சௌந்தர்யலஹரீ – 12

Standard

த்வதீயம் ஸௌந்ர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்

கவீந்த்ரா: கல்பந்தே கத*மபி விரிஞ்சிப்ரப்*ருதய:

தாலோகௌத்ஸுக்யாமரலலனா யாந்தி மனஸா

தபோபி*ர்துஷ்ப்ராபாமபி கிரிஶஸாயுஜ்யபவீம்

பாடல் – 12

பனிபடர்ந்த இமையவன் மகளே, உமையே,

இணையிலா உன் எழிலை 

பிரம்மனும் பிருஹஸ்பதியும் போன்ற

மாகவிகளாலும் பாடிவிட இயலாது

பிரம்மனும் பிறரும் தம் படைப்புகளில்

உன் அழகை கொண்டுவர கடும் முயற்சி செய்கின்றனர்

உன் இணை இறையான சிவன் மட்டுமே காணக்கூடிய

உன் எழிலை கண்டுவிட வேண்டுமென்ற ஒற்றை விழைவுடன்

சிவனுடன் இணைவதற்கு

கடுந்தவம் புரிகின்றனர் அரம்பையரும்

**

கேனோபநிடதத்தில் இமையவன் மகளான பேரெழில் கொண்ட உமை பிரம்மனை வெளிப்படுத்துகிறாள். இந்திரனுக்கு முழுமுதல் பற்றிய அறிவை (பிரம்மவித்யை) கற்பிக்கிறாள். இந்தப் பாடலில் தேவி அந்த உமையாக காட்டப்படுகிறாள்.  மண்கட்டியும் ஒரு பொருள், ரோஜாப்பூவும் ஒரு பொருள். பிந்தையது ஒழுங்கமைதிகொண்ட அமைப்பு கொண்டது. அவ்வளவே. ஆன்மாவைச் சார்ந்த அறிவாற்றல், நோக்கம், அர்த்தம், ஒழுங்கு, லயம், இசைவு என்பவை எல்லாம் அணுவின் வடிவமைப்பை தீர்மானிக்கையில், அலைகளிலும் பொருட்களின் அணுக்கூறுகளிலும் உள்ள ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தன்மையை வழிநடத்துகையில், அப்பொருள் ஆன்மாவின் படைப்புக் குறிக்கோளை அல்லது அழிவுக் குறிக்கோளை வெளிப்படுத்துகிறது. ஆன்மாவின் அழகு, ஒழுங்கமைவுகொண்ட பொருளின் வடிவமைப்பில் வெளிப்படுகிறது. இந்திய மெய்யியல், படைப்புக்கான மூலப்பொருளை பார்வையற்ற பொருளென்றும் அனைத்தையும் காணும் ஆன்மாவென்றும் இரண்டாக பகுப்பதில்லை. சாங்கியமும், வேதாந்தமும், தாந்திரீகமும், உலகம் தோன்றி அதன் உச்சமாக மனிதன் படைக்கப்பட்டதை படிநிலைகளில் நிகழ்ந்த கிடைமட்டமாக்கம் என்றும் தூயதான நேர்நிலை ஆன்மா மேலும் மேலும் பருண்மை கொண்டு உயிரின வகைகள், பண்புகள், விபத்துகள் எனப் பெருகியது என்றும் விளக்குகின்றன.

