சௌந்தர்யலஹரீ – 15

ஶரஜ்ஜ்யோத்ஸ்னாஶுப்*ராம் ஶஶியுதஜடாஜூடமகுடாம்

வரத்ராஸத்ராணஸ்ப*டிகக*டிகாபுஸ்தககராம்

ஸக்ருன்ன த்வா நத்வா கத*மிவ ஸதாம் ஸம்னிதத*தே

து*க்ஷீரத்ராக்ஷாமது*ரிமாது*ரீணா ப*ணிதய:

பாடல் – 15

கூதிர்ப்பருவ நிலவின் ஒளி கொண்டவளே

பிறைநிலவை முடிமேல் சூடியவளே

உன் கரங்கள் அருளலும் அஞ்சலும் காட்டுகின்றன

ஒரு கையில் படிகமாலையும்

இன்னொன்றில் சுவடியும் ஏந்தியிருக்கிறாய்

உன் முன் வந்து வணங்கும் நல்லோர்

தேனினும் பாலினும் தேறலினும் இனிய 

உன் சொற்களை தவறவிடுவரோ

**

மனிதகுலம் ஆன்மாவின் உள்ளுறையும் நனவிலிக்கும் (அறிவெல்லை) கடந்த மீநனவுக்கும் இடையில் வாழ்கிறது. நனவும் கனவும் மாறிமாறி நிகழ்கின்றன. நோக்கிநிற்கும் அகத்தின் 8 என்ற வடிவிலான இயக்கத்தில் விழுமியம் அல்லது ஆர்வத்தின் அறுபடாத பட்டிழையாக உள்ளது தூய மகிழ்ச்சி (ஆனந்தம்). குண்டலினியால் தோன்றும் நுண்ணிய படைப்பூக்கமும் திரிபுரசுந்தரியால் தோன்றும் பிரபஞ்சப் படைப்பூக்கமும் ஒரே அமைப்பின் எதிரிணைகளாக முன்னர் விளக்கப்பட்டன. இரண்டுமே ஆழ்படிம அன்னையின் கூறுகள்தான். மாண்டூக்ய உபநிடதத்தில் கூறப்படும் பிரம்மனின் நான்கு கரங்களைப் போலவே, ஆழ்படிம அன்னைக்கும் காளி, துர்க்கை, சரஸ்வதி, லக்ஷ்மி என்ற நான்கு கூறுகள் உண்டு. காளி செங்குத்தான எதிர் அளவுக் கோட்டையும் (vertifal minus pole) துர்க்கை செங்குத்தான நேர் அளவுக் கோட்டையும் (vertical plus pole) குறிப்பவை. அவற்றை துவக்கம், முடிவு என்றும் கூறலாம். அதேபோல், சரஸ்வதி கிடைநிலை அச்சின் எதிர் அளவுக் கோட்டையும் லக்ஷ்மி நேர் அளவுக் கோட்டையும் குறிப்பவை. இப்படி நான்காக பகுத்தாலும் ஆழ்படிம அன்னையின் ஒருமை குலைவதில்லை. நான்கில் எந்தக் கோட்டுடனும் அடையாளப்படுத்தப்படாவிட்டாலும் செங்குத்தையும் கிடைநிலையையும் நிறைக்கக்கூடியவள் அவள். இரண்டிலும் உள்ள படைப்பின் செங்குத்துத் தன்மையை ஒரே அமைப்பில் வைக்கும்போதுதான் திரிபுரசுந்தரியுடையதும் குண்டலினியுடையதுமான இயக்கத்தை நம்மால் சரிவர புரிந்துகொள்ளமுடியும். இறையோடு சேர்ந்து மனிதனும் படைப்பாளியாகும் ரகசியத்தை நாம் இதிலிருந்து அறியலாம். ஞாயிறும் திங்களும் உலக விரிவை ஒளியூட்டுகையில் தோன்றும் வண்ணமயமான காட்சியை காண்பவை மானுடர் கண்களே. உலகை படைப்பது இறை, அதன் மதிப்பை உணர்பவர் மனிதர். ஆக, இறை கவிஞன் என்றால் மானுடனே விமர்சகன்-ரசிகன். இறை உருவாக்கும் எழிலை கண்டு, ரசித்து, வாழ்வது மனிதகுலம். 

