சௌந்தர்யலஹரீ – 26

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்

விநாஶம் கீநாஶோ ப்*ஜதி த*தோ யாதி நித*னம்

விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருஶா

மஹாஸம்ஹாரே ‘ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ

பாடல் – 26

பிரம்மன் மீண்டும் பஞ்சபூதங்கள் என்றாகிறான்

விஷ்ணு தன் ஆர்வத்தை ஒழிகிறான்

முற்றிலும் அழிப்பவன் மரணத்தை தியானிக்கிறான்

செல்வத்தின் இறை மறைகிறான்

இந்திரனோ மனுக்களுடன் சேர்ந்து

அரைக்கண் மூடிக் கிடக்கிறான்

அரனை அகலாதவளே

அறுதி அழிவெனும் அந்நேரத்தில்

உன் இறைவன் மட்டும்

தன் ஆடலில் திளைத்திருக்கிறான்

**

அறிதல் சூழலில் அறிபவரும் அறியப்படுவதும் எதிரிணைகள். சாயமேற்றப்பட்ட அறிவு இயல்பாகவே, சாயமேற்றப்பட்ட அறிபவரை முன்வைக்கிறது. ஒன்றன்மீது கவனம் குவிகையில், அறிபவர் எனும் தன் முனைப்பு திரண்டு இறுகுகிறது. என்றாலும், கவனம் சிதறுகையில் புறவயமாகவும் அகவயமாகவும் முனைப்பு அழிகிறது. ஒரு படத்தை திரையில் வீழ்த்தி, அதன் மேல் கூரிய வெளிச்சத்தை பாய்ச்சும்போது படம் காணாமல் போகிறது. கட்புலன் தெறிவுக்கான ஊடகம் (medium for visual projection) ஒளியையும் நிழலையும் ஒன்றாக கையாள்கிறது. ஒளி ஊடுருவாத பொருட்களின் வடிவங்களை மட்டுமே, திண்ணிழலுரு மூலம் காட்ட முடியும். (If there is no opacity that can be silhouetted by light, then forms are not highlighted). இப்பாடலில் சொல்லப்படும் தியானம் யோகசாதகரை ஒளியின் ஊற்றுமுகத்திற்கும், இருப்பிற்கும் அருகே அருகே இட்டுச்செல்கிறது. பிரம்மனின் படைப்பூக்க நலிவு, யோகசாதகருக்கு நீரில் பாய்வதற்கான பலகைபோலிருக்கிறது (diving board). அதிலிருந்து தனித்துவமான அனுபவத்திற்குள் அவர் பாய்கிறார்.

தொலைவிலிருந்து நோக்குகையில், நிலவு மிக அழகாகத் தெரிகிறது. நுணுகிப் பார்க்கையில் அதிலுள்ள குழிகள் விகாரமாகத் தெரிகின்றன. இயல் உலகின் மூலக்கூறுகளான ஐம்பூதங்கள், அடிப்படையான துகளாற்றலின் அமைப்பால் திரட்சிகொண்டவையாய் தெரிகின்றன. வேதாந்தத்தில் பொருளின் கூட்டிணைவு பஞ்சீகரணம் எனப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு மூலக்கூறும் அதிலுள்ள பிற மூலக்கூறுகளின் நுண்ணிய தன்மாத்திரைகளின் இணைவால் திடத்தன்மை பெறுகிறது. நிலத்தின் பருப்பொருளில் நீர், தீ, காற்று, ஆகாயம் எனும் நான்கு மூலக்கூறுகளும் உள்ளன. இவ்வாறான கூட்டமைவிலிருந்து மூலக்கூறுகள் தமது ஆதி இயல்புக்கு திரும்புகையில், உருக்களை தக்கவைப்பதற்கான படைப்புக் கூறு இல்லாமலாகிறது. இது கவித்துவமாக, பிரம்மன் பஞ்சபூதங்களெனும் மூலக்கூறு நிலைக்கு திரும்புவதாக கூறப்படுகிறது.

