சௌந்தர்யலஹரீ – 24

த் ஸூதே தா*தா ஹரிரவதி ருத்ர: க்ஷபயதே

திரஸ்குர்வன்னேதத் ஸ்வமபி  வபுரீஶஸ்திரயதி

தாபூர்வ: ஸர்வம் ததிதமனுக்ருஹ்ணாதி ச ஶிவ

ஸ்தவாஞாமாலம்ப்ய க்ஷணசலிதயோர்ப்*ரூலதிகயோ:

பாடல் – 24

தாயே,

பிரம்மன் உலகை படைக்கிறான்

விஷ்ணு காக்கிறான்

ருத்ரன் அழிக்கிறான்

அனைத்தையும் தன் உடலில் ஈர்த்து

தன்னையே மறைத்துக்கொள்கிறான்

நிலைபேற்றைக் குறிக்கும் சதா என்பதை

தன் பெயரின் முன்னொட்டாகக் கொண்ட சிவன்

மெல்லிய கொடிபோன்ற உன் புருவத்தின்

நுண்ணசைவில்

உன் கட்டளை அறிந்து

முழு உலகுக்கும் அருள்புரிகிறான்

**

தொடுவானில் எழும் ஞாயிறு உலகிற்கு நாளை கொண்டு வருகிறது. புருவ மையத்தில் எழும் நனவு மனிதருக்கு விழிப்புநிலையை கொண்டுவருகிறது. பகல் ஒவ்வொரு உயிரியையும் எழுப்பி அன்றைய நிகழ்நிரலுக்குள் செலுத்துகிறது. விழிப்புநிலை ஒருவருக்கு, அவர் முன் தினம் ஆற்றிய செயல்களை நினைவுறுத்துகிறது. அவர் ஆற்ற வேண்டியவற்றை, ஒரு ஒழுங்கில் செய்துமுடிக்கக் கோருகிறது. பிரபஞ்சத்தை வடிவமைத்தவன் பிரம்மா எனப்படுகிறான். அவனே விஶ்வகர்மா (பிரபஞ்ச இயக்க முகமை). விழிப்புநிலையிலான நனவு அனைத்தையும் மதிப்பிடுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக வரும் ஒவ்வொரு கணத்தையும் மெய்ப்படுத்திக் கொள்ளும் குறிக்கோளோடு, அளிக்கப்படும் தரவுகளை எல்லாம் அளந்து, பாகுபடுத்தி, கட்டமைத்து, ஆராய்ந்து உபயோகப்படுத்திக்கொள்கிறது. அம்மெய்ப்படுதலில் உள்ள தீவிர ஆர்வம் காரணமாக தனியரின் நனவு ஒரு மைய விழுமியத்தில் கவனத்தை குவிக்கிறது.  முன் நிகழ்ந்ததையும் இனி நிகழப்போவதையும் அம் மைய விழுமியத்தோடு தொடர்புறுத்திக் கொள்கிறது. தனியர், பிரபஞ்ச இயக்கத்தின் முகமையான விஶ்வகர்மன் அல்லர். அவர் விஶ்வ அபிமானி, பிரபஞ்சத்தை ஒரு குறிப்பிட்ட பின்னணியில் வைத்து மதிப்பிடுபவர். மதிப்பிடுபவருக்கு, கடந்துசெல்லும் கணங்கள் மிக முக்கியமானவை. ஓய்வறியா பணி அது. ஒன்றை ஆராய்ந்து, மதிப்பிட்டு உணர்வுரீதியாக பதிவு செய்தவுடன் அதனை நினைவின் களத்தில் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் மீள மீளச் செய்யவேண்டிய அன்றாடச் செயல்கள் உள்ளன. நாளின் நிரலுக்கு ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் உண்டு. இச்செயல்களை எல்லாம் செய்துகொண்டிருக்கையில் அறம்சார் நனவொன்று உடன் வந்துகொண்டேயிருக்கிறது. கண்ணுக்குப் புலப்படாத, அறியா தலைவன் ஒருவனின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போகும்போது பதற்றமும் குற்றவுணர்வும் எழுகின்றன. பிரபஞ்ச தளத்தில் இதை ஆற்றுவது பிரம்மா. தனிப்பட்ட நிலையில், செயல்படும் நனவே இதற்குப் பொறுப்பு. உலகிற்கு பிரம்மாவைப் போன்றது நமக்குள் செயல்படும் தன்முனைப்பு.

