சௌந்தர்யலஹரீ – 25

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுணஜனிதானாம் தவ ஶிவே

ப*வேத் பூஜா பூஜா தவ சரணயோர்யா விரசிதா

ததா* ஹி த்வத்பாதோத்வஹனமணிபீட*ஸ்ய நிகடே

ஸ்தி*தா ஹ்யேதே ஶஶ்வன்முகுலிதகரோத்தம்ஸமகுடா:

பாடல் – 25

அரன் துணைவியே

உனது முக்குணங்களை உண்டாக்கும்

கடவுளர் மூவரும்

உன் இணையடி அமைந்த 

அருமணி பதித்த கால்மணையருகே

அகலாது நின்றபடி

தம் தலைமேல் 

மலர்மொக்கெனக் குவித்த கரங்களோடு

உன் திருவடி தொழுவதே தொழுகை

**

25 முதல் 27 வரையிலான மூன்று பாடல்களையும் ஒரு அலகாகக் கொள்ள வேண்டும். 25-ஆவது பாடலில் அன்றாடச் செயல்பாடுகளின் சுழற்சி சொல்லப்படுகிறது. 26-ஆவது பாடலில் அதன் அழிவு பேசப்படுகிறது. இவ்விரண்டு பாடல்களிலும் விளக்கப்படும் வழிபாடு 27-ஆவது பாடலில் மீண்டும் உரைக்கப்படுகிறது. சௌந்தர்யலஹரியில், வேதாந்தத்தின் கருத்துக்களும் தாந்திரீகத்தின் கருத்துக்களும் கலந்த ஒரு அருமையான கலவை உள்ளது.  வேதாந்தத்தைப் பொறுத்தவரை முழுமுதல் என்பது தூய இருப்பு, தூய வாழ்வு, சத், சித், ஆனந்தம் என்ற அனைத்து விழுமியங்களும் ஒன்றிணைந்த களம்.  தொடர்புடையது அல்லது முன்வரையறை செய்யப்பட்டது சத்வ, ரஜோ, தமோ குணங்களால் ஆனது. (The relative or conditioned is composed of the triple modalities). இதுவே சாங்கியம் முன் வைக்கும் புருஷன் – ப்ரக்ருதி என்ற தீர்க்க முடியா இருமை. சங்கரரின் மெய்யியலிலும் இருமை மறைமுகமாகத் திகழ்கிறது. தாந்திரீகத்தில், சிவ-சக்தி தத்துவங்கள் இணைக்கப்பட்டு ஒற்றைக் கொள்கையாக முன்வைக்கப்படுகிறது. சக்தி மீஅன்னை வடிவில் முதன்மை கொள்கிறாள். அந்த வகையில் அன்னையானவள் ப்ரக்ருதி அல்லள். பதிலாக, அவள் இறைத்தன்மை கொண்ட மையக் கொள்கையாகிறாள். முக்குணங்களும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவருக்கும் வகுத்தளிக்கப்படுகின்றன.

இப்பாடலில், கடவுளர் மூவரும் அன்னையின் கால்மணையருகில் நின்றபடி அவளிடும் கட்டளைகளை நிறைவேற்றக் காத்திருப்பதாக வர்ணிக்கப்படுகின்றனர். நம் அன்றாட வாழ்வை ஒரு தெய்வீகச் செயல் என்று நாம் புரிந்துகொண்டால் மட்டுமே இந்த அழகிய விவரிப்பு நமக்கு உதவக்கூடும். நாம் தியானத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, ஏதோ ஒரு வேலையை செய்துகொண்டிருந்தாலும் சரி, தெய்வீக ஒளி ஒன்று நம்மில் எப்போதும் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. பெயரிடமுடியாத அந்தத் தூய இருப்பின் ஒளியில்தான் அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அன்னையைப் பற்றி பேசுகையில், நம் இருப்பின் அந்தத் தூய சாரத்தைப் போற்றுவதாகவே நம் தியானம் இருக்க வேண்டும். வாழ்வின் தெய்வீக நிரலை செயல்படுத்துவதற்கென நமக்குக் கிடைத்த ஆகச் சிறந்த கருவியே நமது இவ்வுடல். விழித்தெழுந்தவுடன், நாளின் செயல்பாடுகளுக்கென நம் உடலை முழுதளிக்கிறோம். அனைத்து ஆற்றல்களும் நம் செயலுறுப்புகள் வழியே செலுத்தப்படுகின்றன. சோம்பலோ, பணியாற்றுவதில் தயக்கமோ பொறுத்துக்கொள்ளவே படுவதில்லை. நம்மில் உள்ள படைப்பூக்கமான பிரம்மா, நம் அன்றாடவாழ்வில் வீற்றிருக்கும் முழுமுதலைப் போற்றி, பேரன்னைக்கான கடமைகளை ஆற்றுவதைப் போன்றதே இது.

