ஶம் ஸர்வரஞ்ஜனீ
தாயே, ஸர்வரஞ்ஜனீ, எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் உன் வல்லமை எல்லையற்றது. ஒரு பனித்துளிகூட வானவில்லின் ஏழு வண்ணங்களையும் பிரதிபலிக்க முடியும். ஒரு கணம் மாணிக்கமாகவும் மறுகணம் மரகதமெனவும் மாயம் காட்ட முடியும். சில நிமிடங்களில் அது ஆவியாகி மறைந்துவிடும் என்றாலும், இப்பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நீ புதைந்து வைத்திருக்கும் விந்தைகளை அது காட்டிச் செல்கிறது. உருண்டையான முத்துப்போன்ற சின்னஞ்சிறு உடல்கொண்ட அப்பனித்துளி, தன்னால் முழு வானத்தையும் எதிரொளிக்க முடியவில்லை என்று முறையிடுவதில்லை. எம் அனைவரின் அகத்தையும் (சுயத்தையும்) அதே கொள்கை அடிப்படையில்தான் நீ வடிவமைத்திருக்கிறாய். ஒரு பனித்துளியைப் போலவே நாங்களும், புறத்தே நீ விரித்துவைத்திருக்கும் உலகையும் அகத்தே நீ பொறித்து வைத்திருக்கும் பொருளையும், எமது மூளையிலுள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் எதிரொளிக்கிறோம்.
எழுத்துருக்கள் ஒன்றோடொன்று இணைந்து பொருள்பொதிந்த ஒரு மொழியை உருவாக்குவதுபோல, உன் அழகை எதிரொளிக்கும் பிம்பங்கள் எல்லாம் ஒன்றோடொன்று கலந்து உன் குழவிகளாகிய எங்களை மகிழ்விக்கின்றன. திருமகளின் கண்களை எங்களுக்கு அளித்து ஒவ்வொரு வடிவிலுமுள்ள எழிலையும் அருளையும், அவள் காண்பதுபோலவே நாங்களும் காணும்படி செய்கிறாய். அழகின் கொண்டாட்டத்தில் நாங்கள் களித்திருக்கையில், சில சமயங்களில் துயரம் நிறைந்ததாகக் கருதப்படும் இவ்வுலகின் துன்பங்களை நாங்கள் மறந்தே போகிறோம். அனைத்தையும் தழுவி நிற்கும் அழகு ஒவ்வொரு வடிவையும் அலங்கரிக்கிறது, ஒவ்வொரு பெயரும் புகழ்பாடுவதாக இருக்கிறது. இதை காணும் விந்தையே, மிகச்சிறந்த ஞானம்.
காம நினைவுகளின் இறையான ஸ்மரனை எரித்தவன் உன் இறை என்பதை நாங்கள் மறப்பதில்லை. காமநினைவு ஏற்படுத்தும் புலன்தடுமாற்றத்தை அழித்த மீஅன்பெனும் மின்னல்கீற்றின் வழியே, இறைவன் தனது அளவிடமுடியா அழகையே தன் எதிரிணையெனக் கண்டான். எனவே, மெய்யுணர்வு பெறுவதற்கென நாங்கள் தியானிப்பதற்கு நீ காமராஜபீஜத்தை வழங்கியிருப்பதில் விந்தை எதுவும் இல்லை. ஐம் எனும் காமராஜபீஜத்தில் தொடங்கும் நாங்கள் ஹ்ரீம் எனும் புவனேஶ்வரபீஜத்தில் நுழைகிறோம். இறுதியாக, ஶ்ரீம் எனும் மந்திரத்தின் துணையோடு உன் பெருமைக்குள் திரும்புகிறோம். ஶ்ரீபீஜத்தில் எங்களது எண்ணற்ற முற்சார்புகளிலிருந்தும் முடிவற்ற செயல்வினைகளிலிருந்தும் எழுந்த அனைத்து மகிழ்ச்சிக் கொழுந்துகளும் தன்னறிவின் ஒளியில் பின்னடைகின்றன. அதன்பின்னர் எமக்கு கைத்தடியென எந்தச் செயலும் தேவைப்படுவதில்லை.
அது, ஒளியைத் தேடும் விழி சுயஒளியால் நிறைவது போன்றது. கேட்க விழையும் செவி ‘பரா’வின் எல்லையற்ற நாதத்தால் நிறைவது போன்றது. நல்லதே ஆற்றி நல்லவராய் இருந்தால் நல்வழி அடைவோம் என்ற பொய்யான நம்பிக்கை கொண்டிருந்தோம். அதற்கென பகுத்தறிவோடு சீர்மைமிகு செயல்களையே ஆற்றிக்கொண்டிருந்தோம். இம்மடமையிலிருந்து எம்மை விடுவித்தது அம்மகிழ்ச்சி. காய்ந்த புல்லில், இலைச்சருகில் தீப்பொறி ஒன்று விழுமெனில் அது காட்டுத்தீயாய் மாறும். இனிய பழங்கள் தரும் மரம் எது, தீய பழங்கள் தரும் மரம் எது என்றெல்லாம் காட்டுத்தீ கருதுவதில்லை.
இவ்வாறு ஒட்டுமொத்தக் குறுக்கல் (universal reduction) மூலமாக மனதிலிருந்து நினைவுகளும், அடையாளங்களும் அகல்கின்றன. ஒட்டுமொத்த எரிப்பால் தோன்றும் சமநிலையில் ‘அனைத்தும்’ ‘இன்மை’யும் ஒன்றே என ஆகின்றன. ஒருமையான அமைதியே எஞ்சுகிறது. அந்த அமைதியில் எழும் விலைமதிப்பற்ற முத்தே சிவனது மீஞானமாக, சிந்தாமணியாக கண்டடையப்படுகிறது. பல பிறப்புகளில் அதை தேடியலைந்ததெல்லாம் வீணே. இறுதியில், மெய்த்தேடல் கொண்ட ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் முழுவதும் இதயத்தில் கொண்டிருந்த மைய மெய்மையின் சாரமென அது தன்னைத் தானே வெளிப்படுத்துகிறது. உன் எல்லையற்ற ஆடல்களில், நீ உன் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக நிகழ்த்தும் இந்த மெய்யுணர்தலே ஆகப்பெரிய விந்தையாய் உள்ளது. பெருமகிழ்வில் திளைப்பவளே, உன் வெற்றியே எமது வெற்றி. வாழ்க! வாழ்க!
|| ஶம் ஸர்வரஞ்ஜனீ ||