ஜம் ஸர்வவஶம்கரீ
பகுதிகளை இணைப்பவளே, அன்னையே! விழித்தெழுந்து மேலே பார்க்கையில் மினுங்கும் விண்மீன்களும் ஞாயிறும் திங்களும் திகழும் எல்லையிலா வானப் பரப்பை காண்கிறோம். எம் காலடியில் இந்த நிலன் கால்மணை போலிருக்கிறது. இவை எல்லாம் எப்போது தோன்றின? யாமறியோம். இவையெல்லாம் ஒருநாள் எம்மிடமிருந்து மறைந்துவிடுமோ? அதுவும் யாமறியோம். ஆனால் எமது நனவில் ஒவ்வொரு பகுதியும் ஒரு பெயரைத் தாங்கி, தொடர்புடைய பல கருத்துருவாக்கங்களை எமக்கு நினைவுறுத்தியபடி அறியப்படாத நனவிலி ஆழத்திலிருந்து தோன்றுகிறது. மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் கொண்டு உருவாக்கப்படும் அவற்றின் பெயரைச் சொல்லாமல் அவற்றை கற்பனை செய்வதோ, எம் அனுபவத்தை சொல்வதோ இயலவே இயலாது.
வானை, நிலனை, ஒரு மரத்தை, ஒரு மனிதரை எம் ஊனக்கண்களால் பார்ப்பதுபோலவே, பொருள்தரும் வகையில் கோக்கப்பட்ட மெய்யெழுத்துக்களயும் உயிரெழுத்துக்களையும் நாங்கள் காண்கிறோம். இது நிகழ்ந்தபின் எம் இதயப் பதிவிலிருந்து புற உலகுக்கு அவற்றை எடுத்துச்செல்வதற்கான ஊர்தியாக எமது உயிர்மூச்சு தயாராகக் காத்திருக்கிறது. மெய்யெழுத்துக்கள் ஒரு மந்திரத்தின் உடல் என்றால் அதன் ஆன்மாவாக உயிரெழுத்துக்களின் இனிய இசைத்தன்மை (ஸ்வரம்) இருக்கிறது. இரண்டும் இணைகையில் வண்ணமயமான சொல்லென்றாகிறது (வர்ணம்). ஓவியம் ஒன்று சொற்களால் நெய்யப்பட்டு (ருக்) நயமான லயத்தோடு இசைக்கப்படுகிறது (சாமம்). சொல்லும் சுவாசமும் இணைந்து களிப்பெய்துகின்றன. அது பாடலும் ஆடலும் நிறைந்த கொண்டாட்டம் போல நம் ஆழத்திலிருந்து எழுந்து இவ்வுலகின் பருவெளியை நிறைக்கிறது.
ஆன்மாவுடைய இசையின் புறவயமான தாக்கமே வான்மண்டலத்திலிருந்து விண்ணுடல்களாக ஒளிர்கிறது. வானில் உள்ள ஒவ்வொரு விண்மீனும் ஒவ்வொரு விண்ணுடலுக்கும் ஒரு மன்மதனாக இருக்கிறது. நனவின் அகவெளியில், எத்தனை எண்ணங்கள் நனவிலியில் மறைந்திருக்கின்றன, அவற்றுள் நினைவுக்குள் வந்துவிட்டவை எத்தனை என்று அறிந்துகொள்ள விழையாத ஒரு தனித்த எண்ணமோ கருத்தோ இல்லை. மீட்டப்பட்ட நினைவைக் கொண்டே மனம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, அறிவாற்றல் அறைகூவப்படுகிறது, நினைவு நடித்துக்காட்டப்படுகிறது. தன்முனைப்பு இன்பதுன்ப உணர்ச்சிகளுக்குள் மூழ்கடிக்கப்படுகிறது.
