ஶ்ரீசக்ர தியானம் – 31

ச*ம் ஸர்வஜ்ரும்பி*ணீ

அன்னையே, ஸர்வதந்த்ரமயீ,

ஆன்மாவின் சாரம் புகலடைவதற்கென ஆதி முட்டையின் வாயில் திறக்கப்பட்டபோது படைப்பு தொடங்கிவைக்கப்பட்டது. பிரபஞ்ச இயல்கை ஒன்றினுள் வாழ்வு உயிர்மூச்சென நுழைந்ததைப் போன்றது அது. சிறிது காலத்திற்கு எதுவும் நிகழாதது போலிருந்தது. முட்டை தன் வாயில் மூடி உறக்கத்தில் ஆழ்ந்ததுபோல் தோன்றியது. அதன்பின்னர் அணு சிதைவுற்று அதன் உருவநேர்படிகள் பல்கிப்பெருக, படைப்பெனும் வேதிச் செயல் தொடங்கியது. படைப்புதெய்வத்தின் மூச்சுக் காற்றின் ரகசியமே ஆதிமுட்டைக்குள் நுழைந்தது. உயிரின் புதிய இருப்பிடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டதுபோன்ற நிகழ்வது.

முதிர்கருவும் (ப்ரஜா) அதன் நிரலாளரும் (பதி) ஒன்றாக கலக்கின்றனர் (ப்ரஜாபதி). முட்டை கருவாவதற்கு முன்பிருந்தே அதில் வாழப்போகும் மனிதனின் ஆயுள் எண்பது வருடங்களா நூறு வருடங்களா என்ற ரகசியக் கணக்கீடு நிகழ்கிறது. அதன் செயல்நோக்கம், பொருள், இறுதியாக சேருமிடத்தை அடைவதற்கு முன்பாக அதன் விழுமியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் முறை என அனைத்தும் கவனிக்கப்பட வேண்டும். அதன்பின் உடனடியாக, வளரும் அணுவை ப்ரஜாபதி வழிநடத்தத் தொடங்குகிறார். அனைத்து அடிப்படைத் தேவைகளும் செறிவாக்கப்பட்டு, சினையிலும் விந்திலும் வைக்கப்படுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து பருஉடல் கொண்ட மனித உருவாக்கத்தில் உதவுகின்றன. அவ்வுடல் படிப்படியாக பல நுண்ணிய சாயைகளுக்குள் சென்று இறுதியாக அறியப்படாத மீஆன்மாவின் மாயத்தில் மறைகிறது. இப்படியாக வளர்ந்த ஆற்றல், ஒரு கலைஞனின் சிற்பம் போல, ஓவியம் போல, இசை போல ஒளிர்ந்துகொண்டே செல்கிறது. அதுவே கலையின் தொடக்கம். இறையிலிருந்து உருவான அறுபத்திநான்கு கலைகள் உள்ளன. அன்னையே, இக்கலைகள் அனைத்தும் எம் வாழ்க்கைக்குப் பயன்படும்படி செய்வது உன் விருப்பம்.

மண்ணையும் நீரையும் பிசைந்து, எம் வடிவு செய்து, நெருப்பிலிட்டு, உன்னைப்போல் வடித்தெடுத்து எம் நாசிக்குள் உயிர்மூச்சை செலுத்தி நீ எமக்கென கையளித்துள்ள இடத்தில் வைத்துவிடுவதில்லை என்பதை நாங்கள் அறிவோம். அது மிக மிக எளிமைப்படுத்தல். உடலின் வெப்பநிலை அளக்கப்பட்டு உயிரியல் மாறுபாடுகளின் ரகசியத்துக்கேற்ப மாறுபடும்படியான, நீரால் நிறைந்த, ஒரு அகச்சூழல் எமக்களிக்கப்பட்டுள்ளது. அதில் நீ நடத்தும் திண்மையாக்கச் செயல்பாடு மிக மெல்ல நிகழ்கிறது. முழு வாழ்நாளும் செயல்படக்கூடிய உயிர்ப்பமைப்போடு (respiratory system) குருதியோட்ட அமைப்பையும் (circulatory system) அளித்திருக்கிறாய். அரிய வேதிப்பொருட்களை சேர்த்திணைத்து எம்மைப் படைக்க தனி சோதனக்கூடமோ, தாய்ப்பொறியோ (parent machine) ஏதுமின்றி படைப்பெனும் கலையை நீ தொடங்கினாய். அப்படியிருந்தும் உன் படைப்பு கச்சிதமானதாகவும் ஆற்றலுடையதாகவும் இருக்கிறது. ஒரு சில மாதங்களில், எந்த ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக நீ உருவாக்கி அளிக்கும் தன்னேரில்லா படைப்பின் உருமாதிரிக்கு இணையான ஒன்று இவ்வுலகில் இருக்கிறதா என்ன?

