சௌந்தர்யலஹரீ – 18

தனுச்சா*யாபி*ஸ்தே தருணதரணிஶ்ரீஸரணிபி*ர்

திவம் ஸர்வாமுர்வீமருணிமனிமக்னாம் ஸ்மரதி ய:

ப*வந்த்யஸ்ய  த்ரஸ்யத்வனஹரிணஶாலீனநயனா:

ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதி கதி ந கீர்வாணணிகா:

பாடல் – 18

ஒளிரும் உன் தளிருடலின் அழகு நிறைக்கும் விண்ணையும்

பகலவன் ஒளியில் செந்நிறமாக ஒளிரும் மண்ணையும்

தியானிப்பவர்

கானகத்தில் உறையும் மான்களின்

மருளும் விழிகொண்ட மாதரையும் 

ஊர்வசி முதலிய அரம்பையர் பலரையும்

ஈர்ப்பதன் விந்தைதான் என்ன!

**

ஞாயிறும் திங்களும் பூமியை அரவணப்பது விண்ணும் மண்ணும் ஒன்றாக இணைவதாக பார்க்கப்படுகிறது. பூமி துவக்கம், சூரியன் முடிவு. விண்ணிலிருந்து ஒளிவடிவில் இறங்கும் கதிர்களுக்கு எதிர்வினையென பூமியிலிருந்து உயிர் தோன்றுகிறது. பூமியை எழச் செய்பவனாக பகலவனை பார்ப்பதுண்டு. காலையில் முதல் செம்மையை கண்டவுடன் புட்கள் இசைக்கத் தொடங்குகின்றன, பூக்கள் மலர்கின்றன, கூடுவிட்டெழுகின்றன தேனீக்கள், அனைத்து உயிரிகளும் நாளின் நிரலுக்கு தயாராகின்றன. உறக்கத்திலிருந்து விழித்தல் என்றால் ஒருவர் கண்களை திறக்கிறார் என்று பொருள். கண்களை திறப்பதென்பது, அசைவிலா இருளிலிருந்து ஆன்மா ஒளியூட்டப்பட்ட இயக்கத்திற்கென எழுவதை குறிப்பது. பகலொளியால் சூரியன் விண்ணையும் மண்ணையும் நிறைப்பதுபோல, நனவிலிருந்து பேரொளியென எழும் ஆன்மா மனதையும் உடலையும் தன் ஒளியால் நிறைக்கிறது. ஆக, இயல் உலகில் பகல் எழுவதால், புலனுணர் உயிரிகளின் அகம் விழித்தெழுகிறது. 

ஒருவர் விழித்ததும் அழகான ஒவ்வொன்றாலும் கவரப்படுகிறார். அழகை அனுபவிக்கும்போதே அதை உரிமையாக்கிக் கொள்ளும் விழைவும் உடன் எழுகிறது. அல்லது அதனுடன் தொடர்புறுத்திக்கொள்ளும் விழைவாவது தோன்றுகிறது. அத்தகைய விழைவுகளும் அதன் விளைவாக எழும் எதிர்வினைகளும் ஒருவரது மனநிலையை மாற்றியமைக்கின்றன. மனநிலைகளில் மிகவும் மகிழ்விப்பதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் இருப்பது சிருங்காரம் எனப்படும் காமமே. சிருங்காரத்தில் இரு துருவமாக்கம் இன்றியமையாதது. எவராயினும், இருவரிடையே அது நடைபெறக்கூடும் என்றாலும், ஒரு இனத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உண்டாகும் இருதுருவமாக்கலே பொதுவானது. ஒருவருக்காக இன்னொருவர் ஏங்குகையில், மக்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன. காதல் என்பது ரசவாதம் போன்றது. ஒருவர் தன்னை முழுமையாக மற்றவருக்கு ஒப்புக்கொடுக்கையில் மற்றவரும் முழுமையாக இவர் வசமாகிறார். இருவரது தன்முனைப்பும் இல்லாதாகிறது. எந்தவொரு உயிரினத்திலும், ஆணும் பெண்ணும், காதல்நிறை அணைப்பொன்றின் வழியே ஒன்றாகிவிடும் உணர்வை பெறும்படியே படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான இணைப்பில் பல தடைகள் ஏற்படுகின்றன. எதிரிணையின் ஆதிக்கத்தால் தான் இல்லாமலாகிவிடுவோம், தன்னை இழந்துவிடுவோம் என்ற அச்சம் அவற்றில் ஒன்று. இப்பாடலில் அது ஒரு உருவகம் மூலம் குறிப்புணர்த்தப்படுகிறது. அச்சம் மீதூற மான் இங்கும் அங்கும் பார்க்கிறது. அதன் விழிகளில் எதிர்பார்ப்பு, அச்சம் என இரண்டும் இருக்கின்றன. ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் அறிய ஆவல் கொள்கின்றனர். அதே நேரம், அடுத்தவர் விரிக்கக்கூடிய வலையையும் அஞ்சுகின்றனர். ஒருவரையொருவர் உரிமைகொள்ள விழைந்தாலும் தப்புவதற்கு ஒரு வழியையும் தேடுகின்றனர்.

