சம் ச*ம் ஜம் ஜ*ம் ஞம் அனங்கமேக*லா வஹ்னிவாஸினீ பே*ருண்டீ
அன்னையே, உன் இறையின் எரிஆடலில் மகிழ்பவளே, அவன் தன் மேனியில் பூசிக்கொள்ளும் திருநீறு உன் படைப்பு ரகசியத்தின் மூன்று கட்டங்களைக் குறிக்கும் முக்குணங்களின் குறியீடாகத் திகழ்கிறது. சத்வ குணம் கொண்டு அனைத்து வடிவங்களுக்கும் போற்றத்தக்க உருவரை (adorable design) ஒன்றை அளிக்கிறாய். அதோடு, வண்ணம், சுவை, வடிவ அமைப்பியல்சார்ந்த நுணுக்கம் என்பனவற்றையும் கொடுப்பதால், அவற்றிற்கு இருத்தலியல் உறுதிப்பாடு (existential validity) கிடைக்கிறது. ரஜோ குணம் கொண்டு செயல்படக்கூடிய இயக்காற்றலை படைக்கிறாய். அது தனித்தன்மை வாய்ந்த இயங்குமுறைகளை அளிக்கிறது. அதனால், ஓரெல்லை வரை, படைக்கப்பட்டவை ஒவ்வொன்றும் உலக ஒழுங்கமைவில் தமக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை நிரப்ப இன்றியமையாதவையாகவும் தவிர்க்கமுடியாதவையுமாகின்றன. ஒன்றன் முரண்கூட, அது வெளித்தெரிவதாக இருந்தாலும், மூடித்திரையிடப்பட்டதாக இருந்தாலும், ஒருவரை அல்லது ஒரு பொருளை நேர்மறை அல்லது எதிர்மறை மதிப்புகொண்டதாக ஆக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமோ குணம் என்பது இணைவுக்கு நீ கையாளும் ஆற்றல்மிகு கருவி.
அழித்தல் தொழிலை ஆற்றும் இறையின் உடல்மீது பூசப்பட்ட நீற்றின் பின்னால் கனலும் கரி என நீ மறைந்திருக்கிறாய். சாம்பல் தணலை மட்டுமே மூடியிருக்கிறது. இறைவனின் எரிக்கும் சுழற்சி தவிர்க்கமுடியாத நிலைத்தன்மை கொண்டது. படைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் விழுங்குவதற்கென வாய்பிளந்து காத்திருக்கும் மரணத்தை முன்னறிவதில் தேர்ந்தவள் நீ. அன்றாட உறக்கம் போலவே, ஒரு குறிப்பிட்ட வாழ்வுக்காலம் முடிந்ததும் மரணம் வருகிறது. மரணமும், ஊழிக்காலத்தில் அண்டம் முழுமையாக மூழ்குவதும் எல்லாம் இறையின் தலைமையில் நடைபெறுகின்றன. நீயோ, ஒரு மாயாவியைப் போல, நனவிலியில் இருந்து நனவையும் மரணத்திற்குப் பின் வாழ்வையும் அழிவுக்குப் பிறகு அண்டத்தையும் மீட்டெடுக்கிறாய். இப்படியாக, உன் படைப்புத் தொழிலானது தன்னை அழித்தலுக்கு எளிதில் கையளித்துவிடக் கூடிய குறுகியகால ஆடலாக இருக்கிறது. உன் மணாளனின் அழித்தல் தொழிலில் அவனுக்குதவ நீ தயங்குவதே இல்லை.
