கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடப*பி*த:
கடோ*ரே கோடீரே ஸ்க*லஸி ஜஹி ஜம்பா*ரிமகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப*முபயாதஸ்ய ப*வனம்
ப*வஸ்யாப்*யுத்தா*னே தவ பரிஜனோக்திர்விஜயதே
பாடல் – 29
மூவர் உன் முன் வணங்கி நிற்கின்றனர்
இல்லம் திரும்பும் உன் இறையை எதிர்கொள்ள
திடுமென நீ எழுகையில்
உன் பரிவார கணத்தோர்
இங்ஙனம் இசைக்கின்றனர்
பிரம்மன் மணிமுடியை மீட்டளிப்பாயாக
விஷ்ணுவின் அணிமுடி உன்முன் உள்ளது
(தவறுதலாக நீ அதை தட்டிவிடக்கூடும்)
இந்திரனின் மகுடத்தை காப்பாற்றுவாயாக
**
நேற்று நிகழ்ந்தது உறங்கிவிட்டது. புத்தாற்றலோடு, புது வடிவமைப்புகளோடு அது புத்துயிர்பெற்று எழுகிறது. காற்றில் அடித்துச்செல்லப்படும், வலிமையே அற்ற புல்லின் சின்னஞ்சிறு விதைகூட முளைத்தெழுந்து மீண்டும் ஒரு தாவரமாகும் சிறுவாய்ப்பையும் பற்றிக்கொள்கிறது. இந்த வாழ்க்கைத் திட்டஅமைப்பு ஒவ்வொரு விதைவடிவிலும் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வின் இனப்பெருக்க ஆற்றல் அடக்க முடியாதது. ஒரு வேரின் தளிர்க்கை (tendril) மிக மென்மையானது. என்றாலும், பொறுமையோடு நீரைத் தேடி அடையவேண்டுமெனில், ஒரு பாறையைக்கூட அதனால் ஊடுருவ முடியும். இது விஷ்ணுவின் களம். வெடித்தெழும் ஆற்றலின் உள்ளார்ந்த நிரலமைப்பு மூலம் அனைத்தும் காக்கப்படுகின்றன. ஆக, வாழ்வை நிரலமைப்பது விஷ்ணுவே. உயிரின் தோற்றம் குறித்து எவராலும் அறுதியிட்டுக் கூறமுடிந்ததில்லை. அணுக்களின் திரண்ம நிரலமைப்பிலிருந்து (molecular arrangement of atoms) தொடங்கியதா? படிகப்பாறைகள் உருவானதில் தொடங்கியதா? கிருமிகளில் அல்லது நுண்ணுயிரிகளில் தொடங்கியதா? இவை எல்லாம் ஒரு வரிசையில் வருவன. ஆதியில் நிரலமைக்கப்பட்ட அணுக்கூறுகளில் தொடங்கி நவீன காலத்தில் நிறுவப்பட்ட ஏவுகணைகள் வரை விஷ்ணுவின் களம் பரந்துவிரிந்துள்ளது. மண்ணின் மணத்தில் தொடங்கி வான்கோளங்களின் இசை வரை ஆர்வத்தை தூண்ட பல தேர்வுகள் விஷ்ணுவின் வசம் உள்ளன. இயற்கையின் மீது அத்துணை ஆதிக்கம் கொண்டிருந்தாலும், விஷ்ணு இருப்பது பேரன்னையின் காலடியில்தான்.
முதிரா பிரபஞ்ச நினைவு (incipient universal memory) தனியரின் படைப்பூக்கம் வழியே, அறிவுத்திறன் வழியே இயங்குகிறது. விழித்தெழுந்தவுடன், மனம் நேற்றுக்கும் நாளைக்கும் நடுவே ஊடாடி இன்றைக்கானவை மெய்ப்படுவதற்கு திட்டம் தீட்டிக்கொண்டே இருக்கிறது. இதுவே படைப்பாளியான பிரம்மன். புற்றிலும், தேன்கூட்டிலும், பறவைச் சேக்கைகளிலும், கடலாழத்திலும், அன்றாட வழமைகளை நிறைவேற்ற மானுடரை தூண்டிக் கொண்டிருக்கும் உலகிலும் திகழ்பவன். பிரம்மன் துயிலெழுப்புபவன், தூண்டுபவன், உடல்-மனம் எனும் தொகையின் மேலாளர். அவனது சேவை பேரன்னைக்கு மட்டுமே முழுதளிக்கப்படுகிறது. அவளது கட்டளைக்குட்பட்டவன் அவன். அவளது அனுமதியுடன் மட்டுமே அவனால் இயங்க முடியும். அவளுடைய இசைவு வேண்டி எப்போதும் வணங்கியபடி இருக்கிறான் பிரம்மன்.
ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களை நோக்கி புலன்கள் திரும்புகையில்தான் அனைத்துச் செயல் நிரல்களும் துவங்குகின்றன. புலன்களே இந்திரியங்கள். ஆனால் மனம் இல்லையேல் புலன்கள் இயங்க முடியாது. மனமே இந்திரன். புலன்களின் அமைப்பு (sensory system) உள்ளீடுகளை கொணர்கின்றன. செயல் அமைப்பு (motor system) மூலம் வெளியீடு நிகழ்கிறது. நகர்வு, தொடர்பு, உருவாக்கம் என்பவை எல்லாம், கால்கள், கைகள், வாய், நாக்கு இவை மூலம் நிகழ்கின்றன.
இவை எல்லாமே இந்திரனின் செயல் இருக்கைகள். அவன் திட்ட மேலாளர் போன்றவன். இந்திரன் குற்றமற்றவன் அல்ல; எப்போதும் முழுமுதலின் கண்டனத்தை அஞ்சியபடியே இருப்பவன். அதனால் அவன் கீழ் செயல்படும் மானுடர் எப்போதும் தவறிழைக்கத் தயாராக இருக்கின்றனர். அவனது மகுடம் என்பது, ஆரவாரமிக்க மனமேதான். அது எப்போதும் ஆபத்து சூழ்ந்ததாகவே உள்ளது. சடுதியில் ஒருவர் ஆன்மிக விடுதலைக்கான தேவைகளை எதிர்கொள்கையில் அந்த ஆபத்து நிகழ்கிறது.
அன்றாட வாழ்வின் சலிப்பில் மூழ்கியிருக்கையில், இறையின் கடைக்கண் பார்வை நம் மீது விழ, நாம் எதற்கு இவ்வுலகில் தோன்றியுள்ளோம் என்ற கேள்வி நம்முள் எழுகிறது. ‘நான் யார்?’, ‘இவ்வுலகென்பது யாது?’ ‘நான் ஏன் இங்கிருக்கிறேன்?’ என்ற கேள்விகள் தொடர்கின்றன. ப்ளேடோ இதனை ஒரு குகையுடன் ஒப்பிடுகிறார். எண்ணற்ற தலைமுறையினர் நிலவறையில் சிறைப்பட்டிருக்க, ஒவ்வொருவரும் நிழல்களையே நிஜமென நம்பியிருக்க, ஒருவருக்கு மட்டும் ஐயம் எழுகிறது. இந்த ஐயத்தை எதிர்கொள்பவர், இயலுலகின் தளைகளை உணர்கிறார். அத்தகைய இடரில் அவர் 180 கோணம் திரும்ப முயல்கிறார். இதுவே இப்பாடலில், பேரன்னை தன் இறையை எதிர்கொள்ள எழுவதாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வெழுகை, சமூகம்சார் ஒழுங்கமைவுகளை எல்லாம் தகர்க்கிறது. எல்லாம் ஒழுங்கிழக்கின்றன. இல்லாளையும் இளம் குழவியையும் அவர்கள் ஊழுக்குள் விட்டு, நாடு துறந்து, மெய்மையைத் தேடி அலைந்த சித்தார்த்தன் போல, உள்ளம் திரும்பி வேறு திசையில் செல்லத் தொடங்குகிறது. இது, பிரம்மனின், விஷ்ணுவின், இந்திரனின் மணிமுடிகளை காலடியிலிட்டு மிதிப்பது போன்றது.
ஒருவர் ஆன்மிகம் நோக்கி திரும்ப இருக்கையில், மொத்த உலகும், அவரது கடமைகளையும் சமூக கடப்பாடுகளையும் கூறி, அவர் மனதை குலைக்க முயல்கிறது. இப்பாடலில் வரைந்து காட்டப்பட்டுள்ள அழகிய காட்சியை, ஆன்மிகத் தேடல் நம்முள் எழுப்பும் ஆழமான கேள்விகளால் நாம் கலக்கமடையும் காட்சியோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம். யோகசாதகர் இக்காட்சியை, ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்த இரண்டு முக்கோணங்களில் வைக்கப்பட்ட ‘க்லீம்’ எனும் மந்திரத்தோடு தியானிக்கிறார்.