ஶ்ரீசக்ர தியானம் – 16

ஆம் புத்த்*யாகர்ஷிணீ

படைப்பூக்கத்தைத் தூண்டும் இறைவியே! நுண்ணிய உணர்திறன் கொண்ட கவிஞரும் ஓவியரும் பகலில் கதிரவனின் பொற்கிரணங்களால் மெல்ல தூண்டப்படுகையில் அழகிய மலைகளையும் அல்லிமலர்கள் நிரம்பிய நீர்நிலைகளையும் கண்டு மனஎழுச்சி கொள்கின்றனர். வாழ்வுண்மைகள் எல்லாம் அழகின் ஆகச்சிறந்த அடையாளங்களை குறிப்புணர்த்தும் கருவிகளாக மாறுகின்றன. 

தாமரைப் பொய்கையில் பிறந்தவனைப் போல, ஒவ்வொரு காலையிலும் விழித்தெழுகையில் உன் காலடியில் அமர்ந்து ஞானமளிக்கும் உன் சொற்களை கேட்கவேண்டும் என்ற உறுதிப்பாடோடுதான் எழுகிறேன். உனது அருஞ்சொற்கள் அறிவொளியற்ற கானகத்தில் விழுந்து வீணாகிவிடக்கூடாது என்பதில் நீ கருத்தாக  இருக்கிறாய். ஒவ்வொரு நாளும் என் அறிவுபெறும் திறனை மேம்படச் செய்கிறாய். உனது அரும்பெரும் சொற்களின் மறைக்கூற்றுகளில் உள்ள மிக நுண்ணிய குறிப்புணர்த்துதல்களையும் புரிந்துகொள்ளும்படி என் மதியை கூராக்குகிறாய். காலையில் எழும் ஞாயிறு கீழ்வானில் பூசும் ஒண்சிவப்புச் சாயம், நீ இங்கோ அங்கோ இருக்கும் ஒரு மானுட வடிவல்ல என்பதை, உவகை தரும் எண்ணமும் ஊக்கம் தரும் சொல்லும் கலந்த கலவை நீ என்பதை, கவித்துவமாக சொல்கிறது.

உலகெங்கும் உள்ள பொய்கைகளில் பல்லாயிரம் தாமரைகள் பூக்கின்றன. எண்ணிலடங்காமல் பூக்கும் அவை ஒவ்வொன்றும் தன்னை உனக்கே அர்ப்பணிக்கின்றன. நீயோ அவை ஓவ்வொன்றையும் தனித்தனியாக முத்தமிடுகிறாய். இத்துணை கருணை கொண்டவளாய் நீ இருக்கையில் நான் ஒருபோதும் கைவிடப்பட்டவனாய் உணர்வதில்லை. உன் அருள்பெற்று மகிழும் ஒவ்வொருவரும் எனது உடன்பிறந்தோராகின்றனர். இரவில் இம்மரங்களும், பாறைகளும், மலைகளும், ஓடைகளும், குளங்களும், அல்லிகளும் எல்லாம் தெளிவற்ற இருள் குவைகள் என இருந்தன. பகலவன் தோன்றி தன் பொன்விரல்களால் ஒவ்வொரு மலரின் இதழ்களையும் மென்மையாக்குகிறான். ஒவ்வொரு மரத்தின் இலைகளையும் ஒளிரச் செய்கிறான். நீலக் கரும்பாறைகள்கூட சிவப்பும் பொன்னிறமும் பூசப்படுகின்றன. இவையெல்லாம் தம் அழகெனும் களியாட்டின் மூலமே உன் இருப்பை போற்றுகின்றன. இந்தக் களியாட்டில் பங்கெடுப்பதே உன் எல்லையிலா பேருவகையை உன்னோடு பகிர்ந்துகொள்வதற்குத்தான்.

கவிஞரும் இசைவாணரும் உவகையோடும் துயரோடும் பாடிச் செல்லும் உளநிலைகளை எல்லாம் உன் எண்ணற்ற முகங்கள் மூலம் உலகுக்கு காட்டுகிறாய். கடந்தகாலமும், நிகழ்காலமும், எதிர்காலமும் அழியா நிகழ்காலமென மாறுகின்றன. உன் மகவுகளுக்கு நீ அளிக்கும் ஆன்மீக காலமும் இடமும் நெரிசலை ஏற்படுத்துவதில்லை. ரிஷிகளும், யோகிகளும், அவதூதர்களும், அருளப் பெற்றவர்களும் உன்னுடையதைப் போன்ற முகத்தைப் பெறும் வாய்ப்பை வரமாகக் கொண்டுள்ளனர். பல்லாயிரம் ஆடிகளில் எதிரொளிக்கும் ஒற்றை விளக்கொளி போல ஒவ்வொரு அகத்திலும் அறிவொளியைத் தூண்டுவது உன் ஒளியே.

