தடில்லேகா*தன்வீம் தபனஶஶிவைஶ்வாநரமயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதிதமலமாயேன மனஸா
மஹாந்த: பஶ்யந்தோ தத*திபரமாஹ்லாதலஹரீம்
பாடல் – 21
பேரன்னையே,
ஆறு தாமரைகளுக்கு மேலே அமைந்த
எண்ணற்ற இதழ்கள்கொண்ட
தாமரையில் அமர்ந்திருப்பவளே
சூரியன், சந்திரன், அக்னி இவர்களின்
மின்னலொளி போன்றது உனது ஒளிர்வு
பிந்து, நாதம், கலை என்பவை அடங்கிய
உன் இறைவனோடு நீ கலந்திருக்கும்
தோற்றத்தை
மெய்யும் மெய்யற்றதும் கலந்ததான மாயையிலிருந்து
விடுபட்ட யோகியர்
காண்கையில்
பேரானந்த அலையில் மூழ்குகின்றனர்
**
மனிதரில் ஒரு விட்டில் பூச்சியும், ஒரு தாமரை மலரும், ஒரு யோகியும் உண்டு. மூன்றுமே ஒளியோடு இணைய விரும்புபவை. இறைவனின் ராஜ்ஜியத்தை அடைவதற்கு ஒவ்வொருவரும் இரு பிறப்பு எடுக்க வேண்டும். முதற் பிறவி, கண்ணாமூச்சி விளையாட்டில் மகிழும் இயற்கையின் பொறுப்பு. மெய்யும் மெய்யற்றதும் ஒரே அளவில் கலக்கப்பட்ட மாயத்தோற்றங்களில் மானுடர் சிக்கிக்கொள்கின்றனர். முழுமையான ஒழுக்கக் கட்டுப்பாடு ஏற்படும் வரை, அவர்கள் பல சமயங்களில் மெய்யற்றதை மெய்யென்றும் மெய்யை மெய்யற்றதென்றும் புரிந்துகொள்கின்றனர். முழுமுதலின் நடுவுநிலைமையோடு ஒப்பிடுகையில் மாயையின் இந்தக் கூறு எதிர்மறையானதுதான். ஆனால் உலகைப்படைக்கும் செயலை ஆற்றும் மாயையில் முழுமுதலின் ஆற்றலும் பெருமையும் உறைவதால் மாயை என்பது முற்றாக எதிர்மறையானதல்ல. சங்கரர் மாயை என்று சொல்வதை ராமானுஜர் லீலா விபூதி (இறையின் விளையாட்டு ஆற்றல்) என்கிறார். பகவத் கீதையில், இது, மிகப் பொருத்தமாக, இறையின் யோகமாயா எனப்படுகிறது. நாராயண குருவின் தெய்வ தசகத்தில் இறைவன் இயல்காட்சியின் மாயையாக, ஏமாற்று வித்தைக்காரனாக, மாய வித்தையில் மகிழ்பவனாக, இறுதியில் உயிரிகளை மாயை என்னும் பொறியிலிருந்து விடுவிக்கும் அருளாளனாக விவரிக்கப்படுகிறான். அறுதியான விடுதலை மனிதரின் இரண்டாவது பிறவியின் இறுதியில் ஏற்படுகிறது.