மனித இனத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும், ஒருவரையொருவர் ஏற்கவேண்டும் என்பதற்காக பல வழிகளில் தம்மை கவர்ச்சிகரமாக ஆக்கிக்கொள்கின்றனர். நயமற்றவர்கள் முகத்தில் சாயம் பூசிக்கொள்கின்றனர், பகட்டான ஆடை அணிகின்றனர், படாடோபத்தை கைக்கொள்கின்றனர். சிந்திப்பவர்களோ தமது ஒழுக்கத்திற்கேற்ப, மதிநுட்பத்திற்கேற்ப, ஆன்மீகத் தகுதிக்கேற்ப தம் ஆளுமையை மேம்படுத்திக்கொள்கின்றனர். ஆணின் நனவிலியில் இருக்கும் பெண்தன்மைக்கும் (anima) பெண்ணின் நனவிலியில் இருக்கும் ஆண்தன்மைக்கும் (animus) இடையிலான ஊடாட்டத்தை விரிவாக விளக்கியிருக்கிறார் உளவியலாளரான யுங். போஜராஜனின் ‘சிருங்கார பிரகாசம்’ ஆண்-பெண் இடையேயான முரணியக்கம் குறித்த மிகச்சிறந்த விளக்கத்தை தருகிறது. எளிய பெண்ணொருத்தியை விரும்பும் ஆண்மகன், தன்னை அவள் மதிக்கவேண்டும் என விழைகிறான். பெண்ணானவளோ, தான் அரிய நற்குணங்கள் கொண்ட தனித்துவமான பெண் என ஆணை நம்பவைக்க முயல்கிறாள். கவர்ச்சி எனும் களத்தில், போட்டியாளர்கள் பலருண்டு. ஒவ்வொரு கவர்ச்சியோடும் கலக்கமும் நிழலெனத் தொடர்கிறது. காதலர் மனதை பொறாமை எனும் நஞ்சு எளிதாக தீண்டக்கூடியது. எனவே, காதலர் ஒவ்வொருவரும் தான் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில் கருத்தாக இருக்கின்றனர். 

ஆன்மிக மதிப்பு ஏதுமின்றி அழகிய உடல்மட்டும் கொண்ட பெண், யோகிக்கு ஒரு பொருட்டே அல்ல. பேரிறைவியால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதே அவரது நோக்கம். காதலரிடையே, பரஸ்பரம் குறை காண்பது வளர்ந்துகொண்டே செல்வது. மிகச்சிறிய தவறுகூட பெரும் அதிர்ச்சியோடு பார்க்கப்படும். யோகியின் எதிரிணை ஞானத்தின் இறைவியே எனும்போது, அவர் தனது நற்பண்புகளை மேம்படுத்தியபடியே செல்கிறார். ஆனால் இறைவியோ ஒரு ஆள் அல்ல, மண்ணையும் விண்ணையும் நிறைத்திருக்கும் ஒரு எழில் மட்டுமே. அதன் ஊற்றுமுகம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். அதற்கு இணையாக விரும்பும் யோகி, தீவிர தியானம் வழியே பரந்துவிரிந்த தரிசனத்தை பெறுகிறார். முழுமுதலான அழகின் ஊற்றுமுகமே ஒருவரில் நிறையும் என்றால் அவர் எல்லோராலும், குறிப்பாக எதிர் பாலினத்தவரால், அதிலும் பண்பட்ட ரசனைமிக்கவர்களால், மிகவும் விரும்பப்படுகிறார்.

இப்பாடலில் ஊர்வசி பற்றிய சிறப்பான குறிப்பு இடம்பெறுகிறது. நாராயணன் என்ற யோகி கடுந்தவம் புரிந்தபோது, அவர் தன்னைவிட சிறந்தவராகி விண்ணுலகின் தலைமையேற்றுவிடுவாரோ என்று அஞ்சிய இந்திரன், அவரது தவத்தைக் கலைக்க, அவர் காமத்தைத் தூண்டுவதற்கென அரம்பையரை அனுப்பி வைத்தான். அவர்கள் வந்து அவர்முன் பாடியாடினர். கண்களைத் திறந்து பார்த்த யோகி இந்திரனின் சதியை உணர்ந்தார். உடலழகைவிட உயர்ந்த விழுமியங்கள் உண்டு என்பதை இந்திரனுக்கு உணர்த்த எண்ணினார் யோகி. அவர் தன் கையால் தன் தொடையில் தட்டியபோது அங்கிருந்து அரம்பையரும் நெருங்க முடியாத பேரழகுப் பெண்ணொருத்தி தோன்றினாள். தன் தொடையிலிருந்து (ஊரு:) தோன்றிய அழகி என்பதால் அவளுக்கு ஊர்வசி எனப் பெயரிட்டார் அவர். ஒரு யோகி தன் விழைவின் மூலமே பல்லாயிரம் அழகியரை படைத்துவிட முடியும் என்பதை இந்திரனுக்கு உணர்த்த, அவளை அரம்பையருடன் அனுப்பி வைத்தார் யோகி. பாடலின் இறுதிச் சொல்லான ‘கீர்வாணகணிகா’ என்பது பெரும் குறிச்சொல். மிகப் பண்பட்ட அழகியை குறிப்பது. இங்கு அழகெனும் கருத்தாக்கம் மறுமதிப்பீட்டுக்குள்ளாகிறது, புதிய கோணத்தில் உரைக்கப்படுகிறது.

‘காமராஜகூட’த்தில் இச்சாசக்தியாக வீற்றிருக்கும் தேவியை தியானிப்பதால் கிடைக்கும் ஆற்றலோடு தொடர்புடையது இந்த யந்திரம். ‘க்லீம்’ என்பது மைய மந்திரம். முக்கோணத்தின் உச்சியிலிருந்து, கா, ம, தே, வா, ய, நம: என்ற மந்திரங்கள் வலமாக சுற்றிவருகின்றன. ‘க்லீம்’ மையத்தில் இருக்கிறது. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s