க*ம் ஸர்வாஹ்லாதினீ
ஒவ்வொருவரிலும் மகிழ்பவளே, அன்னையே! இவ்வுலகைப் படைத்து, காத்து, அழிக்கும் உன் புதிர்ச் செயல்பாடுகள் எல்லாம் அனைவரையும் வியக்க வைக்கின்றன. ஞாயிறு உதிப்பது எங்கே என எவர் கூறிவிட முடியும்? அதோ அங்கிருக்கும் மலைக்குப் பின்னிருந்து உதிப்பதாக ஒருவர் சொல்கிறார். பிறரோ அது கடலிலிருந்து எழுவதாக எண்ணுகின்றனர். காலையில் தொடுவானிலிருந்து தலைநீட்டும் சூரியன் மெல்ல மேற்குநோக்கி நகரும் விந்தையை அனைவரும் காண்கின்றனர். செந்நிறச் சூரியனை பார்த்து மகிழும் சிலர் ‘அதோ பகலவன் எழுகிறான்’ என்கின்றனர். அதே சூரியனைப் பார்த்து, இன்னொருவர் ‘அதோ ஞாயிறு மறைகிறது’ என்கிறார். பலருக்கு சூரியன் என்னவென்றே தெரியாது. ஆனாலும் அது ஒரு விந்தையுணர்வை, விளக்கவியலா மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஞாயிறும் திங்களும் எழுகையில் அவை மட்டும் தோன்றுவதில்லை. குன்றுகளும் பொய்கைகளும் மலைகளும் நகரங்களும் தோன்றுகின்றன. இருபத்திநான்கு மணித்துளிகளுக்குள் ஒவ்வொன்றும் கட்புலனுக்குள் தோன்றி மறைகிறது. மாறும் ஒளி, அதற்கேற்ப மாறும் நிழல்களையும் தன்னுடன் கொணர்கிறது. புலப்படும் அழகு, இரண்டு நிமிடங்கள்கூட மாறாமல் ஒன்றேபோல் இருப்பதில்லை. ஒரு மலர் எதுவும் செய்வதில்லை; அங்கு வெறுமனே இருக்கிறது. ஒளியூட்டப்படும்போது வண்ணமும் ஒளியும் கொண்ட சிறப்புத் தோற்றத்தை பெறுகிறது. அதேபோல், அசையாச் சுடர்கொண்ட விளக்கும் எந்த நிகழ்வுமின்றி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. இவை மலர்களுக்கும் ஒளிரும் விளக்குகளுக்கும் அளிக்கப்பட்ட சிறப்புரிமைகள் அல்ல. ஒரு மண்துகளோ, ஒரு கூழாங்கல்லோ, ஒரு பாறையோ, ஒரு பூச்சியோ எதுவாயினும் ஒவ்வொன்றிற்கும் அதற்கேயான உள்ளார்ந்த இயல்பும் அதற்கான மதிப்பும் உள்ளன. செங்கருநீல மலர் அதன் எளிமைக்காக கொண்டாடப்படுகிறது. ரோஜா மலரோ அனைவரும் விரும்பும் அதன் வண்ணத்திற்காகவும் மணத்திற்காகவும் புகழப்படுகிறது.
பானை வனைவதற்கு மண் இன்றியமையாதது. அணிகள் செய்ய விரும்பினால் பொன்னோ, வெள்ளியோ தேவைப்படுகிறது. அவை மதிப்பு வாய்ந்தவை. மெல்ல வீசும் தென்றலுக்கு கவிதைப்பண்பு ஒன்றுண்டு. கடும்புயல் அழிவை கொணர்வது. அது துன்ப நிகழ்வுக்கான உருவகமாகவும் இருக்கிறது. ஆக, ஒவ்வொன்றிற்கும் ஒரு தன்னறம் (ஸ்வதர்மம்) உண்டு. அதுமட்டுமன்றி அந்தத் தன்னறத்திற்கு ஒரு மதிப்பும் (தர்மகீர்த்தி) உண்டு. அம்மதிப்பு வெளிப்படையாக மேலெழுகையில் நிறையுணர்வு தோன்றுகிறது.
