க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத்விஸமதி*கபஞ்சாஶதுதகே
ஹுதாஶே த்வாஷஷ்டிஶ்சதுரதி*கபஞ்சாஶதனிலே
திவி த்வி:ஷட்த்ரிம்ஶன்மனஸி ச சது:ஷஷ்டிரிதி யே
மயூகா*ஸ்தேஷாமப்யுபரி தவ பாதாம்புஜயுகம்
பாடல் 14
நிலத்தில் (மூலாதாரம்) ஐம்பத்தாறு, நீரில் (மணிபூரகம்) ஐம்பத்திரண்டு
தீயில் (ஸ்வாதிஷ்டானம்) அறுபத்திரண்டு, காற்றில் (அநாஹதம்)
ஐம்பத்திநான்கு
வெளியில் (விஶுத்தி) எழுபத்திரண்டு, மனதில் (ஆஞா) அறுபத்திநான்கு
இக்கதிர்களுக்கு மேலே உள்ளன உன் தாமரை இணையடிகள்
**
பிரம்மனால் படைக்கப்பட்டு, விஷ்ணுவால் காக்கப்பட்டு, சிவனால் சாம்பலாக ஆக்கப்படும் இயல் உலகு பேரன்னையின் காலடியில் இருந்து எடுக்கப்பட்ட துகள்களால் ஆனது. இப்பாடலில், படைப்பவன் மேல் ஏற்றப்பட்ட மனிதப்பண்பு நீக்கப்பட்டு அகப் பிரபஞ்ச அமைப்புக்கும் அதற்கேற்ற செயல்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மெய்த்தேடல் கொண்ட தனியர் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் இருக்கும் கால-இட வெளியிலிருந்துதான் தொடங்க முடியும். ஆகவே, அனைத்துயிர்களுக்கும் அன்னையானவளின் பெருமையும் எழிலும் தனியரின் உளமும் உடலும் சார்ந்த அடித்தளத்திலிருந்தே தொடங்குகிறது. இங்கே அது நிலத்தின் அடிப்படை மெய்மையாக விளக்கப்படுகிறது. மணமே நிலத்தின் பண்பு. கீழ்நிலை உயிரிகளுக்கு இரை தேடுவதற்கு மணம் மிக அவசியமானது. துல்லியமான வேதி இயக்க விதிகளின்படி நடைபெறும் இயற்பொருட்களிடையேயான மெய்யான ஊடாட்டத்தில்தான் உலகின் தோற்றத்தில் உள்ள மிகவும் பருண்மையான கூறை பார்க்கமுடிகிறது. தாந்திரீகத்தின் கருத்துப்படி இது சிவனும் சக்தியும் மிகவும் புறவயமான நிலையில், ஒன்றையொன்று பிரிக்கமுடியாதபடி, இயங்காற்றலும் அதன் அடிப்படை மெய்மையுமென இணைவது. வடமொழி நெடுங்கணக்கில் கடைசி நான்கு எழுத்துக்களான வ, ஶ, ஷ, ஸ என்ற நான்கும் இப்பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. சொல்லாற்றலை படைப்பதற்கான தெய்வீகத்தன்மை கொண்ட அசைகள் அவை. 360 நாட்களில், இந்தப் பகுதிக்கு ஐம்பத்தாறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சிவனுக்கு இருபத்தெட்டு நாட்கள், சக்திக்கு இருபத்தெட்டு நாட்கள் என சரிபாதியாக பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது.
