சௌந்தர்யலஹரீ – 17

Standard

ஸவித்ரீபி*ர்வாசாம் ஶஶிமணிஶிலாப*ங்ருசிபி*ர்

வஶின்யாத்யாபி*ஸ்த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்தா காவ்யானாம் ப*வதி மஹதாம் ப*ங்கிருசிபி*ர்

வசோபி*ர்வாக்தேவீவனகமலாமோது*ரை:

பாடல் – 17

அன்னையே, 

படிகம்போல் ஒளிரும் வஶினீ முதலிய இறைவியரோடும்

சொற்களை உருவாக்கும் ஸாவித்ரீயரோடும் சேர்த்து

உன்னை தியானிப்பவர்கள் 

மாகவிகளின் படைப்புகளால் தூண்டல் பெற்றதுபோன்ற

நூல்களை யாக்கிறார்கள். 

அவர்களது சொற்கள்

சொல்லின் இறைவியாம் சரஸ்வதியின்

எழில்முகத்தின் மணத்தால் நிரம்பியிருக்கின்றன

**

மௌனம் என்பது தனிமையின் இயல்பு. பேச்சு தோழமையின் இயல்பு. “பிறர்” என்பதோடு தொடர்புறுத்திக் கொள்ளவேண்டி வரும்போது “நான்” என்பது தீவிரமாகிறது. வடமொழியில் நான் எனும் நனவு (I-consciousness) ‘அஹம்’ எனப்படுகிறது. பிறர் என்பது ‘இதம்’ எனப்படுகிறது. நான்-பிறர் என்ற இரண்டிற்கிடையில்தான் பெரும்பாலான செயல்பாடுகள் நடைபெறுகின்றன. வடமொழி நெடுங்கணக்கின் முதல் எழுத்தான ‘அ’ மற்றும் இறுதி எழுத்தான ‘ஹ’ என்பவற்றால் ஆனது அஹம் என்ற சொல். இவ்விரண்டு எழுத்துக்களுமே திறந்த வாய்வழியே சொல்லப்படுபவை. அ என்பது உயிரெழுத்து. ஹ என்பது ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிரெழுத்தும் சேர்ந்து அதில் உயிரெழுத்துக்கு அதிக அழுத்தம் கொடுத்து சொல்லப்படுவது. அனைத்துப் பரிமாற்றங்களும் நெடுங்கணக்கின் முதல் எழுத்திற்கும் இறுதி எழுத்திற்கும் இடையே நடைபெறுபவை. கடைசி உயிரெழுத்தான ‘அம்’ என்பதை சேர்த்து அது ஒரு அலகாக்கப்பட்டு ‘அஹம்’ என்றாகிறது. அ, ஹ என்ற இரண்டையும் சொல்லிப் பார்த்தால் அவற்றின் சரியான இயல்பு புரியும். ‘அ’ என்பது வாயில் உருவாவது. ‘ஹ’ என்பதை சொல்வதற்கு இதயத்திலிருந்து கிளம்பும் ஆற்றல் வாய்க்கு கொணரப்பட வேண்டும். ‘அ’ என்பது மென்மையானது; ‘ஹ’ சற்று தீவிரமானது. எனவே, ‘அ’ என்பது சிவ எழுத்து, சிவாக்ஷரம் அல்லது சிவசப்தம் எனப்படுகிறது. ‘ஹ’ என்பது சக்தி எழுத்து, சக்தியக்ஷரம் அல்லது சக்திசப்தம் எனப்படுகிறது. ஆக ஒருவரது வாழ்வின் ஆழ்மையத்தில் உலகின் தந்தையும் தாயும் தலைமைகொள்கின்றனர். அஹம் என்று ஒருவர் சொல்லும்போது அவரையறியாமலேயே சுயத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அன்னையின் கருவறைவிட்டு நீங்கிய உடனேயே முதல் அலறலுடன் தகவல் பரிமாற்றம் தொடங்கிவிடுகிறது. குழந்தைக்குத் தெரிந்த ஒரே மொழி வழியே அதன் வரவு அறிவிக்கப்படுகிறது. அந்த முதல் அலறலிலேயே ‘அ’வும் ‘ஹ’வும் குறிப்பாக சுட்டப்படுகின்றன.

