ஶ்ரீசக்ர தியானம் – 26

க*ம் ஸர்வவித்ராவிணீ

தாயே, அனைத்து திசைகளிலும் கிளைபரப்பி, மணம் நிரம்பிய மலர்கள் செறிந்து நின்றிருந்த விந்தையான மரம் என்ன ஆனது? வாடி, பெருமழையில் வீழ்ந்து மண்ணாகி மறைந்தது அந்த மரமா? அதன் இலைகளும் மலர்களும் என்னவாயின? ஆவியாகி வளிமண்டலத்தில் மறைந்துவிட்டனவா? காலநெருப்பு அம்மரத்தை வெறும் புகையாகவும் சாம்பலாகவும் ஆக்கிவிட்டதா? அதன் இலைகளில் இருந்த பசுமையாற்றல் மேகங்களில் மறைந்து, எப்போதாவது தோன்றும் மின்னலாகிவிட்டதா?

படைப்புத் தொடக்கத்தில், பஞ்சபூதங்களின் மூல உயிரணுக்கள் ஐம்மடங்காக்கப்பட்டன. இப்போது அந்திமாலை வேளையில் அவை தம் தோழமையை விட்டு தனிமைக்கு சென்றுவிட்டனவோ என ஐயுறுகிறேன். பருவகாலங்களை மாற்றி, தாவரங்களாலான உலகு எம்மோடு கண்ணாமூச்சி விளையாடும்படி செய்வது உன் நிகழ்நிரலில் உள்ள ஒன்று. இரவுதோறும் போலி மரணமொன்று உறக்கமென வருவதும், மறுநாள் விடியலில் பெருஞ்சிரிப்பு தொடர்வதும் என ஒரு ஆடலை நீ எமக்களித்திருந்தாய். அத்தகைய விளையாட்டுகளை நீ இப்போது நிறுத்திவிட்டாய்போலும். எங்கும், எவ்விதத் துடிப்பும் காணப்படவில்லை. உன் இருப்பின் தீவிரத்தில் சிலபோது முழுமையான இன்மையை உணரமுடிகிறது. அதைத்தான் இப்போது நீ எமக்கு கற்பிக்கிறாயா? 

ஒவ்வொரு மலையும் அதன் பனிமுகடுகளும், ஆழிகளும் எல்லாம் உனது நிலைபேறுகொண்ட கருவூலங்கள் போலிருந்தன. இப்போதோ ஒற்றைப் புல்லிதழ்கூட தென்படவில்லை. எங்கும் மணல் மணல் என, மணல் மட்டுமே பரவியிருக்கிறது. எனது விழியிமைகள்கூட கனக்கின்றன. மூடியபடி வரும் பாலை எம் அகத்துளும் நுழைகிறதா? உனது எல்லையிலா இன்மையின் பரந்த வெளியில், தன் வெறி ஆடலில் தன்னை மறந்த உன் இறைவன் மட்டுமே தென்படுகிறான். பறந்து திரியும் இத்தூசித் துகள்களெல்லாம் ஒரு காலத்தில் உவகையுடன் நகையாடித் திரிந்த ஆன்மாக்களாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவற்றின் கைகளைப் பற்றியபடிதான் நான் உன் வளமையான சோலையில் ஆடியிருந்திருக்க வேண்டும். அனைத்தையும் இழந்த பின்னரும் நான் ஒரு நுண்ணிய தூசித் துகளென உன் தாமரை அடிகளை பற்றியிருப்பேன்.

படைக்கும் கடவுளான பிரம்மனை அவனது தாமரைப் பீடத்தில் காணவில்லை. படைப்பவனின்றி படைப்புத் தொழில் எவ்வாறு நிகழும்? உன் இறைவன் தற்போது எதையும் எரிக்கவில்லை. உருமாற்றத்திற்கான திட்டங்களை எல்லாம் அவன் நிறுத்திவைத்திருக்கிறான். விஷ்ணு இப்போது தன் கனவுநிலையில் இல்லை. அவனுக்கே நினைவில்லையென்றால், செயல்பட வேண்டிய நினைவு எவருக்கும் இருக்காது. மரணம் இறந்துவிட்டது என்பது நகைமுரணாகத் தோன்றலாம். இன்மைகூட மெய்யற்றதாகிவிட்ட அரிய தருணம் இது. விழுமியங்களின் அளவுகோல், பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுவிட்டது. முன்பு வாழ்ந்த மனுக்களையும், கடந்துபோன மன்வந்தரங்களையும் நினைவில்கொள்வதற்குக்கூட இப்போது எவருமில்லை.

இருத்தலுக்கும் இன்மைக்குமான ஊற்றுமுகம் முற்றாகக் கரைத்தழிக்கப்படுகையில், உன் இனிய மணாளன் மட்டுமே களிப்பிலாடுகிறான். அனைத்தையும் அழிக்கும் காலமே துடிப்பின்றி நின்றுவிட்ட நிலையில், அவன் மீது நீ கொண்ட தீவிரமான காதலே அவனுக்கு கவசமெனத் திகழ்கிறது போலும். படையலென உனக்கு எதையும் அளிக்க முடியாதவனாக இருக்கிறேன். எனவே, உனது மௌனத்தில் மேலும் மேலும் ஆழ்கிறேன்.

|| கம் ஸர்வவித்ராவிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s