சௌந்தர்யலஹரீ – 22

ப*வானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சன் கத*யதி ப*வானி த்வமிதி ய:

தைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜஸாயுஜ்யபவீம்

முகுந்தப்ரஹ்மேந்த்ரஸ்பு*டமகுடநீராஜிதபதாம்

பாடல் – 22

பவானீ, 

இந்த அடிமைக்கு அருட்பார்வை ஒன்றை அருள்வாயாக!

அரி அரன் அயன் மூவரும் 

தீபம் கொண்டு உன்னை ஆராதித்து

உனக்கு தலைவணங்கும்போது 

அவர்களது மகுடத்தின் ஒளி

உன் பாதங்களை ஒளிரச் செய்கிறது. 

உன்னை போற்ற விழைவோர் 

‘தேவி, நீ’ என்று சொல்லத் தொடங்கிய உடன்

அவர்கள் உன்னோடு ஒன்றெனக் கலந்துவிடும் 

பெறும் பேற்றை அவர்களுக்கு அருள்கிறாய்

**

நீரிலிருந்து எழும் அலைபோல,  நாமும் எல்லையிலாப் பெருவெளியிலிருந்து எழுந்து தனியர் எனும் ஒரு வேடத்தை சூடிக்கொள்கிறோம். அதன் உச்சத்தை அடைந்த அலை, அடங்கி மீண்டும் நீருடன் கலக்கிறது. எந்த நிலையிலும் அலை நீரிலிருந்து பிரிவதில்லை. என்றபோதும் அதற்கென ஒரு தனி ஆளுமை இருப்பதுபோல் தோன்றுகிறது. அது தனியொரு அலகென இயங்கினாலும் ஒருபோதும் நீர்ப்பரப்பை விட்டு வெளியேறுவதில்லை. அலையால் ஒருபோதும் ஆழியின் எல்லைகளை தாண்டிவிடவும் முடியாது. நீர்ப்பரப்பும் அலையும் ஒன்றே என்றபோதும், ‘நான் அலை’ என்ற நனவை அடைகையில், கணநேரம் உண்மை மறக்கப்படுகிறது. ‘நீ முழுக்க முழுக்க நீர் மட்டுமே’ என்று எவராவது எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. ‘தத்வமஸி’ (அது நீயே) என்ற அரிய உபநிடத வாக்கியத்தின் சாரம் இதுவே. தியானிப்பவர், முழுமையோடு முற்றாக இணைவது எங்ஙனம் என்பதை இப்பாடல் கற்பிக்கிறது. எதையும் முழுமைக்கு வெளியே விட்டுவிடாமல் முற்றாக தன்னை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ள வழிகாட்டுகிறது. 

தியானம் உள்ளிட்ட அனைத்துச் செயல்களும் ஒரு குறிக்கோள் கொண்டவை. திட்டமிட்ட போர்த்தாக்குதல் போலவே ஒரு குறிக்கோளை தொலைவில் நிறுத்தி, அதை அடைவதற்கான பாதையை தேர்ந்தெடுத்து அத்திசையில் செல்ல வேண்டும். படையெழுகை தொடங்குவதற்கு முன் களம் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது. தொடர்ச்சியான கட்டளைகள் எதிர்பார்க்கப்பட்டு அளிக்கப்படுகின்றன. நமது எண்ணங்கள் இசைவாக அடுக்கப்பட்டு, அதன்பின் வினை தொடங்குகிறது. நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நீங்கள் இருக்க விரும்பும் இடத்திற்குச் செல்லும் பாதையில் உங்களை கணம் கணமென இட்டுச்செல்வதற்கென அளிக்கப்படும் சொற்கட்டளையே மந்திரம் எனப்படுகிறது. அதுவே மனதை எப்போதும் ஆக்ரமித்திருக்க வேண்டும். ஒரு தானியங்கி வாகனத்தை ஓட்டுனர் ஒருவர் செலுத்துவதுபோல, தொடர்ச்சியான சடங்குகள் வழியே மந்திரம் மெய்ப்படுகிறது. இயந்திரத்தின் இயக்கம் குறித்த அவரது ஒவ்வொரு எண்ணமும் அக்கணமே மெய்ப்படுகிறது. சொல்லுக்கும் இயந்திரத்திற்கும் இடையே உள்ளார்ந்த ஒரு தொடர்பு இருக்கிறது. இயந்திரமே யந்திரம். மந்திரம் ஆணை வழங்க, யந்திரம் அதை செயல்படுத்துகிறது. குறுகியகால சாதனைக்கோ நீண்டகால சாதனைக்கோ அவை இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. மொத்த நிகழ்வும் ஒரு தந்திரம் எனப்படுகிறது.

முடிவிலியிலிருந்து தோன்றிய ஒருவரது நீண்டகால சாதனை என்பது மீண்டும் அந்த முடிவிலியில்  அவர் இணைவதற்கானது. ஆக, ஒருவரது மொத்த வாழ்வுக்கான சாதனை என்பது ஒரு தந்திரம், அவரது அகமும் உடலும் அடங்கியது ஒரு யந்திரம், அவருடைய கல்வி ஒரு மந்திரம். நல்ல வேலையாள் தன் கருவிகளை நன்கறிந்தவராக இருக்க வேண்டும். இங்கு, கருவியும் அதை இயக்குபவரும் வேறுவேறல்ல. அது தன்னைத் தானே ஆள்வது, தானே வகுத்துக்கொண்ட நிரலைக் கொண்டது. என்றாலும், அகமும் உடலும் கொண்ட அக்கருவியில் ஆன்மாவால் உயிர்ப்புகொள்ளச் செய்யப்படும், ஒளிர்வூட்டப்படும் ஒரு பருண்மை உள்ளது. இந்த இரண்டு கூறுகளும் எதிரெதிர் திசைகளிலிருந்து வருபவை. இதில் எந்தப் பகுதியையும் முழுமையாக உடல்சார்ந்ததாகவோ அல்லது முழுமையாக ஆன்மா சார்ந்ததாகவோ கருதிவிடமுடியாதபடி அவை ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை.

