சௌந்தர்யலஹரீ – 8

Standard

ஸுதா*ஸிந்தோ*ர்மத்*யே ஸுரவிடபிவாடீபரிவ்ருதே

மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணிக்ருஹே

ஶிவாகாரே மஞ்சே பரமஶிவபர்யங்கநிலயாம்

ப*ஜந்தி த்வாம் த*ன்யா: கதிசன சிதானந்லஹரீம்

பாடல் – 8

எல்லையிலா அமுதக்கடல் நடுவே 

முத்துத் தீவில் அமைந்த 

கடம்ப மரச் சோலையில்

கற்பக மரங்கள் சூழ எழுப்பப்பட்ட

நனவெனும் அருமணி இல்லத்தில் 

சிவ உருவிலான சேக்கையில் இடப்பட்ட 

பரமசிவன் எனும் மெத்தைமேல்  

அமர்ந்திருப்பவளான உன்னை 

மீஆன்மாவின் பேரானந்தமென எண்ணி 

ஊழ்கத்தில் ஆழ்கின்றனர்

அரிய நிறைவாழ்வு பெற்ற சிலர்.

**

ஏழு வட்டங்களாலான ஒரு மண்டலத்தை குறிக்கிறது இப்பாடல். மண்டலம் என்பது தியானத்திற்கான ஒரு குறியீட்டு வடிவம். இது ஒருங்கிணைக்கப்பட்ட பொருள்பொதிந்த ஒரு உருவரையை(configuration) உருவாக்கும் முழு உரு (gestalt). இந்த உருவரை உடல் சார்ந்ததாகவோ, சொற்பொருள் சார்ந்ததாகவோ, விழுமியமாகவோ இருக்கலாம். பொதுத் தோற்றங்களில் அமைப்புகள் வேறுபடுவதுபோல, மண்டலங்களில் பலவகை உண்டு. ‘அயம் ஆத்ம பிரம்ம’ (இந்த ஆன்மாவே பிரம்மம்) என்பது மீத்தொடர்களில் (மகாவாக்கியங்கள்) ஒன்று. இதில் ‘பிரம்ம’ என்பது அனைத்தையும் உள்ளடக்கிய பிரபஞ்ச முழுமுதலை குறிக்கிறது. ‘ஆத்ம’ என்பது முழுமுதலின் கீழ் வரும் அனைத்தையும் ஊடுருவக்கூடிய ஒளிரும் நனவின் நிலையிடத்தை குறிப்பது. மேற்கண்ட மகாவாக்கியத்தின் ரகசியத்தை உள்ளடக்கிய, பொதுமையம் கொண்ட ஏழு வட்டங்களால் ஆன மண்டலம் இந்தப் பாடலுக்கென பரிந்துரைக்கப்படுகிறது.

