு நோக்குபவர் அமர்ந்திருக்கும் இடம் எது? கண் காண்பதற்கான உறுப்பு என்றால், கண்ணை பார்ப்பவர் கண்ணிலிருந்து வேறுபட்டவரா? ஒரு தத்துவவாதி கருத்துக்களை உருவாக்கி, கண்ணுக்குப் பின்னால் நோக்குபவர் ஒருவரையும், காதுக்குப் பின்னால் கேட்பவர் ஒருவரையும் வைக்கக் கூடும். ஆனால், நாம் அத்தகைய தனிப் பொருளொன்றை உணர்கிறோமா என்ன? உடலின் புறப்பரப்பை கவனிப்பது மட்டுமல்ல நாம் செய்வது; நாம் சிந்திக்கிறோம், பகுத்தறிகிறோம், மகிழ்கிறோம் அல்லது வருந்துகிறோம். அறியும்போதும், எண்ணும்போதும், உணரும்போதும் நாம் அறிகிறோம் என்றும், எண்ணுகிறோம் என்றும், பகுத்தறிகிறோம் என்றும், செய்கிறோம் என்றும், பாராட்டுகிறோம் என்றும், வருந்துகிறோம் என்றும் அறிகிறோம். அகவய எண்ணங்கள் கூட மேலும் அகவயமான ஒரு மையத்தின் (புறவயப்) பொருள்களாகவே கருதப்படுகின்றன. அகவய எண்ணங்களும் அவற்றை நோக்கிநிற்பதும் நனவே என்றால் இரண்டையும் வேறுபடுத்தும் எல்லை எங்கிருக்கிறது? நாமறியோம். இவை வெவ்வேறானவை என்று நாம் ஊகிக்கிறோம். ஏனெனில்,  நனவின் அலகுகளை தர்க்கபூர்வமாக பிரித்து, அவற்றிற்கு நாம் பொருள்பொதிந்த பெயரிட்டிருக்கிறோம்; சொற்களைக் கொண்டே சிந்திக்கிறோம். ஒவ்வொரு சொல்லும், பொதுவான நனவுக்குள் குறிப்பிட்ட ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.  ஆக, பிரித்தறிவது பெயரளவில் மட்டுமே.

‘அங்கெங்கோ’ உள்ள ஆகப் புறவயமான பொருளில் தொடங்கி, அகவயமான ‘நான்’ எனும் தன்னொளிர்வு கொண்ட நனவு வரை, நாம் சிக்கலான சூழல் ஒன்றை கையாள வேண்டியுள்ளது.  ஒரு உடலென உள்ள நாமே ஒரு ஆன்மாவாகவும் உள்ளோம். உடலும் ஆன்மாவும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி அமைந்துள்ளவை. ஆன்மா என்று நாம் சொல்வதன் ஒரு சிறு பகுதிகூட அதற்குப் பொருந்தக்கூடிய ஒரு உடல்கூறு இல்லாமல் தான் மட்டும் தனித்து நிற்கவியலாது. உடல்சார்ந்த ஒவ்வொரு கூறையும், விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு அறிவாக ஆக்கிக்கொண்டால் மட்டுமே அதை நாம் அறிய முடியும். ஆக, ஒரு வகையில் அனைத்துமே ஆன்மிகமானது. இதேபோல், அனைத்துமே உடல்சார்ந்தது என்று சொல்வதும் உண்மையே. சரீரம் (உடல்) ஆன்மா (ஆவி) என்ற இரண்டையும் ஒன்றாகக் காண்கையில், அவை ஊடும் பாவும் போல ஒன்றையொன்று பின்னியிருப்பவை என்றுகூட சொல்வதற்கில்லை. இந்த வேறுபாட்டுக்கு விதிகள் ஏதுமில்லை என்றாலும் அவை இரண்டும் வேறுவேறானவை என்றே கருதத்தக்கவை (The division is arbitrary, and yet they are conceivably different). 

