சௌந்தர்யலஹரீ – 19

முக*ம் பிந்தும் க்ருத்வா குசயுத*ஸ்தஸ்ய தததோ*

ஹரார்த*ம் த்*யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மத*கலாம்

த்ய: ஸம்க்ஷோப*ம் நயதி வனிதா இத்யதிலகு*

த்ரிலோகீமப்யாஶு ப்*ரமயதி ரவீந்துஸ்தனயுகாம்

பாடல் – 19

அரனருகமைந்தவளே

தன் பிந்துவில் உன் முகத்தையும்

கீழுள்ள, சூரியசந்திரர்கள்  போன்ற முலைகளையும்

அதற்கும் கீழுள்ள முக்கோணத்தையும்

காமத்தை உண்டாக்கும் உன் இயங்காற்றலின்

மந்திரத்தோடு (க்லீம்) தியானிப்பவன்

மூவுலகைப் படைக்கும் படைப்பாளினி உள்ளிட்ட 

பெண்களில்

சந்ததிபெருக்கும் ஆற்றலை தூண்டுகிறான்

**

இங்கு-இப்போது என்ற இயல் உலகில்(factual world), கால-இட வெளியில், நம் உடலையும் சூழ்வெளியில் மிதக்கும் எண்ணற்ற உடல்களையும் அறிந்தபடி நாம் வாழ்கிறோம். பின்னர், பொருட்கள் போலல்லாத மெய்மைகளை எண்ணங்களின் வழியே அறிகிறோம். இங்கோ அங்கோ உள்ளவை அல்ல எண்ணங்கள். மனதிலிருந்து பிறப்பவை அவை. நனவு என்பது உடலெனும் சட்டகத்துக்குள் உணரப்படுவது அல்ல. அது ஒரே நேரத்தில் உள்ளும் புறமும் இருப்பது. மீஆன்மாவால் ஒளியூட்டப்படுபவை எண்ணங்கள். ஆக, மெய்மையைத் தேடும் நாம், இயல்பானது (factual), கருத்துவடிவானது (ideal), மெய்யானது (real) என்ற மூன்று புள்ளிகளில் உலவுகிறோம். மனம் ஒருமுகப்படாத நிலையில் இம்மூன்று நிலைகளிலும் தியானம் என்பது இயல்வதல்ல. ஒவ்வொருவரும் தன் அகத்தில் ஒரு தன்னொளிர் மையத்தை கண்டுகொள்கின்றனர். அது இல்லாமல் எண்ணம் தோன்ற முடியாது. இயல்பானதையும், கருத்துவடிவானதையும், மெய்யானதையும் ஒன்றாக்கி, ஒரு செங்குத்து அளவையில் (vertical parameter) மூன்று புள்ளிகளை கருத்தில் கொண்டு ஒருமித்த தியானம் இயற்றப்படுகிறது. அந்த அளவையில் முடிவு (omega) ஆஞாவில் – புருவங்களுக்கிடையிலான ஒருங்கிணைவு மையத்தில் – காணப்படுகிறது. மனித உடல் எத்துணை சிறியதானாலும், ஒருவரது சொந்த நனவு மையத்தில் மொத்தப் பிரபஞ்சமும் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. அவரது அக மையக் குவிவே அவரது பிரபஞ்சத்தின் மையமாக இருக்கிறது.

