யம் ரம் லம் வம் அனங்கவேகினீ ஶிவதூதீ மஹாவித்யேஶ்வரீ
மீஞானத்தின் இறைவியே, அன்னையே, நீ யாரென்று எவராவது கேட்டால், எம்மை மகிழ்விப்பவள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கும் மேல், இறையோடு ஒன்றுகலக்க எம்மை தகுதிப்படுத்துபவள் என்று கூறலாம். எமது விழிப்புநிலையில், இனிய ஊக்கமளிக்கும் சொற்கள் கொண்டு எமதுள்ளத்தை மகிழ்விக்கிறாய். நீ படைக்கும் உலகின் இயல்அழகைக் கொண்டு சுவையூட்டுகிறாய். எனவே நீ ரம்யா. எம்மை மகிழ்விப்பவள். நாங்கள் உறங்குகையில் பெயர்களும் உருக்களும் கொண்ட உலகை மறைத்துக் கொள்கிறாய். அங்கே உறக்கத்தில் எங்களை அமைதியோடு ஒன்றுகலக்கச் செய்கிறாய். எம்மை கரைந்தழியச் செய்பவள் நீ.
இவையெல்லாம் யம், ரம், லம், வம் என்ற மந்திரத்தில் மறைபொருளாக கூறப்படுகின்றன. ‘யம்’, ‘ரம்’ இரண்டும், எம்மில் தூண்டப்படும் அறிவதற்கான ஆற்றலையும், பொருட்களின் உண்மையை அறிகையில் கிடைக்கும் மெய்நிறையுணர்வையும் சுட்டி நிற்கின்றன. நாங்கள் உவகையோடு பேரின்பத்தில் ஒன்றுகலப்பதை சுட்டி நிற்பது ‘லம்’. எப்போதும் உன்னோடு எம்மை அடையாளப்படுத்திக் கொள்கையில் எம் உள்ளத்தில் எழும் பெருவியப்பைக் குறிப்பது ‘வம்’. எமது விழிப்புநிலையிலும், உறக்கத்திலும் இவ்வுடலை இயங்கச் செய்ய, எமது அடிப்படை விசைகளை ஆளும் மீஆன்மாவின் மறை ஆற்றலாகிறாய் நீ. எனவே நீ அனங்கவேகினீ. உன் வழிகாட்டலின்படி பிரம்மா, விஷ்ணு, மஹேஶ்வரன் மூவரும் முறையே படைத்தல் காத்தல் அழித்தலெனும் முத்தொழில்களை புரிகின்றனர். இந்த மும்மைச் செயல்பாடு உலகின் மாறிக்கொண்டேயிருக்கும் தன்மையோடு பிணைந்தது. இவையெல்லாம் என்றும் நன்மைபயக்கும் சதாசிவனுக்குள்ளேயே நிகழ்கின்றன.
மூச்சிழுத்தலும், மூச்சுவிடுதலும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை என்றாலும் இரண்டுமே உயிரை பராமரிப்பவை. உறக்கமும் விழிப்புநிலையும் ஒன்றிற்கொன்று முரணானவை என்றபோதும் உயிர்வாழ்தலுக்கு இவ்வேறுபாடுகள் அவசியம். இப்படியாக, எம் வாழ்வில் காணப்படும் முரண்பட்ட எதிரிணைகள் எல்லாம் உன் ஆணைப்படியே நிகழ்கின்றன. சதாசிவன் விடாது நோக்கிக் கொண்டிருந்தாலும், தன் இருப்பின் மூலமே அனைத்திலும் நன்மை திகழச் செய்துகொண்டிருந்தாலும், நீ சதாபூர்வா என்பதால் நீ மறைந்துவிடுவதில்லை. உனக்கு தொடக்கமென ஏதுமில்லை, முடிவும் இல்லை. இந்த நிலைபேறே சிவனின் பெயருக்கு ‘சதா’ என்னும் முன்னொட்டாகிறது.
அனைத்து அறிவியல்களுக்கும், இறைவனே ஊற்றுமுகம். அவற்றை அவனிலிருந்து ஒவ்வொன்றாக வெளியெடுத்து, உயிரினங்களுக்கு கற்பித்து ஒளியூட்டுபவள் நீ. எனவேதான் நீ மஹாவித்யேஶ்வரீ என்றழைக்கப்படுகிறாய். வழிபாட்டின், நம்பிக்கையின் ஆழ்படிம உருமாதிரி நீ. அதனால்தான் உன் பெயர் ஶிவதூதி. உன் இறைவனுடைய நுண்ணிய ஆர்வங்களின் வெளிப்படையான அங்கீகாரமே உனது ஆர்வங்களாக இருக்கின்றன. தனியர் ஒருவரின் உள்ளம் துன்பத்தாலும், குழப்பத்தாலும், அச்சத்தாலும் ஆட்கொள்ளப்படுகையில், அவர் வாழ்வில் ஆறுதலாக, துலக்கமாக, அச்சமின்மையாக நீ நுழைகிறாய். ஏனெனில், நீ சங்கரீ – நொந்தவர்களை மீட்டு ஊட்டமளிப்பதிலேயே எப்போதும் ஈடுபட்டிருப்பவள். இரவைத் தொடர்ந்து வருகிறது பகல். புயலுக்குப் பின் அமைதி. சிறிது நேரம் நீ இல்லாமலிருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், களிப்பும் கிளர்ச்சியும் மீதூறும்படி உடனடியாக நீ தோன்றிவிடுவதால் அந்தக் குழப்பம் விலகிவிடுகிறது.
ஒவ்வொருவரிலும் மெய்யான அகமாக நீ இருப்பதால் அனைவரும் அகமகிழ்வு கொள்ளும் தகுதிபெற்றவராகின்றனர். பத்திமையின் உருமாதிரியாக, அனைவருக்கும் உன் பிரதிநிதியாக நான் விளங்குவேனாக! எவருடனெல்லாம் தொடர்புறுத்திக் கொள்கிறேனோ, அவர்களிலெல்லாம் முழுமைகொண்ட உருமாதிரியை காண்பேனாக!
|| யம் ரம் லம் வம் அனங்கவேகினீ ஶிவதூதீ மஹாவித்யேஶ்வரீ ||