வெளிப்புறம் உள்ள முதல் வட்டம் இங்கே தெய்வீக அமுதால் ஆன எல்லையிலா ஆழியாக விவரிக்கப்படுகிறது. பொதுவாக அறிவியலில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகையில் ஒரு முற்கோள் முன்வைக்கப்பட்டு அனுபவபூர்வமாக அது உறுதிப்படுத்தப்படும். மெய்யுணர்தல் எனும் ஆன்மீக அறிவியலிலும் இந்த இரண்டு படிநிலைகள் உண்டு. தற்காலிக முற்கோள் ஒன்றை வரைந்துகொள்வதற்கு பதிலாக, அறியப்படவேண்டியது எதுவோ அதைப் பற்றிய ஒரு கருத்து வடிவம் குருவாலோ மறைநூலாலோ அளிக்கப்படுகிறது. அதனை காட்சிப்படுத்திக் கொள்வதே துவக்கமாக அமைகிறது. சொற்பொருள் சார்ந்து துவக்கிவைக்கப் பெறுவது பின்னர் மெய்மையாக உணரப்படுவது வரை எண்ணம் மூலமும் தியானம் மூலமும் அணுகப்படுகிறது. சொற்பொருள் சார்ந்து காட்சிப்படுத்துதல் ‘சித்’ துடன் தொடர்புடையது. அக்காட்சிப்படுத்தலின் இருத்தலியல் தோற்றமே அனுபவம் எனப்படுவது. அது ‘சத்’ தோடு தொடர்புடையது. சத், சித் இரண்டும் ஒரு முழுமையான அனுபவமாக ஆகும்போது மெய்யுணரும் நனவு பேரானந்த நிலையை எய்துகிறது. ஆக, ஒரு ஆன்மீக அனுபவத்தில் ஆனந்தமே முழுமுதலின் மேலோங்கிய கூறாக இருக்கிறது. அறிவியங்கியலின்படி அனைத்து விழுமியங்களுக்கும் நிலைக்களனாக விளங்கும் ஆன்மீகப் பேரின்பம் (ஆனந்தம்) கவித்துவமாக தேனென, அமுதென சுட்டப்படுகிறது. இங்கே அது எல்லையிலா அமுதக்கடலென அழைக்கப்படுகிறது. ஆழி எல்லையற்றதுதான் என்றாலும் ஒரு கப்பலிலிருந்து காண்பவர்க்கு அது தொடுவானால் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதாகத் தெரியும். அதுபோல, தியானிப்பதற்கென ஒரு வளைகோட்டால் அதை வரைந்துகொள்ளலாம் என்றாலும், மண்டலத்தின் வெளிவட்டம் எல்லையற்றதாக கருதப்பட வேண்டும்.

வேதாந்த மரபில், ஒருவர் எதை தியானிக்கிறாரோ அவர் அதுவாக ஆகிறார் என்று கருதப்படுகிறது. குருவானவர் முழுமுதல் மீதான தியானத்திற்கான உபதேசத்தை சீடனுக்கு அளிக்கையில், எந்த வரிசைமுறையில் தியானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை காட்டும் வகையில் கச்சிதமான சொற்களால் ஆனதாக இருக்கிறது உபதேச மொழி. ‘தத் த்வம் அஸி’ (அது நீயே) என்பது உபதேச வாக்கியம். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதற்சொல் பிரம்மத்தை (முழுமுதலை) குறிக்கிறது. நனவிலிருந்து இருமையின், எல்லையின் தடங்கள் முற்றாக நீக்கப்படும் வரை அதை தியானிக்க வேண்டும். தனியரின் நனவு தனி ஒருமையின் எல்லையை கடக்கையில் இருமையற்ற முடிவிலி நிலையை மீளப்பெறுகிறது. ‘த்வம்’ (நீ) என்னும் கூறை தியானிக்கக் கூடாது. ஆராயும் மனமே ‘த்வம்’ என்பது. ‘நீ’ என்பது ‘அதி’ல் தன் அடையாளத்தை இழக்கிறது. இதையொட்டியே முழுமுதலின் முடிவிலா ஆனந்தம் என்பது இங்கே தியானத்திற்கான முதல் மண்டலமாக முன்வைக்கப்படுகிறது.

இறை நம்பிக்கை கொண்ட மதங்களில் எல்லாம் அனைத்துக்கும் ஆதிகாரணமாக இருப்பது கடவுள். இறைமறுப்பு மதங்களில் அல்லது தத்துவப் பள்ளிகளில் நவீன அறிவியல் சொல்லும் பருப்பொருள் போன்ற, காலப்போக்கில் மலரக்கூடிய அனைத்து இயல்கைகளும் கொண்ட ஆதிப் பொருள் ஒன்று அடிப்படையானதாக கொள்ளப்படுகிறது. மதத்தைப் பொறுத்தவரை அது தோற்றம் குறித்தது, அறிவியலிலோ அது பரிணாம வளர்ச்சி குறித்தது. இப்பாடலில் ஆன்மாவின் தேன் என்னும் ஆதி காரணம் முதல் வட்டத்திற்குள் அமைந்த, ஒரு படைப்புக் களனாக, இரண்டாவது மண்டல வட்டமாக முன்வைக்கப்படுகிறது. பைபிளின் ‘தோற்றம்’ (Genesis) காட்டும் நீர், காற்று, ஞாயிறு, திங்கள், மனிதன் வாழ்வதற்கான சொர்க்க மயமான தோட்டம் என அனைத்தும்  அடங்கிய பசுமைநிறைந்த உலகம் போன்றதாக, இந்த இரண்டாவது மண்டலம் (சுரவிடபிவாடீ) விவரிக்கப்படுகிறது. ‘சுர’ இறைத்தன்மையையும், ‘விடபி’ என்பது ஒரு மரத்தையும், ‘வாடீ’ என்பது தெய்வீகமான மரங்கள் நிறைந்த சோலையையும் குறிப்பது. பைபிள் காட்டும் சொர்க்கத் தோட்டம் போன்றதேதான் இதுவும்.

