ஶ்ரீசக்ர தியானம் – 30

சம் ஸர்வஸ்தம்பி*ணீ

ௐ க்லீம்.

க்லீம் எனும் மந்திரத்தின் மறைபொருளை பகுத்தறிவுகொண்டு புரிந்துகொள்ள முயலக்கூடாது. உடலுக்கும் ஆன்மாவுக்குமான பரஸ்பர ஊடுருவலைக்கொண்டு அதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நுண்ணிய கரித்துகள் நெருப்பால் நிறையும்போது அது ஒரு தீப்பொறியாகிறது. அப்பொறியின் ஒளிரும் உடலில் துடிக்கும் தீ எது, அசைவிலா கரி எது என்பதை எவரும் பிரித்தறிந்துவிட இயலாது. அதுபோலவே, ஒருவர் முழுமையான இருதுருவநிலையில் (bipolarity) இருக்கையில் பக்தன் யார் இறை எது என்பதை பிரித்தறிய முடியாது. வெயில் முழுவதும் பகலவனுடையது. நிலவுக்கும் அதனொளி அப்படியே.

என் உடலே ‘நான்’ என்று நம்பத் தலைப்படுகையில், ‘நான்’ என்பதை கையறுநிலையாக, சோர்வாக, நோயாக, நிலையின்மையாக உணர்கிறேன். ஆனால் அதே நனவு தன்னை எல்லாவற்றிலும் திகழும் சுயமாக உணர்கையில், அனைத்து எல்லைகளும் மறைகின்றன. அதன்பின் காலமும் வெளியும் தடைகளாக இருப்பதில்லை. மனம் தெளிந்து, குழப்பங்களின் சாயல்கூட இல்லாமலாகிறது. சுயம் என்பது அருகிலிருக்கிறது; எங்கோ தொலைவிலிருக்கிறது. பருண்மை கொண்டது; நுண்ணியதினும் நுண்ணியது. சுயத்தை அறிய இந்தப் பெயரடைகள் எதுவும் தேவைப்படுவதில்லை. ஏனெனில், நானே அதுவாகிறேன். கருத்துமாறுபாடு எதுவும் எழுவதில்லை. ‘எது?’, ‘எப்படியிருக்கிறது?’ என்ற இரண்டுக்கிடையில் எந்த வேறுபாடும் இல்லை. மகிழ்ச்சி எத்தகையது என்று சிந்தித்துப்பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை. ஏனெனில், விளக்கத்திற்கப்பாற்பட்ட ஆனந்தம் அமைதியின் மெய்மையில், விளக்கமுடியாத பேரின்பத்தில் குறைவற நிறைந்திருக்கிறது. இந்த நிலையே ‘ஸானந்த ஸமாதி’ எனப்படுகிறது.

அதேபோல், உன் இணையடிகளால் ஈர்க்கப்படுகையில் நான் பெருமகிழ்வு கொள்கிறேன். நீ உலவும் இந்நிலவுலகு எத்துணை அருளப்பெற்றது என்பதை எண்ணுகையில், எல்லா பாதங்களையும் உன்னுடையதென மாற்றி எல்லா பாதைகளையும் உன்னுடையதெனக் கருதி அவற்றில் நீ நடைபோடுவதை அறிகிறேன். என் பாதங்கள் உன்னுடையவை என்றால் நான்விட்டுச் செல்லும் அனைத்தும் உன்னுடையவையே அல்லவா? நீ ஒரு புரவியாக நடைபோடுவதையும், நாகமென ஊர்வதையும், கொடியென சுவற்றிலும் மரத்திலும் பற்றிப் படர்வதையும் காண வியப்பாக இருக்கிறது. உலகையே மூடிவிடக்கூடிய உன் பேராற்றல், பெருமரத்தின் வேர்களைவிட புல்லின் இதழ்களில் தெளிவாகத் தெரிகிறது. முன்னேற்றத்தின் வெவ்வேறு படிநிலைகளில் இருந்தாலும் நாங்கள் எல்லோரும் நடப்பது ஒற்றைச் சேரிடம் நோக்கியே. நீ என் பின்னால் நின்றபடி மலையேறவும், சிகரம் தொடவும் என்னை தூண்டுகையில், எந்தத் தடையையும் தாண்டக்கூடிய உறுதியான உன்னடிகளையே நான் எண்ணிப்பார்க்க வேண்டும். என் வழியில் பெரும்பாறை ஒன்றிருந்தால் அதை தகர்த்தெறிய உனக்கு தயக்கமிருக்காது. ஆனாலும், அன்பில் கரைந்து ஒரு நதியென மாறி அத்தடையைக் கடந்து சுற்றிவளைத்து வேறொடு பாதையில் செல்வதெப்படி என்பதை நீ எனக்கு கற்றுத்தருகிறாய்.