சில மணித்துளிகளுக்கு முன்புதான் விடியலும் அந்தியும் கொண்டாடப்பட்டன. இப்போது அனைத்தும் இரவின் இருளால் மறைக்கப்பட்டுவிட்டன. ஒளி (பிரகாசம்) இல்லாத இடத்தில் மதிப்பீடும் (விமர்சனம்) இல்லை. வினை முடிவடைகையில் விடுதலை ஏற்படுகிறது. பகலிரவென்னும் பந்துகள்கொண்டு மாற்றிமாற்றி நீ நிதம் ஆடும் ஆடலிது (நித்ய லீலை).
ஓரண்டத்தைப் படைப்பது போலவே எளிதில் அதை அழிக்கவும் செய்கிறாய். காலையில் நாங்கள் விழிக்கையில் கீழ்வானம் அங்கேயே இருக்கிறது. எப்போதும்போல ஞாயிறு எழுகிறது, சேவற்கோழி கூவுகிறது. நாங்கள் ஆற்றவேண்டியவற்றை வரிசையாக நினைவுகூர்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் வழக்கொழிந்து போனபின்னர், தோற்றம் மீண்டும் நிகழ்கையில் எல்லாம் பழையபடியே உள்ளது. புதிதாக விதிகள் ஏதும் இயற்றப்பட வேண்டியிருப்பதில்லை. புதிய வடிவமைப்பு எதுவும் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருப்பதில்லை. மாற்றத்தின் விதியும் மாற்றமின்மையின் விதியைப் போலவே நிலைபேறுடையது. புல்லின் இதழ் முதல் படைக்கும் இறையான பிரம்மன் வரை, உருமாறும் ஒளி முதல் மாறிக்கொண்டேயிருக்கும் இயல்நிகழ்வுகள் வரை ஒவ்வொன்றும் முழு இன்மையெனும் எதிர்மறைப் பண்புக்கு ஆட்படக் கூடியவைதான். அன்னையின் இதயத்தையும் அவள் இறைவனின் இதயத்தையும் பிணைக்கும் முறிவடையா காதல் மூலமே இருப்பின் தொடர்ச்சி கற்பிதம் செய்துகொள்ளப்படுகிறது.
ஒளிரும் காதணியில் (கர்ணாபரணம்) நிலைபேற்றின் ரகசியம் உள்ளது. அது அனாஹதம் (உடையாதது) அல்லது அதிதி எனப்படுகிறது. இரண்டுமே முறிவிலாதது எனும் பொருள் தருவன. சிவனுக்கும் சக்திக்கும் இடையே முறியாமல் இருப்பது முழுமையான நம்பிக்கையும் பேரன்பின் அக்கறையும்தான். எமது ஆர்வங்கள் வளர்வதும் தேய்வதுமாக இருப்பதால் நிலைபேறான இருப்பின் தொடர்ச்சி எமக்கு இல்லாமலாகிறது. இடையறாத எண்ணெயொழுக்கு போல எமது கவனம் சிதையாமல் இருக்கவேண்டும் என்பதையே நீ எமக்கு எப்போதும் கற்பிக்கிறாய். அதாவது, நாங்கள் ஒருபோதும் மாற்றத்தின் மாறுபாடுகளில் மீண்டும் விழித்தெழக்கூடாது என்றும் ஒளிர்ந்துகொண்டே இருக்கும் மெய்மையிலிருந்து மீண்டும் உறங்கிவிடக்கூடாது என்றும் சொல்கிறாய். உனக்கு என் உளமார்ந்த வணக்கங்கள்!
|| கம் ஸர்வாஹ்லாதினீ ||