இந்த வரைபடத்தில் S-M எனும் செங்குத்து அச்சு, இந்நூலில் சிவன் எனப்படும் தூய ஆன்மாவை (spirit) குறிக்கிறது. சக்தி எனப்படுவது மெய்ப்பொருள் சார்ந்த எதிர்மறை அச்சிலிருந்து (M) தோன்றும், முன்னேற்றம்-பின்னடைவு (progression-regression) எனும் இருமுகப்போக்கு கொண்ட செயல்பாட்டை குறிக்கிறது. அது சத்வ-ரஜஸ்-தமஸ் என்ற வரிசையில் கிடைநிலையாகலாம் (பின்னடைவு). அல்லது தலைகீழாக தமஸ்-ரஜஸ்-சத்வம் என்றும் கிடைநிலையாகலாம் (முன்னோக்கி செல்லுதல்). பின்னடையும் கிடைநிலையாக்கம் மூலம் ஆன்மா பொருளாகிறது. முன்னோக்கிய செங்குத்தாக்கம் மூலம் பொருள் ஆன்மாவாகிறது. முன்னேற்றம் பின்னடைவு என்ற இரண்டுக்கும் அவற்றுக்கான உடல்-மனம் என்ற இரட்டைக் களன்கள் உண்டு. உடலில் நிகழும் பின்னடைவு நோயில், இறப்பில் வந்து முட்டி நிற்கிறது; மனதில் நிகழும் பின்னடைவு செயலாற்ற இயலாமல் செய்கிறது. தனித்தன்மை பிரபஞ்சத் தன்மையில் மீண்டும் இணைவது வரையிலான நிகழ்வில் ஆன்மாவின் பங்கு அதிகரித்தபடியே செல்வதே முன்னேற்றம் என்பது. மேலே ஆன்மா-பொருள் என்று சொல்லப்பட்டவை தாந்திரீகத்தில் முறையே சிவ-சக்தி எனப்படுகின்றன.

சத்வம் என்பது, வரைபடத்தில் காட்டியுள்ளபடி, சிவனது அறிவாற்றல், நன்மை, எழில், லயம், இசைவு ஆகிய அனைத்தையும் மெய்யாக எதிரொளிக்கும் சக்தியின் தெள்ளிய ஆற்றல் (transparent force). ரஜஸ் என்பது சக்தியிடம் உள்ள வலுவூட்டவும், செயலாற்றவும், உயிரூட்டவும், இரட்டிக்கவும், படைக்கவும், அழிக்கவும் அல்லது கரைக்கவும் தேவையான ஆற்றல். இது ஒளியூடுருவக்கூடிய ஆற்றல் (translucent force). சாரத்தில் அது இயங்காற்றல் (kinetic). தமஸ் என்பது  ஜட ஆற்றல் (inertial force). இதன் மூலம் வெவ்வேறு வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள படைப்பு அலகுகளை, பருப்பொருள்களாக, உறைந்த நிலைகளாக, பொருத்தமற்றவற்றிலிருந்து விலக்கப்பட்டவையாக, உள்ளார்ந்த வடிவங்களாக பிரித்தடுக்க முடியும்.

கிடைமட்ட அச்சில் A என்பது உயிர்ப்புள்ள புறவய நனவையும் U என்பது உயிர்ப்புள்ள அகவய நனவையும் குறிப்பவை. செங்குத்தான எதிர்மறை அச்சின் M என்பது இருமையற்ற ஆழ்நனவின் உயிர்ப்பற்ற நடுநிலைக் கூறை சுட்டி நிற்பது. சக்தியால் உலகம் படைக்கப்படுதல் என்பது சிவனை பலவாறாக கண்டறியும் தேவியின் தீரா ஆடல் (லீலை). சிவனுக்கும் சக்திக்கும் இடையிலான உறவை காளிதாசன் விளக்குக்கும் அதன் ஒளிக்கதிர்களுக்கும் இடையேயான உறவோடும் சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இடையேயான உறவோடும் ஒப்பிடுவார்.

இப்படியாக தோன்றும் அண்டம், பிரபஞ்சக் கூறையும் உளக்கூறையும் கொண்டது. எங்கோ இருந்தபடி நம் புலன்களையும் மனதையும் பாதிக்கக் கூடிய கட்புல உலகை உருவகித்துக் கொள்ளவும் அதுபற்றிய கருத்துருவாக்கத்திற்கும் உதவுபவை பிரபஞ்சக் கூறுகள். தீரா கருத்துப் பெருக்காகவும், உணர்ச்சிகளாகவும், மொழிமூலமாக நாம் மனதில் உணர்பவை எல்லாம் பிரபஞ்சக் கூறுகளின் எதிரிணையான உளக்கூறுகள்.