ஊர்வன, நடப்பன, ஓடுவன, ஆழ்நீரில் நீந்துவன, வானத்தில் பறப்பன போன்ற உயிரினங்களையும், கிருமியில் தொடங்கி தத்துவவாதி வரை ஒவ்வொன்றிலும் காணக்கூடிய வேறுபாடுகளையும் பார்க்கும்போது, உயிரிகளை வரிசைப்படுத்துவதில் ஒரு முறைவகுப்பை நீ வைத்திருக்கிறாய் என்பதை ஊகிக்க முடிகிறது. ஒவ்வொன்றும் ஒருவித முழுமை கொண்டிருக்கிறது. அண்மையில் தோன்றிய ஒன்று, உனது ஆடலின் சுழற்சியில், நான்கைந்து பிறப்புகள் தாண்டி முழுமை பெறக்கூடும். எளியதான நுண்ணிய ஓரணுவுயிரில் (protozoa) தொடங்கி மிகவும் சிக்கலான மானுடர் வரை வெவ்வேறுவகை உடல்களை நீ அளிக்கிறாய். அவை எல்லாமே அடுத்த கட்டத்தில் உடலிலா நிலைக்கு தள்ளப்படுகின்றன. உயிர்கொண்ட உடலில் அக ஒத்திசைவுகளைப் பொருத்தி விரிவாக்கும் நீ இருபத்திநான்கு மணித்துளிகளுக்குள் பெரும்பாலான உடலுறுப்புகளின் வெளிப்படையான இயக்கத்தை நிறுத்திவைக்கிறாய். அப்போது இயங்கும் சில உறுப்புகள் உன் தனிக்கவனம் பெற்று தன்னிச்சையாக இயங்குவதுபோல் இயங்குகின்றன. எனவே, நீ உடலிலி நிலையை கையாள்பவள் (அனங்கமேகலா) என ஊகிப்பது சரியே.
நீ எமக்களிக்கும் வாழ்வு எரியும் மெழுகுவர்த்தியைப் போன்றது. ஒவ்வொரு கணமும் வாழ்தல், ஒவ்வொரு கணமும் இறத்தலும் கூட. எரிந்துபோகும் எம் ஒவ்வொருவரிலும் எரியும் தீயென இருப்பவளான நீ, வஹ்னிவாஸினீ என்று அழைக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை. விறகில் தண்ணென ஒளிந்திருக்கும் வேள்வித்தீ, இரு மரத்துண்டுகளின் உரசலில் ஒரு பொறியென வெளித்தோன்றுவது போல காதலர் தூண்டப்படுகையில் அவர்களின் உடலிலிருந்து நீ வெளிப்படுகிறாய். காதலெனும் ஒரு பொறியிலிருந்து பல்லாயிரம் தேவைகளும், எண்ணற்ற பொறுப்புகளும் நிரம்பிய குடும்பவாழ்க்கை எனும் பெருந்தீ எழுகிறது. உலகின் சாரத்தை உறிஞ்சி எடுக்கும் தீயின் ஏழு நாவுகள் போல நீ எம் நாவுகளில் மகிழ்ச்சிக்கான பசியை தூண்டுகிறாய். அன்னைப் பறவை தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது போல எரியும் உனது தீக்கொழுந்துகள் வழியாக உயிரினங்களாகிய நாங்கள் உலகை மகிழ்வின் ஊற்றுமுகமாகக் காண்கிறோம்.
உன்னை இறைவனின் இடதுபாகமாக வர்ணிப்பது, சொற்பொருள் அமைப்பில் உனக்கு ஒரு குறியீட்டு இடத்தை அளிப்பதற்காக கவிகள் பயன்படுத்தும் உருவகம் மட்டுமே. உண்மையில் இடது வலது என்ற வரையறைகளுக்குள் உன்னை அடக்க முடியாது. நெருப்பிலிடப்படும் இரும்பு உருளை ஓரு பகுதி சிவந்தும் இன்னொரு பகுதி குளிர்ந்தும் இருப்பதில்லை. அதற்கும் மேலாக, சிவனின் முழுமையையும் நீ மேவியிருக்கிறாய். சிவனின் வெறிகொண்ட பிரபஞ்ச நடனத்திற்கு வழிவிட்டு உன் இடத்திலிருந்து நீ அகலவேண்டி வருகையில், அடிவைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை நீ நன்கறிவாய். படைப்பாளினியாக ரஜோ குணத்தின் செம்மையில் நீ மகிழ்கிறாய். புற உலகு வண்ணம் எதுவும் கொண்டதா என்பதையே நாங்கள் அறிவதில்லை. ஆனாலும், வண்ணங்களை விரும்புபவர்களாக, அனைத்திற்கும் எம் மனப்பாங்குக்கேற்ற வண்ணம் பூசுபவர்களாக எம்மை படைத்திருக்கிறாய்.