ஆக, மூன்று பெரும் பரப்புகள் உனது ரசனைக்கேற்றபடி அலங்கரிக்கப்படுகின்றன: ஒன்று சொற்களின் உலகம், இரண்டாவது அறிவுசார் மதிப்பீடு, மூன்றாவது பருண்மைக்குள்ளும் நுண்மைக்குள்ளும் செலுத்தப்படும் புத்தம் புதிய கருத்துத் தூண்டல்கள் தோன்றும் அகக் களம். இவற்றிற்கிணையாக முப்புரங்களை எழிலூட்டுபவளின் மறைபொருள் (திரிபுரசுந்தரீரஹஸ்யம்) பற்றியும், மந்திரத்தின் அக இயங்காற்றல் (மந்த்ராக்ஷரரஹஸ்யம்) பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். இந்த ரகசியங்கள் எல்லாம் தீக்கை பெறாதவரால் அறியமுடியாதவை. அவை சிவ-சக்தி, காம-க்ஷிதி, ரவி-சோமன் என்ற இரட்டைகளாகவும், ஸ்மர-ஹம்ஸ-இந்திர, பரா-மார-ஹரி என்ற மும்மைகளாகவும் கூறப்படுவன. அகத்தே நிகழும் மறைஞான தரிசனம் மூலம் அவை ஒவ்வொன்றும் மறைமெய்மையாக அறியப்படவேண்டும்.
சிவனையும் சக்தியையும் மானுடக் கருத்தாக்கத்திற்குள் அடைத்தல் கூடாது. அகம் புறம் என்ற அடையாளங்களைத் துறந்து பிரளய மௌனத்திற்கும் அப்பாலுள்ள அமைதிக்குள் ஆழ அமிழ்வதன் மூலமே சிவனை அறியமுடியும். காரண காரியங்களுக்கிடையேயும், எதிரிணைகளின் இடையேயான இசைவுக்கும் அனைத்திலும் உறையும் தொடர்ச்சிக்கும் இடையேயும் எப்போதுமே ஒரு மாய ஒழுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆழிபோன்ற எல்லையிலியுடன் முற்றாகக் கலக்கும்போதுதான் சக்தி ஒரு மெய்மையாகிறது. அதேபோல், ஞாயிறையும் திங்களையும் விண்மீனாகவோ துணைக்கோளாகவோ பார்க்கக்கூடாது. ஆன்மாவுக்குள்ள தெய்வீக ஒழுக்கம் மற்ற ஒளிகளுக்கு இல்லை. அது தானாகத் தோன்றியது, அனைத்து திசைகளிலும் ஒளிக்கதிர்களை வீசுவது. அது இயல் ஆற்றலாக ஒளிவீசுவதில்லை, ஆன்மீக அகநோக்காக ஒளிர்கிறது. எப்படி சூரிய ஒளியின் கதிர்கள் சூரியனைச் சார்ந்தவையோ அதேபோல் அனைத்து தனி உயிரிகளும் அந்த ஆன்மீக அகநோக்குடையவை.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான உறவு மூலத்திற்கும் உணரப்படுவதற்கும் இடையிலான உறவைப் போன்றது. நிலவின் ஒளிர்வெனத் தோன்றுவது படிமம் அல்லது எதிரொளிப்பு (பிரதிபிம்பம்) மட்டுமே. இதைப் போலவே நான்கு அக உறுப்புகளின் நனவுலகை மைய ஆன்மாவானது உயிர்ப்பூட்டுகிறது. ஆன்மா சூரியன் என்றால் அக உலகமே எதிரொளிக்கும் நிலவு (சோமன்). அதற்கு உள்ளே அகத்தை பித்துகொள்ளச்செய்யும் ஒரு ஆவி உள்ளது. ஒன்றன்பின் ஒன்றாக எழும் அலைகள் போல, அகத்தில் அலைக்கழிக்கும் விழைவுகளோடு உணர்ச்சிகள் எழுந்தடங்குகின்றன. அவை தனியரின் சுயத்தை நலிவடையச் செய்து அதன் எதிரிணையான துய்க்கப்படும் பொருளையும் அழியச் செய்கின்றன. இவ்விரண்டும் விழைவு (காமம்), ஒழுக்கம் (க்ஷிதி) என வகைப்படுத்தப்படுகின்றன. இந்தத் தனித்த விழிப்புநிலையின் (நனவின்) எல்லையாக உள்ள நனவிலியும், கடந்தகாலத்தின் முதிரா நினைவுகளால் நிரம்பி தனியருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் ஆழமும் கொண்ட அக உலகில் எப்போதும் மூன்று கொள்கைகள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவையே, முன்வரையறை செய்யப்பட்ட ஒரு நினைவாக (ஸ்மரன்) எழும் பாலுணர்ச்சி ஆற்றல். ஸ்மரன் ஐந்து புலனுணர் உறுப்புகளையும் செயலுறுப்புகளையும் (இந்திரன்) தூண்டுகிறது.