படைப்பின் ஏறுமுகமான படிநிலை அமைப்பில் அடுத்து வரும் மூலக்கூறு நீர். இதன் பண்பு சுவை. சுவை ஊட்டத்தை குறிப்பது. நீரின் குறியீடாக இருப்பது மணிபூரகம். இது இணைவுச் செயல்பாடுகள் (synergic centre) நடக்கும் மையம். சக்ரங்களை அடுக்குவதில் சங்கரருடைய அமைப்புக்கும் மரபான யோகமுறை அமைப்புக்கும் மாறுபாடு உள்ளது. இங்கு மணிபூரகம் கொப்பூழ் பகுதியில் அமைந்துள்ளது. ஆனால் யோகியரின் அமைப்பில் அது அடியிலிருந்து மூன்றாவதாக உள்ள சக்ரம். சங்கரர அதை இரண்டாவதாகக் கொள்கிறார். ஐம்பத்திரண்டு நாட்கள் மணிபூரகத்தை சார்ந்தவை. இதில் சிவனுக்கு இருபத்தியாறு நாட்கள், சக்திக்கு இருபத்தியாறு நாட்கள். இப்பகுதிக்கான சொல்லாற்றலுக்கென ப, ப*, ம, ய, ர, ல என்ற வடமொழி எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நீரெனும் மெய்மையிலிருந்து நெருப்பெனும் மெய்மைக்கு, ஸ்வாதிஷ்டானத்திற்கு ஏறுகிறோம். இப்பாடலில் சங்கரர் அளிக்கும் தியான அமைப்பில், ஒருவர் முதுகெலும்பின் அடியில் உள்ள மூலாதாரத்திலிருந்து மணிபூரகத்திற்கு அதாவது கொப்பூழ் பகுதிக்கு ஏறுகிறார். பின் மூலாதாரத்திற்கும் மணிபூரகத்திற்கும் இடையே, பிறப்புறுப்புகளில் அமைந்துள்ள ஸ்வாதிஷ்டானத்திற்கு இறங்குகிறார். உண்மையில் மையத்தை செயல்படத் தூண்டுவதற்கு இது மிகவும் உதவிகரமாக உள்ளது. ஏனென்றால், கொப்பூழ் பகுதியும் பிறப்புறுப்புப் பகுதியின் அடித்தளமும் ஒரே சமயத்தில் தூண்டப்பட வேண்டியிருக்கிறது. ஸ்வாதிஷ்டானமே அகத்தின் களன். உணர்ச்சித் தூண்டல் அமைப்பில், தனியரின் உடற்செயல்பாடுகளையும் அகச் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துவதாக இருப்பது மிகையுணர்ச்சிப் புலமான அகமே. ஒருவரது அடக்கப்பட்ட விழைவுகள் எல்லாம் இந்தப் பகுதியில்தான் இருக்கின்றன. நம்பிக்கையும் பதட்டமும் ஸ்வாதிஷ்டானத்திலேயே முகிழ்க்கின்றன. ஆக, அதுவே அனைத்துத் தூண்டல்களுக்குமான களமாக உள்ளது. வேட்கையின் தீக்கொழுந்துகள் இப்பகுதியிலிருந்தே எழுகின்றன. அவை சங்கல்பமாகவும் (எய்தப்படவேண்டிய விரும்பத்தக்க தூண்டல்கள்) விகல்பமாகவும் (நோயாக மாறக்கூடிய மாயக் கற்பனைகள்) கருத்தாக்கம் கொள்கின்றன. இப்பகுதிக்கு அறுபத்திரண்டு நாட்கள் ஒதுக்கப்படுகின்றன. அதில் ஐம்பது சொல் பிறப்பில் உள்ள அடிப்படை ஒலிக்கொள்கைகளுக்கும் நான்கு உயிர்த்தலில் தானாகத் தோன்றும் ௐ எனும் ப்ரணவத்தை மீண்டும் மீண்டும் ஓதுவதற்கெனவும் ஒதுக்கப்படுகின்றன. ட, ட*, ண, த, த*, த, த*, ன, ப, ப* ஆகிய எழுத்துக்கள் இப்பகுதியின் அகஇயங்காற்றலுக்கென ஒதுக்கப்படுகின்றன. ஸ்வாதிஷ்டானமும் மூலாதாரமும் தீ எனும் மெய்மைப் பகுதியில் (அக்னி தத்துவம்) அடைக்கப்பெறுகின்றன.
ஏறுமுகத்தில் அடுத்ததாக இருக்கும் மூலக்கூறு காற்று. அதற்கிணையான இணைவுச்செயல்பாட்டு மையம் அநாஹதம். இந்தப் பகுதி இருதயத்தில் இருப்பது. தொடுகையை குறிப்பது. முழு உலகையும் ஒன்றெனப் பிணைக்கும் காதலும் தோழமையும் இந்த அமைப்பின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதை கப்பலா (Kabbala) எனும் யூத மாயாவாதத்தில், வாழ்வெனும் மரத்தின் மையத்தில் அழகை வைத்திருப்பதோடு ஒப்பிடலாம். அநாஹதம் என்பது பிளவுபடாதது. இயல் மற்றும் ஆன்மீக உலகின் தோற்றத்தில் உள்ள அனைத்தையும் ஒன்றோடொன்று பிணைப்பது. இயல் உலகுக்கும் அக உலகுக்கும் இடையில் எந்த உடைவோ பாழ்வெளியோ இல்லை. தோற்றத்தின் பரிணாமச் சங்கிலியில் உடைவிலா ஒற்றை வாழ்வொழுக்கே உள்ளது.