கருப்பையில் கருவாக உருவாகும் முதல் செல்லில் விந்துவும் கருமுட்டையும் இருக்கும். இது சிவ-சக்தி இணைவைப் போன்றதே. கருமையத்திலிருந்தே ஒருவரது உடலும் மனமும் பரிணாமம் அடைந்து, வளர்ந்து, இளமையில் முழுமையடைகிறது. அந்தக் கருமையமே கால-இட வெளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மையப்புள்ளி. முழு உலகும் வட்டமான ஒரு பகுதியென ஆகும்போது அதுவே ஒரு மண்டலமாகிறது. கருமையத்திலிருந்து (பிந்து) புற எல்லை வரை முன்னும் பின்னுமான இயக்கமே நாதம் (ஆற்றலின் ஆதி அதிர்வு) எனப்படுவது. இந்தப்பகுதியில் – மண்டலத்தில் – அமையும் பல்வண்ண ஒழுங்கமைவுகள் (multitudinous patterns) ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை. ஒரு விழுமியத்தை தம்மில் கொண்டவை. இவையே வாழ்வின் கலை எனப்படுகின்றன. 

குழந்தை பிறந்த அன்றிலிருந்தே இயற்கை அன்னை ஒரு ஆசிரியரின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள். குழந்தையை நிரலமைக்கத் துவங்குகிறாள். குழந்தை உயிரெழுத்து ஒலிகளை முழுமையாக அறிந்துகொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை அளிக்கிறாள். மெய்யெழுத்தொலிகளை கற்க அதிக காலம் தேவைப்படுகிறது. தன் சுவாசத்தை நாவு கொண்டு கையாளத் தயாரானவுடன் மெய்யெழுத்தொலிகளை உச்சரிக்கும் குழந்தை சொற்களை கற்கத் தொடங்குகிறது. ஒரு சொல்லை பயில்வதற்கு வெகு முன்பாகவே, பெயரளிக்கப்பட்ட ஒரு பொருளை கூர்ந்து கவனித்து அந்தப் பெயரை உச்சரிக்கும் ஆற்றல் உருவாகிறது. ஒவ்வொரு சொல்லும் ஒரு ஒலித்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதை கேட்டவுடன், கேட்பவர் மனதில் ஒலி பொருளாக வெடிக்கிறது. இப்படி, ஒலி குறிப்பிட்ட, அறுதியான ஒரு பொருளாக வெடிப்பது ‘ஸ்போடம்’ எனப்படுகிறது. மொழியின் இறைவியான சரஸ்வதி ‘ஸ்போட தர்சன கலா குதூஹலா’ என வர்ணிக்கப்படுகிறாள் – ஒலித்தொகுதியில் பொருளை வைக்கும் படைப்புக் கலையில் மகிழ்பவள் அவள்.

வஶினீ, காமேஶ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஶ்வரீ, கௌலினீ என்ற எட்டு இறைவியர் சொல்லுருவாக்கத்தை நிகழ்த்துகின்றனர். பதினாறு உயிரெழுத்துக்களையும் கையாள்வது வஶினீ. ‘க’ வில் தொடங்கும் ஐந்து மெய்யெழுத்துக்கள் காமேஶ்வரியுடையவை. ‘ச’ முதலிய ஐந்து மோதினியை சார்ந்தவை. ‘ட’வில் தொடங்கும் ஐந்து மெய்யெழுத்துக்கள் விமலாவுக்கு ஒதுக்கப்பட்டவை. ‘த’ முதலிய ஐந்து அருணாவுக்கு. ‘ப’ வில் தொடங்கும் ஐந்தும் ஜயினியைச் சார்ந்தவை. ‘ய’ வும் ‘ஶ’வும் சரஸ்வதியின் பொறுப்பு. ஷ, ஸ, ஹ, ல, க்ஷ என்ற ஐந்தும் கௌலினிக்கு ஒதுக்கப்பட்டவை. ‘ல’ வும் ‘ள’ வும் ‘ஹ’ வுடன் சேர்க்கப்படும். ‘க’, ‘ஸ’, ‘ஹ’ மூன்றும் சேர்ந்ததே ‘க்ஷ’ என்பது.

