ஸௌந்தர்யலஹரீ – 13

Standard

நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜட*ம்

தவாபாங்காலோகே பதிதமனுதா*வந்தி ஶதஶ:

த்வேணீந்தா*: குசகலஶவிஸ்ரஸ்தஸிசயா

ஹடா*த் த்ருட்*யத்காஞ்ச்யோ விலிததுகூலா யுவதய:

பாடல் – 13

அருள்நிறை அன்னையே, 

உன் அருட்பார்வை ஒருவன் மீது பட்டுவிட்டால்

அவன் கிழவனென்றாலும், முரடனென்றாலும்

கலவியின்பம் தூண்டத்தெரியாதவன் என்றாலும்

நூற்றுக்கணக்கான கன்னியர் 

கிளர்ச்சிகொண்டு அவன்பின் செல்கின்றனர்

மோகத்தில் நாணம் துறக்கின்றனர்

கூந்தல் அவிழ்ந்து கலைவதை

கொழுமுலைமேலிருந்து ஆடை நழுவுவதை

அரைக்கச்சவிழ்ந்து வீழ்வதை

அவர்கள் உணர்வதுமில்லை

**

பன்னிரண்டாவது பாடலை முழுமை செய்யும் பாடல் இது. இந்தியாவில் இருபது நூற்றாண்டுகளாக, உபநிடதங்கள் உருவகித்தபடி அழகு என்பது புலனின்பம் சார்ந்ததாகவே கருதப்பட்டது. பிற்காலத்தில், கோயாவுக்குப் பிந்தைய (post-Goya), வான்கோவுக்குப்  பிந்தைய (post-Van Gogh) ஐரோப்பியக் கலைமரபில் ஒரு புதிய பாதை தோன்றியது. அதன் உச்சமாக உருமாதிரியற்ற (non-representative) அழகுக் கொள்கை உருவானது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தப் பாடலில், அழகை தானாக ஒளிரும் ஒன்றென்கிறார் சங்கரர். பொதுவாக, அழகு என்பது புலனின்பம் சார்ந்த மோகம் என்றோ சிற்றின்பத்திற்கான முன்விளைவு என்றோ கருதப்படுவதற்கு மாறான ஒன்று இது. இளமையோ, உடலழகோ, நல்லியல்போ, காமத் தூண்டலோ எவ்வித கவர்ச்சியும் இல்லாத ஒரு முதியவன் இங்கு முன்வைக்கப்படுகிறான். பட்டுடை அணிந்த இளங் கன்னியர் அனைவரையும் கவர்வது இயல்பு. அவ்வாறன்றி, நயமிலா மனமும், முரட்டுத்தனமும் கொண்ட ஒரு முதியவனைக் கண்டதும் கன்னியரெல்லாம் தம்மை மறந்து இசிவுகொள்வதாக காட்டப்படுகின்றனர். பெண்ணின் அழகில் ஆண் மயங்குவதாக விவரிப்பதே வழமை. இங்கோ, நூற்றுக்கணக்கான பெண்டிர் உடலழகோ, அக அழகோ அற்ற ஒரு கிழவன் மீது மோகம் கொள்கின்றனர். இந்தப் புதிரான கவர்ச்சிக்கு சொல்லப்படும் ஒரே காரணம் அன்னையின் அருட்பார்வை. ஆண்-பெண் இடையேயான, எதிரெதிர் துருவங்களுக்கிடையேயான ஈர்ப்பல்ல இது. இங்கே இயக்காற்றலாக, கவர்ச்சிக்குக் காரணியாய் இருப்பது அன்னையின் அருள். அன்னை தான் தேரும் பொருளைச் சுற்றி அழகெனும் சூறாவளியை எழுப்புகிறாள் போலும்!

அழகென்பது அடிப்படையில் அகவயமாக உணரப்படுவது. கண்டால் பேரின்பம் அளிக்கக்கூடிய நிலவிரிவுகூட ஒருவர் உளம் சோர்ந்திருக்கையில் காணும்போது வறண்டதாக, பொருளற்றதாக, பகைமை தோற்றுவிப்பதாகக் கூட தோன்றக்கூடும். மூளையில் அமைந்திருக்கும் புலனின்ப மையங்களை மின்னதிர்வு மூலமோ, வேதிவினை மூலமோ தூண்ட முடியும் என்றும், அதனால் புலனுணர் பொருள் ஏதுமின்றியே அழகு என்பதை உணர முடியும் என்றும் அறிவியல் இன்று நமக்கு நிறுவியுள்ளது. ஆனால், நரம்புகள் அதிர்வுகொள்வது மேலும் ஆழமான ஒரு நிலையில் என்பதை மட்டுமே இது உணர்த்துகிறது. அழகென்பது தன்னளவில் வெறும் உயிரணுசார்ந்த  கிளர்ச்சி அல்ல. அது ஆன்மாவின் ஒரு வகைமாதிரியான எண்ணம் (normative notion). ஹான்ஸ் லூகஸ் டியூபர் சொல்லும் “வடிவமைதியின், வேதிவினையின், தொடர்பின் குறிப்பிட்ட பண்பை” பொருள்கொள்ளும் கருத்து. அதற்கு ஒரு அழகியோ, மின் அதிர்வோ, மூளையில் கசியும் பழைய நினைவோ காரணமாக இருக்கலாம். ஒரு காட்சியைக் கண்டு அனைத்து மனங்களும் “ஆ என்ன அழகு!” என வியக்குமென்றால், அதற்குக் காரணமாக இருப்பது உமை என்றும் திரிபுரசுந்தரி என்றும் விளிக்கப்படும் இயற்கை அன்னையேதான். அனைவருக்கும் மனம் என்ற ஒன்றையும் அம்மனதிற்கு அழகுணர்ச்சியையும் அளிப்பவள் அவளே. அழகை ஆராதிக்கும் கன்னியர் அன்னையின் மந்திரத்தில் கட்டுண்டு தன்வசமிழப்பதற்கு அதுவே காரணம். இங்கே நோயுற்ற கிழவனொருவன் மீது அவள் வீசிய அருட்பார்வையே அன்னையிடும் மந்திரம்.

