சௌந்தர்யலஹரீ – 33

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதயமிமாதௌ தவமனோர்

நித்*யாயைகே நித்யே நிரவதி*மஹாபோ*கரஸிகா:

ப*ஜந்தித்வாம் சிந்தாமணிகுணனிபத்தா*க்ஷவலயா:

ஶிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபி*க்ருததா*ராஹுதிஶதை:

பாடல் -33

தனித்தவளே, அழிவிலாதவளே,

பேரின்பம் துய்க்கும் எண்ணற்ற போகிகள்

உன் மந்திரத்திற்கு முன்னொட்டாக

ஸ்மரன், யோனி, லக்ஷ்மி (ஐம், ஹ்ரீம், ஶ்ரீம்)

என்ற முத்தொகுதியை சேர்த்து

சிந்தாமணிகளால் ஆன ஜபமாலையுடன்

விழைந்ததை அருளும் சுரபி எனும் பசுவின் நெய்யை

சிவமெனும் நெருப்பில் இடைவிடாது ஆகுதி செய்து

உன்னை வழிபடுகின்றனர்

**

மனிதர் மகிழ்ச்சியை நாடுகின்றனர். புலனின்பங்களில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. தக்க விழுமியங்கள் குறித்து ரசனையோடு வளர்த்தெடுக்கப்பட்ட அறிவுசார் மதிப்பீட்டில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. மிக அறிதான கடந்தநிலையிலும் ஒரு மகிழ்ச்சி உள்ளது. கீழ்மையான இன்பங்களில் தோய்ந்து கிடந்தால் மனிதருக்கு நோய் (ரோகம்)  உண்டாகிறது. அறிவுசார் மதிப்பீடுகளால் போகம் உண்டாகிறது. அதீத இன்பம் எய்தும் நிலையே போகம் எனப்படுவது. பருண்மைத் தளத்தில் இன்பங்களைக் கடந்தநிலைக்குச் செல்வதும் அந்த ஆற்றலைக் கொண்டு முழுமுதலோடு ஒன்றுவதும், ஒருவரை முழுமைபெறச் செய்து குன்றாத மகிழ்வடையச் செய்கிறது. அதுவே யோகம். அனைத்து மதங்களிலும் சொர்க்கம் நரகம் எனற கருத்தாக்கங்கள் உள்ளன. சொர்க்க நரகங்களைத் தாண்டி, மூன்றாவதாக ஒரு இயல்கை உள்ளது. அது, முன்வரையறைகள் (relativistic conditionings) எனும் தளைகள் அனைத்திலிருந்தும் விடுபடுவது. அதுவே விடுதலை, வீடுபேறு, தனிமை.