இந்தியத் தொன்மங்கள் உருவகங்களாலும் குறியீடுகளாலும் நிரம்பியவை. சார்லஸ் ஷெரிங்டன் பத்து பில்லியன் நரம்பணுக்கள் ‘மதிமயக்கும் தறி’யாக செயல்படுவதே நனவு என்கிறார். ஹான்ஸ் லூகஸ் டியூபர் பெரும் ஒழுங்கமைதியும், வேதிவினையும், தொடர்பும் கொண்ட முன்-நிரலிடப்பட்ட மூளை அணுக்களால் ஆனதே நனவு என்கிறார். இந்தியத் தொன்மமோ இந்திரன் தலைமையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இயங்கும் தேவலோகமே நனவு என்கிறது. இந்திரனின் குருவான ப்ருஹஸ்பதி ஸ்பினோசாவின் ‘சிந்திக்கும் பொருள்’ போனறவர். சக்தியின் மொத்த படைப்புச் செயல்பாடும் பிரம்மனின் பொறுப்பில் இருக்கிறது. பிருஹஸ்பதி படைப்பூக்கம் கொண்ட நனவை வழிநடத்துபவர். எனவே, பிரம்மனும் பிருஹஸ்பதியும் கவிகளெனவே போற்றப்படுகின்றனர். பிரபஞ்ச ஒழுங்கமைதியின் எழிலும் பருண்ம அழகும் பிரம்மனிடமிருந்து தோன்றுபவை.  சொல்லின் எழிலும் கருத்தின் அழகும் பிருஹஸ்பதியிடமிருந்து உண்டாகின்றன. அரம்பையரில் உடலழகும் உண்டு, மெய்யழகும் உண்டு. இவையெல்லாம் உமையின் அழகோடு ஒப்பிடத் தகுதி கொண்டவை அல்ல என்கிறார் கவி. உமையின் ஒப்பிலா அழகை சற்றேனும் காணவேண்டும் என்றால் சிவத்தோடு ஒன்றாதல் வேண்டும். அதற்கு அரம்பையரே ஆயினும் கடுந்தவம் புரியவேண்டும்.

உருத்தோற்றம் அற்ற சிவன் ஒப்பிலா அழகுகொண்ட உமையெனத் தோற்றம் கொண்டான்; உமையின் அழகு பிரம்மனை படைப்புக்குத் தூண்டியது; பிரம்மனின் கவி எழுச்சி பிருஹஸ்பதியின் வடிவம் கொண்டது; இறையோரின் குருவான பிருஹஸ்பதி ஆழ்படிம எழிலை உருவாக்கினார்; அந்த எழில் அரம்பையர் வடிவானது; அழகை ஆராதிக்கும் மானுடருக்கு அரம்பையர் தூண்டலாயினர்; இறுதியாக, மானுடக் கலைஞரும் கவிகளும், ஒலிகளும்-சொற்களும் கொண்டு, நயமும்-லயமும் கொண்டு, வண்ணங்களும்-வடிவங்களும் கொண்டு, செயல்களும்-இயக்கங்களும் கொண்டு அழகை படைக்கின்றனர். இவ்வாறாக தெய்வீக அழகு மண்ணுலகுக்கு இறங்கி வந்தது.