இங்கிருந்து நாம் விழுமியங்களின் அமைப்பு முறைக்கு செல்கிறோம். நோக்குபவனின் மனதோடு தொடர்புறுத்தாமல் காலத்தையும் நேரத்தையும் அறியமுடியாது. அதுபோலவே, மதிப்பிடும் மனம் ஒன்று இல்லையென்றால் விழுமியம் என்பதற்கு எந்த மதிப்பும் இல்லை. உணர்ச்சிகளை பாதிக்கும் தன்மையே விழுமியத்தின் அடிப்படை. அனவே, முடிவிலா இன்பத்திற்கு ஒரு சுற்றெல்லை வரையறுக்கப்பட வேண்டும். அப்போதுதான்  அனுபவபூர்வமான இன்பமாக அது தோன்ற முடியும். எனவே, இந்த மூன்றாவது மண்டல வட்டம் நனவெனும் முத்துக்களால் ஆன தீவெனப்படுகிறது. இந்தத் தீவுக்குள் ஆன்மீக தியானத்திற்கான சூழலாக கடம்ப மரங்களின் சோலை ஒன்று அடுத்த (நான்காவது) மண்டல வட்டமாக கருதப்படுகிறது. இந்தியக் கவி மனதிற்கு வானின் நீலமும், கடலின் நீலமும் முடிவிலியின் குறியீடாகவே தோன்றுகிறது. இளவேனிற் காலத்தில் கடம்ப மரங்கள் எல்லாம் நீல மலர்கள் செறிந்து நிற்கும். அவை கண்ணனின் குழந்தைப்பருவ விளையாட்டுகளோடு நம்மை தொடர்புறுத்துபவை. கடம்ப மரம் என்றாலே கண்ணன் நினைவிலெழுவான். கவித்துவமான ஒரு சூழலை ஏற்படுத்தவே இங்கே கடம்ப மரச் சோலை இடம்பெறுகிறது.

பழங்கால ஆசிரமங்களில் தியானம் செய்யவும் ஊழ்கத்தில் அமர்வதற்கும் மட்டுமென்றே சோலைகள் அமைக்கப்பட்டிருக்கும். அவை தபோவனங்கள் எனப்படும். இந்தக் கடம்ப மரச் சோலையில் தபோகிருஹம், ஊழ்கத்திற்கான சிறப்பு இல்லம் அமைந்துள்ளது. இப்பாடலில் அது சிந்தாமணிகிருஹம் எனப்படுகிறது. ஐந்தாவது மண்டல வட்டம். நனவெனும் முத்துக்களின் இல்லம் என்பது அதன் பொருள். இந்த இல்லத்தில்தான் தேவிக்கு பீடமென அமையவேண்டிய மண்டலம் உள்ளது. பீடத்தின் அடிப்பகுதி சிவாகாரமஞ்சம் எனப்படுகிறது. மஞ்சம் என்பது நான்கு கால்கள் கொண்ட சேக்கை-கட்டில். மாண்டூக்ய உபநிடதத்தில் முழுமுதல் நான்கு கால்கள் கொண்டதாக (சதுஶ்பாதா) விவரிக்கப்படுகிறது. ஓம் என்பதால் குறிக்கப்படும் முழுமுதல் நான்கு கால்பகுதிகளைக் (quarters) கொண்டது. அவையே நனவின் நான்கு கூறுகள்: விழிப்புநிலை அல்லது புறவயநிலை; கனவு அல்லது அகவயநிலை; நனவிலி நிலை; (அறிவெல்லை) கடந்த நிலை. அது இங்கே மண்டலத்திற்குள் அமைந்த பீடமாக கருதப்படுகிறது. இது ஆறாவது வட்டம்.

