ஶ்ரீசக்ர தியானம் – 17

டம், ட*ம், ம்,ட*ம், ணம் அனங்னா குலஸுந்ரீ த்வரிதா

சாவித்ரி அன்னையே, மெய்யான அழகு என்பது எந்த ஒரு பொருளையோ, ஒன்றன் பகுதியையோ சார்ந்ததல்ல. உன் பேரானந்தம் வெளிப்படும் போதெல்லாம், சிறு பொறியளவே ஆயினும், அழகின் தரிசனம் கிடைக்கப் பெறுகிறோம். எழிலூட்டப்பட்ட ஒன்றிலிருந்து உன் அழகை அறியமுடியாதென்பதால், மக்கள் அதை அழகானது என்கின்றனர். மெய்யான அழகு உள்ளத்தில் தோன்றுகையில் கடந்த காலத்தின் வருத்தங்களும் எதிர்காலம் குறித்த பதற்றங்களும் எம்மிலிருந்து மறைகின்றன. அப்போது உள்ளம் ஒரு காட்சியிலிருந்து இன்னொன்றிற்கும், ஒரு கருத்தாக்கத்திலிருந்து மற்றொன்றுக்கும் நேர்கோட்டில் இயங்குவதில்லை. அத்தகைய கிடைநிலையாக்கத்திற்கு பதிலாக, இருத்தல் உணர்வின் இறை மையம் தொடக்கத்திலிருந்து இறுதிக்குச் செல்லும் செங்குத்து நிலையில் தன்னை நிமிர்த்திக்கொள்கிறது. எண்ணுபவனும் எண்ணமும் ஒன்றென ஆகி உன் அழகின் உருவம் தோன்றுகிறது.

இசைகலந்த சொற்களில் சுருதியும் லயமும் பிறழாதவற்றை தேர்ந்தெடுத்து மாலையெனக் கோக்கின்றனர் சாவித்ரியர். தெளிவான மொழியாடல் வான்வெளியை துடிப்புறச் செய்கையில், அதுவரை ஓளிந்திருந்த அர்த்தங்கள் மாயமென வெளிப்படுகின்றன. இசைக்கப்படுவதற்கு முன்பே, உன் அருளால் சொல்லின் இசைச் சீர்மையும், கவித்துவப் படிமமும் ஒன்றெனக் கலந்துவிடுகின்றன. பெருமுயற்சி ஏதுமின்றி, ஒருவரது நாவிலிருந்தோ எழுதுகோலிலிருந்தோ இந்த மாயம் பொங்கிப் பெருகும்போது, தேடல்கொண்டவன் தன்னை அதற்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கிறான். கவியும் அவன் ஆராதகர்களும் களிப்படைகின்றனர்.

கவிகள் எல்லோரும் அழகின் கருவறை முன் வாயில்கள் திறப்பதற்கென கூப்பிய கரங்களுடன் காத்திருப்பர் போலும். ஞானமும் அழகும் தோன்றும் மீஊற்றின் முன் இங்ஙனம் பணிவோடு காத்திருத்தலே தவமெனப்படுகிறது. உளமறியும் அக்கணத்தில் ஒவ்வொருவர் அகமும் பேருவகையால் நிறைகிறது. அழகின் பித்து மீதூறுகிறது. அகத்தூண்டலால் உண்டாகும் களிப்பால் ஆட்கொள்ளப்படுபவரிடமிருந்து பேரெழில் கொண்ட சொற்கள் பெருகுகின்றன. இவ்வுலகம் மண்ணாலும் கற்களாலும் ஆனதல்ல. மானுட நாகரிக வளர்ச்சியில் பல நூற்றாண்டுகளாகத் தோன்றிய பல்லாயிரம் கவிகளிடமிருந்து வெளிப்பட்ட உருவகங்களையும், உவமைகளையும், புனைவுக் கற்பனைகளையும் கொண்டு மிக விரிவானதாக படைக்கப்பட்டதே இவ்வுலகு. 

உன் மணாளனின் டமருகத்திலிருந்து சில மெய்யெழுத்துக்களையும், உயிரெழுத்துக்களையும் மட்டுமே நீ எடுத்துக்கொண்டாய் என்பது விந்தைதான். மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு கவித்துவப் பாதையில் சுற்றிச்சுற்றி வரும்படி அவற்றுக்கிடையில் பொருள்தரும் பிணைப்பொன்றை அளித்திருக்கிறாய். மொழிகளை மட்டும் நீ படைக்கவில்லை. காட்சிகளையும் ஒலிகளையும் கூட்டாக வியந்துபாராட்டும் செயலையும் உருவாக்கியிருக்கிறாய். இமயமலைகளும், மேரு மலைகளும், கைலாய மலைகளும் கண்களால் ஒருபோதும் காணப்படாதவையாக இருக்கலாம். ஆனால் கவியின் விவரிப்புகளாக அவை செவியுறப்படுகையில் கலையார்வலரின் அறிவுக் கண் திறக்கப்பட்டு கவியின் தரிசனம் பகிரப்படுகிறது. நீ எமக்களித்துள்ள சொற்களையெல்லாம் இல்லாமலாக்கிவிடுவாய் என்றால், இவ்வுலகம் சிதைந்து தூள்தூளாகிப் போகும். அற்பமானவையாகத் தோன்றும் இணையிடைச் சொற்களும், முன்னிடைச் சொற்களும் ஒரு சொற்றொடருக்கு இலக்கணரீதியான அறுதிப்பாட்டை மட்டும் அளிப்பதில்லை, காதலரை ஒழிவில்லாமல் பிணைக்கின்றன, எதிரிகளை விலக்கி வைக்கின்றன.