இணையிலா உனதழகால் அகத்தூண்டல் பெறும் பிரம்மன் உனது பிற பண்புகளில் ஒன்றை வெளிக்கொணர்கிறான். இப்படியாக நீ அனைத்துப் படைப்பூக்கத்திற்கும் தாயென ஆகிறாய். அறிவியலுக்கும் கவிதைக்கும் வற்றாத ஊற்றுமுகமாய் இருப்பது நீயே. உனது வீணையின் நரம்புகளில் உன் தளிர்விரல்கொண்டு மீட்டி இவ்வுலகை இன்னிசையில் ஆழ்த்துகிறாய். என்றும் உள்ள உனது இருப்பு எனும் கோயிலில் அமைதியாக அமர்ந்தபடி நான் எனது வீணையின் நரம்புகளை மீட்டிக்கொண்டிருக்கிறேன். என்னையும் எனது வீணையையும் என்றும் என்னுள்ளுறையும் உன் இருப்பாகவே மாற்றிவிடுகிறாய். எத்துணை கருணை கொண்டவள் நீ! பலகோடி முகங்கள் கொண்டிருந்தாலும் நீ என்னை அணைக்கையில், கொஞ்சி முத்தமிடுகையில் அது உனது சாரமாக இருக்கிறது.

எல்லோரும் செய்வதுபோல நான் தோட்டத்திலிருந்து மலர்கொண்டு உனக்கு படைப்பதில்லை. வீணையின் நரம்புகளில் முகிழ்க்கும் இசைமலர்களை பெரும் பக்தியோடு உனக்குப் படைக்கிறேன். உன் கருணை தரும் அகத்தூண்டலால் நான் அடையும் இசை அனைத்தையும் தூய்மைப் படுத்தும் கங்கையைப் போன்றது. அந்தப் பெருக்கை அனைத்து இதயங்களிலும் நிரப்பும் கருவியாக நான் ஆகிறேன். ஆக, இசைப்பவனுக்கும் இசைக்கும் கேட்போருக்கும் இடையே எந்த வேறுபடுத்தலும் இல்லை. தூய்மை மட்டுமே திகழ்கிறது.

நாளுக்கு நாள் இவ்வுலகை மேன்மேலும் அருளப்பட்டதாக்குகிறோம். ஒரே சமயத்தில் விடுதலையுணர்வையும், நிறையுணர்வையும் அளிக்கக்கூடிய ஒற்றை எழில் ஒன்றை அறுதியாகப் புரிந்துகொள்வதன் மூலம் அன்பில் முற்றாக மூழ்கிப்போகும் நாளை எதிர்நோக்கியிருக்கிறோம். ஒரு சிறு தீப்பொறி அளவுக்கே அறிவுத்திறம் கொண்டோரையும் பொன்னெனக் காத்து அவர்களில் உள்ள மங்கலான அப்பொறியை, உலகையே ஒளிர்விக்கும் பெருந்தீயென வளரச் செய்கிறாய். உன்னை நோக்கி திரும்பிய, நயமற்ற, மாசுநிறைந்த இதயத்தைக் கூட தூய்மைப்படுத்தி அன்பு செய்யும் கருவியாக மாற்றிவிடுகிறாய். உன் அன்பை ருசித்தவர் எவராயினும் மெய்யான அன்பு என்பதை அறிந்தவராகிறார். இவ்வுலகு உன் எழிலை நாடுவதை என்றும் ஒழியப் போவதில்லை. எழில் என்பதை மீறிய மெய்யொன்றில்லை. அதை உணர்வதே அன்பெனும் பேரொளியில் ஒன்றெனக் கலப்பது. 

எல்லா நாடுகளையும், பண்பாடுகளையும் சேர்ந்த, எல்லா வயதினரும் அருளப்பட்டவர்களாக உன் அவையில் கூடி நிற்கின்றனர். அந்த அவையில் பங்குபெறுவதே ஒருவர் பெறும் அருள்தான். அதன் மூலம் என்றுமுள்ள உன் இருப்பின் தூய காலத்தில் நாங்கள் வாழ்கிறோம்.

|| ஆம் புத்த்யாகர்ஷிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s