எல்லா பாதைகளும் உன்னுடையவையே என்கையில் நான் ஏறிச் சென்றால் என்ன? ஒழுகிச் சென்றால் என்ன? நான் ஒரு அருவியாக வேண்டுமென்றால் அதோடு சேர்ந்து சிரிக்கவும் செய்வேன்; ஒளிர்ந்தெழும் நுரையில் உனதுலகின் பல்லாயிரம் ஏதிரொளிப்புகளை காண்பேன். அருவியின் இசை, உச்சகட்ட சுருதியை எட்டி பின் முணுமுணுப்பென தேய்ந்து அமைதியில் சென்றுசேரும் இசைக்கோவை போலிருக்கிறது. உன்னை எண்ணுவதொன்றே என்னை இவையெல்லாமாக ஆக்கிவிடக்கூடும் என்பது எத்தகைய கொடை! உனக்கென மாறா வடிவொன்று இல்லை என்பதே ஒரு அற்புதம்தான். நிலைத்தன்மையையும், விரைவில் மாறிக்கொண்டே இருக்கும் தன்மையையும் நீ ஒன்றேபோல் ஏற்கிறாய். எங்கும் திகழ்வது, சிலநேரங்களில் முழுமையான இன்மைக்குப் பின் ஒளிந்துகொள்கிறது.

சிலபோது, அளவிடமுடியா மேருமலையின் சிகரமென உன்னை காண்கிறேன். அடையமுடியா உயரத்தில் நீ இருப்பதை எண்ணுகையில் வேனிற்கால மேகமொன்றின் புன்தலை அச்சிகரத்திலிருந்து என் கண்ணுக்கு தென்படுகிறது. நீ அதை அனுமதிக்கிறாய். மென்மேகம் ஒன்று உன் மீது கடந்துசெல்வதில் மகிழுமென்றால் அதில் நீ இழப்பதற்கு ஏதுமில்லை. அதை காண்கையில், நான் ஏமாற்றப்படுவேன் என்றோ, யாரோ எனக்கெதிராக சதிசெய்கிறார்கள் என்றோ நான் அஞ்சத் தேவையில்லை என்பது எனக்கு புரிகிறது. ஒவ்வொரு நாளும், நீ என் முன் வைக்கும் பொருள் ஒவ்வொன்றும் எனக்கென நேரடியான செய்தி ஒன்றை சொல்கிறது. நீ, அறிவுரைகள் வழங்கும் பிற ஆசிரியர்களைப் போல் இல்லை. உன்னிடமிருந்து ஒன்றை கற்க வேண்டுமென்றால் நான் நீயாக வேண்டும். அப்போது நீ என் உடலின் இளவெம்மையாகிறாய். என் சுவாச லயம் தவறாதபடி, என் உடலின் குருதியணுக்களுக்கும், திசுக்களுக்கும் மௌனமான செய்தி ஒன்றை அனுப்புகிறாய். அதற்கு சொற்கள் தேவையில்லை; செவிகொள்ள காதுகளும். நீ கற்றுத்தரும் பாடங்களுக்கு விளக்கமோ உரையோ அவசியமே இல்லை.

அத்தகைய பேரின்பம் எய்தி, சிரித்து மகிழ்கையில் நான் நானாக இருப்பதில்லை. நீ நானாகிறாய். வலியின் தீவிரத்தில் நான் நனவிழந்து, அறியப்படாததன் காலமிலா ஆழத்தில் மூழ்குகையில், துணையென நீ நிற்கிறாய். என் கண்களை மறைக்கும் இருளும், என் சுயத்தை விழுங்கும் இன்மையும் உனது மீஆன்மாவேதான். நான் புகழப்படுகையில், கூச்சத்தில் நெளிகிறேன். என் முன்னால் பாடப்பட்டவை உனக்கான புகழாரங்கள் என்பதையும்,  அவை எளியனான எனக்கானவை என்று தவறாக எண்ணிவிட்டேன் என்பதையும் பின்னர்தான் உணர்கிறேன். நான் கண்டிக்கப்படுகையிலும், தண்டிக்கப்படுகையிலும், அருவருக்கத் தக்கதை அழகாக்கவும், மெய்யிலியை மெய்யானதாக்கவும் நீ கைக்கொள்ளும் விரைவான கூரிய வழிமுறைகள் அவை என்பதை உணர்கிறேன்.   

உன்னுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வோருக்கு, உன்னுடையதென உள்ள அனத்தையும் கையளித்துவிடுகிறாய். இதையே அன்பின் ரகசியமென உணர்கிறேன். எளிதில் கற்கக்கூடிய பாடம்தான் என்றாலும், அது எளிதாக கண்டுகொள்ளப்படுகிறது என்பதை அறிவது கடினம்தான். விழைவுக்கோ, விழைவால் தூண்டப்பட்ட செயலுக்கோ முகமை ஏதுமில்லை என்றால் அது விழைவோ செயலோ அல்ல. அது உனதன்பின் நிறைவேற்றம் மட்டுமே. உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

|| சம் ஸர்வஸ்தம்பிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s