அண்டம் என்பது தானே தோன்றும் அமைப்பு. அதற்கேயான வடிவமைப்புகளும், நிகழ்நிரல்களும் அதில் உண்டு. தனியரின் உடல்சார் எல்லைகளைக் கொண்டு பார்க்கையில், அகத்தில் உள்ள படைப்பொளி ஆற்ற வேண்டியது மிகப்பரந்ததாக, சிக்கலானதாகத் தெரிகிறது. செங்குத்தான ஆழமும் கிடைநிலையான விரிவும் அதில் உள்ளது. இந்த இரண்டாவது சுய-படைப்புக் கொள்கை விஷ்ணுவுக்கு அண்டமாகவும் தனியருக்கு தைஜஸன் எனும் அகவயக் கொள்கையாகவும் உள்ளது. புலன்களிலிருந்து இயல் தரவுகள் நீக்கப்பட்ட பிறகும் உரு குலையாமல் இருக்கின்றது.  அனுபவத்தின் தொடர்ச்சி காக்கப்படுகிறது.  புலனுணர்வே முக்கியத்துவம் பெறும் பருண்மை கொண்ட இயல் உலகிலும், முன்வடிவமைக்கப்பட்ட கருத்துக்களை தைஜஸன் அளிக்கவேண்டியுள்ளது. இதை, கனவெனும் அரங்கில் விழிப்புநிலை வாழ்க்கை நடிக்கப்படுகிறது என்றும் கூறலாம். நவீன உளவியலாளர், கனவுகளை விழிப்புநிலையின் பின்னணியில் வைத்து புரிந்துகொள்ள முயன்று சோர்வடைகின்றனர். விழிப்புநிலையை கனவு மெய்ப்படுதலாக புரிந்துகொள்வதே அவர்கள் செய்யவேண்டியது.

பிரம்மா, விஷ்ணு இவர்களுக்கும் விஶ்வ அபிமானி (உலகை மதிப்பிடுபவர்), தைஜஸன் (கனவுகளை கையாள்பவர்) ஆகியோருக்கும் இடையிலான தொடர்பை கண்டோம். பருப்பொருட்கள்சார்ந்த விழிப்புநிலை அனுபவமும், நினைவுச் சிதறல்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட குறியீடுகளின் கனவு அனுபவமும், திரைப்படச்சுருளில் உள்ள உறைபடங்களைப் போல (still pictures of cinematic film) நகர வேண்டும். மதிப்பிடுபவரிடமிருந்தும், புனைவைக் கையாள்பவரிடமிருந்தும் கருப்பொருள்கள் (themes) வலிந்து பறிக்கப்படுகின்றன. விழிப்புநிலையில் படைக்கப்படுவதற்கும் அதன் அகவயத் தொடர்ச்சிக்கும் இடையில் தெளிவான பகுப்பெல்லை ஏதும் இருப்பதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட கணத்தில் கவனத்தை ஈர்த்த கரு மீள மீள மறைந்துபோவதை நோக்கிநிற்கும் நனவொன்று (witnessing consciousness) கவனிக்கிறது. பிரபஞ்ச தளத்தில், காட்சி மாறுகிறது. உமர் க*ய்யாம் சொன்னதைப் போல, பகலவனின் முதற்கதிரெழும் செய்தி சுல்தானின் மணிமேடையில் கல்லெறிந்து, விண்மீன் நிறைந்த இராக்கால வானை ஓடச்செய்கிறது. ஏறத்தாழ பன்னிரண்டு மணிநேரம் ஆட்சி செலுத்தும் ஞாயிறு, ஆழியில் மூழ்குகையில் வானில் மீன்கள் மீண்டெழுகின்றன. அழிவும் மாற்றமும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பிரபஞ்ச நிரல் உள்ளதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொரு இணைவும் பிரிவில் முடிவது நம்மை வருத்தமுறச் செய்கிறது. தவிர்க்கமுடியாத உருமாற்றம் உண்டாக்கும் இந்த சோகம் கவித்துவமாக ருத்ரன் எனப்படுகிறது. ருத்ரன் என்ற சொல் ரோதனா (அழுகை அல்லது ஊளை) என்பதிலிருந்து பிறப்பது. தனியரின் நனவில், மகிழ்ச்சி தரும் அனுபவத்தை இழக்கையில் ஏற்படும் வலி, உறக்கத்தை தூண்டுவதன் மூலம் தணிக்கப்படுகிறது. கண்கள் செருக நனவு மரத்துப்போக அது நனவிலியில் கரைகிறது. பிரபஞ்ச தளத்தில் ருத்ரன் ஆற்றுவதை தனியரில் அவ்யாக்ருதன் (அனைத்து உருக்களையும் அழிப்பவன்) செய்கிறான். அழிவின் ஆபத்து எதுவும் இதில் இல்லை. அனைத்து விவரங்களும் மறைக்கப்படுகின்றன, அவ்வளவே. இந்தச் செயல் நிக்ரஹம் (புரிந்துகொள்ளமுடியாமல் செய்வது) எனப்படுகிறது.