அனைத்துச் சொற்களையும் எட்டு இறைவியர் வடிவமைப்பதாக உருவகித்துக் கொள்வதை ஒரு கவித்துவ வெளிபாடாகக் கருத வேண்டும். இலக்கணமும் தர்க்கமும் உள்ளடக்கிய மொழியியலை நன்கு கற்பதே இந்த இறைவியரே மகிழ்விக்கும். இலக்கணம் தொடரமைப்பைப் பற்றி பேசுவது; தர்க்கம் மெய்யை சரியாக காட்டித்தருவது. வாய்மொழியின் பொருள் கேட்கப்பட்டதையும் தாண்டிச் செல்வது. ஆக, அதற்கொரு  அறிவெல்லை கடந்த நோக்கம் (transcendental purport)  உண்டு. ஒலியில் உள்ள உணர்ச்சிகரமான பண்பே அதன் இசைமை. அது பொருளை உணர்த்துவதோடு அதை மேம்படுத்தவும் செய்கிறது. அழகியலுக்கே அது முக்கியத்துவம் அளிக்கிறது. எனவே, சொல்லின் அக இயங்காற்றலில் அறிவெல்லை கடந்த கூறொன்றும் அழகியல் கூறொன்றும் உள்ளன. 

அழகியலுக்குத் தலைமை வகிப்போர் அறிவின் இறைவியர் பதினறுவர்: வஶினியோடு நேரடியாக தொடர்புள்ள மஹா திரிபுரசுந்தரியும், காமேஶ்வரியும்; காமேஶ்வரியோடு தொடர்புடைய பகமாலினியும், நித்யக்லின்னாவும்; மோதினியுடன் தொடர்புடைய பேருண்டியும் வஹ்னிவாஸினியும்; விமலாவுடன் தொடர்புடைய மஹாவித்யேஶ்வரியும் ஶிவதூதியும்; அருணாவுடன் தொடர்புடைய துவரிதாவும் குலசுந்தரியும்; ஜயினியோடு தொடர்புள்ள நித்யாவும் நீலபதாகாவும்; ஸர்வேஶ்வரியுடன் தொடர்புடைய விஜயாவும் ஸர்வமங்களாவும்; கௌலினியோடு நேரடித் தொடர்புடைய ஜ்வாலாமாலினியும் சித்ராவும். 

இவற்றின் பொதுப்படையான கொள்கைகள் ஒரு மொழியின் தேவைகளுக்கேற்றபடி உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒலிகளில் ஒலியியல் ஆற்றலை சேர்ப்பதற்கு வஶினியால் கையாளப்படும் உயிரெழுத்துக்கள் தேவைப்படுகின்றன. மெய்யெழுத்துக்களை எழுதிவிட முடியும். ஆனால், ஒரு உயிரெழுத்தை சேர்க்காமல் உச்சரிக்க முடியாது. க் + அ = க, க் + இ = கி; க் + உ = கு. ஒலிகளுக்கிடையே தொனி ஒருமைப்பாட்டை சுட்டுபவள் வஶினீ. எந்த மொழியிலும் ஒரு சொற்களஞ்சியத்தை நோக்கினால் சொல்லுருவாக்கத்தில் சில ஒலிகள் ஒருபோதும் இணைக்கப்படாமல் இருப்பதை காண முடியும். இன்னொரு மொழியிலும் அதே போல் இருப்பதை காணலாம். மெய்யெழுத்துக்கள் இணைவதையும் உயிரெழுத்தோடு சேர்ந்த மெய்யெழுத்துக்கள் இணைவதையும் ஒரு அக விதி ஒழுங்கமைக்கிறது. வஶினீ என்பது ஒரு ஆள் அல்ல, ஒலிகளின் இணைவுக் கொள்கை அது. ஒன்றை அடைவதற்கோ அல்லது ஒன்றை செய்துமுடிக்கவோ விழைகையில் தகவல் பரிமாற்றத்திற்கான தேவை ஏற்படுகிறது. மொழிக்கான இந்த அக விழைவு காமேஶ்வரீ என்ற பெயரில் அழகாக வெளிப்படுகிறது. விழைவின் இறைவி காமேஶ்வரீ. சரியான சொல் பேசப்படுகையில் சொல்பவரது இதயமும் கேட்பவரது இதயமும் மகிழ்வடைகின்றன. பேச்சை இனிமையாக்க சரியான ஒலியை தேர்ந்தெடுப்பது மோதினியை சார்ந்தது. மோதினீ என்பவள் மகிழ்ந்திருப்பவள்.