சௌந்தர்யலஹரீயில் இறை என்பது ‘அவள்’, ஆண்மை நிறைந்த ‘அவன்’ அல்ல. அப்பெரும் படைப்பாளினி கொண்டிருக்கும் அதே நோக்கமும் இயக்கமும் கொண்ட ஒருவரால்தான் அவளது அமைப்புசார் பாதிப்புகளை (structural implications) உருவகித்துப் பார்க்க முடியும். பேரன்னையின் நோக்கத்திற்கும் இயக்கத்திற்கும் பின்னால் உள்ள ரகசியத்தை தியானிப்பவருக்கு கடத்துவதற்காகவே இங்கு அவள் காளி, துர்க்கை எனவும், சரஸ்வதி, லக்ஷ்மி என்றும் நான்குவிதமாக உருவகிக்கப்படுகிறாள்.  ஒருவர் தன்னை செங்குத்தான ஏற்றத்தின் துவக்கப் புள்ளியில் வைத்து தியானத்தை துவங்கவேண்டும். இது, அறியா அருட்கரமொன்றைத் தவிர ஏதுமற்ற, அடர் இருளில் அமர்ந்திருப்பது போன்றது. அக்கரம் நமது அச்சத்தை போக்குகிறது. உள்ளுறையும் அமைப்பில் உள்ள படிகளை பின் தொடர்வதற்கு மனப்பூர்வமாக நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். ஆழுறக்க நிலையில் நாம் ஆழ்ந்திருக்கையில் வாழ்வின் ரகசியத்தையும் மரணத்தின் ரகசியத்தையும் நனவிலி காத்துநிற்கின்றது. அந்நனவிலியிலிருந்து ஒவ்வொரு நாளும் துளித்துளியாக அகவயக் கனவுகளோ, நனவனுபவங்களோ  வெளியேற்றப்பட்டு நினைவின் கிடங்கில் அவை சேமிக்கப்படுகின்றன. அகம் தொடர்ந்து தனிப்படுத்தப்படுவதன் காரணி இது.

படைப்பின் பெரும் ரகசியத்தை இயற்கையில் உள்ள ஒரு உவமை கொண்டு சற்று தெளிவாக விளக்கலாம். நம் தோட்டத்தில் நிற்கும் பூச்செடிகள் ஒரு ஓவியத்தில் உள்ளதைப் போல தோற்றம் அளிக்கின்றன. ஆனால் அவற்றின் ரகசியத்திற்குப் பின்னால், சூரியனிலிருந்து இறங்கும் கதிர்களுக்கும் நிலத்திலிருந்து எழும் ஈரப்பதத்திற்கும் இடையே ஒரு கூட்டுச்சதி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நிலத்திலிருந்து உப்புகளும் தாதுக்களும் நீர்மையாக்கப்பட்டு உயிர்ச்சாறாக இலைகளில் ஏறுகின்றன. அங்கே அவை இணைந்து சூரிய ஆற்றலின் உதவியோடு புதிய வடிவம் கொள்கின்றன. அந்த இணைவில் புதிய இலைகள் மலர்ந்து ஒவ்வொரு தாவர இனத்தின் பண்புக்கேற்றவாறு வெவ்வேறு வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட மலர்கள் தோன்றுகின்றன. இம்மலர்களுக்கான மூலப்பொருளாக மண்ணில் நாம் காண்பது வெறும் தூசு மட்டுமே. அந்தத் தூசிலிருந்து முகிழ்ப்பது ஒப்பிலா எழில். தாவரத்தில் காணப்படுவதை ஒருவர் தனது அமைப்புக்குள் வைத்துப் பார்த்தால் இருண்ட நனவிலியில் உறைவதிலிருந்து  தோன்றும் உள்ளுணர்வு, உணர்ந்தறியும் மனங்களில்  எப்படி தோன்றுகிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும். அந்த உள்ளுணர்வுகளே நம்மை, பொதுவாக அணுகமுடியாத, அறிவெல்லை கடந்த மண்டலங்களுக்கு இட்டுச்செல்லும்.

