ஶ்ரீசக்ர தியானம் – 12

ஊம் ரூபாகர்ஷிணீ

மூவுலகையும் எழிலூட்டும் அன்னையே, காலைநேரப் பகலவன் ஒளியூட்டும் பனித்துளிகள் எண்ணற்றவை. நண்பகலில் அதே சூரியன் விடிகாலையில் தோன்றிய உலகிலிருந்து மிகவும் வேறுபட்ட உலகொன்றை காட்டுகிறான். ஞாயிறு மறைவதற்கென வானம் மீண்டும் செந்நிறம் பூசப்படுகிறது. நிலவு உலகின் அழகுக்கு வேரொரு பரிமாணம் அளிக்கிறது. சின்னஞ்சிறியனவாய் தோன்றினாலும் எண்ணற்ற விண்மீன்களால் நிரம்பிய வானம் ஈடிணையற்றதாக இருக்கிறது.

இப்படி பலவண்ணக் கருக்களைக் கொண்டது உன் எழில். பலதரப்பட்டவை என்றாலும் அவற்றில் உள்ன அழகு ஒன்றேதான் – பல ஆடிகளில் எதிரொளிக்கும் உன் உவகை நிறைந்த புன்னகையேதான். கவிஞரும், கலைஞரும், கலையார்வலரும் எல்லாம் உன்னை ஒரு கணம் பார்த்துவிட விழைகின்றனர். ஆனால் நீயோ உன் இறைவனின் ஒப்பிலா எழிலை எண்ணி பேரின்பத்தில் ஆழ்ந்து உன்னையே இழந்து நிற்கிறாய். மானுடரும் வானில் ஒளிரும் தேவரும் இந்திரன் அவையில் ஆடும் அரம்பையரே அழகின் வடிவென எண்ணுகின்றனர். ஆனால் அவர்களோ உன் ஈசனின் ஒற்றைப் பார்வை தம் மேல் படாதா என எண்ணி ஏங்குகின்றனர். ஆனால், உன் இணக்கமின்றி அவனை காண இயலாது என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.

அணிக்கோலம் கொண்ட விடியலையும், இளவேனிற் காலத்தின் வளமிக்க காட்டையும் படைக்க எண்ணுகையில் பிரம்மன் உன்னை தியானித்து தன் படைப்புக்கான தூண்டலை உன்னிடமிருந்தே பெறுகிறான். மிதக்கும் முகில்களில் செம்மஞ்சள் நிறத்தை தெளிக்கையில், சிவந்ததும் வெண்ணிறமானதுமான தாமரைகளைக் கொண்டு பொய்கையொன்றை நிறைக்கையில், நான்கு வெண்ணிற இதழ்கள் கொண்ட தூய முல்லை மலரை படைக்கையில் எல்லாம் அழகைப் படைப்பதில் உனக்கிருக்கும் ரசனையையே அவன் கருத்தில் கொள்கிறான். அவனது படைப்பு முக்குணங்களுக்கேற்ப உருமாறுகையிலும் திரைகளுக்குப் பின் இருக்கும் உன்னை முழுமையாக அழித்துவிடமுடிவதில்லை.

அழகிய உலகுகள் பல அடங்கிய எண்ணற்ற வான்வெளிப் பால்மண்டலங்கள் அண்டப் பேரழிவுகளில் விழுங்கப்படுகின்றன. படைப்பூக்கம் சிறிதும் குன்றாத நீ, முன்பிருந்ததைவிட பேரெழில் கொண்ட இயலுலகை மீண்டும் படைத்தளிக்கிறாய். சிற்றுயிர்களான அணைகட்டும் நீர்நாய், கூடுகட்டும் பறவை, தேன்கூட்டை சமைக்கும் தேனீ போன்றவையெல்லாம் கூட படைப்பெனும் கலையில் ஆர்வம் கொள்கின்றன. உலகெங்கிலும் மானுடர் எழுப்பியுள்ள வழிபாட்டிடங்களை காண்கையில், கோயில்களையும், தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் கட்டிய கட்டடக் கலைஞர்களுக்கும் கைவினைஞர்களுக்கும் எத்தனையெத்தனை கனவுகளை நீ காட்டியிருக்கிறாய் என்பது தெரிகிறது!

|| ஊம் ரூபாகர்ஷிணீ || 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s