ஜீவன், அதாவது முழுதாய்ப் பிறந்த தனியர், மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம் என்ற இரு கீழ்நிலை இணைவுச் செயல்பாட்டு மையங்களில் அக்னி தீக்கை பெறுகிறார். தொடக்கத்திலிருந்து முடிவுவரை செல்லக் கூடிய பாதையில் ஆறு வாயில்கள் உள்ளன. முடிவில் உள்ள அருளை அடைவதற்கு முன்பாக ஒருவர் இந்த ஆறு வாயில்களை கடந்துசெல்லவேண்டியிருக்கிறது. குலகுண்டா எனப்படும் வாழ்வின் விதை எழும் மறைப்பள்ளத்திலிருந்து தொடங்கும் தேடல் தீயால் வழிநடத்தப்பட்டு ஸ்வாதிஷ்டானத்தை அடைகிறது. அந்தத் தீ, தூய்மையாக்கத்திற்கான ரசவாதமாக அமைகிறது. ஆகக் கீழே உள்ள சக்ரமான மூலாதாரத்தில், மெய்நாட்டம் கொண்டவர் தான் தேடுவது எதை என்றும், தான் எவ்வாறு வழிநடத்தப்படுகிறோம் என்பதையும் அறியாதவராக இருக்கிறார். ஏனெனில், இந்தக் காலகட்டத்தில்தான் அவர் தன் வாழ்க்கைக்கான ஒரு நோக்கத்தை அமைத்துக்கொள்வதற்கு இயற்கை அவருக்கு மறைமுகமாக வழிகாட்டுகிறது. அடுத்த சக்ரமான ஸ்வாதிஷ்டானத்தில் வளரிளம்பருவத்திற்கான, பூப்புப் பருவத்திற்கான அனைத்து வேதனைகளையும் அனுபவிக்கவேண்டியிருக்கிறது. இப்பருவத்தில் அக்னி தீக்கை பொருத்தமானதாக அமைகிறது. இளமைப் பருவத்தின் உச்சத்தில் சுரப்பிகள் முழுஆற்றலோடு இயங்குகின்றன. அதன் பின்னர், தீ தன் பொறுப்பை சூரியனிடம் ஒப்படைக்கிறது. அறிவு மீதான நாட்டம் ஆன்மாவை எழுச்சியடையச் செய்கிறது. இதயத்தில் தோன்றும் மோகம் ஒவ்வொருவரையும் பறந்தெழ வைக்கிறது. உயர்விழுமியங்கள் குறித்த முடிபுகள் இதயத்தில் நிறைகின்றன. தான் முதிர்ந்துவிட்டதை அறிவிக்கும் தேவை ஏற்படுகிறது. சொற்கள் எழுந்து விடுதலை அளிக்கின்றன. அதன் பின்னர் வழிகாட்டும் பொறுப்பு சந்திரனிடம் செல்கிறது. விஶுத்தியிலிருந்து ஆஞாவுக்கான பாதை இதுவே.
இது பொதுவான நடைமுறை. என்றாலும், தேடலும் அடைதலும் பெரும்பாலானோர்க்கு மேலோட்டமாகவே நிகழ்கின்றன. ஆயிரமாண்டுகளுக்கு ஒரு முறை, ஆயிரத்தில் ஒருவர், தனது மூலாதாரத்திலிருந்து ஆஞாவுக்கான பாதை உண்மையிலேயே அடைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். அவரது சமகாலத்தவரோ மரபான பண்பாட்டின் நிழல்பாதையிலேயே செல்கின்றனர். உலகாயதமான தேடலையே மேற்கொள்கின்றனர். மெய்யற்றதிலிருந்து மெய்யை சலித்தெடுப்பது நித்யாநித்ய விவேகம் எனப்படுகிறது. நிலையான விழுமியங்களிலிருந்து நிலையற்றவற்றை பிரித்தறிவது மிக அரிதாகவே நிகழ்கிறது. தசையாலான உடல்கொண்டு பிறந்தோரெல்லாம் அது விரிக்கும் கண்ணிகளில் எளிதாக சிக்கக் கூடும். விழிப்புடையவரே அன்பை தளையிலிருந்தும், சினத்தை விலக்கத்திலிருந்தும், விரும்பத் தக்கவற்றை இன்பவேட்கைகளிலிருந்தும் பிரித்தறிய முடியும். இத்தகைய நபரின் வாழ்வில் அகப்போராட்டம் மிக இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது. புறப்பொருட்கள் புலன்கள் வழியே உண்டாக்கும் உணர்ச்சிபூர்வமான தாக்கங்களை அவரால் அவதானிக்க முடிகிறது. அவை உண்டாக்கும் மாயக்கற்பனைகளை கண்டுகொள்ள முடிகிறது. மெய்த்தேட்டம் கொண்டவர் முதிர்கையில், நுகர்வு மூலம் அடையும் மனநிறைவு அடுக்கடுக்காக வளரக்கூடியது என்பதையும் அறிந்துகொள்கிறார். தனது மோகங்களையும் பற்றுகளையும் முன்வரையறைகள் (previous conditionings) வலிந்து பாதிப்பதை அவர் உணரத் தொடங்குகிறார். நிறமேற்றங்களையும் (colorations) முன்வரையறைகளையும் களையாத வரை தியானம் என்பதற்கு எந்த மதிப்பும் இல்லை. இயற்கையின் கட்டளைகளை உயிரியல் வேட்கைகள் தாமாக மீறமுடியது. எனவேதான் தொடக்கநிலையில் உள்ள யோக சாதகர் தனது ஆன்ம வாழ்வின் மூன்று நிலைகளையும் சூரியனின் தெளிந்த ஒளிக்கு கொண்டு வருகிறார்.
