சௌந்தர்யலஹரீ – 7

Standard

க்வணத்காஞ்சீதாமா கரிகலப*கும்ப*ஸ்தனனதா

பரிக்ஷீணா மத்*யே பரிணதஶரச்சந்த்ர வனா

த*னுர்பாணான் பாஶம் ஸ்ருணிமபி ததா*னா கரதலை:

புரஸ்தாதாஸ்தாம் ந: புரமதி*துராஹோபுருஷிகா

பாடல் – 7

புரமெரித்தவனின் தன்முனைப்பே வடிவானவள்

கரிமத்தகம் ஒத்த முலைகளோடு முன் ஒசிந்து

மெல்லிய இடையும் முழுநிலவொத்த முகமும் கொண்டு

வில்லும், அம்பும், கயிறும், கொக்கியும் ஏந்தி

எம் முன் எழுந்தருளட்டும்

**

பருண்மை, நுண்மை, அறிவெல்லை கடந்த நிலை என்ற மூன்று பண்புகளும் கொண்ட கடவுளாக அன்னையானவள் வணங்கப்படுகிறாள். இந்தப் பாடல் அவளது பருண்மை வடிவை விவரிக்கிறது. ‘ரஹஸ்யநாம ஸஹஸ்ரா’ என்ற நூலில், பக்தன் உருவகித்துக் கொள்ளக்கூடியதாக இந்தப் பருண்மை வடிவம் பரிந்துரைக்கப்படுகிறது. திரிபுராந்தகனின் (முப்புரமெரித்தவன்) பெண்பால் எதிரிணையாக தேவியை திரிபுரசுந்தரி (முப்புரங்களை எழிலூட்டுபவள்) என்று அழைப்பதே வழக்கம். ஆனால் இப்பாடலில் அவள் புரமெரித்தவனின் தன்முனைப்பின் எதிரிணை வடிவாகிறாள். புருஷிகா என்பது அரிய சொல். புருஷன் என்பது ஆணைக் குறிப்பது. ஆண்மை எனும் பண்பை வலியுறுத்துவது. ஆனால் புருஷிகா என்பது பெண்பாற்சொல். ஆண்மையின் பெண்மை வடிவம் என்று பொருள்படுவது. அதாவது, பெண்ணில் ஆண்மை மீதூறுகையில் அதை புருஷிகா எனலாம். காக்கும் கடவுளான விஷ்ணு அழகியின் வடிவெடுத்தபோது, அழிக்கும் கடவுளான சிவன் அவ்வழகில் மோகம் கொண்டு தன் இயல்புக்கு மாறாக படைப்போனாக மாறியதை ஐந்தாவது பாடலில் கண்டோம். இப்பாடல் சிவனின் ஆண்மைப் பண்பை தேவிக்கு அளித்து அவளை புருஷிகா என்று அழைப்பதன் மூலம் அச்சீர்குலைவை சரிசெய்கிறது. இந்த ஒப்புமைகள் நம் மனதை நுண்மையிலிருந்து பருண்மைக்கும், பருண்மையிலிருந்து நுண்மைக்கும் இடையே ஊடாட வைத்து, பருண்மை, நுண்மை, அறிவெல்லை கடந்த நிலை என்ற மூன்றையும் ஒன்றாக நம் முன் வைக்கின்றன.

ப*வ எனப்படும் உருக்கொண்ட உலகம் முடிவிலா பிறப்பெனும் தளையால் ஆனது. ஒவ்வொரு கணமும் அக்கணத்தின் உலகை படைப்பதாக கூறப்படுகிறது. இக்கருத்து க்ஷணிக விஞ்ஞானவாதத்தை ஒத்தது. அதன்படி ஒரு கணம் மூன்றாக பகுக்கப்படுகிறது. கணத்தின் முதல் பகுதியில் உலகம் தோன்றுகிறது, இன்னொரு பகுதியில் உலகம் இருக்கிறது (வாழ்கிறது), கடைசி மூன்றாம் பகுதியில் சிதைகிறது. இதில் முந்தைய கணம் பிந்தையதை பிறப்பிக்கிறது. இந்தத் தொடர் நிகழ்வுகள், படைப்போளான தேவி அடியெடுத்து வைக்கையில் ஒலிக்கும் அவள் இடையணி மணிகளோடு ஒப்பிடப்படுகின்றன.  கணம் கணமென அவள் நடக்கையில் உலகம் தோன்றி அவளது எதிரிணையான சிவனில் கரைந்தழிகிறது.