ஒரு பிரபஞ்ச அமைப்புக்குள் ஒருவர் செயல்படும் விதம், மொழிவழிப் புரிதலுக்காக ஒரு ஶ்ரீசக்ர வடிவில் விளக்கப்படுகிறது. மொத்தச் செயல்பாடும், நான்கு பக்கங்களிலும் ஒவ்வொரு நுழைவாயில் அல்லது வெளியேற்ற வழி கொண்ட ஒரு சதுரத்திற்குள் அடைக்கப்படுகிறது. அச்சதுரத்திற்குள் மூன்று வட்டங்கள் அமைந்திருக்கின்றன. உள் வட்டத்தில் ஐந்து முக்கோணங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றை ஊடுருவிச் செல்லும் வகையில் மேலும் நான்கு முக்கோணங்கள் எதிர்ப்புறத்திலிருந்து வரையப்பட்டுள்ளன. நடுவில் உள்ள முக்கோணத்தில் ஒரு மையப் புள்ளி குறிக்கப்பட்டுள்ளது. அது பிந்து எனப்படுவது. முதல் ஐந்து முக்கோணங்கள், நிலம், நீர், தீ, வளி, வெளி (ஆகாசம்) என்ற ஐந்து மூலக்கூறுகளை குறிப்பவை. இம்முக்கோணங்கள் சக்திதத்துவங்கள். அவற்றோடு பின்னிப்பிணைந்த நான்கு முக்கோணங்கள் மீஆன்மாவையும், நோக்கிநிற்கும் நனவையும், சொல்லறிவையும், இயல்தோற்றக் கொள்கையையும் குறிப்பவை. அவை சிவதத்துவங்கள் எனப்படுவன. இவ்வனைத்து மூலக்கூறுகளையும் அண்டம்-பிண்டம் என்ற இரண்டின் ஆக்கக் கூறுகளாக (constituents of macrocosm and microcosm) புரிந்துகொள்ள வேண்டும். இவ்விரண்டு பிரபஞ்சங்களும் விரிவது ஒரு பூ மலர்வது போல. ஶ்ரீவித்யா என்ற அமைப்பில், ஒன்றனுள் ஒன்றாக வைக்கப்பட்ட, முழுதும் மலர்ந்த இரண்டு தாமரை மலர்கள் குறிக்கப்படுகின்றன.

தொடக்கநிலையில் உள்ள யோகசாதகருக்கு அவரது தியானத்தில் அவரை வழிநடத்த பருவடிவ வரைபடம் தேவைப்பட்டாலும், தேர்ந்த நிலையில் அவர் தன்னைத் தானே யந்திரமாகக் கருதவேண்டும். பேரெந்திரமான அண்டத்தின் ஒரு உறுப்பென இயங்கவேண்டும். அண்டம் எனும் இயந்திரத்தோடு இயைந்தபிறகு, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் யந்திரத்தின் வடிவமைப்பையும் இயக்கத்தையும் அவர் நன்கு அறிகிறார். அவர் முதலில் கவனிப்பது, மொத்த யந்திரமும் காந்தப்புலத்திற்குள் வைக்கப்பட்டிருப்பதைத்தான். களத்தில் குழப்படி ஏதும் இல்லை. எல்லாம் ஒரு ஒழுங்கில் அமைந்துள்ளன. படைப்பு நோக்கம் தடையின்றி நிறைவேறும் வகையில் ஆக்கக் கூறுகள் ஒன்றோடொன்று இணையும்படி, பொருட்கள் ஒன்றால் ஒன்று கவரப்படுவதை விரும்புகின்ற, நோக்கிநிற்கும் அறிவாற்றல் ஒன்று உள்ளது போல் தோன்றுகிறது. இந்த அடிப்படைப் புரிதலே முதல் தெய்வீக அடிவைப்பாக இருக்கிறது. ‘ஶ்ரீவித்யா’வில் இது காமாகர்ஷிணீ எனப்படுகிறது. காமம் என்பது விழைவு, ஆகர்ஷணம் என்பது கவர்ச்சி. விரும்பத்தக்க கவர்ச்சி என்பது கவித்துவமாக பெண்பாலாக கருதப்படுகிறது. பேரன்னையின் ஒரு செயல்பாடாக கொள்ளப்படுகிறது.

எலெக்ட்ரான், ப்ரோடான், நியூட்ரான் என்பவற்றிற்கிடையே உள்ள இந்தப் பரஸ்பரக் கவர்ச்சியால் அவை ஒன்றோடு ஒன்று இணையும்போது ஒரு அணு உருவாகிறது. அணுக்கள் ஒன்றுசேர்ந்து அணுத்திரண்மம் உண்டாகிறது. அணுத்திரண்மங்கள் சேர்ந்து உடல் உருப்பெருகிறது. அத்திசை நோக்கி திரும்பும் யோகசாதகர், உடல் உருக்கொள்வதில் உள்ள தெய்வீகத் தன்மையை உணர்கிறார். அதை ஏற்படுத்துவது பேரன்னை என்பதைக் கண்டு அவளை ஶரீராகர்ஷிணியாக வழிபடுகிறார். உடல்கள் நிலையற்றவையாகத் தெரிந்தாலும், முடிவிலா ஒரு நிரலை சுமப்பவை அவை. எதுவும் ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. உருமாறிக்கொண்டே இருந்தாலும் பொருளின் ஆற்றல் பாதுகாக்கப்படுகிறது. அழிவதில் அழிவற்றதைக் காண்பதும், நிலையற்றதில் நிலையானதை கண்டுகொள்வதுமே தியானத்தின் அடுத்த அடிவைப்பு. இங்கே பேரன்னையானவள் அம்ருதாகர்ஷிணி என வழிபடப்படுகிறாள்.