பல்வகைப்பட்ட இத்தகைய செயல்பாடுகள், பிரபஞ்ச தளத்திலானாலும், அகத் தளத்திலானலும், மீகட்டுப்பாட்டாளர் ஒருவர் இல்லையென்றால் இத்துணை கச்சிதமாகவும் ஒழுங்காகவும் நடைபெற முடியாது. அந்தக் கட்டுப்பாட்டாளர்தான் ஈஶ்வரன். அண்டத்திலும் பிண்டத்திலும் கணிதமாக, விதியாக, சமரசமற்ற செயல்பாடாக இருப்பது ஈஶ்வரன். இந்த ஈஶ்வரனே, நனவை நோக்கிநிற்கும், தலைவனென ஒளிரும், கட்டுப்பாடு ஏதுமற்ற மீஒளி. அவனே ஜீவேஶ்வரன் (தனியரின் இறை), அவனே பரமேஶ்வரன் (அனைத்தின் மீ இறை). இவர்களின் கட்டளைப்படியே பிரம்மனும், விஷ்ணுவும் ருத்ரனும் தங்கள் ஆடல்களை மேற்கொள்கின்றனர்; தேவை ஏற்படுகையில் நிறுத்திக்கொள்கின்றனர். ஈஶ்வரன் ‘திரோதான’னாக (திரை எப்போது விழவேண்டும் எப்போது விலக்கப்படவேண்டும் என நிர்ணயிப்பவன்) செயல்படுகிறான். 

ஆடல் முழுமையும் மாற்றமில்லாததன் உள்ளே நிகழ்கிறது. அதற்கு காலமோ, இடமோ, பருண்மையோ, அசைவோ, பெயரோ, வடிவமோ, காரணமோ விளைவோ எதுவும் இல்லை. இந்த மாற்றமில்லாதது என்பது தூய, எளிய கடந்தநிலை. தனியரின் நனவு, உருமாற்றத்தின் முதல் மூன்று நிலைகளை புலனுணர்வு மூலமாக, கற்பனை மூலமாக, பகுத்தறிதல் மூலமாக அறிவதற்கு அனுமதிக்கப்படுகிறது. திரோதானனும், கடந்தநிலையும் மீநனவின் வழியே அகத்தில் உணர்வதன் மூலம் அறியப்படுகின்றன.  பட்டறிவுசார்ந்தவை அனுபவம் எனப்படுகின்றன, அகவய அடையாளம் அனுபூதி எனப்படுகிறது. கடந்தநிலையிலான அகவய இருப்பையும், உள்ளார்ந்த கடந்தநிலையையும் ஒன்றாக இணைந்த முற்றொருமையாக முன்வைப்பதே சௌந்தர்யலஹரியின் பேரமைப்பு நிரல். (The grand scheme of Saundaryalahari is to present transcendental immanence and immanent transcendence as a unitive single whole). இருபத்திநான்கு மணிநேர காலவெளியில் தனியரின் நனவில் நிகழ்வனவற்றிலும், பிரபஞ்சத்தின் படைப்பு-அழித்தல் என்ற எண்ணற்ற சுழற்சிகளிலும், பிரிக்கமுடியாத வண்ணம் கடந்தநிலையுடன் இணைந்த அகவய நிரலமைப்பாளர் (immanent programmer)  ஒருவர் உள்ளார். அது இப்பாடலில், அன்னையின் துடிக்கும் புருவங்கள் வழியே கொடுக்கப்படும் கால சமிக்ஞையாக உருவகிக்கப்படுகிறது. முந்தைய பாடலில் அவள் இறையில் நிறையும் ஒண்சிவப்பு ஒளியாக வர்ணிக்கப்பட்டாள். ‘ந’ பிரம்மனையும், ‘ம:’ விஷ்ணுவையும், ‘ஶி’ ருத்னையும், ‘வா’ ஈஶ்வரனையும், ‘ய’ சதாசிவனையும் குறித்து நிற்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்றாக இணைக்கையில், நம:ஶிவாய எனும் அன்னை தோன்றுகிறாள். இம்மந்திரங்கள் அனைத்தும் கட்டங்களால் ஆன  ஆட்டப்பலகை போன்ற யந்திரத்தில் தியானிக்கப்படுகின்றன 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s