ஶ்ரீசக்ர தியானம் – 15

இம் அஹம்காராகர்ஷிணீ

பெண்ணெனும் ஆழ்படிமமாக விளங்கும் அன்னையே, சதாசிவனின் அறியவொண்ணா ஒளிர்வு உன் எதிரொளிக்கும் மனதில் பதிகையில் இயல்நிகழ்வின் முதல் சிற்றலை, அகம் என, ‘நான்’ எனும் நனவு என தோன்றுகிறது. அதன் தொடர்ச்சியாக உன் அழகுணர்வின் படைப்பாக மொத்த அண்டமும் எழுகிறது. ஆக, முழு அண்டத்திற்கும் மையப்புள்ளியென நீ திகழ்கிறாய். துடிப்புடைய லயத்துடன் பருவங்கள் மாறுகையில், ஒவ்வொரு பருவத்திற்குமென நீ மறைத்து வைத்த மாயங்களை உலகுக்கு காட்டுகிறாய். பருவமாற்றம் மூலம் நீ காட்டும் இன்ப-துன்ப மெய்யியல் கலைஞர்களும் கவிஞர்களும் என்றென்றும் கையாளும் கருவாகத் திகழ்கிறது.

மாறுபாடுகளை நீ விரும்புகிறாய். இளவேனிற்காலத்தில் மரங்களிலும் கொடிகளிலும் மலர்கள் செறிந்திருக்கச் செய்கிறாய். கோடை வருகையில் அம்மலர்களையெல்லாம் உதிர்த்து அவற்றினிடத்தில் இனிய கனிகளையும் உணவாகக் கூடிய கொட்டைகளையும் வைக்கிறாய். கூதிர்காலத்தில் செழிப்பான பயிர்களில் வளமான விளைச்சலை அளிக்கிறாய். உலகிற்குத் தேவையானபோதெல்லாம் விண்ணில் மேகத்தைத் திரட்டி  மழைபொழியச் செய்கிறாய். இளவேனிலிலும் கோடையிலும் உன்னையறிந்தவர்களால், பனிக்காலத்தில் மரங்களையெல்லாம் இலையுதிர்க்கச் செய்து அவற்றின் கிளைகளையும் கொம்புகளையும் ஒளிரும் பனித்துகள்களால் மூடிமறைக்கும் உன்னை புரிந்துகொள்ளவே முடிவதில்லை. 

பிறப்பு, வளர்ச்சி, பரிணாமம், சிதைவு, முடிவு என நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்வுநிரலை வைத்திருக்கிறாய். ஒவ்வொரு உயிரியின் வாழ்நாளும் முன்னறிவுடனும் நுழைபுலத்துடனும் வகுக்கப்பட்டுள்ளது. உன் படைப்பிலேயே மிக அழகிய உயிரிகளுக்கு ஒரு நாளோ அல்லது சில மணித்துளிகளோ மட்டும் வாழ்வென அளிக்கிறாய். உன் குழவிகளான ஓய்வறியா மானுடர் தன்னலத் தேட்டத்தில் அறுபது முதல் நூறு வருடங்கள் வரை திளைத்திருக்க அனுமதிக்கிறாய். செகோயா மரங்களைப்போன்ற அமைதியில் ஆழ்ந்திருக்கும் உயிர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வளிக்கவும் நீ தயங்குவதில்லை.

தாயே, கவிஞர் மகிழ்ந்து பாடவும் அறிவியல் வளர்ச்சியை வரலாற்றாசிரியர் பதிவுசெய்யவும் வேண்டி நீ காத்திருப்பதில்லை. மாறாக ஒளி நோக்கி வளரும் உன் குழவிகளுக்கு ஞாயிறு உதிப்பதில் தொடங்கும் ஒரு நிகழ்வுநிரலை காட்டுகிறாய். நிலவொளியின் அரவணைப்பில் புவியீர்ப்பு நோக்கி வளரும் குழந்தைகளுக்கு வேறு பாடங்கள் வைத்திருக்கிறாய். மூவுலகையும் எழிலூட்டுபவள் நீ என்பது தெளிவு. உன் பிறப்புறுப்பில் மறைத்துவைத்து காமம் எனும் இன்தேறலை கொணர்கிறாய். உனது ரகசிய அறைகளிலிருந்து சிவ-சக்தியின் புனித உருக்களை வெளிப்படுத்தி உலகை வியப்பிலாழ்த்துகிறாய். ஆக, காமத்திலிருந்து உதிக்கிறது படைப்பெனும் களியாட்டம்.