சுவைகளில் இனிப்பை நாங்கள் அதிகம் விரும்புவது போலவே, நிறங்களிலும் ஒண்சிவப்பை மிகவும் விரும்புகிறோம். உனக்கு மிக விருப்பமான வண்ணமாக அது கருதப்படுகிறது. சூரியன் எழுகையிலும் மறைகையிலும் அவனை அந்த வண்ணமாகவே மாற்றிவிடுகிறாய். அதோடு, வானம், முகில்கள், மலைகள், பொய்கைகள், பனிமலைச் சிகரங்கள் என அனைத்தையும் அவ்வண்ணத்தால் நிரப்பிவிடுகிறாய். நீர்ச்சாய ஓவியம் வரைவதில் தன் திறன் குறித்து மகிழும் ஓவியனைப் போலிருக்கிறாய் நீ. மீண்டும் மீண்டும் வண்ணங்களை எல்லாம் செந்நிறத்தோடு கலக்கிறாய். அல்லது அனைத்தையும் தெளிவழியச் செய்யும் இருளில் மூழ்கடிக்கிறாய். நீ விரும்பும்போது ‘அருணா’வாக, சிவந்தவளாக இருக்கிறாய். உன் தேர்வு கறுப்பாக இருந்தால் நீ ‘காளி’யாகிறாய்.
சிவன் பைரவனாக – அழித்தல் தொழிலாற்றும் ஆடல் இறைவனாக – ஆனபோது நீ பேருண்டியாக – ஊழித் தீயை ஊட்டுபவளாக – ஆனாய். எல்லாவற்றையும் சாம்பலாக்குவதற்கு அவன் தன் நெற்றிக்கண்ணை திறக்கவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், நீயும் அவனது மூன்றாவது கண்ணை கொண்டிருக்கிறாய். அதைக்கொண்டு உன்னால் சாம்பலை அவனுக்கு கடத்த முடியும். நீ உடலற்ற நிலையிலிருந்து (அனங்கமேகலா) எரியும் தீயாக (வஹ்னிவாஸினீ) மாறும்போது உன் முடியில் திகழும் பிறைநிலவானது, முற்றிய உயிரினங்களை எல்லாம் அரிந்து மரணமெனும் தீயில் எறியும் குறுங்கைக் கொடுவாளெனத் தோன்றுகிறது.
குழந்தை தன் பொம்மையை அணைத்துக் கொள்கிறது, சுமந்தலைகிறது, அன்னையைப் போல உறங்கச் செய்கிறது. ஆனால் பசி வந்ததும், பொம்மையை மறந்து தன் தாயைத் தேடி ஓடுகிறது. இளையோர், தம்மில் காமம் எழுகையில் துணையை தேடிச் சென்று இன்பத்தில் திளைக்கின்றனர். மயக்கம் விலகி முதிர்ச்சி ஏற்படுகையில் காதல் களியாட்டத்திலிருந்து ஆழ்ந்த மெய்த்தேடல் நோக்கி செல்கின்றனர். அவர்களில் திகழ்ந்த காதலெல்லாம் வருந்தத்தக்க அல்லது நகையாடக் கூடிய ஒரு சோக நினைவாக எஞ்சுகிறது. முதுமை அடைந்து புலன்நாட்டங்கள் குறைந்து, சமூகத்தில் பாதுகாப்பு குறித்த கவலையெல்லாம் ஒழியும்போது ஒருவர் போற்றும் ஒரே பேரின்பம் சிவன் மட்டுமே. சிவானந்தம் அல்லது சிவசாயுஜ்யம் என்ற எல்லையற்றதுடன் முழுதொன்றல் மட்டுமே.
எனவே, ஒருவரது குழந்தைப்பருவத்திலும் இளமையிலும் போற்றப்பட வேண்டியவள் நீ. முதுமையிலும் மரணத்தறுவாயிலும் அதை செய்வது இன்னும் சிறப்பு. ஒவ்வொரு பிறவிக் காலத்திலும் இதை நீ எமக்குக் கற்பிக்கிறாய். ஒரு இடைவெளிக்குப் பிறகு சிறந்த ஞானத்தோடும், முற்பிறவியில் பெற்ற முதிர்ச்சியின் சாரத்தோடும் எம்மை நீ புதுப்பிக்கிறாய். உனக்கு என் வணக்கங்கள்.
|| சம் ச*ம் ஜம் ஜ*ம் ஞம் அனங்கமேகலா வஹ்னிவாஸினீ பேருண்டீ ||