கொச்சையான நயமற்ற சொற்கள் எந்த மொழியிலும் கெடுதலாகவே பார்க்கப்படுகின்றன. மொழியை தூயதாக, தெளிவானதாக காப்பாற்றிக் கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது. இந்தப் பொறுப்பு விமலாவுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. விமலா என்றால் அப்பழுக்கற்ற தூயது என்று பொருள். உணர்ச்சிகரமான மொழியே ஆற்றல் கொண்டதாய் இருக்கும். விடியல் சூரியனின் வரவை அறிவிக்கிறது. அதுபோல, ஒரு சொல், தன்னடக்கம் காரணமாக, பண்பாடு கருதி, உலகியல் சார்ந்து மெல்லிய திரையிடப்பட்டு பேசப்பட்டாலும், சொல்பவரின் நோக்கத்தை குறிப்புணர்த்துவதாய் இருக்க வேண்டும். இந்தக் கடினமான பொறுப்பு, எதிரொளிக்கும் ஒண்சிவப்பு நிறமான அருணாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. சொற்கள் கற்பனைவளம் கொண்டவையாய் இருத்தல் வேண்டும். ஒரு சொல் அடுத்து வருவதை தன்னோடு இயல்பாக பொருத்திக் கொள்வதாய் இருக்க வேண்டும். இதை செய்வது ஜயினி. ஜயினி என்பது ஒலிகளை முயங்க வைக்கும் ஆற்றல். ஒலிகள் தம்முள் முயங்குகையில் புதிய சொல் பிறக்கிறது. உலகம் சொற்களால் ஆளப்படுவது. சொல்லை ஆளும் ஆற்றல், பேரிறையென நின்றிருக்கும் ஸர்வேஶ்வரியிடம் உள்ளது. இறுதியாக, வாய்மொழிக்கு ஒரு அறுதித் தாக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக கௌலினீ ஒவ்வொரு சொற்றொடருக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைக்கிறாள். 