மானுட உடலில் இன்பம் துய்க்கும் மையங்கள் மூன்று உள்ளன. ஆகக் கீழே இருப்பது பிறப்புறுப்பு உள்ள இடம். அங்குதான் பாலியல் இன்பத்தை ஒருவர் அனுபவிக்கிறார். இருதயம் உள்ள நடுப்பகுதி அடுத்த மையம். காதல், கருணை, அழகை ரசித்தல் போன்ற நுண்ணிய மேன்மையான கூறுகள் இந்தப்பகுதியில்தான் இருக்கின்றன. உச்சியில் உள்ளது மனம். அந்தப் பகுதியில்தான் ஒருவர் பருண்மையானவற்றையும் நுண்மையானவற்றையும் ஆதிக்கொள்கையாக சுருக்கி மதிப்பிடுகிறார். மனிதன் என்பவன் ஒரு விலங்கு, அவன் ஒரு கடவுளும் கூட. அவனது முதன்மையான நாட்டம் இன்பத்திலும், அந்த இன்பத்தை அடைவதற்கான வழிகளிலும் உள்ளது. பெரும்பாலானோர் இன்பத்தையும் அதை அடைவதற்கான வழிமுறைகளையும் ஒன்றே என எண்ணி மயங்குகின்றனர். செல்வத்தைக் கொண்டு ஒருவரால் பல இன்பங்களை விலைகொடுத்து வாங்க முடியும். எதிர்காலத்திலும் அந்த இன்பங்களை தொடர்ந்து பெறவேண்டும் எனக் கருதும் மனிதன் அதற்கென செல்வத்தை சேமித்து பதுக்குகிறான். செல்வத்தை பதுக்கத் தொடங்குகையில் வழிமுறைகளே நோக்கமாகிவிடுகிறது. இந்த முக்கோண நாட்டத்தில் மூன்று கொள்கைகள் உள்ளன: முதலாவது பாலியல் இன்பம், இரண்டாவது செல்வம், மூன்றாவது இவ்விரண்டையும் எப்போதும் நினைத்துக் கொண்டிருத்தல். நினைவாக (ஸ்மரன்) உணரப்படும் முன்வரையறைகளே மனதை நிரலமைக்கின்றன. ஒருவர், முன்பு தனக்கு ஏற்பட்ட அழகனுபவத்தை கண்கள் இருக்கும் பகுதியில் நினைவுகூர்கிறார். அதைத் தொடர்ந்து, முன்பு இன்பம் அளித்த அந்த இனிய அனுபவம் மீண்டும் மீண்டும் நிகழவேண்டுமென்ற விழைவு எழுகிறது. எல்லா புலன்களுக்கும், புலனின்ப நுகர்வுகளுக்கும் இது பொருந்தும்.

இதே போன்ற விழைவுகொண்ட செயலுறுப்பு பிறப்புறுப்பு மட்டுமே. முதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பாக பாலியல் இன்பம் என்பது ஒரு பரவச உணர்வாக மட்டுமே இருக்கிறது. தாயின் முலையருந்துவதும், கழிவுகளை அகற்றுவதுமே ஒரு குழந்தையின் முதன்மை இன்பங்களாக இருக்கின்றன. அதன்பின்னர், வாய்வழி, குதவழி பாலியல் இன்பங்கள் பிறப்புறுப்புகளில் செறிகின்றன. வளரிளம் பருவத்தின் வேதனையும், இன்னல்களும் அனைவரும் அறிந்ததே. மனிதரைத் தவிர பிற விலங்குகளில், பாலியல் இன்பம் என்பது அளவானதாகவும், இயற்கை உள்ளுணர்வுகளால் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கிறது. ஆனால், மனிதன் என்ற ஒரு விலங்குக்கு மட்டுமே, அவன் விருப்பப்படி துய்க்கக்கூடிய கட்டற்ற பாலியல் இன்பம் அளிக்கப்பட்டிருக்கிறது. சிலர் துய்த்து நிறைவடைகின்றனர், பிறர் விலக்குகின்றனர், வெகு சிலர் அறிவாற்றல் கொண்டு அதை அடக்கிவைக்கின்றனர். 