சிறு மணிகள் எழுப்பும் ஒலி மிக மென்மையானது, உயர்வான ஒன்று. தேவியின் நுண்மையை குறிப்பது. அடுத்ததாக அவள் உடலையே முன்பக்கம் ஒசியச் செய்யும் வளமுலைகள் குறிப்பிடப்படுகின்றன. அவை யானையின் வலுவான மத்தகத்துடன் ஒப்பிடப்படுகின்றன. இதற்கும் அழகு அல்லது மென்மைக்கும் தொடர்பே இல்லை. இந்தியாவில் மத்தகம் கொண்டு மரங்களை முறிப்பது போன்ற கடினமான வேலைகளுக்கு யானைகளை பழக்குவது வழக்கம். எனவே, இந்திய மனதுக்கு யானை என்பது வலிமையை குறிப்பது. படைக்கும் தேவி, தன்னில் பிறந்தவற்றிற்கு ஊட்டம் அளிக்கும் அன்னையும் ஆவாள். அனைத்து உயிரிகளிலும் திகழும் வாழ வேண்டும் என்ற விழைவு எளிதில் அடக்கப்படக் கூடியதல்ல. மாயையை படைப்பாற்றலாக சொல்லும்போது சில சமயங்களில் அதை பிரதானம் (படைப்பூக்கத் துடிப்பு) என்று குறிப்பிடுவது வழக்கம். ஏனெனில் அதன் விழைவு-நிறைவேற்றத்திற்கான ஆற்றல் மிக வலியது. ஒலிக்கும் மணிகளோடு அன்னை வைக்கும் மெல்லடிகளும் அவளது படைப்பாற்றலும் சேர்ந்து, பொருளும் ஆன்மாவும் மர்மமான முறையில் கலக்கும் படைப்பை எளிமையற்றதாக்குகிறது.

வளமுலைகள் என்ற படிமம் மூலம் அன்னையின் முரட்டுத்தனமான, துடிப்புடைய ஆற்றல் சுட்டப்படுகிறது. கீழே மெலிந்த இடையையும் (பரிக்ஷீணா) மேலே முகத்தையும் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் உவமைகள் மூலம் இது சமன்படுத்தப்படுகிறது. பொதுவாக பெண் தெய்வச் சிலைகளில் எட்டு எனும் எண் வடிவ இயக்கம் கையாளப்பட்டிருக்கும். அந்த இயக்கத்தின் மையமாக இடை இருக்கும். இந்தப் பாடல் மணிபூரகத்தில் தியானிக்கப்பட வேண்டியது என்பதால், தேவியின் வர்ணனை இடையுடன் நிறைவடைகிறது. பக்தன் எட்டு எனும் எண் வடிவின் கீழ்பாகத்தை தன் உடல் கொண்டு நிறைவு செய்ய வேண்டும். வேனிற்கால முழுநிலவுடன் முகம் இங்கே உவமிக்கப்படுகிறது. ‘பரிணத ஶரத் சந்திர வதனா’ என்பதில் ‘பரிணத’ என்றால் ‘உருமாறிய’ என்பது பொருள். முழுநிலவை மட்டும் அது குறிக்க வேண்டும் என்பதில்லை. நிலவின் தேய்ந்து வளரும் பண்பையும் அது குறிக்கலாம். அந்தக் கோணத்தில் பார்த்தால் தேவி கண்ணுக்கு புலப்படலாம், மறையலாம், பல படிநிலைகளிலான மாற்றம் பெறலாம்.

‘க்லீம்’ என்ற ஒற்றை பீஜ மந்திரமே இப்பாடலுக்கானது. அது மணிபூரகத்தில் தியானிக்கப்பட வேண்டியது. தியானத்திற்கான சட்டகமாக தேவியின் கைகளில் இருக்கும் வில்லும், அம்பும், கயிறும், கொக்கியும் உள்ளன. இதில் வில் மனதையும், ஐந்து அம்புகள் ஐம்புலன்களையும், கயிறு பிணைப்பின் வடிவிலான அன்பையும், கொக்கி மனதின் எதிர்மறைப் போக்குகளையும் குறிப்பன.