புருவமத்தியில் உள்ள பிந்துவில் உணரப்படும் ஒரு துடிப்பாக அல்லது அதிர்வாக தியானம் துவங்குகிறது. ஒவ்வொரு துடிப்பிலும் லயத்தோடு கூடிய விரிவும் சுருக்கமும் உண்டு. விரிதல் முடிவிலியாக நீளக்கூடியது. சுருங்குதல், முடிவிலா நனவு வெளியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் பிந்துவில் குவிவது. ஆற்றலின் இயக்கம் பிந்துவிலிருந்து அனைத்து திசைகளுக்கும் பின் மீளவும் மையப்புள்ளிக்கும் என மாறி மாறி நிகழ்கிறது. இந்த தியானத்தில் எவ்வித தரிசனமும் இருப்பதில்லை. இது தூய இருப்பு நிலை மட்டுமே. முழுமுதல் என்பது அனுபவத்திற்கு அப்பாற்பட்டது. அது எவ்வித புரிதலுக்கும் அப்பாற்பட்டது என்றபோதும், அறுதியாக அனைத்து மெய்மைக்கும் களனாக இருப்பது அதுவே. தனியரில் அது எதிரொளிக்கும்போது பிந்து தூய சத்வகுணமடைகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்றும் படைப்பியற்கையின் மும்மை இயக்காற்றல்கள். இம்மூன்றையும் ஒரு முக்கோணமாகப் பார்த்தால் அம்முக்கோணத்தின் உச்சி சத்வகுணம். அது புருவமத்தியில் உள்ள ஒருமை மையமான (unitive center) ஆஞாவில் இருக்கும் பிந்துவிலிருந்து இயங்குகிறது. இந்த தியானத்தில், இயற்கையின் சத்வ குணத்தில் சிறிதுநேரம் அமைந்திருந்த பிறகு, தேடல்கொண்ட மனம் ‘க்லீம்’ எனும் பீஜ மந்திரத்தால் ஆற்றல் பெறுகிறது. அது காம ராஜ பீஜம் (அரச விழைவின் விதை) எனப்படுகிறது. இங்கு விழைவென்பது, படைப்பூக்கம் தோன்றி உலகின் பல கோடி உயிரிகள் உண்டாகக் காரணமாக இருக்கும் எண்ணங்களின் களனையும், செயல்களின் களனையும் கண்டறிவதற்கான விழைவு. 

ஆஞாவில் நிலையூன்றிய பின்னர் தியானமானது அநாஹதம் (இருதயப் பகுதி) நோக்கி கீழிறங்குகிறது. இருதயத்தின் இருபுறமும், படைப்பாளினியின் இரு முலைகள் போல ஞாயிறும் திங்களும் உள்ளன. சூரியனும் சந்திரனும் முறையே பொருட்களுக்கும் அவற்றை குறிப்புணர்த்தும் எண்ணங்களுக்குமான குறியீடுகள். இங்கு, அநாஹதத்தில் உள்ள மைய பிந்து நோக்குபவருக்கும் நோக்கப்படுவதற்கும் இடையிலான ஒரு ஊசலாட்டம் கொண்டதாக புரிந்துகொள்ளப்படுகிறது. படைப்பாற்றலின் சத்வ குணமும் தமோ குணமும் இந்த தளத்தில் இயங்குகின்றன. இயல்பொருட்கள், உணர்வுரீதியாக அவை ஏற்படுத்தும் தாக்கத்தின் பதிவு என்ற இரண்டும் கொண்ட இரட்டை அமைப்பு இது. பார்க்கப்படும் அல்லது உணரப்படும் மெய்மையை குறிப்பது சூரியன். பார்க்கப்பட்டதை அல்லது உணரப்பட்டதை கருத்தாக்கி நினைவில் பதிவதை குறிப்பது சந்திரன். சத்வ குணம் ஒளியூட்டுகிறது, தமோகுணம் உறையச் செய்கிறது. இங்கே, ஒளியும் நிழலும், மெய்யானதும் மெய்யல்லாததும் ஒன்றாகி அனுபத்தில் கலக்கின்றன. இந்த தளத்தில் தியானிக்கும்போது, தியானிப்பவரால் மெய்யானதை மெய்யற்றதிலிருந்தும், இயல்மெய்மையை புனைவிலிருந்தும், மறைந்துபோகும் விழுமியங்களை என்றென்றைக்குமான விழுமியங்களிலிருந்தும் பிரித்தறிய முடிகிறது. இங்கும் தியான மந்திரம் ‘க்லீம்’ எனும் காம ராஜ பீஜ மந்திரம். உடல் சார்ந்த ஊட்டத்தின் குறியீடு சூரியன், சந்திரன் உணர்வுசார் ஊட்டத்தின் குறியீடு. செயல்பாடு சார்ந்த, உடல்சார்ந்த மெய்மை நமக்கு பருண்மையை அளிக்கிறது. அந்த அனுபவத்தின் நினைவு அதற்கொரு நீண்ட கால அளவை கொடுக்கிறது. கடந்தகாலத்தின் நினைவாக அது சேமிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மீண்டும் நிகழும் ஒரு அனுபவமாக, நிகழ்காலத்தில் மீட்டெடுக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் கவர்ச்சியும் விலக்கமும் என தொடர்ந்து ஒருவருக்கு மெய்ப்படும், காமவிழைவால் வரும் ஆற்றலின் ரகசியங்களை அறிவதற்கு இந்த தியானம் உதவுகிறது. சரியான புரிதல் இல்லாமல் போகும்போது அகத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய உதவுகிறது. அகத்தை மீட்டுருவாக்கம் செய்து, மீளிசைவு கொள்ளச் செய்து மனநோயிலிருந்து காக்கிறது.