ஶ்ரீசக்ர தியானம்

ஊம் ரூபாகர்ஷிணீ

மூவுலகையும் எழிலூட்டும் அன்னையே, காலைநேரப் பகலவன் ஒளியூட்டும் பனித்துளிகள் எண்ணற்றவை. நண்பகலில் அதே சூரியன் விடிகாலையில் தோன்றிய உலகிலிருந்து மிகவும் வேறுபட்ட உலகொன்றை காட்டுகிறான். ஞாயிறு மறைவதற்கென வானம் மீண்டும் செந்நிறம் பூசப்படுகிறது. நிலவு உலகின் அழகுக்கு வேரொரு பரிமாணம் அளிக்கிறது. சின்னஞ்சிறியனவாய் தோன்றினாலும் எண்ணற்ற விண்மீன்களால் நிரம்பிய வானம் ஈடிணையற்றதாக இருக்கிறது.

இப்படி பலவண்ணக் கருக்களைக் கொண்டது உன் எழில். பலதரப்பட்டவை என்றாலும் அவற்றில் உள்ன அழகு ஒன்றேதான் – பல ஆடிகளில் எதிரொளிக்கும் உன் உவகை நிறைந்த புன்னகையேதான். கவிஞரும், கலைஞரும், கலையார்வலரும் எல்லாம் உன்னை ஒரு கணம் பார்த்துவிட விழைகின்றனர். ஆனால் நீயோ உன் இறைவனின் ஒப்பிலா எழிலை எண்ணி பேரின்பத்தில் ஆழ்ந்து உன்னையே இழந்து நிற்கிறாய். மானுடரும் வானில் ஒளிரும் தேவரும் இந்திரன் அவையில் ஆடும் அரம்பையரே அழகின் வடிவென எண்ணுகின்றனர். ஆனால் அவர்களோ உன் ஈசனின் ஒற்றைப் பார்வை தம் மேல் படாதா என எண்ணி ஏங்குகின்றனர். ஆனால், உன் இணக்கமின்றி அவனை காண இயலாது என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள்.

அணிக்கோலம் கொண்ட விடியலையும், இளவேனிற் காலத்தின் வளமிக்க காட்டையும் படைக்க எண்ணுகையில் பிரம்மன் உன்னை தியானித்து தன் படைப்புக்கான தூண்டலை உன்னிடமிருந்தே பெறுகிறான். மிதக்கும் முகில்களில் செம்மஞ்சள் நிறத்தை தெளிக்கையில், சிவந்ததும் வெண்ணிறமானதுமான தாமரைகளைக் கொண்டு பொய்கையொன்றை நிறைக்கையில், நான்கு வெண்ணிற இதழ்கள் கொண்ட தூய முல்லை மலரை படைக்கையில் எல்லாம் அழகைப் படைப்பதில் உனக்கிருக்கும் ரசனையையே அவன் கருத்தில் கொள்கிறான். அவனது படைப்பு முக்குணங்களுக்கேற்ப உருமாறுகையிலும் திரைகளுக்குப் பின் இருக்கும் உன்னை முழுமையாக அழித்துவிடமுடிவதில்லை.

அழகிய உலகுகள் பல அடங்கிய எண்ணற்ற வான்வெளிப் பால்மண்டலங்கள் அண்டப் பேரழிவுகளில் விழுங்கப்படுகின்றன. படைப்பூக்கம் சிறிதும் குன்றாத நீ, முன்பிருந்ததைவிட பேரெழில் கொண்ட இயலுலகை மீண்டும் படைத்தளிக்கிறாய். சிற்றுயிர்களான அணைகட்டும் நீர்நாய், கூடுகட்டும் பறவை, தேன்கூட்டை சமைக்கும் தேனீ போன்றவையெல்லாம் கூட படைப்பெனும் கலையில் ஆர்வம் கொள்கின்றன. உலகெங்கிலும் மானுடர் எழுப்பியுள்ள வழிபாட்டிடங்களை காண்கையில், கோயில்களையும், தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் கட்டிய கட்டடக் கலைஞர்களுக்கும் கைவினைஞர்களுக்கும் எத்தனையெத்தனை கனவுகளை நீ காட்டியிருக்கிறாய் என்பது தெரிகிறது!

|| ஊம் ரூபாகர்ஷிணீ || 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s