எதுவும் தனியாக துண்டிக்கப்பட்டதாக இருப்பதில்லை.  உலகு என்பது தனிப்பட்ட துகள்களின் ஒட்டுமொத்தம் அல்ல. அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் பிரபஞ்ச ஆன்மா ஒன்று அதற்கு உண்டு. அடுத்த தியானத்திற்கான பொருள் இது. இங்கே முழுமுதல் ஆத்மாகர்ஷிணியாக போற்றப்படுகிறது. (ஆத்மா என்பது ஒருவரின் உள்ளே உறையும் பிரபஞ்ச அகம்). விரிவாக்கமும் சுருக்கமும் நிகழும் ஒரு செயல்பாடு வழியாக படைப்பு தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு மரத்தின் சாரம் ஒரு விதைக்குள் அடக்கிவைக்கப்பட்டு அவ்விதை மலர்ந்து மீண்டும் ஒரு மரமாவதன் மூலம் அந்த மர இனம் அழியாமல் காக்கப்படுகிறது.  இவ்வாறு ஒவ்வொரு கூறையும் விதை நிலைக்கு சுருக்குவதே தியானத்தின் அடுத்த நிலை. இதுவும் முழுமுதலின் ஒரு கூறாக பார்க்கப்படுகிறது. பீஜாகர்ஷிணீ என போற்றப்படுகிறது. எல்லா உறுப்புகளையும் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் அளிக்கப்படுகிறது. மொத்த அறிவுலகும் கருத்தாக்கங்களால் நெய்யப்பட்டிருக்கிறது. பெயர்களால் நிரம்பிய பெரும் நூலகத்திலிருந்து வடிவான மொழிகள் உண்டாகின்றன. இது நம்மை தியானத்தின் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்கிறது. இப்போது பேரன்னை நாமாகர்ஷிணீ என வழிபடப்படுகிறாள்.

சரியான நேரத்தில் நினைவிலெழாத பெயர் பயனற்றது. நினைவே மனிதகுலத்தை மற்ற விலங்குகளிலிருந்து மேம்பட்டதாக ஆக்குகிறது. என்றாலும் நினைவு எங்கு உறைகிறது என்பது எவருக்கும் தெரிவதில்லை. அதை எழுப்புவதற்கென வழியேதும் இல்லை. ஏதோ ஒரு தெய்வீகக் கரம் அனைத்து அனுபவப் பதிவுகளையும் மறைத்துவைப்பது போல் தோன்றுகிறது. அதே கரம் மிகச் சரியான தருணத்தில் சடுதியில் அவற்றை மீட்டெடுக்கவும் செய்கிறது. இந்தக் கூறை தியானிக்க, இறை ஸ்ம்ருத்யாகர்ஷிணீ என வணங்கப்படுகிறது. நினைவை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றால் தளராத அறிவாற்றல் இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க முடியாதவர்கள் மந்தமானவர்கள்.  ஒருவர் தன் புத்தியை தீட்டி வைத்துக்கொள்ள வேண்டும்; அகவய விழிப்புடன், உயிர்ப்புடன் இருக்க வேண்டும். இதை செயல்படுத்தும் அன்னை தைர்யாகர்ஷிணீ என வணங்கப்படுகிறாள். (தைர்யம் என்பது ஒளிர்வையும் தளராத அறிவாற்றலையும் குறிப்பது).

அகவயமான தெளிவும், சீரமைக்கப்பட்ட நினைவுப் பின்னலும் இல்லாமல் அறிவு இசைவுடன் செயல்படமுடியாது. மீட்டெடுக்கும் புலம் (faculty of recall) அனுபவங்களை தகவல் துணுக்குகளாக சுருக்கி வைக்கிறது. அங்கு அவை சித்தம் என சேமித்து வைக்கப்படுகின்றன. எனவே அன்னையானவள் சித்தாகர்ஷிணீ என போற்றப்படுகிறாள். தூண்டலுக்கான வினையூக்கிகளில் மிகவும் பருண்மை வாய்ந்ததாக இருப்பது மூக்கின் நரப்புக்கணுக்கள் தொடர்ந்து நிகழ்த்தும் மோப்பத் தாக்குதலில்தான். இந்தக் கூறின் மீதான தியானம் அன்னையை கந்தாகர்ஷிணியாக வணங்குவதன் மூலம் நிகழ்த்தப்பெறுகிறது. (கந்தம் என்பது மணத்தை குறிப்பது). மணத்தில், ஒன்றன் சாரத்தை தனியாகப் பிரித்தெடுப்பதே முக்கியமானது. வாழ்க்கை அதனளவில் பல சாரங்களால் ஆனது. ஒரு குறிப்பிட்ட சூழலின், குறிப்பிட்ட கணத்தின் சாரமான பண்புக்கேற்றவாறு நம் மனநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. பருண்மையிலிருந்து சாரத்தை வடித்தெடுப்பதே தியானத்தின் அடுத்த நிலை. எனவேதான் அன்னை ரஸாகர்ஷிணியாக துதிக்கப்படுகிறாள். (ரஸம் என்பது ஒன்றன் சுவையை அல்லது சாரத்தை குறித்து நிற்பது)  