உள்ளுறை ஆற்றல் புற மெய்மையில் துருத்தி வைக்கப்பட்டது (potential was projected into the actual) என்பது தெளிவு. உள்ளார்ந்த ஆற்றலை நாங்கள் அறிந்திருக்கவில்லை. புற மெய்மையைக் கொண்டே, உள்ளுறை ஆற்றல் இருந்திருக்க வேண்டும் என நாங்கள் ஊகிக்கிறோம். அதேபோல், படைப்பை வைத்து மதிநுட்பம் வாய்ந்த படைப்பாளி இருக்கவேண்டும் என ஊகிக்கிறோம். பலவித பாங்குகளில் படைப்பை நீ வரிசைப்படுத்தியிருக்கிறாய் (serialised creation with many specific patterns). உயிர்ப்பெருக்கக் கலையைவிட வியப்பளிக்கக் கூடிய ஒன்றில்லை. மிகக் கடினமான பல்லில் தொடங்கி, சேறுபோன்ற சளிச்சவ்வு வரை பலவித பருப்பொருட்களை நீ இன்மையிலிருந்து (வெற்றிடத்திலிருந்து) வரவழைக்கிறாய். அவை ஒவ்வொன்றும் சரியான இடத்தில் அமைந்து ஒன்றையொன்று நிறைவுசெய்கின்றன. ஒன்றோடொன்றை இணைக்கும் உனது கலையே (கலனம்) ரசவாதத்தின் தொடக்கமாக இருந்திருக்க வேண்டும். வெளியை காலத்தோடும், ஆன்மாவை பொருளோடும் கலப்பதில் தேர்ந்தவள் நீ. உன் படைப்பில் பாழ் என எதுவும் இல்லை. நீ உண்டாக்கும் கலவையில் பொருத்தமற்றது என எந்த நிலையிலும் ஏதுமில்லை.

முதலில் அனைத்தையும் நிறைக்கும் நீரன்றி வேறேதும் இல்லாமலிருந்திருக்க வேண்டும். அதில் எதிர்கால வாய்ப்புகளின் கொள்கலனாக இவ்வுலகை கொணர்ந்தாய். அது உன் நீருக்கு எல்லைகளை நிர்ணயித்தது. பின்னர் ஆழியும், வறண்ட நிலனும் என ஆனது. பூமியை ஈரமாக வைத்திருக்க அதற்கென ஒரு குருதியோட்ட அமைப்பை அளித்திருக்கிறாய். நீரின் ஆழத்தில், சதுப்பு நிலங்களில் ஈரப்பதமுள்ள வெளியில் உன் படைப்பு வகைமைகளை விரிவாக்கியிருக்கிறாய். எந்தப் பரிசோதனைக் கூடத்திலும் காணக்கிடைக்காத வெப்ப விசையியலையும் (thermo-dynamics) மின்காந்தவியலையும் (electro magnetism) உன் படைப்பில் காண முடிகிறது. அவையெல்லாம் இங்கு இப்போது உமிழ்ப்பூச்சியில், வெட்டுக்கிளியில், கொசுவில், எரிமலையில், எரிவிண்மீனில் உள்ளன. இக்கருவிகளும் அவற்றின் இயக்கமும் உலகின் ஒரு பகுதிக்கு மட்டும் உரியவை அல்ல; ஏனெனில், அவையே இவ்வுலகு.

மின் அதிர்வை (பிரகாசம்) உண்டாக்குவதற்கென ஒரு வேதிச் செயல்பாட்டை வைத்திருக்கிறாய். அதிலிருந்து ஒரு உணர் (இயக்க) அமைப்பு (sensory system) முகிழ்க்கிறது. அது, ஒரு தூண்டலுக்கான விளைவு துன்பமா இன்பமா என்பதை உய்த்தறிந்து, அதை ஏற்றுக்கொள்வதா விலக்குவதா என்று முடிவெடுக்கிறது. கலைஞரும் நீ, விமர்சகரும் நீ. எனவே, உணர் அமைப்பில் நடக்கும் பொருள்படுதலே எம் வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கிறது. அதன் ஒளிர்வின் சாரமே வாழ்வு; அதை புகழ்ந்து பாடும் பாடல்.