எட்டு சாவித்ரியரும் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றனர். அதேபோல், இந்த மண்டலத்தில் உள்ள பெயர்கள் ஒவ்வொன்றும் சொற்பொருளியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மண்டலத்தின் புற எல்லை பின்வரும் யோகினியரால் காக்கப்படுகிறது: வஶினியோடு தொடர்புடைய வித்யாவும், ரேசகாவும்; காமேஶ்வரியோடு தொடர்புடைய மோசிகா; மோதினியுடன் தொடர்புடைய அம்ருதா; விமலாவோடு தொடர்புடைய தீபிகாவும், ஞானாவும்; அருணாவுடன் தொடர்புடைய ஆப்யா; ஜயினியுடன் தொடர்புடைய வியாபினியும் மேதாவும்; ஸர்வேஶ்வரியுடன் தொடர்புடைய வியோமாவும் சித்தாவும்; கௌலினியோடு தொடர்புடைய லக்ஷ்மி. வாய்மொழி வெளிப்பாடெனும் அறிவியல் மற்றும் கலையின் சுருங்கிய மறைவடிவம் இப்பாடலில் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பொருள் நம் புலன்களுக்கு முன்பாக வைக்கப்பட்டு ஒரு வகைமாதிரி வடிவம் உருவாகிறது. நமது விழிகள் கொண்டு அதை பார்க்கிறோம். வகைமாதிரி பிம்பம் அகவிழியில் கருக்கொள்கிறது. இன்னும் சற்று ஆழத்தில், முன்னரே நிறுவப்பட்ட கருத்து, கட்புலனாவதோடு தொடர்புறுத்திக் கொண்டு அடையாளம் காணப்படுகிறது.  மொத்த நிகழ்வும் தன்னொளி கொண்ட ஆன்மாவால் ஒளியூட்டப்படுகிறது. கட்புலனில் நான்கு படிநிலைகள் உள்ளதைப்போலவே மொழியிலும் நான்கு படிநிலைகள் உள்ளன: உச்சரிக்கப்பட்ட ஒலி, வடிவமைக்கப்பட்ட சொல்லை அடையாளம் காணுதல், அதன் பொருளை புரிந்து கொள்ளுதல், தொடர்பை சாத்தியப்படுத்திய ஆன்மாவோடு பொருந்துதல். இவை முறையே வைகரீ, மத்யமா, பஶ்யந்தி, பரா எனப்படுபவை – மிகப் பருண்மையானது, அறியக்கூடிய வகையில் பருண்மை கொண்டது, நுண்ணியது, மிக நுண்ணியது.

எனவே, மொழியில், ஒவ்வொரு மனதிலும் குடிகொண்டிருக்கும் இணைவுக்கான ஏக்கமே நிறைந்திருக்கிறது. இருவருக்கு அகம் ஒன்றாக இருக்குமென்றால் அந்த அகம் இணைவை விழைகையில் அதனை அக்காதலர்கள் அன்பான அணைப்பின் மூலம், காதல்நிறை முத்தம் மூலம் வெளிப்படுத்த முடியும். மொழி செய்வதும் அதையே.

இறைவியர் தொடர்புடையவற்றோடு, பின்வரும் யந்திரமும், ‘ஐம்’ எனும் மந்திரமும் தியானிக்கப்படுகின்றன. 

ஶ்ரீசக்ர தியானம்

டம், ட*ம், ம்,ட*ம், ணம் அனங்னா குலஸுந்ரீ த்வரிதா

சாவித்ரி அன்னையே, மெய்யான அழகு என்பது எந்த ஒரு பொருளையோ, ஒன்றன் பகுதியையோ சார்ந்ததல்ல. உன் பேரானந்தம் வெளிப்படும் போதெல்லாம், சிறு பொறியளவே ஆயினும், அழகின் தரிசனம் கிடைக்கப் பெறுகிறோம். எழிலூட்டப்பட்ட ஒன்றிலிருந்து உன் அழகை அறியமுடியாதென்பதால், மக்கள் அதை அழகானது என்கின்றனர். மெய்யான அழகு உள்ளத்தில் தோன்றுகையில் கடந்த காலத்தின் வருத்தங்களும் எதிர்காலம் குறித்த பதற்றங்களும் எம்மிலிருந்து மறைகின்றன. அப்போது உள்ளம் ஒரு காட்சியிலிருந்து இன்னொன்றிற்கும், ஒரு கருத்தாக்கத்திலிருந்து மற்றொன்றுக்கும் நேர்கோட்டில் இயங்குவதில்லை. அத்தகைய கிடைநிலையாக்கத்திற்கு பதிலாக, இருத்தல் உணர்வின் இறை மையம் தொடக்கத்திலிருந்து இறுதிக்குச் செல்லும் செங்குத்து நிலையில் தன்னை நிமிர்த்திக்கொள்கிறது. எண்ணுபவனும் எண்ணமும் ஒன்றென ஆகி உன் அழகின் உருவம் தோன்றுகிறது.