ஒருவரையொருவர் நிறைவுசெய்பவர்களாகத் திகழும் சிவனும் சக்தியுமே தனது இரண்டு வெவ்வேறு பண்புகளாக இருப்பதை தியானிக்கும் ஒருவருக்கு வரும் முதல் எண்ணம் இதுவே. இது ஜீவவியூகம் எனப்படுகிறது. வியூகம் என்பது, சீராக அடுக்கப்பட்ட, பயன்பாட்டுக்கு ஏற்றபடி  நிரலமைக்கப்பட்ட ஒரு ஒழுங்கமைவு. போர்வீரர்களை ஒரு குறிப்பிட்ட முறையில் நிரல் நிறுத்துவது ஒரு வியூகம் எனப்படுகிறது. அதேபோல், ஒழுங்கமைவு கொண்ட ஒரு மனிதரும் ஒரு வியூகமே. அவரது நனவுக் கருவாக சிவனையும் உடலை சக்தியாகவும் கருதலாம். அதே போல், சக்தியை மையக் கருவாகவும் சிவனை தோற்றம் கொண்ட மனிதனாகவும் கருதலாம். இவ்விரண்டு கூறுகளையும் ஒன்றன் இடத்தில் இன்னொன்றை வைக்கக் கூடியவையாகக் கொள்ள வேண்டும் என்று இப்பாடல் சொல்கிறது.   

பிறந்த நாள் முதல் நம்மைச் சுற்றி பேசப்படும் வாய்மொழியை நாம் கேட்கிறோம். நம்மை அறியாமலேயே ஒலித் துணுக்குகளை நம்மைச் சுற்றியுள்ள பொருட்களோடும் சொற்கள் மூலமாக நமக்கு கடத்தப்பட்ட கருத்துக்களோடும் தொடர்புறுத்திக் கொள்கிறோம். நாம் அன்புடன் வளர்க்கும் பூனையும் நாயும் கூட அவற்றிடம் பேசுவதை புரிந்துகொள்கின்றன. சொற்கள் மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் கொண்டு அமைக்கப்படுகின்றன. ஒருவர் தனக்குப் புறத்தே உள்ள ஒவ்வொன்றோடும் தன்னை தொடர்புறுத்திக்கொள்வதற்கான பயிற்சியில் இதுவே முதல் படி. மொத்த உலகையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மொழிசார் உறவுகளைக் குறிக்கும் சொற்களின் பேரகராதியாக, அகத்தே சுருக்கி வைப்பதென்பது ஒரு மாயம் போல் நிகழ்கிறது. பின்னர், நான்கைந்து வருடங்களில் தேவையான அனைத்துச் சொற்களையும் நன்கறிந்து. அவற்றை சரியாகப் பயன்படுத்தவும் செய்கிறார். ஒருவர் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஒரு உறுப்பினராகச் செயல்படுவதற்கு அவரைச் சுற்றி முதன் முதலாக அமைக்கப்படும் வியூகம் இதுவே. இது ‘கலாவியூகம்’ எனப்படுகிறது.

ஒருவர் கேட்கும், பார்க்கும், உணரும் ஒவ்வொன்றும் முதலில் சுழிகளாக அல்லது மொழியின் நிரலாக சுருக்கப்படவேண்டும். (reduced to ciphers or codes of language). அதன் பின்னர், அவற்றை அறிவதற்கு, ‘நான்’ எனும் நனவை உணரும் மையப்புள்ளியோடு அவை தொடர்புறுத்தப்பட வேண்டும். ‘நான்’ என்பதே தனக்குள் அனுப்பப்படும் சுழிகளை கணக்கிடுவது. அந்த மைய சாட்சிக்கு (central witness), அதற்கு காட்டப்படும் குறியீடுகளை அப்போதைக்கப்போது கணக்கிடத் தெரிந்திருக்க வேண்டும். நனவிலியிலிருந்து நனவு வரையிலான, அகவயக் கருத்திலிருந்து புறவயக் கணித மெய்மை வரையிலான ஒருவரது அறிவின் செங்குத்து அளவையில் இந்த மையப் பகுதியை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு நகர்த்த முடியும். (This central location can be shifted from one center to another in the vertical parameter of the person’s knowledge ranging from the most unconscious to the most conscious, from the most irrational notion to the most rationalized mathematical certitude.) இந்த மையப் புள்ளியே பிந்துவியூகத்தை ஆள்வது. மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விஶுத்தி, ஆஞா என்ற ஆறு ஒருங்கிணைவுச் செயல்பாட்டு மையங்களிலும் (synergic centres)  இந்த பிந்துவை வைக்க முடியும். 