நாம் வாழும் உலகு பேருருக் கொண்டது. அதில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனித்த உருவும் உடல்வடிவும் கொண்டிருப்பதால் அவற்றை ஒன்றிலிருந்து ஒன்று பிரித்தறிய முடிகிறது. சில இலைகளையும் பூக்களையும் அவதானித்தாலே இயல் உலகின் படைப்பில் வெளிப்படும் முறையான வடிவமைப்பின் அதிசயத்தை உணரலாம். இது தியானத்திற்கான அடுத்த களம். இந்நிலையில் அன்னை ரூபாகர்ஷிணீ என போற்றப்படுகிறாள். (ரூபம் என்பது வடிவைக் குறிப்பது). ஒரு பொருளின் திட்பம் அல்லது பருண்மையைவிட வேறெதுவும் அதன் மெய்மை குறித்த உறுதிப்பாட்டை நமக்கு சிறப்பாக அளிக்க முடியாது. எதை தொட்டுணர முடியுமோ, எதை கையாள முடியுமோ அதுவே ஆக மெய்மையானது. உள்ளங்கை நெல்லிக்கனி போல. பிற புலனுறுப்புகள் போலல்லாது, தொடுபுலனுறுப்புக்கு எல்லையே கிடையாது. உடலின் எப்பகுதியிலும் தொடுகை உணரப்படுகிறது. இந்த தியானத்தின் களன் இதுவே. அன்னை இங்கே ஸ்பர்ஶாகர்ஷிணீ என வழிபடப்படுகிறாள். (ஸ்பர்ஶம் என்றால் தொடுகை). தொடுகைக்கு தொடர்பு அவசியம். அனைத்தையும் ஊடுருவக் கூடிய மூலக்கூறுதான் உடல்கள் வைக்கப்பட்டுள்ள ஆகாசம் (வெளி). ஆகாசத்தின் பண்பு சப்தம் (ஒலி). கண்கள் நம்மை காண வைக்கின்றன. காது கேட்கச் செய்கிறது. தகவல் பரிமாற்றம் பெரும்பாலும் கேட்கும் உறுப்பு வழியாகவே நிகழ்கிறது. இது தியானத்தின் அடுத்த பகுதி. இங்கு அன்னையின் பெயர் ஶப்தாகர்ஷிணீ.

இதுவரை சொன்ன அனைத்தும் ஒருவரில் அமைகிறது எனும்போது, அந்தத் தனி அகத்தின் முக்கியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த முகமைக்கு அகங்காரம் என்பது பெயர். (‘நான்’ எனும் நனவு). முழுமுதலானது ஒவ்வொருவரிலும் ஒரு தனித்த அடையாளம் கொண்ட தனி தன்முனைப்பாகத் திகழ்கிறது. இங்கு அன்னை அஹம்காராகர்ஷிணீ எனக் கொண்டாடப்படுகிறாள். மதிப்பிடும் புலம் ஒன்று இல்லாமல் அகங்காரம் செயல்பட முடியாது. ஒவ்வொன்றும் சுட்டப்பட்டு, பொருள்கொள்ளப்பட்டு, மதிப்பிடப்பட வேண்டும். இந்தப் புலமும் தியானிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தப் பின்புலத்தில் அன்னை புத்யாகர்ஷிணீ எனப்படுகிறாள். இத்துடன், நாம் அமைந்திருக்கும் யந்திரத்தின் அக-பிரபஞ்ச-உயிர்க் கூறுகளின் பதினாறு புற இதழ்களை ஒரு சுற்று சுற்றி முடிக்கிறோம்.

உட்புறமாக உள்ள தாமரையில் நிகழும் வழிபாடும் தியானமும் எதிர்பாரா ஆபத்துக்களோடு மல்லிடுகின்றன. அவை கத்திமுனையில் நடப்பதோடு ஒப்பிடத்தக்கவை. வெளிப்புறத் தாமரையில் பதினாறு தியானங்களை கடந்துவந்த பிறகு, யோகசாதகரின் மனம் கூரடைகிறது. அவரது அக ஆற்றல் எந்தத் திசையிலும் செல்வதற்குத் தயாராக இருக்கிறது. அதற்கு அணையிடுவதோ, அதை தடுப்பதோ, நெறிப்படுத்துவதோ காட்டுக்குதிரையின் மீதான சவாரியைவிட கடினமானது. புத்யாகர்ஷிணீ வீற்றிருக்கும், புறத் தாமரையின் பதினாறாவது இதழில் மேற்கொண்ட தியானம் வழியே எய்தப்பட்ட புத்திகூர்மை, த்வரிதாவும் குலசுந்தரியும் வீற்றிருக்கும், அகத் தாமரையின் முதல் இதழுக்கு வருகையில், சடுதியில் பயனற்றதாக ஆகிவிடுகிறது. மனம் மிக வேகமாக சுழலத் தொடங்குகிறது. தியானிப்பவரால் அமைதியாக அமர்ந்திருக்க முடியாமல் போகிறது. (த்வரிதா என்றால் அதிவேகமாக சென்றுகொண்டிருப்பது என்று பொருள்). பாலியல் ஆற்றலை உடலாற்றலோடு ஒப்பிடமுடியாது. உடலாற்றல் பருவெளியில் ஒரு செல்வழி மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொன்றுக்கு ஒழுகிக் கொண்டிருப்பது. அக ஆற்றல் என்பது ஒரு பொருளன்று. உயிரியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிகழ்கின்ற – தன்முனைப்பை மையமாகக் கொண்ட தனியரின் விருப்பாற்றலால் இயக்கப்படுகின்ற – பல செயலெதிர்ச்செயல்களின் (interactions) தொகை அது. 

யோகசாதகர் தனது இயற்கை விழைவுகளுக்கு எதிரான ஒரு விழுமியத்தை குறிக்கோளெனப் பற்றியிருப்பார் என்றால், அவருள் பெருகும் அக ஆற்றல் எந்தத் திசையிலும் பாயாமலிருக்கிறது. விளைவாக, மிகையானதை எரித்தழிக்க எழும் ஆற்றல் அகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. உள்ளே இயங்கும் இக்கொள்கை அனங்கமதனா எனப்படுகிறது. (உடலிலியான மன்மதன் அகத்தை வசியம் செய்ய முயலுதல்). கிரேக்கத் தொன்மம் காட்டுவது போல, இங்கே அகம் என்பது, அடிமையென அடங்க ஒப்பாத, மேன்மை மிக்க பெண்பால் நனவு. ஒளிந்து விளையாடும் தந்திரங்களைக் கைவிட்டு தன் சுயரூபத்தைக் காட்டும்படி காமனை கட்டாயப்படுத்துபவள் அவள். இந்த நிலையில் தியானம் இயல்வதே அல்ல. எந்த வடிவிலும் உள்ள அழகு, மிகச் சிறிய அளவில் எதிர்ப்பட்டாலும் யோகியின் மனம் அதற்கு அடிமையாகிவிடுகிறது. எதிர்பார்ப்பதற்கு மாறாக, இங்கு அகத்தின் பெண்ணியல்பு யோகியின் உயர் குறிக்கோள்களுக்கு தடையாக அமைகிறது. ஆக, அவர் ஈர்ப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் இடையில் அலைக்கழிகிறார். இந்த இதழில் செய்யப்படும் நீண்டகால தியானத்தால் எழும் ஆற்றல் சரியான வழியில் செலுத்தப்பட வேண்டும். யோகசாதகர் தான் உறுதியாக அமைந்திருக்கிறோம் என்று உணர வேண்டும்.