இசைகலந்த சொற்களில் சுருதியும் லயமும் பிறழாதவற்றை தேர்ந்தெடுத்து மாலையெனக் கோக்கின்றனர் சாவித்ரியர். தெளிவான மொழியாடல் வான்வெளியை துடிப்புறச் செய்கையில், அதுவரை ஓளிந்திருந்த அர்த்தங்கள் மாயமென வெளிப்படுகின்றன. இசைக்கப்படுவதற்கு முன்பே, உன் அருளால் சொல்லின் இசைச் சீர்மையும், கவித்துவப் படிமமும் ஒன்றெனக் கலந்துவிடுகின்றன. பெருமுயற்சி ஏதுமின்றி, ஒருவரது நாவிலிருந்தோ எழுதுகோலிலிருந்தோ இந்த மாயம் பொங்கிப் பெருகும்போது, தேடல்கொண்டவன் தன்னை அதற்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கிறான். கவியும் அவன் ஆராதகர்களும் களிப்படைகின்றனர்.

கவிகள் எல்லோரும் அழகின் கருவறை முன் வாயில்கள் திறப்பதற்கென கூப்பிய கரங்களுடன் காத்திருப்பர் போலும். ஞானமும் அழகும் தோன்றும் மீஊற்றின் முன் இங்ஙனம் பணிவோடு காத்திருத்தலே தவமெனப்படுகிறது. உளமறியும் அக்கணத்தில் ஒவ்வொருவர் அகமும் பேருவகையால் நிறைகிறது. அழகின் பித்து மீதூறுகிறது. அகத்தூண்டலால் உண்டாகும் களிப்பால் ஆட்கொள்ளப்படுபவரிடமிருந்து பேரெழில் கொண்ட சொற்கள் பெருகுகின்றன. இவ்வுலகம் மண்ணாலும் கற்களாலும் ஆனதல்ல. மானுட நாகரிக வளர்ச்சியில் பல நூற்றாண்டுகளாகத் தோன்றிய பல்லாயிரம் கவிகளிடமிருந்து வெளிப்பட்ட உருவகங்களையும், உவமைகளையும், புனைவுக் கற்பனைகளையும் கொண்டு மிக விரிவானதாக படைக்கப்பட்டதே இவ்வுலகு. 

உன் மணாளனின் டமருகத்திலிருந்து சில மெய்யெழுத்துக்களையும், உயிரெழுத்துக்களையும் மட்டுமே நீ எடுத்துக்கொண்டாய் என்பது விந்தைதான். மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துக்களும் ஒன்றையொன்று பற்றிக்கொண்டு கவித்துவப் பாதையில் சுற்றிச்சுற்றி வரும்படி அவற்றுக்கிடையில் பொருள்தரும் பிணைப்பொன்றை அளித்திருக்கிறாய். மொழிகளை மட்டும் நீ படைக்கவில்லை. காட்சிகளையும் ஒலிகளையும் கூட்டாக வியந்துபாராட்டும் செயலையும் உருவாக்கியிருக்கிறாய். இமயமலைகளும், மேரு மலைகளும், கைலாய மலைகளும் கண்களால் ஒருபோதும் காணப்படாதவையாக இருக்கலாம். ஆனால் கவியின் விவரிப்புகளாக அவை செவியுறப்படுகையில் கலையார்வலரின் அறிவுக் கண் திறக்கப்பட்டு கவியின் தரிசனம் பகிரப்படுகிறது. நீ எமக்களித்துள்ள சொற்களையெல்லாம் இல்லாமலாக்கிவிடுவாய் என்றால், இவ்வுலகம் சிதைந்து தூள்தூளாகிப் போகும். அற்பமானவையாகத் தோன்றும் இணையிடைச் சொற்களும், முன்னிடைச் சொற்களும் ஒரு சொற்றொடருக்கு இலக்கணரீதியான அறுதிப்பாட்டை மட்டும் அளிப்பதில்லை, காதலரை ஒழிவில்லாமல் பிணைக்கின்றன, எதிரிகளை விலக்கி வைக்கின்றன.