அடுத்ததாக, அது உசாவல், மதிப்பீடு, விழுமிய உணர்ச்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகிறது, நெறிப்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் தனியரின் நனவால் விதிக்கப்படுபவை. அந்நனவில் உறைவது தெள்ளிய ஞான தரிசனம் (ஹம்சம்). ஆக, ஸ்மரன், இந்திரன், ஹம்சம் என்ற மூன்றும் நனவால் அறியமுடியாத களத்தில் உள்ள முக்கொள்கைகள்.
இந்த அகவயக் கூறுக்கு, கடந்தநிலையிலுள்ள ஒரு எதிரிணை உண்டு. அதன் பெயர் ‘பரா’. ‘பரா’வும் ‘அபரா’வும் ஒருபோதும் இரண்டாக துண்டாடப்பட முடியாதவை. அவையிரண்டிற்கும் இடையிலான இணைப்பு ‘மாரன்’. முடிவிலா தொடர்ச்சி ‘ஹரி’யாக உயிர்ப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மந்திரத்தை நோக்குபவன் (மந்த்ரத்ரஷ்டா) இந்த உண்மைகளை கண்டறிய வேண்டும். ஊழ்கத்தின் தழலில் என்றென்றைக்குமென இடப்பட்டவர்கள் மட்டுமே இந்தப் பிளவுபடா வழிபாட்டுப்பாதைக்கு வருகின்றனர். புற உலகு என்பது பருண்மையைவிட பருண்மையானது. மிக நுண்ணியதான உலகில் பொருள் (அர்த்தம்) ஒலியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளது. காரணிகளுக்கெல்லாம் காரணமானது, மாபெரும் ரகசிய உலகொன்றில் உறைகிறது. எட்டாத அந்த அமைதியிலிருந்தே ஒவ்வொன்றும் தோன்றுகிறது.
என்றபோதும், புறவய உலகக்கூறுகளை நோக்குவதன் மூலமே ஒருவர் இந்த ஊழ்கத் தேடலில் இறங்கமுடியும். ஒளிரும் சூரியனையோ, சின்னஞ்சிறு மலரையோ பார்க்கையில் அது நம் உள்ளில் ஒரு மகிழ்ச்சிக் கீற்றை உருவாக்குகிறது. ஆக, புறவயக் காட்சிக்கும் ஆழ்ந்த அகவயப் பேரின்பத்திற்கும் இடையில் ஓரு ரகசிய இணைப்பு உள்ளது. எமது தேடலின் அடிப்படை இந்த இணைப்பில்தான் உள்ளது. முழுமுதல் என்று சொல்லப்படுவதும் அறிவெல்லை கடந்தது என்று அறிவுபூர்வமாக விளக்கப்படுவதும் எல்லாம் நிழல்களின் நிழல்களே. இறுதியாக உன்னிடம் வந்து, எமது ஊன்றுகோல்களை விழைவின்மையெனும் அணையா நெருப்பில் வீசி எறிகிறோம். அதன் பின்னர் வேண்டுவதற்கு எமக்கு கோரிக்கையோ முறையீடோ ஏதுமில்லை. ௐ!
|| ஜம் ஸர்வவஶம்கரீ ||