அடுத்ததாக, தியானிப்பவர் அநாஹதத்திற்கு கீழே செல்கிறார். ஒரு மறை முக்கோணம் உருவகிக்கப்படுகிறது. அதில் அடிப்பரப்பு மூலாதாரத்தையும் மணிபூரகத்தையும் இணைக்கிறது, உச்சியில் ஸ்வாதிஷ்டானம் அமைந்திருக்கிறது. இது மிகவும் கடினமான தியானம். ஏனெனில், இங்கு ஒருவர் தன் இயல் உடலையும் (ஸ்தூல அல்லது பருவுடல்) நுண்ணுடலையும் (சூக்ஷ்ம உடல்) விட்டு காரண உடலில் நுழைகிறார். இது மிகவும் நுண்ணிய கருவூலம், அனைத்துவகையான தனித்துவங்களை முளைக்கச் செய்யும் விதைக் களன். மணிபூரகத்தில் சத்வ குணமும், மூலாதாரத்தில் தமோ குணமும், ஸ்வாதிஷ்டானத்தில் ரஜோ குணமும் இருக்கின்றன. என்றாலும் இவை நிரந்தரமாக அங்கேயே நிலைநிறுத்தப்படுவதில்லை. ஒவ்வொன்றும் மற்றொன்றை துரத்தியபடியே இருப்பதோடு தமது இயல்பான இருப்பிடம் விட்டு அடுத்ததற்கு நகர்கின்றன. நிலத்தில் புதைக்கப்பட்ட விதைக்கென ஒரு இயக்கம் உண்டு. காணமுடியாத ஒரு விரிவாக்கம் உண்டு. அதைப்போலவே ‘க்லீம்’ எனும் பீஜாக்ஷரத்தை விழிப்புநிலையில் உள்ள மனம் கொண்டு இயங்கச் செய்துவிட முடியாது. நனவிலியின் அரணிடப்பட்ட ரகசியம் தானாக எழுந்து வரும் என்று அமைதியாகக் காத்திருப்பதே தியானிப்பவர் செய்யக்கூடியது. பிள்ளைப் பேற்றில் தந்தையும் அன்னையும் கண்கள் கட்டப்பட்டவர்களாய் இருப்பதில் இதை காணலாம். சில கணங்களுக்கேனும் இருமையுணர்வை இல்லாமலாக்கும் புணர்ச்சிப் பரவசநிலை மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதி. அவர்களது முயற்சி ஏதுமின்றி மூன்றாவது கூறாக புதிய ‘பிரஜை’ எழுகிறது. ஆக, மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம் என்ற மூன்றும் கொண்ட முக்கோணம் ஒரு வகையில் தந்தையையும், அன்னையையும், புதிய வரவான குழந்தையையும் குறிப்பது. மொத்தப் பிரபஞ்சத்தின் படைப்பியக்கத்தை புரிந்துகொள்ள ஒருவர் தனது உடலையே பரிசோதனைக் கருவியாக பயன்படுத்துகிறார். செங்குத்தாக குறிக்கப்படும் மூன்று பிந்துக்களில் படிப்படியான ஏற்றம் நிகழ்கிறது. தியானிப்பவர் காரணத்திலிருந்து (causal) கருத்துவடிவானதற்கு (ideal) ஏறுகிறார். அங்கு கருத்துவடிவானதற்கும் இயல்மெய்மைக்குமான (factual) ஊசலாட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அங்கிருந்து, முன்வரையறை செய்யப்படாதது (unconditioned) தன் வெறும் இருப்பால் முன்வரையறை செய்யப்பட்டதை (conditioned) காணவும் அறியவும் தேவையான ஆற்றலை அளிக்கும் மெய்மைக்கு (real) செல்கிறார். ஆக, ஒருவர் முற்றறிகையில், அண்டம் ஒரு பிரபஞ்சப் பெண்ணாகிறது. அவர் ஆணாகிறார். தியானிப்பது ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில், எவரும் முழுமுற்றாக ஆணோ அல்லது முழுமுற்றாக பெண்ணோ கிடையாது. இருவரிலும் இருவரும் இருக்கின்றனர்.

இப்பாடலுக்கென, வட்டவடிவ யந்திரத்தில் அமைந்த ‘ஹ்ரீம்’ எனும் மந்திரம் தியானிக்கப்படுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s