இதில் முதற்கூறாக இருப்பது, முதிரா நினைவுகள் (வாசனைகள்) அடங்கிய கடந்தகால அகம். இரண்டாவது, கவர்ச்சி-விலக்கம் இவற்றினிடையே இக்கணம், சூழலின் தூண்டல்களுக்கேற்ப நிகழ்ந்துகொண்டிருக்கும் ஊடாட்டம். மூன்றாவது, அகத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்த வைக்கும் குறிக்கோள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுதல். ஒவ்வொரு கணமும் திருத்திக் கொள்வதற்கான கணம். ஆன்ம ஆற்றலை நிரப்பிக் கொள்வதற்கான கணம். இலக்கை மீளாய்வு செய்வதற்கான கணம். மிக முதிர்ந்த நிலையில் இருக்கும் யோகி சுயக்கட்டுப்பாடு மூலம் தான் அடைந்த ஞானத்தை பயன்படுத்துகிறார். அவரது சொற்களும் செயல்களும் அவரது அகவிழிப்பின் சாட்சிகளாக இருக்கின்றன. அவர், மானுட குலத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டின் சாரம் நிரம்பிய, ஆயிரமிதழ்கள் கொண்ட பெரும் தாமரையைப் போல் இருக்கிறார்.
அறுதி நிலையை எய்துவதற்கு ஒருவர் காத்திருக்க வேண்டும் என்பது ஏற்கப்பட்ட ஒன்று. அந்தப் பாய்ச்சல் அருளன்றி நிகழாது. அக்னியும், சூரியனும், சந்திரனும் யோகியை வெற்றிகரமாக உயரத்திற்கு வழிநடத்திச் செல்கிறார்கள். அங்கே, பிந்து, நாதம், கலை என்ற மூன்றையும் ஆன்மா கடந்து செல்கிறது. பின்னர், கலப்பிலா தூய பேரானந்தத்தை அவர் அடைகிறார். அங்கே உணர்வுருவை பருவுருவிலிருந்து பிரித்தறிய முடியாது. முன்னர் அக்னியிலிருந்து சூரியனுக்கும், சூரியனிலிருந்து சந்திரனுக்கும் மெல்ல கடத்தப்படுவதாக காணப்பட்டது இப்போது ஒரு மின்னேற்றம் போல் பார்க்கப்படுகிறது. நிலவின், பகலவனின், தீயின் சாரம் அடங்கிய மின்னல் கீற்றாகத் தெரிகிறது. இங்கே மெய்த்தேட்டம் கொண்டவர் அறுதியாக முழுமையான அறிவர் என்றாகிறார். மீஇன்பத்தின் பேரலைகள் எழுந்து அனைத்து இருமைகளையும் அழித்துச் செல்கின்றன.
‘ஹ்ரீம்’ எனும் மந்திரத்தைக் கொண்ட யந்திரம் தியானிக்கப்படுகிறது.