அனங்கமதனாவின் களத்திலிருந்து அடுத்த இதழுக்கு முன்னேறுவது என்பது, ஹெர்குலிஸின் ஆபத்து நிறைந்த கடும் உழைப்பை விரும்பி ஏற்பது போன்றது. இங்கு யோகசாதகரின் பாலியல் விழைவு தீவிரமடைகிறது. அவர் கையாள்வது அனைத்துயிர்களுக்கும் பொதுவான இயல்பான விழைவை. அதை அடக்குவது, எதிரெழும் பேரலையை உள்ளங்கையால் அடக்க முயல்வது போன்றது. இங்கு வீற்றிருக்கும் இறை, பரந்துவிரிந்த நீல வெளியின் நித்யா. ஒருவரது பசியை ஒரு சாப்பாட்டைக் கொண்டு அடங்கச் செய்துவிடலாம். ஆனால், நாலைந்து மணிநேரம் கழித்து அவருக்கு மீண்டும் பசி எடுக்கிறது. உணவுப்பசி ஓநாய் என்றால், பாலியல் பசியை புலி எனலாம். மறைஞானியரின் மத இலக்கியங்களில் எல்லாம் அவர்கள் தீவிரமான மோகத்தோடு மோதியதை பார்க்க முடிகிறது. கிறிஸ்தவ உலகில், புனித அகஸ்டினும் புனித லயோலாவும் சாத்தானோடு போரிட்டதையெல்லாம் விரிவாக நாடகீயமாக்கி வைத்திருப்பதை காணலாம். இந்தியப் புராணங்களிலும் காவியங்களிலும், மிகச் சிறந்த யோகியர் மோகத்தால் விழியிழந்து அழிந்தததை பார்க்கிறோம். உன்னதமாக்கல் என்ற கருத்தெல்லாம் எடுபடுவதில்லை. இறைமீதான காதல் மெய்ப்படுவதற்கென ஒருவர் தனது ஒவ்வொரு துளி அகஆற்றலையும் பயன்படுத்தியே இந்தச் சூழலிலிருந்து வெளிவரமுடியும். அனைத்து மதங்களிலும் இந்த வழியே கடைபிடிக்கப்படுகிறது. கத்தோலிக்க மதத்தில் ஆணானாலும் பெண்ணானாலும் அனைவருமே யேசுவின் மணமகள்கள்தான். யேசுவே காதலிக்கப்படுபவன். அவன் மட்டுமே. அவன் மீதான அந்தக் காதல் வேறு ஒருவர் மீதோ ஒரு பொருள் மீதோ மாற்றப்படுமென்றால் அது பாவச்செயல். தாந்திரீகத்தில் அனைத்துக் காதலும், அனைத்துக் கடப்பாடுகளும் அன்னையின் திருவடி நோக்கியே அமையவேண்டும். யேகோவா பொறாமை பிடித்த கடவுள் எனப்படுகிறான். தேவியும் அதே போன்றவள். முழுதளிப்பு ஒற்றைப் புள்ளியில் குவிய வேண்டும்.

காமத்துடன் மோதி அதை வென்று வெளிவருபவர் அனங்கமதனாதுரா என்ற மூன்றாவது இதழுக்கு வரவேற்கப்படுகிறார். விஜயாவும் (வெற்றியின் தேவி) சர்வமங்களாவும் (நன்மையின் அன்னை) அங்கே கொலுவிருக்கின்றனர். இது ஒய்வுக்கான இடம். புறப்பொருட்களின் ஈர்ப்பிலிருந்து பிற மனிதர்களின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு இலகுவாக முடிகிறது. ஆனால், அக ஆற்றலின் ஒழுக்கை தடை செய்ததற்கான தண்டனையை அவர் ஏற்கவேண்டியிருக்கிறது. அனைத்து ஆற்றலும் ஒழிந்து, யோகி ஓய்ந்து போகிறார். மன அழுத்தத்திற்குள் விழக்கூடிய ஆபத்தும் இதில் இருக்கிறது. அடுத்த இதழுக்குச் செல்வதற்கான ஆற்றல் மீண்டும் நிறைவதற்குத் தேவையான அருளை வேண்டி காத்திருப்பது மட்டுமே ஒருவர் செய்யக்கூடியது. அவ்விதழில் ஜ்வாலாமாலினியும் சித்ராவும் வீற்றிருக்கின்றனர்.  ஏறத்தாழ பாதி தூரம் கடந்த இந்நிலையில், உயரம் செல்லச் செல்ல, வீழ்வதன் ஆபத்து தீவிரமடைகிறது. புதுவகையான மருட்சி யோகிக்கென இங்கு காத்திருக்கிறது. அவர் பெரும் கவர்ச்சிகொண்டவராகிறார். இது, சாத்தான் யேசுவை கோபுரமுகடுக்கு இட்டுச்சென்று, ‘நீ என்னை போற்றுவாய் என்றால், கண்ணுக்கெட்டிய செல்வமெல்லாம் உனக்குத் தருவேன்’ என்று சொல்வது போல. Thomas a Kempis தனது Imitation of Christ-இல் “தேவனே, நான் விழாமலிருப்பதற்குக் காரணம் என் புண்ணியம் அல்ல, உன் அருளே” என்று சொல்வார்..