ஒருவருக்கு, விவரிக்க இயலாத, மிக அந்தரங்கமான ஒரு உவகை ஏற்படுகையில் அவரால் தன்னை அதிலிருந்து பிரித்தெடுத்து புறவயமாக அந்தக் களிப்பை அவதானிக்க முடியாமல் போகலாம். அந்த உவகை மெய்யானது, என்றாலும் அதை சொற்களால் விவரித்துவிட முடியாதது. ஒருவரது மையப்புள்ளியில் இது நிகழ்ந்து, எல்லைகள் எல்லாம் கரைந்தழியும் நிலையே ‘பரா’ எனப்படுகிறது. இசைவிக்கப்படாததற்கும் இசைவிக்கப்பட்டதற்கும் இடையில் ஒரு கற்பனை தோன்றுகிறது. அது நனவிலி நிலையில் இருப்பதுதான். இது, வெளிப்படையான விழிப்புநிலையின் நுழைவாயிலில் காத்திருக்கும் நனவுக்கு முந்தைய மொழிவெளிப்பாடு போன்றது. (Between the unmodulated and the modulated an envisioning happens which is still of an unconscious state. This is something similar to what is spoken of as the preconscious waiting at the threshold of overt awareness). இது ‘பஶ்யந்தி’ எனப்படுவது. அதன் பின்னர், நனவுபூர்வமாக கண்டுகொள்ளக் கூடிய ஒரு எண்ணமாக, ஒரு உணர்ச்சியாக வெடித்தெழுவதற்கான ஒரு ஊடகத்தை அது கண்டடைகிறது. அது ‘மத்யமா’ எனப்படுவது. இறுதியாக, பொருத்தமான சொற்கள் கண்டடையப்படுகின்றன. ஒருவர் அகத்திலிருந்து தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். அவரது ஆன்மாவின் குரல் கேட்கப்படுகிறது; நாவால் பேசப்படுகிறது; அவரது செவியாலேயே கேட்கப்படுகிறது. இதனை ‘வைகரீ’ என்பர். இந்த அக வெளிப்பாடு ‘நாத வியூகம்’ (மொழி அமைப்புமுறை) எனப்படுகிறது.

தனது ஒப்புதலையும், மறுப்பையும், மகிழ்வையும், வெறுப்பையும் எல்லாம் வெளிப்படுத்த ஒருவருக்கு மொழி தேவைப்படுகிறது. ஒரு தன்முனைப்பு மையமில்லாமல் உணர்ச்சி என்பதே இல்லை. வலியையோ அல்லது மகிழ்வையோ தரும் ஒரு சமிக்கை (signal), கடந்தகாலத்தில் ஏற்பட்ட அதேபோன்ற அனுபவங்களை மீட்டெடுக்கிறது. இதனால் ஒருவர் அதனை ஏற்கவோ, விலக்கவோ, போராடவோ, தப்பித்துச் செல்லவோ முடிவெடுக்க இயல்கிறது. இவ்வாறாக ‘அஹங்காரம்’ எனும் தன்முனைப்பு, நினைவுகளோடு (சித்தம்) பிணைக்கப்பட்டுள்ளது. நினைவுகளின் உதவி கொண்டு, ஒருவர் தான் எதிர்கொள்ளும் சூழலின் உண்மைத் தன்மையை அறியமுடிகிறது. இது ‘புத்தி’ (அறிவாற்றல்) எனப்படுவது. இவ்வாறு செய்யப்படும் மதிப்பீடு மனதில் (மனஸ்) தோன்றும் பல கேள்விகளுக்கான பதிலாக அமைகிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் அகம் சார்ந்தவையாக, ஆன்மா சார்ந்தவையாகத் தெரிந்தாலும், ஒரு உடலின் பருண்ம-வேதி அடிப்படை இல்லாமல் அவை வெளிப்பட முடியாது. நம் எதிரே உள்ள பருண்மை கொண்ட உயிரினத்தின் மெய்த் தன்மை நாம் அறியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், உடல்கொண்டவை வெளிப்படுவதற்கு ஒரு ‘மூலப்பொருள்’ (stuff) இருக்கிறது. அதுவே ‘மஹத்’ எனப்படுவது. உடல்-உள்ளம் எனும் இந்தத் தோற்ற வகைமை ‘சித்தம்’ எனும் வியூகத்தில் அமைந்திருப்பது.

