ஶ்ரீசக்ர தியானம் – 21

 கம் க*ம் ம் க*ம் ஙம் அனங்குஸுமா காமேஶ்வரீ மஹாத்ரிபுரஸுந்ரீ

முப்புரங்களை எழிலூட்டும் அன்னையே, நனவுவெளி (சிதாகாஶம்) ஒளியூட்டப்படாதிருக்கையில் அதை உன் ஒளிகொண்டு நிரப்புகிறாய். அதன்பின் அங்கே மின்னல்கீற்ற்றுகளென விடாது மின்னிக்கொண்டிருக்கிறாய். உனது அந்த ஒளிர்வில் பகலவனின் ஒளியை, திங்களின் ஒளியை, தீயின் ஒளியை மாறிமாறிக் காண்கிறேன். சூரியனின் ஒளி எனது நனவு வாயிலில் நுழைகையில் என்னுள்ளிருக்கும் அறிபவன் விழித்தெழுகிறான். அப்போது உடன்பிறந்தோர் மீதான பாசம் என்னில் தோன்றுகிறது. புலனறிவுகொண்ட ஒவ்வொரு உயிரையும் என் உடன்பிறந்தவையெனக் காண்கிறேன். உன்னிலிருந்து பெறும் ஆற்றலைக் கொண்டு அன்போடும் கருணையோடும் அவற்றுக்கெல்லாம் உதவுகிறேன். முழுமையான விழுமியத்திலிருந்து பிறக்கும் விழைவுகளை எல்லாம் காக்கும் ஆன்மா நீயே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

‘கம்’ எனும் அடிப்படை மந்திரமும், ‘க*ம்’ எனும் பீஜ மந்திரமும் கொண்டு என் நனவெனும் அகவெளியை வாழ்த்துகிறாய் நீ. ஒவ்வொரு மலருக்கும் அதற்கென தனித்த வண்ணமும், மணமும், தேனின் சுவையும் இருந்தபோதும், விழுமியங்களை ஏற்றும் உன் அழகையே அவற்றில் காண்கிறேன். நீ உன்னோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘அனங்ககுஸுமா’வை அதில் கண்டடைகிறேன். புறத்தே நிகழ்வது உன் தூய அழகெனும் ஒருமை தரிசனத்தை என் அகத்தில் தூண்டுகிறது. நிலவின் தண்ணொளி என் அகவெளியை அடைகையில் தன்னொளி கொண்ட என் படைப்பூக்க நனவு (தைஜஸ அபிமானி) விழித்துக்கொள்கிறது. புற ஒளி எதையும் சார்ந்திராமல், எனக்குள் ஒரு தோட்டத்தைப் படைத்து, உன்னில் போற்றப்படும் அனைத்து நேர்மறை விழுமியங்களின் அடையாளமான குறியீடுகள் கொண்டு அதை நிரப்பும் தேர்ச்சி எனக்குண்டாகிறது. அது நிகழ்கையில், உன்னை போற்றித் துதித்துக்கொண்டிருக்கும் தொண்டை மையத்திலிருந்து விலகி புருவங்களுக்கு இடையிலான ‘ஆஞா’வில் நான் நுழைகிறேன். அங்கே நான் ஆழ்மௌன தியானத்திற்குள் செல்கிறேன். அத்தகைய தியானம் அனைத்தையும் ஊடுருவும் ஆற்றலை எனக்களிக்கிறது.

உனது முப்புரங்கள் எங்குள்ளன என நானறியேன். அவை கழி, நிகழ், எதிர்வெனும் முக்காலங்களா? வான், வெளி, மண் என்ற மூன்றுமா? அல்லது  விழிப்புநிலை, கனவு, ஆழுறக்கம் என்னும் மூன்றா? அகப் புறப் பொருள்களில் எவற்றை உன் நகரங்கள் எனக் கொள்வது என்பதை ஆய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பாக நீ என்னை ஆயிரமிதழ்த் தாமரையில் ஏற்றிவிடுகிறாய். அந்த இதழ்களின் அடியில் கரந்துவைக்கப்பட்டிருக்கும் தேனை சுவைக்கும் வண்டுபோல நான் பேரின்பத்தில் மூழ்குகிறேன். உனது எழிலும், அன்பும், கருணையும் கலந்த கலவையன்றி வேறொரு அடையாளமும் எனக்கில்லை என்பதை நான் உணர்கிறேன். அத்தகு நிலையில் தனிப்பட்ட விழைவென ஏதும் இருக்க இயலாது. ஏனெனில், என் அறுதி நிறைவுணர்வில் பங்கெடுக்கும் ஒருவனாகவே நானிருக்கிறேன். திரிபுரசுந்தரிக்கு என் வணக்கம்.

|| கம் க*ம் கம் க*ம் ஙம் அனங்ககுஸுமா காமேஶ்வரீ மஹாத்ரிபுரசுந்தரீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s