த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த*ம் ஶம்போ*ரபரமபி ஶங்கே ஹ்ருதமபூ*த்
யதேதத் தவத்ரூபம் ஸகலமருணாப*ம் த்ரிநயனம்
குசாப்*யாமானம்ரம் குடிலஶஶிசூடாலமகுடம்
பாடல் – 23
அன்னையே
சிவனின் இடபாகத்தை கைக்கொண்டும் நிறைவடையாமல்
அவனது இன்னொரு பாகத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டாய் போலும்
அதனால்தான்
முக்கண்களும், முலைகளின் கனத்தால் சற்றே முன்சரிந்த உடலும்,
பிறைநிலவு சூடிய குழலும் கொண்ட உனதுருவம்
ஒண்சிவப்பாய் ஒளிர்கிறது போலும்
**
முழுமுதலும் முக்குணங்களும் இசைவோடு இணைதலே யோகம் எனப்படுவது. ப்ராணாயாமத்தில், ப்ராணனும் அபானனும் ஒன்றாகி வியானன், சமானன் என முழு அமைப்பையும் உயிர்ப்புறச் செய்கின்றன. யோகிக்கு, இடாவும் பிங்கலையும் ஸுஷும்னத்தில் இணைவதும் இதில் அடங்கும். ஆண்-பெண் முரணியக்கத்தில் யோகம் என்பது அனைத்து எதிரெதிர் முரண்களையும் களைந்து ஒன்று மற்றொன்றை முழுமை செய்வதும், ஈடுகட்டுவதுமாகும். அவ்வகை இணைவின் மிகச்சிறந்த மாதிரியை நாம் அர்த்தநாரீஶ்வரனில் காண்கிறோம். வேதாந்தத்தில், செம்பருத்திப் பூவொன்றின் மீது வைக்கப்பட்ட ஒரு படிகக்கல் இந்த இசைவான இணைவுக்கு எடுத்துக்காட்டாக தரப்படுகிறது. இரண்டும் தமக்கென வெவ்வேறு உடல்களைக் கொண்டிருந்தாலும் படிகம் முழுதும் சிவந்ததாகத் தெரிகிறது. இதனால் படிகத்திற்கு எந்தத் தீங்கும் நிகழ்வதில்லை. படிகத்தையோ பூவையோ அழித்தும் இது எய்தப்படுவதில்லை. ஒரு ஒத்திசைவின் மூலம் இந்த இணைவு நிகழ்கிறது.
யோகத்தின் குறிக்கோள் இருமடிப்பு கொண்டது. ஒன்று பன்மையிலிருந்து ஒருமைக்கு அல்லது இணைவின் தனிமைக்கு (கைவல்யம்) செல்வது. மற்றொன்று உலக நன்மையை எய்துவது (லோகசங்கிரஹம்). சிவனும் சக்தியும் இரு ஆட்களல்ல. அண்டத்தின் நேர்மறை-எதிர்மறையான ஆதி காரணத்தின் (plus and minus of the primeval cause) குறியீடாக சிவனும், உலகு புரக்கும் ஊற்றுமுகத்தின் குறியீடாக சக்தியும் இருக்கின்றனர். தனிமைக்குள் நுழைய முயலும் யோகியர் சிவ தத்துவத்திற்கு முதன்மை அளிக்கின்றனர். உலக நன்மையை விழைவோர் அன்னையோடு தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். சிவனும் சக்தியும் புறக்காரணிகள் அல்ல. அவர்கள், இதயத்தில் மாறிமாறி நிகழும் சுருங்கியக்கம் விரிவியக்கம் போல. ஒன்றையொன்று முழுமை செய்யும் இரு எதிரிணைகள் இணைவதன் மூலமே வாழ்வு என்பது தொடர்கிறது. ஶ்ரீசக்ர வழிபாடு குறித்த முந்தைய பாடலின் மூலம் சிவ-சக்தி இணைவின், ஆன்ம-இயற்கை யோகத்தின் செயல்பாடுகள் குறித்த பல விவரங்களை அறிந்துகொண்டோம். ஒரு மெழுகுவர்த்தி எரிவதை எடுத்துக்கொண்டால், எரிவது நெருப்பு. அது நிகழ்வற்கு எரிபொருளாக மெழுகோ அல்லது கொழுப்போ தேவை. நின்று எரிய ஒரு திரியும் தேவை. இதில் கொழுப்பே கொழுந்தென மாறுகிறது. இந்த இயற்பியல் காரணிகள் அனைத்துமே நெருப்பின் வடிவங்கள்தான். நெருப்பே மையமாக இருந்தாலும், மெழுகுவர்த்தி எரிவதாகவே தோன்றுகிறது. நம்மில் சிவனும் சக்தியும் இணைவதும் அதுபோன்றதே. அதனால்தான், முதற்பாடலில் சக்தியோடு இணையாத வரை சிவனால் இயங்க முடியாது என்று சொல்லப்பட்டது.