இந்தப் பாடலில் நாம் பேசுவது ஒரு யோகியைப் பற்றி அல்ல. மாறாக, தன் உள்ளுணர்வால் எழும் வேட்கைகளை தன் அறிவாற்றல் கொண்டு அடக்கிவைக்கும் ஒரு போகியைப் பற்றி பேசுகிறோம். இதன் மூலம், பின்னர் அவர் மீஇணைவுக்கான பாதையில் செல்லும் பேறு பெறமுடியும். ஒழுக்கம் எனும் இருக்கையில் நிலையாக அமர்ந்திருக்கும் யோகி, இனப்பெருக்க விழைவுகள் வெளிப்பட முயலும் தனது ஸ்வாதிஷ்டானத்தை கவனிக்கிறார். இங்கே ஸ்மரன் (காமராஜ பீஜ ‘ஐம்’); யோனி (புவனேஶ்வரிபீஜ ‘ஹ்ரீம்’); லக்ஷ்மி (ஶ்ரீபீஜ ‘ஶ்ரீம்’) ஆகிய மூன்று பீஜ மந்திரங்களும் அமைந்திருக்கின்றன. பூ* என்றால் ‘உண்டாக்க’ என்பது பொருள். சிற்றுயிர்கள் சில ஆயிரம் முட்டைகள் வரை இடுகின்றன. ஒரு பன்றிகூட பல குட்டிகளை ஒரே சமயத்தில் ஈனுகின்றது. மானுடப் பெண் பெரும்பாலும் ஒரு சமயத்தில் ஒரு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கிறாள். அரிதாக இரண்டு, மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. சினைப்படும் வரை, ஒவ்வொரு மாதமும் பெண்ணானவள் கருவுறுதலுக்கு தயாராகிறாள். ஆண்களிலும் இவ்வகையான ஒரு ஒழுங்கு உண்டென்றாலும், வெகுசிலரே தமது பாலுணர்வொழுங்கை கவனிக்கின்றனர். பெரும்பாலான ஆண்களில், கருவுறச் செய்யும் வேட்கை எப்போது வேண்டுமானாலும் எழும். அவர்களது பாலியல் உணர்வு கட்டுப்பாடற்றது. ஆகவே, புவனேஶ்வரியின் இல்லமான யோனி எப்போதும் இனப்பெருக்கத்தில் ஆர்வம் கொண்டதாகவே இருக்கிறது. பார்வை, குரல், தொடுகை, மணம் ஆகியவை எல்லாம் விரும்புபவரை அடைவதற்கான நினைவூட்டல்களாக இருக்கின்றன. ஸ்மரன் அல்லது நினைவு வலுவான பங்காற்றுகிறது. தன் இணையால் விரும்பப்படவேண்டும் என்றால் ஒருவர் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். இதற்கென, ஒருவர் நயநேர்த்தியோடு இருக்க விழைகிறார், அதற்கு லக்ஷ்மியை துணைக்கழைக்கிறார். 

தியானிப்பவருக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. ஒன்று, அவர் இருக்கையை விட்டெழுந்து சென்று தன் பாலியல் வேட்கைகளை நிறைவுசெய்ய முயலலாம். இதற்கான அழுத்தம் தீவிரமடைகையில், மனிதன் தன் வாழ்வை, செல்வத்தை, கண்ணியத்தை எல்லாம் துறக்கத் தயாராக இருக்கிறான். வெறிகொண்டு சென்று வன்புணர்வில் ஈடுபடுகிறான். இரண்டாவது தேர்வு, நிலையாக அமர்ந்து, உடல்ரீதியாக அதில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிப்பாட்டோடு, இதயத்தை ஆளும் கொள்கையை தன் யோனிக்குள் செலுத்தி, இணைவின் இன்பத்தை அனுபவிக்கலாம. அதாவது இதயப்பகுதியும், பிறப்புறுப்புப் பகுதியும் ஒன்றாக இணையலாம். பிறப்புறுப்புப் பகுதியிலிருந்து எழும்பி இதயப்பகுதியை அடைந்து, வாழ்வின் நுண்ணிய இன்பங்கள் வழியே அழகு, நன்மை, காதல் ஆகியவற்றை பிறப்பிப்பதன் மூலம் இது சாத்தியமாகும். ஒரு பூந்தோட்டம் அமைத்து பராமரிப்பது, அழகிய கவிதை புனைவது, கலைவடிவங்களை படைப்பது, இனியவர் ஒருவரோடு மேன்மையுறச் செய்யும் உரையாடலில் ஈடுபடுவது, அகத்தூண்டல் அளிக்கக்கூடிய கருத்துக்களை உருவாக்குவது போன்ற புறவயமான தியானங்கள் மூலமும் இது இயல்வதே.

