ஶ்ரீசக்ர தியானம் – 29

ஙம் ஸர்வஸம்மோஹினீ

படைப்பூக்கத்திற்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக இருக்கும் அன்னையே! பல சுழற்சிகள் மூலம் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும் அழகை நீ பாதுகாத்து வருகிறாய். கடந்துசெல்லும் ஒவ்வொரு கணத்திற்கும் காலம்சார்ந்த பெருமதிப்பொன்று உள்ளது. நேரம் அதன் முழுமையில், தூய காலத் தொடர்ச்சியாக தன்னில் வந்துசென்ற, இனி வரவிருக்கின்ற அனைத்துப் படைப்புச் சுழற்சிகளின் முறிவடையாத ஒருமையை கொண்டுள்ளது. உடல்கொண்ட உயிர்களுக்கென நீ அளித்துள்ள வெளியும் உடல்களுக்கிடையேயான வெளியும், ஓவியர்களுக்கும் சிற்பிகளுக்கும் தமக்கான உலகை தாமே வடிவமைத்துக்கொள்ள வேண்டிய எளிய மனிதர்களுக்கும், உன் படைப்பின் பெருமையை உணர்வதற்கான அகத்தூண்டல் அளிக்கும் ஊற்றுமுகமாக இருக்கின்றன. ஒரு கிருமியில் தொடங்கி வான்மண்டலம் வரை ஒவ்வொன்றிலும் நீ சமைக்கும் வடிவமைப்புசார் எழில் எல்லா படைப்பாளிகளையும் வியக்கவைக்கிறது. ஒன்றை வடிவமைப்பதற்கு முன்னரே அதன் செயல்பாடு குறித்த உன் முன்னறிவு எமக்கு பெரும் பாடமாக இருக்கிறது.

அனைத்து அறங்களின் மறைபொருளும் பொதிந்திருக்கும் விஷ்ணுவின் மணிமுடியில் இவை செறிந்திருக்கின்றன. அவனது துணைவியான திருமகளைப் போலவே அவனது மணிமுடியும் எண்ணற்ற நன்மைகளால் ஆனது. விஷ்ணுவின் கொப்பூழிலிருந்து மலரும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும், அண்டத்தைப் படைக்கும் பிரம்மன் எப்போதும் விஷ்ணுவின் மணிமுடியில் இருக்கும் அத்தனை எழிலின் சாயல்களையும் அவை குறிப்புணர்த்தும் மறைநுணுக்கங்களையும் எண்ணியபடி ஊழ்கத்திலிருக்கிறான். எனவேதான், இயற்கையின் படைப்பில் நீ சிறு பிழையையும் காண்பதில்லை. பிரம்மன், விரிந்துகொண்டே செல்லும் தன் படைப்பின் மூலம் தேவர்களை மகிழ்விக்கிறான். பிரம்மனின் படைப்புநேர்த்தியை, தேவர்களின் இறையான இந்திரன், அழகைப் பாராட்டுவோரின் படைப்பூக்கம் கொண்ட மனங்களுக்கு எடுத்துச் செல்கிறான். அவர்களோ, இசை ஓவியம் சிற்பம் கவிதை கட்டடம் நாடகம் ஆகிய கலைகளிலும், காதலரின் இடையேயான கவர்ச்சிமிகு உறவிலும், மறைஞானியர் செல்லும் தியானத்தின் ஆழத்திலும் திளைப்பதற்கான தூண்டலை,  அனைவர் இதயத்திலும் நிறைக்கின்றனர். 

விழுமியங்கள் செறிந்திருக்கும் இவ்வுலகில் நீ உன் அரியணையில் அமர்ந்திருக்கிறாய். உன் இறைவன் தன் உள்ளங்கையில் வைத்து நீறாகப் பொடிசெய்து தன் நெற்றியிலும் உடலிலும் பூசிக்கொள்வதற்கென இவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து அவனிடம் அளிக்கும் கணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அதை நீ படையலிடுவதுபோல் செய்கிறாய். எளிய மலரான மல்லிகையில்கூட இதழ்கள் சீர்மையோடு அமைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளும் அக்கறை கொண்ட நீ, ஏழுலகங்களையும் உன் இறைவனுக்கு பலியென இடுவதில் வருத்தம் கொள்வதில்லை. உன் மகிழ்ச்சி என்பது முழுமுதலின் மகிழ்ச்சியைப் போன்றதே. இன்பம் குறித்தோ துன்பம் குறித்தோ நீ அக்கறை செலுத்துவதில்லை. இன்பதுன்பங்களின் அனைத்து சாயல்களும் இசைந்து இரண்டறக் கலந்திருக்கும் மகிழ்ச்சியின் பேரொருமையிலேயே உன் கவனம் செல்கிறது.