சிவனோடும் சக்தியோடும் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொள்ளும் யோகி, இப்பாடலில் வர்ணிக்கப்படும் அன்னையின் பண்புகளை பெறுகிறார். உடல்-ஆன்மா என்ற இருமை களையப்படுகிறது. ஆன்மாவின் தூய பேரானந்தத்தை உடல் பெறுகிறது. இங்கு உடலென சொல்லப்படுவது அண்டமென விரிந்த பிண்டத்தை. இதுவே அனைத்து மதங்களின் கொள்கையாக இருக்கிறது. இதயபூர்வமாக, உளப்பூர்வமாக, முழுத்திறனும் கொண்டு இறையை காதலிப்பது, அண்டை அயலாரையும் தன்னைப் போலவே நேசிக்கும்போதுதான் நிகழக்கூடியது. மனிதரிடையே சகோதரத்துவம் என்பது இறையின் தந்தைமையிலிருந்து தோன்றுவது. ஈஶோபநிடதம், அனைவருக்குமான கருணை என்பது இந்த இருமையற்ற ஆன்மாவை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுகிறது. பேரன்னையானவள் சிவனின் மெய்மையை முழுதாக ஈர்த்துக்கொள்வதைப் போன்றதே ஒரு யோகி தன் அகத்தை அனைத்திலும், அனைத்தையும் தன் அகத்திலும் பார்ப்பது. உடலில் உள்ள விழிகள் இரண்டும் தனி உடல்களை கண்டு அறிவதற்கானவை. மூன்றாவது விழியோ ஒளியூட்டவும் பார்ப்பதற்கும் என இருப்பது. இந்த மூன்றாவது விழியே, ஆன்மாவிற்கும், அதுதோன்றும் இயற்கைக்கும் இடையே எந்தப் பிரிவினையும் இல்லை என்பதை தெளிவாகக் காட்டுவது. தோன்றாத ஒளி புலப்படுவதில்லை. தோன்றிய ஒளியோ அனைத்து வண்ணங்களையும் எடுத்துக்கொள்கிறது. அன்னையின் ஒண்சிவப்பு, சக்தியோடு அடையாளப்படுத்திக் கொள்ள சிவ தத்துவத்திற்கு ஏற்றப்படும் வண்ணத்தை குறிப்பது. தாயின் இரு முலைகள் உலகு புரக்கப்படுவதை குறிப்பன. சீன மாயாவாதமான (மஹாயான பௌத்தம்) க்வான் யின் – னில், புத்தனின் கருணை, குழந்தையொன்றை தன் மடியில் அன்போடு அணைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் வழியே காட்டப்படுகிறது. ஶ்ரீசக்ர வழிபாட்டில் ஒரு யோகி எதிர்கொள்ளும் சோதனைகள் எல்லாம் அவரை, தான் சார்ந்த உலகின் மீது பரிவுகாட்டும் மென்மையான, கருணை நிரம்பிய, சுயநலமற்ற அன்னையைப் போல் ஆக்குகின்றன.
இப்பாடலின் மீதான தியானத்திற்கென, ‘ஸ்ரம்’ எனும் மந்திரம் ஒரு வட்டத்திற்குள் அமைந்த தாமரையில் வைக்கப்பட்டிருக்கிறது.