கம் ஸர்வாகர்ஷிணீ
அன்னையே, அன்போடு அனைத்தையும் அரவணைப்பவளே! காலையில் சேவற்கோழி கூவுகிறது. மணம் நிரம்பிய தென்றல் மரக்கிளைகளில் கொஞ்சி விளையாடுகையில் இலைகள் சலசலக்கின்றன.. களகளவென்ற அமைதியான பாடலோடு ஒழுகிச் செல்கிறது ஓடை. அன்னையின் முலைப்பாலருந்திய குழவி மகிழ்வோடு சிரிக்கிறது. பல கோயில் கருவறைகளிலிருந்து மணியோசையும் துதிப்பாடல்களும் எழுகின்றன. அவரவர் தம் திறனுக்கேற்றபடி செய்யும் இப்பூசைகளெல்லாம் உனக்கே படைக்கப்படுபவை என்று கருதுகிறேன். நீ எனக்களித்துள்ள குரல் அத்துணை இனிமையானதாக இல்லை. மனம்போன போக்கில் என் கைகளால் தாளமிடுகிறேன்.
மக்களால் பேசப்படும் மொழிகள்தான் எத்தனையெத்தனை! மிக உயர்ந்தது என்றும், உனக்கு அணுக்கமானது என்றும் எந்த மொழியை கூற இயலும்? ஒரே மொழியில் பல வட்டார வழக்குகள் உள்ளன. குழந்தை மழலையில் குழறினாலும் அன்னையால் அதை சரியாக புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, துதிப்பாடல்களைப் பாடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என் உச்சரிப்பும் நான் தேர்ந்தெடுக்கும் சொற்களும் தவறாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றையும் பொருத்தமான மந்திரமாகவே நீ கருதுவாய் என்பதில் எனக்கு ஐயமே இல்லை.
உலகில் உள்ள பல்வேறு மதங்களின் ஒவ்வொரு உட்பிரிவும் தனக்கேயான சடங்குகளையும், பூசனைகளையும், பலிகளையும், கையாலும் தலையாலும் காட்டப்படும் சைகைகளையும் கொண்டிருக்கிறது. எது சரியான வழிபாட்டு முறை? உனக்கு இதில் எந்தத் தேர்வும் இருக்காது என்றே நான் நினைக்கிறேன். கிறித்தவ தேவாலயங்களில் நடத்தப்படும் யேசுவின் இறுதிவிருந்துச் சடங்கில் பங்கெடுப்போர் தாம் யேசுவின் ஊனையும் குருதியையும் அருந்துவதாகவும், அதனால் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதாகவும் நம்புகின்றனர். இஸ்லாமியர் அமர்ந்து எழுந்து நின்று குனிந்து வணங்கி மேல்நோக்கி மிகுந்த பக்தியோடு அல்லாவை துதிக்கின்றனர். அராபிய மொழியில் அமைந்த வாசகங்களை ஓதுகின்றனர். இது சரியான வழியா? இதுமட்டும்தான் சரியான வழியா?
சில சமயம், விரிவான சடங்குகளையும், கடவுளைப் பற்றி பேசுகையில் மக்களுக்கு இருக்கும் உறுதிப்பாட்டையும், அடிக்கடி அங்கெல்லாம் சென்றுவருபவர்களைப் போல மக்கள் சொர்க்க-நரகங்களை விவரிப்பதையும் எல்லாம் பார்க்கும்போது நான் குழம்பிப் போகிறேன். எல்லாவற்றிலும் நான் உன்னையே காண்கிறேன். அனைத்திலும் உன் அழகிய தோற்றம் பிரிக்கமுடியாதபடி கலந்திருப்பதை பார்க்கிறேன். இப்படி என் நம்பிக்கையை நான் எளிமைப்படுத்திக் கொண்டதில் உனக்கு எந்த வருத்தமும் இருப்பதில்லை. எனவே, நான் அனைத்தையும் வலம் வருகிறேன். நான் அதை செய்யவில்லையென்றாலும், இவ்வுலகு எம் அனைவரையும் தன் விண்வெளி ஊர்தியில் ஏற்றிக்கொண்டு, ஒரு சடங்குபோல சூரியனைச் சுற்றி வலம் வருகிறது. சில சமயம் நாங்கள் ‘அல்லேலூயா’ என்றும், சில சமயம் ‘ஹர ஹர மகாதேவ’ என்றும் ஓதுகிறோம். இவற்றின் பொருள் ‘லா இல்லா இல்லல்லாஹு’ அல்லது ‘மரியே வாழ்க’ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