ஏழாவது வட்டம் முடிவிலா நனவெனும் மெத்தையாக (பரமஶிவபர்யங்க) கூறப்படுகிறது. ‘பரம’ ஏன்பது முழுமுதலை குறிப்பது; ‘ஶிவ’ என்பது இசைந்த நிலையை, அமைதியை, நன்மையை குறிப்பது; ‘பர்யங்க’ என்பது மெத்தையை குறிப்பது. இந்தியச் சிற்பக்கலையில் இறையுருவின் இருக்கைக்கு சிறப்பிடம் உண்டு. பிரம்மன் ஒரு தாமரையை தன் இருக்கையாகக் கொண்டுள்ளான். இந்த மண்டலத்தில் இறையின் இருக்கை முழுமுதலே. இம்மண்டலத்தில், ஒற்றை மையம் கொண்ட ஏழு வட்டங்களுக்குள் இறையுரு நடுவே நிலைபெற்றுள்ளது. முந்தைய பாடலில் பருவடிவ நிலையில் உருவகிக்கப்பட்ட தேவி இங்கே (அறிவெல்லை) கடந்த நிலையில் உருவகிக்கப்படுகிறாள். மீநனவின் பேரானந்தமாக (சிதானந்தலஹரீயாக) வர்ணிக்கப்படுகிறாள்.

தாந்த்ரீகத்தில் இப்பாடல் மீதான தியானத்திற்கு மிகச்சிறப்பான இடம் அளிக்கப்படுகிறது. இது ஶ்ரீவித்யா எனப்படுகிறது. ஶ்ரீவித்யாவுக்கான எந்திரமே ஶ்ரீசக்ரம். அடிப்பகுதி மேற்புறமாக அமைந்த நான்கு முக்கோணங்கள் ஒன்றன் மீது ஒன்றாகவும், உச்சிப்பகுதி மேற்புறமாக அமைந்த ஐந்து முக்கோணங்கள் ஒன்றன் மீது ஒன்றாகவும் இடையிட்டு வைக்கப்பட்டதுபோல ஶ்ரீசக்ரம் வரையப்படுகிறது. பொதுவாக ஶ்ரீசக்ரம் தங்கம் அல்லது வெள்ளித் தகடில் செய்யப்பட்டிருக்கும். முக்கோணங்கள் அருமணிகள் கொண்டு குறிக்கப்பட்டிருக்கும். இந்தத் தகடு புறவயச் சடங்குகள் மூலம் பூஜிக்கப்படும். மாறாக, ஶ்ரீசக்ரம் இதயத்தில் உருவகிக்கப்பட்டும், இங்கு விவரிக்கப்பட்டதுபோல தியானிக்கப்படும். புறவயத் தொழுகை ‘பஹிராகாஶபூஜை’ என்றும் இதயத்தில் தியானிக்கப்படுவது ‘தஹராகாஶபூஜை’ என்றும் கூறப்படுகிறது. இறையை வடிவம் தந்து உருவகப்படுத்திக் கொள்ள விழைவோர் கைலாய மலையை கட்டிலாகவும், சிவனின் மடியை இருக்கையாகவும் எண்ணுகின்றனர். இறைவியை பெண்மையின் பேரெழில் வடிவாக, திரிபுரசுந்தரியாக காண்கின்றனர்.

ஶ்ரீசக்ர தியானம்

ல்ரீம் தை*ர்யாகர்ஷிணீ

தாயே, வலுவும் வீரமும் நிறைந்த சிங்கத்தின் மீது ஊர்பவள் நீ. சிவன் எனும் வடிவான இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். பரமேச்வரனின் மடி உன் அரியணை. அரசியருக்கெல்லாம் பேரரசி நீ. உன் சிறுவிரல் பற்றி உன்னைத் தொடரும் என்னை அச்சம் என்பது நெருங்குமோ?