படைப்பாற்றலை பிறப்புறுப்புப் பகுதியிலிருந்து இதயப்பகுதிக்கு எழுப்பிக் கொண்டுசெல்ல தலைப்பகுதியும் உதவுகிறது. ஸ்மரனும் லக்ஷ்மியும் அடிக்கடி யோனிக்குச் சென்று வருவதில் ஒரு ஆபத்து உள்ளது: அங்கு சிவனின் நெருப்பு உறைகிறது. சிவனின் நெருப்பு ஸ்மரனையும் லக்ஷ்மியையும் எரித்தழிக்கவில்லை என்றால் அந்நெருப்பு வேள்வி நெருப்பாக வேண்டும். இதயத்தின் விழுமியங்களாகத் திரளும் வெண்ணெய் வேள்வி நெய்யாக்கப்பட வேண்டும். அனைத்து விழைவுகளையும் நிறைவேற்றும் புராணகாலப் பசுவான சுரபியின் நெய்கொண்டு செய்யப்படும் நூற்றுக்கணக்கான வேள்விகளை இப்பாடல் குறிப்பிடுகிறது. இங்கு தியானிப்பவர் மெய்யுணர்வு சார்ந்ததிலிருந்து பெயரளவிலானதற்கு செல்கிறார் (departs from the ontological to the nominal).  மேன்மையாக்கப்பட்ட பாலியலின் மிகத் தீவிரமான வடிவத்தில் திளைப்பவனுக்கு உதாரணமாக காளிதாசனைப் போன்ற ஒரு பெருங்கவிஞனை சொல்லலாம். வாழ்க்கையின் சாராம்சமான அனைத்து ரசங்களையும் அவன் தனது ‘சாகுந்தலம்’ எனும் நாடகத்தில் படைத்தளிக்கிறான். அழகின் கவர்ச்சி, காதலின் வலி, மணநிறைவேற்றம், கருவுறுதல், காதலரின் பிறவொழுக்கம், துறக்கம், ஏமாற்றம், பிரசவம், நிறைவுணர்வு, பிரிந்தவர் கூடுதல், மனநிறைவு, துறவியர் கடந்தநிலையில் எய்தும் அமைதி என அனைத்தையும், தன் தியான இருக்கையில் அமர்ந்தபடி, வெகு அழகாக காட்சிப்படுத்துகிறான் காளிதாசன். இவை எதிலும் தான் ஈடுபடாமலேயே, வாசகன் அனைத்தினூடாகவும் கடந்துசெல்கிறான். இப்படித்தான், படைப்பின் மீதான காதலுக்கு சிந்தாமணி காரணமாகிறது.  

ஆக, மூளைப்பகுதியின் பிரம்மாக்னி, இதயப்பகுதியின் விஷ்ணுஅக்னி, பிறப்புறுப்புப் பகுதியின் சிவாக்னி என அனைத்தும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. இது மீநிலை அல்ல. ஆனால் அதற்குக் கீழே மிக அருகில் உள்ள நிலை. இந்திய ஞானமரபில், உச்சபட்சமாக அடையக்கூடியதைப் பற்றி சொன்னபின், அதற்கு ஒருபடி குறைந்த பேறு ஒன்றை, ஒரு மாற்றாக கற்பிப்பது வழக்கம். அன்றாட தளத்தில் உள்ள பாலியல் விருப்பு ஒருவரை குழப்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்துகிறது. அதே சமயம், நம் மனதை நுண்ணிய, ஆழமான மதிப்பீட்டின் நுழைவாயிலுக்கு இட்டுச்செல்லும் விண்ணக மன்மதனும் இருக்கிறான். இங்கிருந்து, முன்னோக்கி ஓரடி எடுத்து வைத்தால், முந்தைய் பாடலில் விவரிக்கப்பட்ட கடந்த நிலைக்கு சென்றுவிடலாம். ஐம், ஹ்ரீம், ஶ்ரீம். 

சதுரமான யந்த்ரத்தின் நடுவே வைக்கப்பட்டுள்ளது ‘க்லீம்’ எனும் மந்திரம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s