ஒளிர்வதும், இருண்டதுமான பல மும்மைகளைக் கொண்டு உன் ஓவியத்தை வரைகிறாய். சத்வ குணத்தில், உள்ளுணர்வால் தோன்றும் ஒளிமின்னல் போன்ற மிகத்தெளிவான கருத்து இருக்கிறது. ரஜோ குணத்தை விரித்தெடுத்து அதற்கு வண்ணம் பூசி வளப்படுத்துகிறாய். பின் தமோகுணத்தின் இயக்கமற்ற உறைவுகொண்டு அதை நிலைநிறுத்துகிறாய். அறிபவர், அறியப்படுவது, அறிவு எனும் அடிப்படையான மும்மையில் உனது ஒவ்வொரு துளியும் அறிவின் ஒரு அலகென அமைந்திருக்கிறது. 

காலத்தின் தொடர்ச்சியை கழி நிகழ் எதிர்வென துண்டாடுவது உனக்கு ஒரு வேடிக்கை. எமது காலடிக்கீழ் தொடக்கத்தை குறித்துக்கொண்டு அதன் மீது உறுதியாக நிற்கிறோம். அங்கிருந்து எழுந்து வெளியை அடைந்து பின் மேகங்களுக்கப்பால் இருக்கும் முடிவிலா வானத்தை அடைகிறோம். பரிமாணம் கொண்டவை எல்லாம் நீளம், அகலம், உயரம் என்ற மூன்றையும் கொண்டுள்ளன. பிரம்மன், விஷ்ணு, மஹேஶ்வரன் என கடவுளரையும் மூன்றாக வகுத்திருக்கிறாய். இவற்றையெல்லாம் கொண்டு நீ முழுமையான விழுமியங்கள் எனும் குறும்பந்துகளை செய்கிறாய். ஒவ்வொரு தனிமத்திலும் (monad) மெய்ப்படக்கூடிய ஒரு இயல்கை உள்ளது. அதுவே அறமெனப்படுவது (தர்மம்). தர்மம் விடுவிக்கப்படுகையில்  அது வினையாகிறது (கர்மம்). கர்மம் விடுவிக்கப்படுவதற்கென விழைவின் தூண்டலை (காமம்) நீ அளிக்கிறாய். காமம் விசை கொண்டது, உணர்ச்சியூட்டுவது, வலிந்து செயல்பட வைப்பது, அடக்கமுடியா எரிமலை என வெடித்தெழுவது. உணர்ச்சியூட்டும் அந்த ஆற்றல் சோதனா எனப்படுகிறது. அதுவும் தர்மத்தின் அடையாளமே.

உசாவவும், வெளிப்படுத்தவும், ஆராயவும், சரிபார்க்கவும், தனக்கே மெய்ப்பித்துக் கொள்வதற்குமான அடக்கமுடியா துடிப்பே வினவும் போக்குகொண்டு மனம் எனப்படுவது. வினா இல்லையேல் மனம் இல்லை. ஒரு வினாவின் இயக்கவிசையே பெருநாட்டம் கொண்ட மனமாக உருக்கொள்கிறது. அனைத்து உருவங்களையும் மறைக்கும் திரைகளையெல்லாம் கிழித்தெறிகிற்து மனம். வடிவம் என்பது ஆகாரம் (aakaara). அதுவே படைப்புக்கான வார்ப்பு அச்சு (creative mould). ஒவ்வொரு வடிவிலும் உறைவது எவ்வாறு இயங்கவேண்டும் என்பதை அதுவே முடிவுசெய்கிறது. வடிவற்றதிலிருந்து உயிரிகள் தோன்றுகையில் உலகம் பல்வகை வடிவங்களின் திரளாகிறது. ஒவ்வொரு வடிவும் ஒரு சிறப்புப் பெயரால் அறியப்படவேண்டியிருக்கிறது.