உன் இறைவனுடன் நீ ஆடும் காதல் விளையாட்டுகளில் உன் முலைகளே களிப்பந்துகள்.  அந்த ஆடல் முடிந்தபின் அதே முலைகளை இனிய பால் நிறைந்துவழியும் தேக்கமாக மாற்றுகிறாய். அதன் வழியே மொத்த உலகும் உன்னை பேரன்னை என போற்றச் செய்கிறாய். உன் இறையை நீ முத்தமிடுகையில், அவனது உடலெனும் சட்டகம் உனக்கும் உன் மனங்கவர்ந்தவனுக்கும் இடையிலான ஒரு சுவரெனத் தோன்றுகிறது. உன் ஆன்மாவை சுவாசமென வெளியிட்டு அவனது உயிர்மூச்சுக்குள் நுழைய முயல்கிறாய். பின் உன் இறையின் உயிர்மூச்சோடு கலந்து உன்னையே சுவாசமென உள்ளிழுத்துக் கொள்கிறாய். காதல் கலப்பின் மூலம் உங்கள் இருவரிலிருந்து புதியதொரு மானுடன் பிறக்கிறான். அதே உதடுகளிலிருந்து உன் குழந்தையின் முதல் மழலை வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் முழுக்க நாள்தோறும் ஆற்றவேண்டியவற்றிற்குத் தேவையான கருவியாக அதுவே அமைகிறது. ஆக, எமக்கு வற்றாத இன் தேறல் நீயே, நில்லாது பாயும் பாலாறு நீ, இனிய தேனும் நீயே. மலரின் புல்லிவட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தேன் போல, உனது மொழியிலிருந்து பிறக்கும் சொல் ஒவ்வொன்றும் வற்றாத ஞானம் எனும் தேனை தன்னில் கொண்டுள்ளது. 

வேத பிராமணங்களில் ‘சோமம்’ என்று போற்றப்படுவது ஓவியரும் கவிஞரும் இசைவாணரும் கொள்ளும் பேருவகை. அதை பிறருக்குக் கடத்திவிட தூரிகையும், சொல்லும், குரலும் போதாதென்று அவர்கள் தவிக்கின்றனர். ஆனால் இவையெல்லாம் முழுமையாக நேரடியாக எனக்குக் கிடைப்பதற்குக் காரணம் உன் அழகூட்டும் ரகசியத்தின் சுவையை நீ எனக்கருளியிருப்பதுதான் போலும். கடந்துசெல்லும் ஒவ்வொரு கணமும் என் தன்முனைப்பு தன்னை உன்னுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது. நம்மிடையே ஒரு பரஸ்பரக் கவர்ச்சி இருக்கிறது!

பாலை நிலத்தில் ஓடிச்செல்லும் ஆறு விரைவிலேயே விடாய்கொண்ட மணலில் மறைந்துபோகும். அதுபோல, அலகிலா வெளியும், சென்று மறையும் காலமும் கொண்ட பாலை நிலத்தில் நான் கடந்துசெல்கிறேன். பனித்துளியைப் போல ஆவியாகி நீலவானில் மறைந்துபோகிறேன். என் தன்முனைப்பெனும் அடையாளம் இல்லாதாகும்போது நான் உன் எண்ணங்களில் மறைந்து உனது புத்தம்புதுக் கனவுகளென மீண்டும் மீண்டும் பிறப்பேனாக! நான் பிறந்த நாள் முதல் என் தாய் அன்புடன் தாலாட்டுப் பாடி என்னை தொட்டிலிலிட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள். உன் அன்பெனும் ஒளியால் நீ என்னை நிறைப்பதற்கு ஒரு கருவியென இருந்தவள் அவள். நான் என் தன்முனைப்பில் மகிழ்ந்திருக்க வேண்டுமென்றால், எனக்கு மெய்யறிவன் என்ற தகுதியை அளிப்பாயாக! என்னை கருணைச் செயல்கள் புரிபவனாய் ஆக்குவாயாக! என் செல்வத்தை பிறருடன் பகிர்ந்துகொள்வதில் மகிழச் செய்வாயாக!

|| இம் அஹம்காராகர்ஷிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s