இந்தப் பின்னணியில், அனைத்தையும் இன்மைக்கு கொண்டுசெல்லும்போது விஷ்ணு, பிரம்மன், இந்திரன் ஆகிய மூவரை மட்டும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள்தான் அடுத்த படைப்புச் சுழற்சிக்கான செயல்தூண்டலாக இருப்பார்கள் என்றும் அன்னையின் பரிவார கணமென இருப்போர் அவளுக்கு எடுத்துச் சொல்கின்றனர். பிரபஞ்சம் கரைந்தழிவதும், நமது ஆழுறக்கமும் ஒரே இயல்பு கொண்டவை. நினைவு உறக்கத்திலாழும்போது நனவொழுக்கும் செயல்தூண்டல்களும் மௌனத்தில் அடங்குகின்றன. ஆழுறக்கத்தில் விஷ்ணுவின் கலக்கமிலா நனவுமட்டும் எதிர்காலச் சுழற்சிகளை தக்கவைத்துக் கொள்கிறது. மீண்டும் படைப்பு தொடங்குகையிலும், நாம் விழிக்கையிலும் விஷ்ணு ஆழுறக்கத்திலிருந்து தன் கனவெழும் நனவுக்கு செல்கிறான். விஷ்ணுவின் கனவுகளெனும் சுரங்கத்தில் இருந்து ஆழ்படிமங்களை சேர்த்தெடுத்து அனைத்துவகை பெயர்களும், வடிவுகளும், செயல்களும் கொண்ட இந்த உலகமென விரிக்கிறான் பிரம்மன். அனைத்தையும் முன்பிருந்தது போலவே பரப்பி, நினைவு அடங்குகையில், நம்மை ஆழுறக்கம் ஆட்கொள்கையில் மீண்டும் அவற்றை மறைக்கிறான்.

தனியனது செயல்பாடுகள் எல்லாம் பிரபஞ்சத்தின் செயல்பாடுகளை ஒத்தவையே. எனவே, நினைவுகளின் களஞ்சியமான சித்தம் செயல்படவில்லையென்றால், உரத்த குரலில் சொல்லப்பட்டாலும் எந்தச் சொல்லும் பொருள் கொள்வதில்லை. நினைவு அழிந்துவிட்டால் நேரம் என்பதையே மனம் அறியாது. ஏனெனில் தொடக்கமோ, முடிவோ, முதலிலிருந்து முடிவுக்கான நகர்வோ அங்கில்லை. தொடக்கம் என்பது ‘இது என்ன?’ என்ற வியப்புகலந்த கேள்வியுடனேயே நிகழும். உலகத்தின் விரிவு ‘என்ன?’ என்பதன் விவரிப்பு வழியாகவே நிகழ்கிறது. முடிவிலா வெளியில், காலம் எனும் பாதையில், ஐம்புலன்கள் எனும் குதிரைகள் நுகத்தடியில் பூட்டப்பட்டு, பாய்வதற்குக் காத்திருக்கும் ரதத்தில் அமர்ந்திருக்கும் இந்திரனை ‘இது என்ன?’ என்ற கேள்வி விழிப்படையச் செய்கிறது. இந்திரனின் குதிரைகள் நடைபோடும் வழியையே நாம் எண்ணம் (விசாரம்) என்கிறோம். நனவுக் குதிரைகளின் ஒவ்வொரு அடிவைப்பும் ஒரு சொற்றொடரின் ஏற்ற இறக்கத்தை உருவாக்குகிறது.

ஆக, காலம் இடம் முதலிய மெல்லிய நூலிழைகள் கொண்டு, படைப்புக் கலையை வளமையாக்கும் இவ் அனைத்து நாடகீய நிகழ்வுகளையும் மறைக்கும் திரைச்சீலையை நீ நெய்கிறாய். அத்திரைக்குப் பின்னிருந்தபடி நீ புன்னகைக்கிறாய். அப்புன்னகை உன் இறைவனின் மனதை மயக்குகிறது. நாங்கள் நன்றியுணர்வால் நிறைகிறோம். அன்னையே, நாங்கள் உன்னை வழிபடுகிறோம்.

|| ஙம் ஸர்வஸம்மோஹினீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s