உனது படைப்புகளுக்கெல்லாம் மனம் என்ற ஒன்றை நீ அளித்திருப்பதால், உனக்கு பல்லாயிரம் கண்களும் பல்லாயிரம் மனங்களும் உள்ளன. அதன் விளைவாக, ஒவ்வொன்றின் ஒளியும் தன் மேல் விழுவதுடன் பிறவற்றின்மேலும் படுகிறது. புறத்தை நோக்கும் ஒளி கட்புலன் கொண்ட கண்ணாகவும், அகத்தை நோக்கும் ஒளி மதிப்பிடும் மனமாகவும் இருக்கிறது. புலன்களின் பன்முகத்தன்மை ஒற்றை மனதின் ஒருமைத்தன்மையோடு இணைக்கப்பட வேண்டும். புறப் பகுப்பாய்வும், அகத் தொகுத்தலும் அடுத்தடுத்து நிகழ்கின்றன. அனைத்தையும் உள்வாங்கும் ஒரு கண்ணும் அனைத்தையும் முறைப்படுத்தும் ஒரு அடிப்படையும் இருத்தல் வேண்டும். புலன்களின் முன்பாக படைக்கப்படும் எதைக் கொண்டும் மனிதனின் அறிவுத்திறத்தை நிறைவடையச் செய்துவிட முடியாது. அதன் ஆர்வம் இங்கு இப்போதுள்ளவற்றின் மீது மட்டுமல்ல. தொடக்கம் என்பதே இல்லாத கடந்தகாலத்திலும், எண்ணற்கரிய எதிர்காலத்திலும் உள்ள அனைவரின் மீதும் அனைத்தின் மீதும் ஆர்வம் கொண்டது அது. 

மூலக்கூறுகளின் தனிமங்களிலிருந்து (monads of the elements) வாழ்க்கைச் சக்கரம் தோன்றுகிறது. காலமெனும் அச்சில் அது சுழல்கிறது. ஒவ்வொருவரின் தன்முனைப்பும் ஒரு அச்சு மையமாகிறது. ஒட்டுமொத்த நனவு (போத சக்ரம்), உயிரியல் தூண்டுவிசை (ஜீவ சக்ரம்), செயலுக்கான உள்ளார்ந்த ஆற்றல் (கர்ம சக்ரம்), பிழைப்பாதாரம் (வாஸ்து சக்ரம்) என்ற நான்கு சக்ரங்களைக் கொண்ட பிரணவத்தால் இவையெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. உனது படைப்பில் இன்னொரு நான்மடிப்பு கொண்ட நிரல் (fourfold scheme) உள்ளது. இயல்பான மனப்பாங்குகள் அறத்தால் பிணைக்கப்படுகின்றன (தர்மம்); அறம் மெய்ப்படுவதற்கென வாழ்வின் பொருள் வழங்கப்படுகிறது (அர்த்தம்); மெய்ப்படுதலுக்கான இயக்கவிசை விழைவிலிருந்து வருகிறது (காமம்); கடந்தநிலை விடுதலையிலிருந்து பிறக்கிறது (மோக்ஷம்).   I Ching போல, அறுபத்தி நான்கு கலைகள் ஒவ்வொன்றும் மேல் முக்கோட்டு வடிவொன்றும் (upper trigram),  கீழ் முக்கோட்டு வடிவொன்றும் (lower trigram) கொண்டுள்ளன. அதில் முப்பத்திரண்டு ‘சித்’ கூறுகளும் முப்பத்திரண்டு ‘ஜட’க் கூறுகளும் உள்ளன. அவை மரபியல் குறியீட்டையும் (genetic code) ஒத்திருக்கின்றன.

படைப்பின் மெய்மையும், படைப்பின் தொன்மமும் ஒன்றிணைக்கப்படுகையில் சிவனும் சக்தியும் இணைந்த ஒரு தரிசனம் எமக்கு கிடைக்கிறது. படைப்பெனும் உன் முடிவிலா ஆடலின் இடையிடையே இறைவனின் அழிக்கும் நடனமும் – தாண்டவமும் – நிகழ்கிறது. உன் படைப்பின் அறுபத்திநான்கு வகைமைகள் புதிரானவை. நீயே ஸர்வதந்த்ரேஶ்வரி என்பதில் வியப்பொன்றுமில்லை. என்னை வழிநடத்துக அன்னையே! உன் மறைபொருளை எனக்கு அருள்க!

|| சம் ஸர்வஜ்ரும்பிணீ ||

Leave a comment