விண்வெளியில் ஒளிரும் பகலவன் மண்ணின் மீது திகழும் ஒவ்வொரு உயிரினமும் இயங்கும்படி சூரிய ஆற்றலை பொழிகிறான். ஓம் எனும் மந்திரத்தின் வடிவெடுத்தவள் நீ. உன் ஒளியைக் கொண்டு நாங்களும் ஒளிர்கிறோம். உன் ஞானமெனும் அமுதைப் பருகும் திறனை எமக்கு நீ அருளியிருக்கிறாய்.

எம்மை அறிவுடை உயிர்களாகப் படைத்திருக்கிறாய் நீ. மெய்த்துணிவு கொண்டோரே மதிநுட்பம் கொண்டோர். உலகிலுள்ள அனைத்தும் உன் மதிநுட்பத்தைச் சார்ந்தே இருக்கின்றன. அன்னையின் மடியிலுறங்கும் மகவு எவரையும் அஞ்சுவதில்லை. உன் இறைவனின் மடியில் நீ அமர்ந்திருப்பதால் நீ துணிவுகொண்டவளாய், அச்சமின்றி இருக்கிறாய். மானுடராகிய நாங்கள் முக்குணங்களின் மடியில் கிடத்தப்பட்டிருக்கிறோம். அரிதாக எம்மில் சத்வ குணம் திகழ்கிறது. அத்தருணங்களில் நாங்கள் துணிவு கொள்கிறோம். நம்பிக்கை அளிக்கும் உன் புன்னகையை காண்கிறோம். ஆனால், ரஜோ குணமும் தமோ குணமும் எங்கள் பார்வையை மறைக்கையில் நிச்சயமின்மையால் தாக்கப்படுகிறோம். உன்னை புரிந்துகொள்ள முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறோம். 

சொகுசான படுக்கையில் ஆழ்ந்துறங்குபவனும் கொடுங்கனவுகள் கண்டு அச்சத்தில் அலறுகிறான். ஆனால், விழித்துக்கொண்ட பின் தன் மனதிலிருந்த எண்ணமே தான் அடைந்த அனுபவம் என்பதை உணர்கிறான். தெளிவுபெற்று மீண்டும் வலுவடைகிறான். என் மனதின் ஆழிருளுக்குள் நான் நழுவும்போதெல்லாம் என்னை நீ விழிக்கச் செய்யவேண்டும் என்பதே என் கோரிக்கை. உன் அறிவின் நீங்காத தெளிமையை எனக்கும் அருள்வாயாக! இருளில்தான் ஒருவரது தன்முனைப்பு சாத்தானாக மாறுகிறது. அறியாமையிலிருந்தே அச்சம் விளைகிறது. எம் இருளையகற்றத் தேவையான கருவிகளை சரியான தருணத்தில் அருளும் உனக்கு என் நன்றி.

தாயே, சிவானந்தமெனும் ஆழியிலிருக்கும் மாணிக்கத் தீவில் அமர்ந்திருக்கும் உன் திருக்கோலத்தை நான் எப்போதும் காணும்படி அருள்வாயாக! கடம்ப மரங்கள் சூழ்ந்த எழிற்கானகத்தில் சிந்தாமணி எனும் கோயிலில் நீ குடிகொண்டிருக்கும் காட்சியை நான் காண்பேனாக! எப்போதும் சிதானந்தத்தில் நீ மூழ்கியிருக்கக் காண்பேனாக! அதுவே என் வாழ்வை நிறைவுகொள்ளச் செய்யும். என் அறிவின் ஒளி நீ. உன் அருளிலிருந்து எழும் பேரானந்த அலைகளில் அறியாக் குழவியென நான் சிரித்துக் களித்தாடுவேனாக!

|| ல்ரீம் தைர்யாகர்ஷிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s