வழிபாடு தீவிரமடைந்து, மஹாத்ரிபுரசுந்தரியும் காமேஶ்வரியும் வீற்றிருக்கும் அடுத்த இதழுக்குள் நுழைகிறார் யோகசாதகர். இது அருள் பொழியுமிடம். புதிதாய் மலர்ந்த பூக்களின் நறுமணத்தோடு கூடிய அன்பு அனைத்து திசைகளிலும் அனுபவிக்கக் கிடைக்கிறது. இது அனங்ககுஸூமாவின் களம். காதல் மலரும் இடம். இலக்கு இன்னும் வெகுதொலைவில் இருக்கிறது. இயல்பான பாதையை தான் தேர்ந்தெடுக்கவில்லை என்ற கழிவிரக்கம் ஏற்படுகிறது. உழைப்பெல்லாம் வீணெனத் தோன்றுகிறது. தீவிரச் சோர்வு உண்டாகிறது. ஆன்மாவே கசந்துவிட்டாற்போல் இருக்கின்றது. இறை நம்பிக்கைகூட மாயை என்ற எண்ணம் எழுகிறது. பகமாலினியும் நித்யக்லின்னாவும் வீற்றிருக்கும் இவ்வழிபாட்டிடம் அனங்கரேகா எனப்படுகிறது.

இப்போது யோகசாதகர் ஈற்றயல் இதழுக்கு வருகிறார். வேதனையின் கடைசி இருப்பிடமான இது அனங்கமேகலா எனப்படுவது. இங்குள்ள தேவியர் அணங்குகள்; குருதிகுடிக்கும் ஆவிபோன்றவளான பேருண்டியும், வஹ்னிவாஸினியும். நிலைகுலையச் செய்யும், அச்சம்தரும் காட்சிகள் இங்கு எழுகின்றன. இறுதிக்கவர்ச்சியெனும் தீயில் நடக்கவேண்டியிருக்கிறது. ஒழுங்கற்ற பாலியல் திகழும் இடம் இது. இந்தப் பகுதியை வெற்றிகரமாகத் தாண்டியதும் ஒருவர் இறுதி இதழுக்கு செல்கிறார். ஶ்ரீவித்யாவும், மஹாவித்யேஶ்வரியும், இறைவனின் தூதராக இருக்கும் சிவதூதியும் வீற்றிருக்கும் இவ்விடம் அனங்கவேகினீ எனப்படுகிறது. அறுதியாக, அக ஆற்றல் அன்னையின் திருவடி நோக்கி செலுத்தப்படுகிறது.

இத்துடன் அகத் தாமரை இதழ்களின் வழிபாடு முழுமை பெறுகிறது. அடுத்ததாக, யோகசாதகர் தலைகீழாக்கப்பட்ட முக்கோணத்தின் உச்சிக்கு வருகிறார். இந்த யந்திரத்தில் பதினான்கு புற முக்கோணங்களும், பத்து அக முக்கோணங்களும், செங்குத்தாக இறங்குமுகத்தில் அமைக்கப்பட்ட ஐந்து புள்ளிகளும் உண்டு. தியானிப்பவர் முதலில் நுழையும் முக்கோணத்தில் ‘கம்’ என்ற பீஜ மந்திரம் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஸர்வஸம்க்ஷோபிணீ (அனைத்தையும் கலக்கும் கொள்கை) யோகியின் அக அமைதியை பெரும் சோதனைக்குள்ளாக்குகிறாள். இங்கிருந்து நகர்வு இடஞ்சுழித்துச் செல்வது. அடுத்த முக்கோணத்தில் ‘க*ம்’ எனும் பீஜ மந்திரம் உள்ளது. இங்கு ஸர்வவித்ராவிணீ (அனைத்துக் கலக்கங்களையும் கரைக்கும் ரசவாதம்) இறையென அமர்ந்திருக்கிறாள். தன்முனைப்பும் கரைந்தழிகிறது. ஒருவர் இறையின் கருவியாக மாறிவிடுவதுபோன்ற நிலை இது. ‘ம்’ அடுத்த முக்கோணத்தில் இருக்கும் பீஜ மந்திரம். இங்கிருக்கும் இறை ஸர்வாகர்ஷிணீ. இப்போது, அனைவருக்குமான, தளைகளேதுமற்ற அன்பு உருவாகிறது. எல்லா பக்கங்களிலும் ஏற்பு நிகழ்கிறது. அனைத்தும் இறையின் வடிவாகவே பார்க்கப்படுகின்றன.

அடுத்த முக்கோணத்தில் இருப்பது ‘க*ம்’ எனும் பீஜ மந்திரம். இங்கு வீற்றிருப்பவள் ஸர்வாஹ்லாதினீ. யோகி இங்கே இன்புற்றிருக்கிறார்; அனைவருக்குமான மகிழ்ச்சியின் ஊற்றுமுகமாக இருக்கிறார். ‘ஙம்’ என்பது அடுத்த முக்கோணத்தில் இருக்கும் பீஜ மந்திரம். இதில் ஸர்வஸம்மோஹினீ கொலுவிருக்கிறாள். இங்கிருந்து சில ஆபத்தான பகுதிகளை கடந்துசெல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில், பலவிதமான அக ஆற்றல்கள் உருவாகி மாயச்செயல்களை நிகழ்த்திக்காட்டுவதற்கான தூண்டுதல் ஏழுகிறது. ஒருவர் விழிப்புடன் இல்லாவிட்டால் போலியாக மாறிவிடக்கூடும். அடுத்த முக்கோணத்தில் இருப்பது ‘சம்’ எனும் பீஜ மந்திரம். இறையென இருப்பது ஸர்வஸ்தம்பிணீ. அசைவற்றுப் போகக் கூடிய நிலை இது. புறவய நனவு உடலைவிட்டு நீங்கி, உள்ளம் ஆன்மாவின் ஆழத்திற்குள் மூழ்குகிறது. அடுத்த முக்கோணத்தில் இருக்கும் பீஜ மந்திரம் ‘ச*ம்’. இறை ஸர்வஜ்ரும்பினீ. அகம் மறைந்து விடுதலை ஏற்படுகிறது. ஒருவர் எல்லாமாக விரிந்துவிட்டது போலிருக்கிறது. ஞாயிறும் திங்களும், மலைகளும் ஓடைகளும், வானும் ஆழியும் எல்லாம் ஒருவரது விரிவெனவே தோன்றுகின்றன. உச்சியில் உள்ள முக்கோணத்தில் இருப்பது ‘ஜம்’ எனும் பீஜ மந்திரம். ஸர்வவஶங்கரி இறையென கொலுவிருக்கிறாள். அனைத்துப் பகைமைகளும் நீங்கி எல்லோரிடமும் தோழமை உண்டாகிறது.