க்லீம்

ஶ்ரீசக்ர தியானம்

எம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ

தாயே! தூய நனவின் தெளிவு நீ. பிரபஞ்ச நினைவின் காந்தப் புலம் நீ. பகலிலும் இரவிலும் செய்ய வேண்டியவற்றை நிரை மாறாமல் நினைவில் வைத்திருக்கும் இல்லாளைப் போல நீ பரிவுகாட்டுகிறாய். ஒவ்வொருவரும் உன் குழந்தையென, ஒவ்வொரு வீடும் உன் இல்லமெனக் கருதி முழு உலகையும் ஒன்றேபோல் புரக்கிறாய். எதிர்வரும் காலத்தில் நின்றபடி, நினைவுத் தளிர்களை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறாய். இவ்வாறாக, ஒரே சமயத்தில் கடந்தகாலத்தை அணிசெய்து, நிகழ்காலத்தை எழில்பெறச் செய்து, துடிப்புடன் மலரும் எதிர்காலமாக இருக்கிறாய்.

விடியலுக்கு முன்பாகவே கீழ்வானில் நீ தீட்டும் ஒண்சிவப்புச் சாயம் இன்னொரு திருநாளின் நல்வரவை அறிவிக்கிறது. புதுநாளின் நற்செய்தியை அறிவிக்க சேவற்கோழிகளை கூவும்படி பணிக்கிறாய். மலரக் காத்திருக்கும் மொட்டுகள் அவிழ்வதற்காக உன் இளந்தென்றலை அனுப்புகிறாய். பகலவன் வருவதற்கு முன் மூடுபனி வந்து ஒவ்வொரு மலரிதழிலும் பனித்துளியை விட்டுச் செல்கிறது. மலர்கள் பேரழகு கொள்கின்றன. சோர்ந்து ஆழ் உறக்கத்தில் கிடக்கும் ஆணும் பெண்ணும் புதிய நாளுக்கு வரவேற்கப்படுகின்றனர். உலகு விழித்தெழுகையில் இனிய பால் நிறைந்த மடியுடன் நிற்கின்றன பசுக்கள். 

நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பல்லாயிரம் கருவிகள் கொண்டு அனைத்தையும் நீயே நடத்துகிறாய். ஆனால் தாங்கள் விரும்பும் செயலை தாம் செய்வதாகவே ஒவ்வொருவரும் கருதுகின்றனர். அவர்கள் விரும்பும் அந்த அடையாளத்தை நீ அனுமதிக்கிறாய். இடையறாது இயங்கும் உலகில் அவர்கள் தம் செயலை செய்துமுடிக்கும்படி தூண்டிக்கொண்டே இருக்கிறாய். முடிவிலா உன் நடனத்திற்கேற்ப அனைவரும் அடிவைக்கின்றனர். எண்ணிலடங்கா நாத லயங்களுடன் ஒலிக்கிறது உன் வெள்ளிக் கொலுசொலி.

வளம்தரும் அன்னையே! எங்குபார்த்தாலும் ஊட்டம் தரும் உன் வளமுலைகளின் சாயல் தெரிகிறது. கவிஞர்கள் யானையின் மத்தகத்தில் அவற்றை காண்கின்றனர். வளர்பிறையிலும் தேய்பிறையிலும் உனது நடுப்பகுதி கண்ணில் படுவதே இல்லை என்பது பெரும் புதிராக உள்ளது. நெடுக்கை வளைவுகளில் எல்லா திரிபுகளையும் ஏற்படுத்துகிறாய். உருமாற்றம் நிகழ்கையில்  உன் லயம் மாறுவதில்லை. சில போது எமக்கு முழுமையான விடுதலை அளிக்கிறாய். பின்னர் எம்மை வார் கொண்டு பிணைத்து நடத்திச் செல்கிறாய். சிலபோது கவலையற்று இருக்கச் செய்கிறாய். பிற சமயங்களில் தவிர்க்க முடியாதவற்றை நாங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பதில் உறுதியாயிருக்கிறாய்.

எமக்கென நீ சேர்த்து வைக்கும் பெரும் வரலாற்றில், பல்லாயிரம் கோடி உயிர்களின் நினைவில் பதியும் ஒரு சிறு நிகழ்வுகூட மறைந்துபோவதில்லை. எழுதப்பட்ட நூல் உன் உருவெனவே திகழ்கிறது. எழுதப்பட்ட ஒவ்வொன்றும், விளக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஒரு புதிய சவாலை எமக்களிக்கிறது. ஒவ்வொன்றையும் மீள்பார்வையிட்டு, மறுமதிப்பீடு செய்து புதியதாய் எழுதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அழிக்கும் இறைவனான உன் இணையன் ஊழிப்பெருக்கெனும் வெற்றிடத்தை மீள மீள உருவாக்குகிறான். கண்களைத் திறந்தால் உலகு மீளத்தோன்றுவது போல, ஒவ்வொன்றையும் சிறப்புறச் செய்து நிறுவுகிறாய். நீயே முப்புரப்பேரழகி.

|| எம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ || 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s