துர்க்கை அணுக முடியாதவள். அவள் (அறிவெல்லை) கடந்த நிலையின் உச்சம். காளி உள்ளுறைவதன் ஆழம். துவக்கத்திலிருந்து முடிவுக்கு இட்டுச்செல்லும் படிகள், காரணத்திற்கும் விளைவுக்கும் இடையில் உள்ளதைப் போன்றவையே. அன்றாடம் நிகழும் இந்த ஏற்றத்தில், கனவுகளும் நடைமுறைகளும் அரங்கேறும் இயல் மேடையை நாம் கடந்து செல்கிறோம். இங்குதான் வாழ்வின் மெய்மையும் அதன் நடைமுறை மெய்மையும் எதிரெதிரே எதிரொளிப்பாகவும் நடைமுறையாகவும் நிற்கின்றன. எதிரொளிப்பில் படைப்பாளினி அழகின் பேரன்னையாகிறாள். அவள் தூண்டுகோலாக செயல்பட்டு, செங்குத்தான ஆனந்தம் பெயர்களும் வடிவங்களுமாக மெய்ப்படும்படி செய்கிறாள். முந்தைய பாடலில் வெளியிடப்பட்ட இந்த ரகசியத்தில்தான் படைப்பாற்றலின் ஆறு ஊற்றுமுகங்கள் உள்ளன. பல மந்திரங்கள் மூலம் சொல்லின் இயங்காற்றல் குறியீடுகளாக வெளிப்படுகின்றன. சரஸ்வதியின் தூண்டல் மூலம் கவிஞனோ பிற படைப்பாளியோ பெறுவது இங்கு-இப்போது அழகின், நயத்தின், செல்வத்தின் இறைவியான லக்ஷ்மியில் மெய்ப்படுகிறது. கனவும் விழிப்புநிலையும் போல இந்த இயல்நிகழ்வும் நிலையற்றது. தவமெனும் பெருமுயற்சியால் அனுபவத்தின் சாரம் செங்குத்தாக்கப்பட்டு கடந்த நிலைக்கு ஏறவில்லையென்றால், ஊற்றின் நீர் மீண்டும் அதன் தோற்றுவாய்க்கே செல்வதுபோல, இங்கு-இப்போது மெய்ப்படுவது மீண்டும் துவக்கத்திற்கே செல்கிறது.

படைப்பாளினியின் நான்மடிப்புக் கூறுகள் இணைந்த சித்திரம் இந்தப்பாடலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆழ்படிம அன்னையின் நான்குவித பண்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. கூதிர்ப்பருவ நிலவொளி பின்னணியாக உள்ளது. அது லக்ஷ்மியின் அழகை குறிப்பது. பின்னலிட்ட முடியுடன் பிறைநிலவை சேர்த்திருப்பதில் காளியும் துர்க்கையும் இணைந்திருப்பதை காணலாம். அஞ்சேல் என்று அருள்வது துர்க்கை, புகலிடம் தருவது காளி. தியானத்திற்கான படிகமாலையும் ஏடும் சரஸ்வதியிடமிருந்து வருவன. தேனின், பாலின், திராட்சையின் இனிப்பு மூலமாக பேரொளியில் பங்குபெறுவது குறிப்பிடப்படுகிறது. இம்மூன்று விழுமியங்களும் தெய்வீகப் பெண்மையைச் சார்ந்த நிலைபெற்ற கொடைகள். ஞானத்தை கற்பிக்கும் முதல் ஆசிரியர் அன்னை. வாய்மொழியின் மது அவள் உதடுகளில் உறைகிறது. அவள் முலையில் வாழ்வாதாரமென பால் சுரக்கிறது. அவள் பிறப்புறுப்பில் காதலின் இன்தேறல் காமத்தீக்கொழுந்தாக சுடர்கிறது. அவள் காமத்திலிருந்து உயிரிகள் தோன்றுகின்றன, ஊட்டமளிக்கும் அவளது பால்கொண்டு வாழ்கின்றன, அவளது ஞானத்தால் வழிநடத்தப்படுகின்றன. உள்ளுறைவதன், (அறிவெல்லை) கடந்ததன் பேரெழில் ரகசியத்தை அறியவிரும்புவோருக்கென இப்பெரும் தியானம் அளிக்கப்படுகிறது. 

கீழே கொடுக்கப்பட்டுள்ள யந்திரம், இப்பாடலோடும் ‘ஸம்’ எனும் மந்திரத்தோடும் தியானிக்கப்பட வேண்டியது. இங்கு தேவியானவள் க்ரியாசக்தியின் (கவித்திறனின் ஊற்றுமுகமாக) வடிவுகொண்டிருக்கிறாள். 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s