அடுத்த முக்கோணத்தின் பீஜம் ‘ஶம்’, தேவி ஸர்வரஞ்சனீ. எதிரிணைகள் எல்லாம் மனதைவிட்டு அகல்கின்றன. பக்தனுக்கும், பாவிக்கும் எந்த வேறுபாடும் இல்லாமலாகிறது. அடுத்தது ‘ஞம்’ எனும் பீஜமந்திரத்தை கொண்டது. இதில் ஸர்வோன்மாதினீ இறையென அமர்ந்திருக்கிறாள். இப்போது யோகசாதகர் இறைமயக்கு கொண்டவராகிறார். அவர் மரபான முறைமைகள் எதையும் மதிப்பதில்லை. எனவே, உலகோர் பார்வையில் பித்தரெனத் தெரிகிறார். ஒழுங்கற்றவராகிறார். பொதுவாக இந்நிலையில் ஒருவர் வீடற்ற இரவலனாகிறார். இறைவனில் அமைந்த அநாதையெனத் திரிகிறார். அடுத்த முக்கோணத்திலுள்ள பீஜ மந்திரம் ‘டம்’. வீற்றிருக்கும் தேவி ஸர்வார்த்தஸாதனீ. முழுமையான பேரின்பம் எய்தப்படுகிறது. பெரும் நிறைவு தோன்றுகிறது. அடுத்த முக்கோணத்தின் பீஜ மந்திரம் ‘ட*ம்’ எனப்படுவது. ஸர்வஸம்பத்திபூரணீ கொலுவிருக்கிறாள். இங்கிருந்து யோகி புரவலராகிறார். அவரது ஆன்மீகக் களஞ்சியம் நிறைகிறது. அவர் இப்போது ஆசிரியரெனத் திகழலாம்.

அடுத்த முக்கோணத்தின் பீஜ மந்திரம் ‘ம்’. கொலுவிருக்கும் இறை ஸர்வமந்த்ரமயீ. இப்போது முதிர்ந்த, அனுபவம் வாய்ந்த யோகி ஒரு ஞானியின் தகுதியைப் பெறுகிறார். அக ஆற்றலை அளிக்கும் மந்திரங்களை அவரால் உருவாக்க முடியும். அவர் மந்த்ரத்ரஷ்டா (மந்திரத்தை பார்க்கக்கூடியவர்) என்றாகிறார். புறத்தே அமைந்துள்ளவற்றில் இறுதியானதான அடுத்த முக்கோணத்தில் இருப்பது ‘ட*ம்’ என்பது பீஜ மந்திரம். அமைந்திருக்கும் இறைவி ஸர்வத்வந்த்வஷயங்கரீ. இருமை என்று எதுவும் இல்லாமலாகிறது. யோகசாதகரும் இறையும் இப்போது பரஸ்பரம் ஒன்று இன்னொன்றாக மாற்றிக்கொள்ளத் தக்கவர்கள்.  இங்கிருந்து ஒருவர் உட்புற முக்கோணத்திற்கு செல்கிறார். ‘ணம்’ என்பது பீஜமந்திரம். தேவி ஸர்வஸித்திப்ரதா. இப்போது யோகியால் எதையும் செய்ய முடியும். ஆனால் உலகிற்கு ஆன்மீக ரீதியாக பயன் எதுவும் உண்டாகும் என்றால் மட்டுமே அவர் தன் ஆற்றலை பயன்படுத்துகிறார். அதே இடஞ்சுழிப் பாதையில் அவர் அடுத்த முக்கோணத்திற்கு நகர்கிறார். அங்கே ‘தம்’ என்பது பீஜமந்திரம். ஸர்வஸம்பத்ப்ரதா தேவியாக வீற்றிருக்கிறாள். நிறைவேற்றப்பட வேண்டிய தேவை என ஏதும் எஞ்சுவதில்லை. ஏனெனில், அடையவிரும்புவதற்கு மட்டுமே என அங்கே அனைத்தும் இருக்கின்றன.