காணப்படுவது சிறிதே, கேட்கப்படுவதே மிகுதி. உன்னை தியானிப்பதன் மூலம், அழியக்கூடிய என் இருப்பு இப்போது அழிவிலா எழுத்தாகி (அக்ஷரம்) விட்டது. மரமும் அதன் தண்நிழலும் போல, ஒளிர்கின்ற ஒலியும் தன்னைத் தானே விளக்கும் அதன் பொருளும் ஒன்றென இருக்கின்றன. கிளைவிரித்து இலைபரப்பும் ஒரு மரம்போல, ஒற்றைச் சொல்லிலிருந்து, புதுச் சொற்களும் புது அர்த்தங்களும் விளைந்துகொண்டேயிருக்கும் மொழித்தொகை பிறக்கிறது.

எம்மால் எட்டமுடியாதது எனினும், உன் அருள்பொழியும் மேன்மைமிக்க உயரம் ஓன்று உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதை ‘பரா’ என்கிறோம். அர்த்தத்தை காணக்கூடிய விழிக்கு அப்பாலான விழி ஏதும் எமக்கில்லை. எனினும், அனைத்துவகை உருவரைகளும் முகிழ்க்கக் கூடிய ஆழ்படிமங்கள் உள்ளன என்ற முடிவுக்கு வருகிறோம். அதை ‘பஶ்யந்தி’ என்கிறோம். ‘பரா’வும் ‘பஶ்யந்தி’யும் எமது துணிபுகள் (presumptions). நீ எம்மிடமிருந்து ஒளித்து வைத்திருக்கும் சொற்பிறப்புக் களத்தை ‘மத்யமா’ என்கிறோம். இனிய இசைமையும், தீவிர ஆற்றலும் கொண்ட, மறுதலிக்கவியலாத ஞானத்துடிப்பை அளிக்கும் பொருத்தமான சொல் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்ற ரகசியத்தை நீ யாரிடமும் பகிர்வதில்லை. ஒரு சொல்லை தெளிவானதாக்க அதை ஒளிர்விக்க உன்னால் இயலும். அச்சொல்லை செவியுற்ற கணமே கேட்பவரின் உள்ளம் உறுதிப்பாடடைகிறது. சொற்களை நீ பண்படுத்தும் ரகசியத்தை என்னவென்பது!

பின்னர் அவற்றை எமது பேச்சுறுப்புக்கு அனுப்புகிறாய். பேசுபவரும் கேட்பவரும் ஒரே நேரத்தில் உன் ரகசியப் படைப்பின் மாயத்தை அடைகின்றனர். இச்சொற்களுடன் நீ எம்மை சந்தைக்குள் அனுப்பி வைக்கிறாய்; அங்கு, உன்னையும் மறந்து, சந்தடி மிகுந்த பேரங்களில் ஈடுபடுகிறோம். உன்னடிகளை பின்தொடர்ந்து புனிதத் தலங்களுக்கெல்லாம் சென்று பக்திப்பாடல்களை செவியுற்று பேருவகையில் நிறைகிறோம். தர்க்கபூர்வமாக மெய்மை விளக்கப்படும் ஞானசபைகளுக்கு எம்மை இட்டுச் செல்கிறாய். ரசித்து மகிழ இசைக் கச்சேரிகளுக்கும், இசை நாடகங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறோம். மானுடர் நிகழ்த்தும் ஒரு இசைநிகழ்ச்சிக்கு பல கருவிகளும் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் தேவை. ஆனால், எமது இசைப் பீடத்தின் அகக் கருவறையில் வீற்றிருக்கும் உனக்கோ மானுடரின் வாயும், நாக்கும், குரல்வளையும் மட்டுமே போதுமானவை. ஒருவர் பாட, பல்லாயிரவர் கேட்க – நீ மகிழ்கையில் எல்லோரும் பேருவகை கொள்கின்றனர். இவ்வாறு, சாலப் பரிந்து எம்மை உன்னுடன் தொடர்புறுத்தும் நீயே அறிவெல்லை கடந்த சாவித்ரீ; அனைத்திலும் திகழும் வஶினீ.

|| டம் ட*ம் டம் ட*ம் ணம் அனங்கமதனா குலஸுந்தரீ த்வரிதா ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s