கல்லும் மரமும் கொண்டு உன் உருவைப் படைத்து தங்கள் பீடங்களை அலங்கரிக்கும் மக்களின் புனைதிறம் வியப்பூட்டுகிறது. கோயில் பீடங்களில் அமைந்த அழகிய இச்சிறு தெய்வங்களுக்கு பசியோ தாகமோ கிடையாது; அவற்றிற்கு ஊட்டவும் முடியாது. பசி தாகமற்ற கடவுள் என்பது அழகிய கருத்தாக்கம். என்றாலும் நான், பக்தியோடு இன்பண்டங்கள் சமைத்து உன் உரு முன் சிறிதுநேரம் வைக்கிறேன். பின்னர், என் வயிற்றில் கொழுந்துவிட்டெரியும் பசியெனும் தீயில் உறைகின்ற நீயே மெய் என்று கருதி அவற்றை எல்லாம் எனக்கே படைத்துக்கொள்கிறேன். நான் மகிழ்கையில் நீயும் மகிழவேண்டும். என் ஆசிரியர்கள் நான் உன் முன் பணியவேண்டும் என்று கற்பித்தனர். அதை செய்வதற்கு மறந்துவிடுகிறேன். ஆனால், இரவில் அனைத்தையும் தாங்கும் நிலத்தின் மடியில் என் உடலை கிடத்துகிறேன். அதை நீ, எனது நெடுஞ்சாண்கிடை வணக்கமாக ஏற்றுக்கொள்வாய் என்றறிவேன். குழந்தை அமைதியாக அன்னையின் மடியில் கிடந்துறங்குவதைவிட நேர்மையான, நம்பிக்கை நிறைந்த பூசனை வேறு ஏது? என் பூசையும் அதைப் போன்றதே. சரணடைதல் எப்படி என்று நானறியேன். உன் குழவிகளாகிய எங்கள் மகிழ்ச்சிக்கென நீ அல்லவா அனைத்தையும் ஒப்புக்கொடுக்கிறாய்?
நான் தாறுமாறானவன் என எண்ணுகிறாயா? பெருங்குழப்பம் உனது ஆடற்களமல்லவா? அனைத்தையும் நிரைத்து வைத்து ஒழுங்கமைப்பது உன் ஆடல் அல்லவா? என் குழப்பத்தை ஒழுங்கமைப்பதும், என் அருவருப்புகளை அழகாக்குவதும், என் சினம் நீக்கி அன்புசேர்ப்பதும் என உன் பொழுதெல்லாம் எனக்கெனவே கழிகிறது என்பதை நானறிவேன். அதுவே என் விண்ணப்பம்; அதுவே என் சரண். உன் ஆடலுக்கென்றல்லவா என்னை படைத்திருக்கிறாய்? மட்டை, பந்து போன்ற விளையாட்டுப் பொருள்களைப் போலல்லாமல், எம்மை வைத்து நீ ஆடும் ஆடலை, நாங்கள் அறிந்தே இருக்கிறோம். விளையாட்டுத்தனமாகவும், நகைச்சுவையுணர்வோடும் இருக்கும் உள்ளுணர்வை நீ எனக்களித்திருக்கிறாய். வேண்டுமென்றால் ரப்பர் பந்தைப் போல துள்ளித் திரியவும், சதுரங்க ஆட்டப் பலகையில் காலாளென மிகுந்த எச்சரிக்கையோடு அடிவைக்கவும் நான் அறிந்திருக்கிறேன்.
எல்லா விளையாட்டிலும் நீயே நடுவராக இருக்கிறாய். ஊதல்கொண்டு நீ ஒலியெழுப்பியதும் நாங்கள் தொடங்குகிறோம். நீ தண்டனை விதிக்கையில் அவற்றிற்கு கீழ்ப்படிகிறோம். அன்னையே, உன் ஏற்பாடுகள்தான் எத்துணை அழகியவை! சிங்கம் கர்ஜிக்கிறது, நாய் குரைக்கிறது, கழுதை கனைக்கிறது, பூனை மியாக் குரலிடுகிறது, எலி கீச்சொலி எழுப்புகிறது, பறவை கீசுகீசென்கிறது. நான் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறாய்? நான் பிதற்றுகிறேன், நீ சிரிக்கிறாய். எத்துணை சிறந்தது நம் ஆடல்!
|| கம் ஸர்வாகர்ஷிணீ ||