கன்னியர் கிழவன் ஒருவன்பால் ஈர்க்கப்படுகின்றனர்; அக்கிழவன் அன்னையால் கவரப்பட்டவன்; அன்னையோ என்றுமுள இருப்பான சிவனை நாடுகிறாள். முந்தைய பாடலில் அம்பு தெய்வீகத்திலிருந்து மண்ணுலகு நோக்கி மேலிருந்து கீழாக எய்தப்பட்டது; இப்பாடலில் மண்ணுலகிலிருந்து தெய்வீகத்திற்கு மேல்நோக்கி பாய்கிறது.

ஶ்ரீசக்ர தியானம்

உம் ஸ்பர்ஶாகர்ஷிணீ

வாழ்வளிக்கும் அன்னையே, உன் அதிர்வுகொண்ட குரலெனும் விரிந்த பரப்பில் அகவெளி என்றும் அண்டவெளி என்றும் பகுப்பேதும் இல்லை. அறிவெல்லை கடந்த உன் ஒளி உள்ளுறை ஆற்றலென இறங்கி இவ் இயலுலகில் உள்ளவற்றை எல்லாம் உயிர்ப்பு கொள்ளச் செய்கிறது. உடலின் சுவாசக் கருவி மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகையில் உடல் ஆற்றல் பெற்று தன் செயல்களையெல்லாம் ஆற்றுகிறது. அதுபோலவே, இம் முழு உலகுக்கெனவும் நீ சுவாசிக்கிறாய். உண்மையில் அங்கு ஒரு ஆளென நீ இல்லை. எமது நாடிகளிலும் குருதி நாளங்களிலும் இருக்கிறாய். ஒவ்வொரு நரம்பணுவிலும் நாளத்திலும் ஓடிச்சென்று எம் மனநிலையையும் உடல்நிலையையும் வேவு பார்க்கிறாய்.

இழைத்து மெருகேற்றப்பட்ட மரத்திலிருந்து தோன்றியதாக இருந்தாலும், முட்புதரிலிருந்து தோன்றியதாக இருந்தாலும், பற்றிப் படர்ந்து பெருந்தீ என ஆகும் நெருப்பு ஒன்றேதான். ஒளிர்வது, வெம்மையானது, அவ்வளவே. உனது அருள் எல்லோருக்கும் ஒரே அளவில்தான் பகிர்ந்தளிக்கப்படுகிறது. என்றாலும், நடுக்கமின்றிச் சுடரும் உன் ஞானக்கொழுந்தில் நிலைகொண்ட அரிதான ஞானியர் சிலர் உன் பிரதிநிதியெனத் திகழ்கின்றனர். அத்தகையோரால், வாழ்வளிக்கும் உன் ஒளியை இருளில் உறைவோருக்கு காட்ட முடியும். 

அன்னையின் முலையுறிஞ்சும் குழவி தன் வாய்க்குள் செல்லும் பாலை கண்ணால் பார்ப்பதில்லை. பாலின் இனிமையிலிருந்து அதன் ஊட்டத்தை அறிகிறது. அருந்தும் பாலில் எப்படி கவனம் குவியவேண்டும் என்பதை யாரும் அதற்கு கற்றுத்தர வேண்டியதில்லை. அதுபோன்ற ஒரு மறை உறவின் மூலம்தான் உனது அருளை நாங்கள் நுகர்கிறோம். அது கிண்ணத்தில் வார்க்கப்படுவதில்லை. குவளையில் ஊறி நிறைவது அது. 

மொத்த உடலும் தொடுபுலனுறுப்பான ஒற்றைத் தோலால் மூடப்பட்டிருக்கிறது. அதுவே கண்ணில் கண்ணாடிவில்லையாகிறது, காதில் செவிப்பறைச் சவ்வாக, நாக்கில் சுவையுணர் மொட்டுகளாக, மூக்கில் முகர்வுக் கணுக்களாக ஆகின்றது. மண்டையோட்டை மூளையென நிறைக்கிறது. எலும்பின் உட்புழையாக கிளைக்கிறது. சடுதியில் தோன்றி, இருண்ட முகில்கூட்டத்தை துளைக்கும் மின்னல் போல மின்னி நீ எம் அகத்தை ஒளிரச் செய்கிறாய். ஒரு சிறு தீப்பொறிக்கும், முழு உலகையும் ஒளிரச் செய்யும் பகலவனுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே நெருப்புதான். அனைத்தையும் அரவணைக்கும் அன்னை நீயே. உன் தோற்றத்தில் முடிவிலாது வளரும் பல்வண்ண வகைபாடுகளைக் காண்கையில், நீரின் சுவையாக, மண்ணின் மணமாக நீ இருப்பதை மறந்துவிடுகிறேன். ஒவ்வொரு தொடுகையும் முழுமுதலிடமிருந்து வரும் அக்குளுப்பு என்பதை, பிரம்மஸ்பரிசம் என்பதை நான் உணர்வேனாக!

|| உம் ஸ்பர்ஶாகர்ஷிணீ ||   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s