ஆழுறக்கமும், இறப்பும் அனைத்து புலனுணர்வுகொண்ட உயிரிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள இரண்டு தியானப் பயிற்சிகள். இரண்டுமே நினைவுமீட்டலை இல்லாமலாக்குகின்றன. மனிதர்களைப் பற்றிய, நிகழ்வுகளைப் பற்றிய, இன்ப-துன்ப முன்வரையறைகள் பற்றிய நினைவுகள் வண்டுபோல மனதை குடைந்துகொண்டே இருக்கின்றன. பிரபஞ்ச நினைவே கோள்களை ஒரே பாதையில் மீள மீள சுற்றிவரச் செய்கின்றன. தனியரின் நினைவே நிறுவப்பட்ட கருத்துக்களை மீட்டெடுத்து ஒத்திருக்கும் காட்சிகளை அடையாளம் காண உதவுகின்றன. இந்தப் பாடலின் தியானத்தில் நினைவுகள் புதைக்கப்படுகின்றன. விஷ்ணுவின் இயக்கம் நின்றுபோகிறது. கவனத்தை குலைக்கும் நினைவுகள் மறைகின்றன. நினைவுகள் மறைந்து இறுதியில், தானே அறிபவர், ஆற்றுபவர், துய்ப்பவர் என்பதை அகம் மறக்கிறது. ஒருவர் முழுமையாக தியானத்தில் ஆழ்கையில், தன் உடல் ஓரிடத்தில் அமர்ந்திருக்கிறது என்ற நினைவே அவருக்கு இல்லாமலாகிறது. அவரைச் சுற்றிலும் நிகழும் எதுவும் அவருக்கு தெரிவதில்லை. விளைவாக, அனுபவப் பதிவு ஏதுமில்லை, மனதில் எழும் எதனோடும் தொடர்புறுத்திக் கொள்ள எந்த நினைவும் மீட்டெடுக்கப் படுவதில்லை. இதுவே, இந்தப் பாடலில், விஷ்ணு கருத்தையும் காட்சியையும் இணைத்துப்பார்ப்பதில் ஆர்வமிழப்பதாகக் கூறப்படுகிறது.  

ஆழுறக்கத்திலோ, உணர்ச்சிகளற்ற முழுமயக்க நிலையிலோ (coma) ஒருவர் இறக்கும்போது, நனவைப் பொறுத்தவரை வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் எந்த எல்லைக்கோடும் இருப்பதில்லை. இந்த அறுதி இணைவில், ஏதோ ஒரு நிகழ்வு காரணமாக மரணம் ஏற்பட்டது என்று முத்திரையிடவேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பாடலில், மரணத்தின் இறை மரணம் குறித்த தியானத்தில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலில் கலக்கும் நதிகள் நீரில் கலந்தபின் தம் அடையாளங்களை இழக்கின்றன.

வாழ்வில் புறவயமான நாட்டங்கள் எல்லாமே இன்பமெய்துவதற்கானவை. அந்த இன்பம் என்பது துன்பத்தோடு ஒப்பிட்டு நோக்க மகிழ்வானதேயன்றி வேறல்ல. ஆனால், எங்கு செயல் இல்லையோ, குறிப்பிட்ட அறிவு இல்லையோ, துய்த்தல் இல்லையோ அங்கு இன்பத்தை எய்துவதற்கான வழியே தேவைப்படுவதில்லை. இதுவே, ‘செல்வத்தின் இறையும் மறைகிறான்’ என்ற தொடர் மூலம் அழகாக உணர்த்தப்படுகிறது. 

ஒருவர் கண்களைத் திறந்து புற உலகை காண்பதுபோலவே, அகவயமாக நோக்கி அறிபவரை கண்டுகொள்ள முடியும். நனவை ஆட்கொள்ளும் அசைவிலா இருளும் விறகுபோல் உறக்கமும் மூன்றாவது இயல்கை. விழிப்புடன் இருத்தல், கனவு காணுதல், உறக்கம் என்ற மூன்றுமே எல்லோருக்கும் பொதுவானவை. அறுதியானது எனக் கருதப்படும் இந்த தியானத்தில் ஒருவர் உறக்கம், விழிப்புநிலை என்ற இரண்டையும் கடந்துசெல்கிறார். இதனை நாராயண குரு, உறக்கமும் விழிப்பும் இன்றி தூய நனவில் இருத்தல் என்கிறார். அனைத்தும் இல்லாமலாக்கப்படுகிறது. ஆயினும், அனைத்து இன்மையிலும் ‘ஒன்று’ இருக்கிறது. அறுதியாக, அதுவே, ‘ததேவ சத்’.

ஒருவர் வியப்புடன் பார்க்கிறார், வியப்புடன் செவிகொள்கிறார், வியப்புடன் மொழிகிறார். பார்த்தபின்பும், கேட்டபின்பும், மொழிந்தபின்பும்  மீவியப்பின் ஆழ் புதிர் விளக்கப்படாமலே உள்ளது.

‘க்லீம்’ எனும் மந்திரம் இந்த யந்திரத்தோடு தியானிக்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s