புலனுறுப்புகளும், செயலுறுப்புகளும், மனமும் தமக்கான கடமைகளை சரியாக ஆற்றவேண்டுமெனில், செய்யப்படுவதில் தணியாத ஆர்வம் ஒன்று இருக்க வேண்டும். நேற்று விடப்பட்ட இடத்திலிருந்து இன்றைய பணி தொடர வேண்டும், மறுநாளுக்கான திட்டத்தில் சென்று சேரவேண்டும். இப்படி  கடந்ததை நினைகூரவும், நிகழ்வில் செயல்நிரல்களை மெய்ப்படச் செய்வதற்கும் விழிப்புடன் இருத்தல் (alertness), கவித்துவமாக விஷ்ணு அன்னையை வணங்கிநிற்பதோடு ஒப்பிட்டு எண்ணத்தக்கது. விஷ்ணுவின் செயல்பாட்டை, நினைவுக் குவியலை ஆய்ந்து கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு கணிப்பொறியோடு ஒப்பிடலாம். இப்படி பார்க்கையில், பிரபஞ்ச மனம் நிரலமைக்கப்படுவதும் அதன் கட்டளைகள் நிறவேற்றப்படுவதுமே பிரம்மனும் விஷ்ணுவும்.

அன்றாட வாழ்வில், நிகழ்காலமும் கடந்தகாலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு எதிர்காலத்திற்கென சேமிக்கப்படவேண்டும் (processed and stored) என்பதால், எதிர்காலம் முக்கியத்துவம் பெறுகிறது. பல முறை பருண்மை என்பது நுண்மையாக குறுக்கப்பட்டு, நுண்மை என்பது காரணமாக குறுக்கப்படுவதன் மூலம் இது நிகழ்கிறது. ஒவ்வொன்றிற்கும் இடையிலான தொடர்பு கணக்கில் கொள்ளப்படுகிறது. ப்ரம்மனை சத்வ குணமாகவும், விஷ்ணுவை ரஜோ குணமாகவும் கொண்டால், ருத்ரனை தமோ குணமாகக் கொள்ள வேண்டும். தமோ குணம் நனவிலியில் இயங்குவது. அது எப்போதும் துன்பமானதாக, அவலச் சுவை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று நிகழ்ந்து முடிந்ததும், விழிப்புநிலையிலான நனவிலிருந்து அது நீக்கப்படுகிறது. புதிய முழுமை (gestalt) ஒன்று வரவழைக்கப்பட்டு மூடப்பட்ட முழுமைகள் சேமிக்கப்படுகின்றன. கடந்தகாலம் என்பது மறதி போன்றது; கடந்தகாலத்தை தொடர்ந்து விழுங்கிக்கொண்டிருப்பது. நம் வாழ்வில் கணம் கணமென இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதனை ருத்ரன ஆற்றும் கடமையாகக் காணவேண்டும்.

இறையோருக்கும், தெய்வங்களுக்கும் மனிதப்பண்பு ஏற்றாமல், ஒருவர் தான் இயல்பாக ஆற்றவேண்டிய கடமைகளை மேற்கொள்வதே சரியான வழிபாடுதான். ஒருவரது படைப்பூக்கம், நினைவை மீட்டெடுத்தல், ஏற்படும் அனுபவங்களையெல்லாம் உட்செலுத்திக்கொள்ளுதல் போன்ற செயல்களுக்கெல்லாம் மதச்சாயம் பூசாமல் செய்தால் அவையும் உண்மையான வழிபாடுகளே. சச்சிதானந்தம், சத்வம், ரஜஸ், தமஸ், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்பனவற்றையெல்லாம் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நனவின் வழியே புரிந்துகொள்ள வேண்டும். விழிப்புநிலையிலும், கனவிலும், ஆழுறக்கத்திலும் உணரப்படுபவை எல்லாம் தனியரின் வாழ்வில் ஒன்றையொன்று நிறைவு செய்பவை. இதையே இன்னும் விரிந்ததாக பிரபஞ்ச தளத்தில் காணவேண்டும். சௌந்தர்யலஹரியின் ஒவ்வொரு பாடலையும், அகத்தில் மிக நுண்ணிய வடிவில் உறையும் பிரபஞ்சமாக புரிந்துகொள்ளலாம்.  இதற்கு எதிரிடையாக, பிரபஞ்சம் என்பது அகத்தின் விரிவாக்கமாக உள்ளது.

‘சௌ:’ எனும் மந்திரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள யந்திரத்தில் வைத்து தியானிக்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s