அடுத்த முக்கோணத்தில் ‘த*ம்’ என்ற பீஜ மந்திரம் இருக்கிறது. ஸர்வப்ரியங்கரீ தேவியாக அமைந்திருக்கிறாள். ஒருவர் தனது ஆனந்தம் அல்லது தனக்கு உவப்பான விழுமியம் அனைவருக்கும் உவப்பானதாக இருப்பதை தெளிவாகக் காண்கிறார். அடுத்த மந்திரம் ‘ம்’, இறைவி ஸர்வமங்கலகாரிணீ. இது முற்றான அமைதி தவழும் இடம். அடுத்த முக்கோணத்தின் பீஜம் ‘த*ம்’. தேவி ஸர்வகாமப்ரதா. உச்சபட்ச விழைவாக இருக்கக் கூடியது முழுமையான விடுதலைக்கான விழைவே. யோகி அதை அடைந்து பிறருக்கும் அதை அளிக்கக் கூடியவராகிறார். அடுத்த முக்கோணத்தின் பீஜம் ‘னம்’. அங்கு வீற்றிருப்பவள் ஸர்வதுக்கவிமோசனீ (அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுவிப்பவள்). பிறப்பும் இறப்பும், துன்பமும் இன்பமும், புகழும் இழிவும் இனி ஜீவனை பாதிப்பதே இல்லை. அடுத்த பீஜம் ‘பம்’. தேவி ஸர்வம்ருத்யுப்ரஶமனீ. மரணத்தின் இறுதிக் கண்ணி விலக்கப்படுகிறது. அடுத்த பீஜம் ‘ப*ம்’. வீற்றிருக்கும் இறைவி ஸர்வவிக்னநிவாரிணீ (அனைத்துத் தடைகளையும் நீக்குபவள்). இங்கு எஞ்சிய, சேகரிக்கப்பட்ட வினை எரித்தழிக்கப்படுகிறது. அடுத்த முக்கோணத்தின் பீஜ மந்திரம் ‘ம்’. இதில் ஸர்வாங்கஸுந்தரி (முற்றழகி) கொலுவிருக்கிறாள். இங்கு இறையும் எழிலும் வேறுவேறல்ல. அடுத்த முக்கோணத்தின் பீஜம் ‘ப*ம்’. இங்கே ஸர்வஸௌபாக்யதாயினி (பேரானந்தத்தை அருள்பவள்) வீற்றிருக்கிறாள். இப்போது யோகி ‘ௐ’ என்பதை தலையுச்சியில் தியானிக்கிறார், இருதயத்தில் ‘ஶ்ரீம்’ என்பதையும், ஆஞாவில் ‘ஐம்’ என்பதையும், விஶுத்தியில் ‘ஹ்ரீம்’ என்பதையும், மீண்டும் இதயத்தில் ‘ஸௌம்’ என்பதையும் தியானிக்கிறார். அத்துடன் வழிபாடு முடிவுக்கு வருகிறது.

யோகசாதகர் ஶ்ரீசக்ரத்தில் கடந்து வரும் நிலைகளைக் குறிக்கும் மந்திரங்கள் படத்தில் எண்களாக குறிக்கப்பட்டுள்ளன. இதழ்களிலும் முக்கோணங்களிலும் உள்ள எண்களுக்கான மந்திரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

புற இதழ்கள்

 1. அம் காமாகர்ஷிணீ
 2. அஹ ஶரீராகர்ஷிணீ
 3. ம் அம்ருதாகர்ஷிணீ
 4. ஔம் ஆத்மாகர்ஷிணீ
 5. பீஜாகர்ஷிணீ
 6. ஐம் நாமாகர்ஷிணீ
 7. எம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ
 8. ல்ரூம் தை*ர்யாகர்ஷிணீ
 9. ல்ரும் சித்தாகர்ஷிணீ
 10. ரூம் ந்தா*கர்ஷிணீ
 11. ரும் ரஸாகர்ஷிணீ
 12. ஊம் ரூபாகர்ஷிணீ
 13. உம் ஸ்பர்ஶாகர்ஷிணீ
 14. ஈம் ஶப்தாகர்ஷிணீ
 15. இம் அஹம்காராகர்ஷிணீ
 16. ஆம் புத்த்*யாகர்ஷிணீ

அக இதழ்கள்

 1. டம் ட*ம் ம் ட*ம் ணம் அனங்னா குலஸுந்ரீ த்வரிதா
 2. ஶம் ஷம் ஸம் ஹம் அனங்காங்குஶா நீலபதாகா நித்யா
 3. தம் த*ம் ம் த*ம் னம் அனங்னாதுரா ஸர்வமங்லா விஜயா
 4. ஶம் க்ஷம் அனங்மாலினீ சித்ரா ஜ்வாலாமாலினீ
 5. கம் க*ம் ம் *ம் ஙம் அனங்குஸுமா காமேஶ்வரீ மஹாத்ரிபுரஸுந்ரீ
 6. பம் ப*ம் ம் ப*ம் மம் அனங்ரேகா* நித்யக்லின்னா ப*கமாலினீ
 7. சம் ச*ம் ஜம் ஜ*ம் ஞம் அனங்மேக*லா வஹ்னிவாஸினீ பே*ருண்டீ
 8. யம் ரம் லம் வம் அனங்வேகினீஶிவதூதீ மஹாவித்யேஶ்வரீ

முக்கோணங்கள்

 1. கம் ஸர்வஸம்க்ஷோபி*ணீ
 2. க*ம் ஸர்வவித்ராவிணீ
 3. ம் ஸர்வாகர்ஷிணீ
 4. க*ம் ஸர்வாஹ்லாதினீ
 5. ஙம் ஸர்வஸம்மோஹினீ
 6. சம் ஸர்வஸ்தம்பி*ணீ
 7. ச*ம் ஸர்வஜ்ரும்பி*ணீ
 8. ஜம் ஸர்வவஶம்கரீ
 9. ஶம் ஸர்வரஞ்ஜனீ
 10. ஞம் ஸர்வோன்மாதினீ
 11. டம் ஸர்வார்த*ஸாத*னீ
 12. ட*ம் ஸர்வஸம்பத்திபூரனீ
 13. ம் ஸர்வமந்த்ரமயீ
 14. *ம் ஸர்வத்வந்த்வக்ஷயம்கரீ
 15. ணம் ஸர்வஸித்தி*ப்ரதா
 16. தம் ஸர்வஸம்பத்ப்ரதா
 17. த*ம் ஸர்வப்ரியம்கரீ
 18. ம் ஸர்வமங்லகாரிணீ
 19. த*ம் ஸர்வகாமப்ரதா
 20. னம் ஸர்வதுக்க*விமோசனீ
 21. பம் ஸர்வம்ருத்யுப்ரஶமனீ
 22. ப*ம் ஸர்வவிக்*னவாரிணீ
 23. ம் ஸர்வாங்ஸுந்ரீ
 24. ப*ம் ஸர்வஸௌபா*க்தாயினீ
 25. ஔம்
 26. ஶ்ரீம்
 27. ஐம்
 28. ஹ்ரீம்
 29. ஸௌம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s