காணப்படுவது சிறிதே, கேட்கப்படுவதே மிகுதி. உன்னை தியானிப்பதன் மூலம், அழியக்கூடிய என் இருப்பு இப்போது அழிவிலா எழுத்தாகி (அக்ஷரம்) விட்டது. மரமும் அதன் தண்நிழலும் போல, ஒளிர்கின்ற ஒலியும் தன்னைத் தானே விளக்கும் அதன் பொருளும் ஒன்றென இருக்கின்றன. கிளைவிரித்து இலைபரப்பும் ஒரு மரம்போல, ஒற்றைச் சொல்லிலிருந்து, புதுச் சொற்களும் புது அர்த்தங்களும் விளைந்துகொண்டேயிருக்கும் மொழித்தொகை பிறக்கிறது.

எம்மால் எட்டமுடியாதது எனினும், உன் அருள்பொழியும் மேன்மைமிக்க உயரம் ஓன்று உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். அதை ‘பரா’ என்கிறோம். அர்த்தத்தை காணக்கூடிய விழிக்கு அப்பாலான விழி ஏதும் எமக்கில்லை. எனினும், அனைத்துவகை உருவரைகளும் முகிழ்க்கக் கூடிய ஆழ்படிமங்கள் உள்ளன என்ற முடிவுக்கு வருகிறோம். அதை ‘பஶ்யந்தி’ என்கிறோம். ‘பரா’வும் ‘பஶ்யந்தி’யும் எமது துணிபுகள் (presumptions). நீ எம்மிடமிருந்து ஒளித்து வைத்திருக்கும் சொற்பிறப்புக் களத்தை ‘மத்யமா’ என்கிறோம். இனிய இசைமையும், தீவிர ஆற்றலும் கொண்ட, மறுதலிக்கவியலாத ஞானத்துடிப்பை அளிக்கும் பொருத்தமான சொல் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்ற ரகசியத்தை நீ யாரிடமும் பகிர்வதில்லை. ஒரு சொல்லை தெளிவானதாக்க அதை ஒளிர்விக்க உன்னால் இயலும். அச்சொல்லை செவியுற்ற கணமே கேட்பவரின் உள்ளம் உறுதிப்பாடடைகிறது. சொற்களை நீ பண்படுத்தும் ரகசியத்தை என்னவென்பது!

பின்னர் அவற்றை எமது பேச்சுறுப்புக்கு அனுப்புகிறாய். பேசுபவரும் கேட்பவரும் ஒரே நேரத்தில் உன் ரகசியப் படைப்பின் மாயத்தை அடைகின்றனர். இச்சொற்களுடன் நீ எம்மை சந்தைக்குள் அனுப்பி வைக்கிறாய்; அங்கு, உன்னையும் மறந்து, சந்தடி மிகுந்த பேரங்களில் ஈடுபடுகிறோம். உன்னடிகளை பின்தொடர்ந்து புனிதத் தலங்களுக்கெல்லாம் சென்று பக்திப்பாடல்களை செவியுற்று பேருவகையில் நிறைகிறோம். தர்க்கபூர்வமாக மெய்மை விளக்கப்படும் ஞானசபைகளுக்கு எம்மை இட்டுச் செல்கிறாய். ரசித்து மகிழ இசைக் கச்சேரிகளுக்கும், இசை நாடகங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறோம். மானுடர் நிகழ்த்தும் ஒரு இசைநிகழ்ச்சிக்கு பல கருவிகளும் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் தேவை. ஆனால், எமது இசைப் பீடத்தின் அகக் கருவறையில் வீற்றிருக்கும் உனக்கோ மானுடரின் வாயும், நாக்கும், குரல்வளையும் மட்டுமே போதுமானவை. ஒருவர் பாட, பல்லாயிரவர் கேட்க – நீ மகிழ்கையில் எல்லோரும் பேருவகை கொள்கின்றனர். இவ்வாறு, சாலப் பரிந்து எம்மை உன்னுடன் தொடர்புறுத்தும் நீயே அறிவெல்லை கடந்த சாவித்ரீ; அனைத்திலும் திகழும் வஶினீ.

|| டம் ட*ம் டம் ட*ம் ணம் அனங்கமதனா குலஸுந்தரீ த்வரிதா ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s