ய, ர, ல, வ என்ற தெய்வீக அசைகள் இங்கு தியானிக்கப்படுகின்றன. ஆர்வத்தை எல்லைக்குட்படுத்தல், நேர்மறை துய்த்தல், மகிழ்ச்சி நிலையில் ஒன்றுதல் (உடல்சார் அடையாளமும், ஆன்மீகப் பிழையீடும்), பின்னர் வியப்புணர்ச்சியில் தன்னை இழத்தல் ஆகியவற்றை இவை குறிக்கின்றன. சொல் இயங்காற்றலுக்கென க, க*, க, க*, ங, ச, ச*, ஜ, ஜ*, ஞ, ட, ட* ஆகிய வடமொழி எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சூரியனின் ஆட்சிக்குரிய பகுதியில் மணிபூரகமும் அநாஹதமும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்திற்கு மேலுள்ளது தொண்டைப்பகுதி (விஶுத்தி). இது ‘வெளி’யின் (ஆகாயம்) பகுதி. இங்குதான் ஒலியின் முதன்மை அதிர்வுகள் தோன்றுகின்றன. கட்புலனாகக்கூடிய உலகில் ஒலியே ஆகச்சிறந்த தொடர்புக் கருவி. அதன் நினைவுத்திறம் ஆழமானது. நிலம், நீர், தீ, வளி என்ற பிற மூலக்கூறுகளுக்கு உள்ளதைப் போல ஆகாயத்தில் இயல்பொருள் எதுவும் கிடையாது. ஆகவே அது பருண்மைக்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் பாலமாக இருக்கிறது. விண்வெளிப் பயணத்தில் பூமியின் கோள்பாதையிலிருந்து நிலவின் கோள்பாதைக்கு மாறவேண்டுமெனில் அதற்கான ஒரு காலகட்டம் அல்லது நடைமுறை (change-over period or process) தேவைப்படும். அதுபோலவே ஆன்மாவின் பகுதியில் இருந்து இயல் உலகிற்குள் நுழைய வேண்டுமென்றால் ஒருவித தோற்றமாற்றம் அல்லது பொருண்மாற்றம் நிகழவேண்டும். ஒரு கருத்தை, ஒலிகளைக் கொண்டு வாய்மொழியாக்கி, பேச்சின் கூறுகளை இன்னொருவரது கேட்கும் அமைப்புக்குள் செலுத்தி அதன்மூலம் அக்கருத்து அவரது மனதிற்குள் செல்லும்படி செய்தல் ஒரு அதிசயச் செயல்பாடு. சொற்களின் ஓசைகள் உணர்ச்சிமிக்க அறிவுச் செய்திகளை கடத்தும் ஊர்திகளென இருப்பதால் சொற்கள் பொருளென மாறுகின்றன. பருண்மை சொற்களாக வெளிப்படுவதற்கும், ஆன்மா பருண்மையானவற்றை உயிர்ப்பிக்கச் செய்வதற்கும் இதுவே மையப் புள்ளியாக இருக்கிறது.