நாமறியாத ஒன்றில் நாம் ஆழ மூழ்கியிருக்கிறோம் என்பதையும், அறியும் உடல்-உள்ளம் எனும் கூட்டமைப்பின் அறியப்படாத ஒரு இயக்க ஒழுங்கமைவு (mechanism) மூலமாக அதனை நாம் அறியத் தொடங்குகிறோம் என்பதையும் பார்த்தோம். அறிதல் என்பது நனவை ஒரு குறிப்பிட்ட வகையில் திரட்டி அறிவார்ந்த முறையில் அமைத்தல். இது ‘சவிகல்பம்’ எனப்படுவது. அதிலிருந்து ஒருவர் ஒரு நிலையை அடைகிறார். அப்படி ஒரு நிலையை தான் அடைந்ததை, அவர் தன் நனவுக்கு அல்லது சவிகல்பத்துக்கு மீண்ட பின்பே உணர்கிறார். அது ‘நிர்விகல்பம்’ எனப்படுவது. சவிகல்பமும் நிர்விகல்பமும் ‘ஞான வியூக’த்தை சார்ந்தவை. 

பொருட்கள் பெயரிடப்படுவது மிகப் புதிரான நிகழ்வு. ஆதிமொழி ஒன்றும் மொழிகளின் மொழி ஒன்றும் (a proto-language and a meta-language) ஒன்றுக்குள் ஒன்றாக நெய்யப்படுகின்றன. அத்தகைய மொழியின் சொற்கள் புதிய பொருள்களை அளிக்கின்றன. புதிய பெயர்கள் பிறக்கின்றன. அனுபவங்கள் பெருகப் பெருக பெயர்களும் பெருகுகின்றன. அறிவின் இயக்காற்றல் போல செயல்படும் அந்தச் சொல்பெருகும் அமைப்பு ‘நாம வியூகம்’ எனப்படுகிறது.

பல்லாயிரம் பெயர்கள் உள்ளன என்பதே பல்லாயிரம் வடிவங்கள் உள்ளன என்பதற்கு சாட்சி. வடிவங்களே பொதுமைப்படுத்தலுக்கும் வகைமைப்படுத்தலுக்கும் அதிகம் உதவுகின்றன. வண்ணங்கள் சேரும்போது வகைமைப்படுத்தல் இன்னும் மேம்படுகிறது. எல்லையிலா வெளியில் விரித்து வைக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான உலகில் மானுடன் படைக்கப்பட்டிருக்கிறான். இது ‘குல வியூகம்’ எனப்படுகிறது.  

கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரத்தில் தொடங்கி ஒரு ஊழிக்காலம் வரையிலான கால அளவில் அனைத்தும் நிகழ்கின்றன. காலத்தை உண்டாக்கி காலத்தை அழிக்கும் கொள்கை ‘கால வியூகம்’ எனப்படுகிறது.

இந்த ஒன்பது வியூகங்களும் சிவனும் சக்தியுமானவை. அவை உடல்சார் உலகுக்கும் அதனை ஆன்மா சார்ந்து புரிந்துகொள்வதற்கும் பொருந்துபவை. ஆக, இந்த ஒன்பது வியூகங்களையும் தியானிப்பவர் உடல்சார் உலகை ஒழிந்து ஆன்மிகம் நோக்கி செல்வதில்லை. அதே சமயம் ஆன்மிகத்திலிருந்து விலகி மேலும் உலகியல் சார்ந்தவராக ஆவதில்லை. அனைத்து இருமைகளும் மறைகின்றன. ஒட்டு மொத்த அமைப்பில் தனக்கேயான அமைதியை அவர் கண்டடைகிறார்.  அந்த அமைப்பின் இணைப் படைப்பாளியாக தன்னை உணர்கிறார். 

தியானிப்பதற்கு ‘ஹ்ரீம்’ எனும் மந்திரம் ஒரு முக்கோணத்தினுள் வைக்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s