விஶுத்தியில் (தொண்டைப் பகுதி) ‘ஐம்’, ‘ஹ்ரீம்’ என்ற தெய்வீக அசைகளோடு தியானம் மேற்கொள்ளப்படுகிறது. அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, எ, ஐ, ஒ, ஔ, அம் என்ற பதினான்கும் வடமொழி உயிரெழுத்துக்கள். சொல் வடிவமைப்புக்கென இப்பகுதிக்கு எழுபத்திரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மெய்யெழுத்துக்களை இணைக்கவும் சொற்களை உருவாக்கவும் உயிரெழுத்துக்கள் அத்தியாவசியமானவை. மெய்யெழுத்துக்களை நிறங்கள் என்று கொண்டால், ஒரு நிறத்தை இன்னொன்றோடு தொடர்புறுத்த ஓவியன் பயன்படுத்தும் ஊடகம் உயிரெழுத்துக்கள் எனலாம். அத்தகைய நிறமிகள் ஓவியத்திலும், இசையிலும் பொதுவாக பயின்று வருபவை. இரண்டிலும் நிறக்கூறு வர்ணம் எனப்படுகிறது. உயிரெழுத்துக்கள் ஸ்வரம் எனப்படுகின்றன. ஸ்வரம் என்பது ஒருவரது மகிழ்வுக்குப் பொருத்தமானது என்பதை குறிப்பது. இரண்டு மெய்யெழுத்துக்களை ஒரு உயிரெழுத்தோடு இணைத்தால் உருவாகக்கூடிய சொல் அலகுகள் எண்ணற்றவையாக இருக்கும். எம்மொழியிலும் உள்ள ஆகப்பெரிய அகராதியில் கூட அத்தகைய இயல்கைகளின் ஒரு சிறு பகுதியே கொடுக்கப்பட்டிருக்கும்.
நாம் ஆஞாவிற்கு செல்கையில், உடல் என்பதைக் கடந்து, மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கும் மனதிற்கு வருகிறோம். மனமே விழிப்புநிலையையும் கனவையும் கட்டுப்படுத்துவது. வாய்மொழி வெளிப்பாட்டின் சொல் இயக்காற்றலுக்குப் பயன்படுத்தப்படும் பதினான்கு உயிரெழுத்துக்கள், தர்க்கத்தை வடிவமைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. நாம் சொற்களைக் கொண்டே சிந்திக்கிறோம். சிலரால் தம் எண்ணத்தை வாய்மொழியாக வெளிப்படுத்தாமல் சிந்திக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஆஞாவுக்கும் விஶுத்திக்கும் இடையிலான தொடர்பு மிக நெருங்கியது. சிந்திப்பது என்பதே ஒருவரது மனதிற்குள் நிகழும் ஒரு வகை பேச்சுதான். பேசுதல் பேச்சுறுப்பான நாவைக் கொண்டு செய்யப்படுவதைப்போல, கருத்துகள் ஆணைகளின் வடிவில் செயலுறுப்புகளுக்கு ஒலிபரப்பப்படுகின்றன. இப்படியாக, உள் வரும் உணர்ச்சி பாதிப்புகளுக்கு (நரம்புத் தூண்டல்கள்) செயலுறுப்புகளின் அமைப்பு மூலமாக எதிர்வினை நிகழ்கிறது. செயலுக்கான ஆணை வாயிலிருந்து கைகளுக்கு, கால்களுக்கு, வெளியேற்றும் உறுப்புகளுக்கு, பிறப்புறுப்புகளுக்கு செல்கிறது. இவற்றுக்கெல்லாம் தலைமை ஏற்பது நிலவு. நிலவு என்பது மனதில் திகழும் எதிரொளிக்கும் பண்பை குறிப்பது. மெய்யனுபவமும் மெய்நிகர் அனுபவமும், எது உண்மையானது எது புறத்தெறிவு என்று பிரித்தறியமுடியாதபடி பின்னிப்பிணைந்தவை. ஒரு முழுமை எய்தப்படுவதிலும் உணர்வுபூர்வமான அதன் எதிர் வினையிலும் மிகச் சிக்கலானதும் உடனடியானதுமான ஒரு செயல்பாடு தேவைப்படுகிறது.
இந்த ஏறுமுகமான படிநிலை, இறுதியில் ஒருவரை இட்டுச்செல்வது அனைத்துப் படைப்புகளுக்கும் ஊற்றுமுகமாகத் திகழும் பேரன்னையின் இணையடிகளிடையே உள்ள துகள்களுக்குத்தான். அம்மையத்திலிருந்து வீசும் கதிர்களின் ஒளிர்வை மினுமினுக்கும் ஒளியாகவும் எரியும் ஒலியாகவும் புரிந்துகொள்ள வேண்டும். அது ஒருபுறம் அண்டமென ஒளிர்வது; மறுபுறம் புலனறிவுகொண்ட அனைத்துயிர்களுக்குள்ளும் அகநிகழ்வாக செயல்படுவது.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள யந்திரத்தை ‘ஶ்ரீம்’ எனும் மந்திரம் கொண்டு தியானிக்க வேண்டும்.