சௌந்தர்யலஹரீ – 6

Standard

த*னு: பௌஷ்பம் மது*கரமயீ பஞ்ச விஶிகா*

வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோத*னரத*:

ததா*ப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபா

மபாங்த் தே லப்த்*வா ஜகதிதமங்கோ விஜயதே

பாடல் – 6

மலையவன் மகளே 

உன் ஓரவிழிப் பார்வையால் அருள்பெற்று 

வண்டுகளால் ஆன நாண் கொண்ட மலர்வில்லும், 

ஐம்மலர் அம்பும் ஏந்தி

வசந்தகாலத்தை அமைச்செனக் கொண்டு 

மலையிலிருந்து தவழும் தென்றலெனும் தேரில்

வெற்றியோடு அமர்ந்திருக்கிறான் உடலிலியான மன்மதன்

**

கைலாயத்தில் சிவன் ஊழ்கத்தில் ஆழ்ந்திருந்தான். உயிரினங்களின் சந்ததி பெருக வேண்டும் என விரும்பிய தேவர்கள் மன்மதனை அனுப்பி சிவனின் காமத்தை தூண்டும்படி கோரினர். பிரபஞ்ச அன்னையெனப் போற்றப்படும் உமை எனும் பார்வதியை சிவன் அணுக வேண்டும் என அவர்கள் எண்ணினர். சிவனை தன் மணாளனாக அடைவதற்கென பார்வதி கடுந்தவம் புரிந்திருந்தாள். ஆனால் சிவனோ மன்மதன் அருகணைந்தபோதும் தன் ஊழ்கத்திலிருந்து வெளிவர மறுத்தான். பேரன்னையின் அருளை நம்பி சிவனது காமத்தை தூண்ட தன் மலரம்புகளை எய்தான் மன்மதன். காமனின் நடத்தையால் சினந்த சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து காமதேவனை எரித்து சாம்பலாக்கினான்.

தங்கள் திட்டம் தோல்வியுற்றதை அறிந்த தேவர்கள் தீ இறையாகிய அக்னியை சிவனிடம் அனுப்பினர். சிவனது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறுமடிப்புகள் கொண்ட பொறியை எடுத்துக்கொண்டான் அக்னி. இந்தக் கதிர்கள் இமையத்தின் சரவணப் பொய்கையில் நுழைந்து ஆறு தெய்வக் குழந்தைகளென ஆயின. கார்த்திகைப் பெண்டிர் இந்த ஆறு குழந்தைகளுக்கும் முலையூட்டினர். இக்குழந்தைகள் சிவனுக்குப் பிறந்தவை என்பதை அறிந்த இறையன்னை அவற்றை அன்போடு ஒன்றாக அணைத்தாள். அந்த அணைப்பில் அந்த ஆறு குழந்தைகளும் ஆறு தலைகொண்ட ஒற்றைக் குழந்தையாக மாறின. அந்தக் குழந்தையே சுப்ரமணியன் என்றும் சண்முகன் என்று அறியப்படுவது. சிவனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் அன்னையின் அருளால் உடலிலாத இருப்பை பெற்றான்.

இப்பாடலில் அனங்கவித்யா (அன்பின் அறிவியல்) பற்றிய குறிப்பிருக்கிறது. காதல்கடவுளான காமனே இப்பாடலின் யந்திரத்தோடு தியானிக்கப்பட வேண்டிய ரிஷி. காமனுக்கு ஸ்மாரன் (நினைவு) என்றும் மன்மதன் (மனதைக் கலக்குபவன்) என்றும் பெயர்களுண்டு. மக்களிடையே கவர்ச்சியை தோற்றுவிக்க அன்னையின் கருவியெனச் செயல்படுவதால் அன்னை அவன்மீது அருளைப் பொழிகிறாள். அன்னையின் இந்தப் பண்பு வீனஸ்  (Venus) அல்லது அஃப்ரடைட்டைப் (Aphrodite) போன்றது. காமனுடையது ஈராஸின் (Eros) பண்பைப் போன்றது.

க்லீம் என்பதே இங்கு பீஜ மந்திரம். அதற்கு காமபீஜம் என்று பெயர். உடலுக்குள் இந்த மந்திரத்தை தியானிக்கையில் முதல் மூன்று மந்திரங்கள் முதலில் விசுத்தியிலும் (தொண்டை), பின் ஆஞாவிலும் (புருவ மையம்), அதன் பின் ஸஹஸ்ராரத்திலும் (தலையுச்சி) என சக்ரங்களின் அச்சையொட்டி செங்குத்தாக அமையவேண்டும். கீழுள்ள மந்திரங்களும் செங்குத்தாக மணிபூரகத்தில் (உந்தி) தொடங்கி ஸ்வாதிஷ்டானம் (பிறப்புறுப்பு) சென்று மூலாதாரத்தில் (முதுகெலும்பின் நுனி) முடியும்படி செங்குத்தாக அமைய வேண்டும். கீழே அமைக்கப்பட்டவை சக்தியையும், மேலே வைக்கப்பட்டவை சிவனையும் குறிப்பவை. கீழுள்ளவற்றின் விழைவுகள் மேலுள்ள மூன்றினோடும் தொடர்புறுத்தப்பட வேண்டும். இவ்விரண்டு இணைகளுக்கு நடுவே இதயம் சமன்படுத்தும் மையமாக கொள்ளப்படுகிறது.

மணிபூரகத்தோடு தொடர்புடைய விழைவுகள் காதலன்/காதலியின் இயல்பை அறிந்து அதனோடு தன்னை அடையாளப் படுத்திக்கொள்வதற்கானவை. இந்த தியான அமைப்பில் விசுத்தி மணிபூரகத்தின் எதிரிணை. இறையாகிய காதலனை/காதலியை போற்றிப்பாடி மந்திரத்தை ஓதுகிறார் பக்தர். மந்திரம் ஓதப்படும்போது ‘சக்தி’யின் கூறு மணிபூரகத்திலும், ‘சிவனி’ன் கூறு விசுத்தியிலும் கருத்தாக்கம் பெறுகின்றன. இவ்விரண்டு கூறுகளையும் இதயத்தில் தொடர்புறுத்த எட்டு எனும் எண்வடிவத்திலான இயக்கம் மனதில் நடைபெறுகிறது. அதன் பின்னர், அதே போல, ஸ்வாதிஷ்டானமும் மூலாதாரமும் முறையே ஆஞாவோடும் ஸஹஸ்ராரத்தோடும் தொடர்புறுத்தப்பட்டுகின்றன. ஸ்வாதிஷ்டான தளத்தில் இருக்கும் விழைவுகள் காதலன்/காதலியின் அல்லது இறையின் அன்பில் பங்குகொள்வதற்கானவை. மூலாதாரத்தில் உள்ள விழைவுகள் காதலன்/காதலியின் அழிவின்மையில் பங்குகொள்வதற்கானவை. ப்ராணனின் மையச் செல்வழியான சுஷும்னம் வழியாக ஸஹஸ்ராரம் வரை குண்டலினியை எழுப்புவதன் மூலம் இது அடையப்பெறுகிறது.

இந்த மூன்று இணைகளும் சச்சிதானந்தம் என்னும் முக்கூறுகளாக கருதப்பட வேண்டும். மூலாதாரம்-ஸஹஸ்ராரம் இணை ‘சத்’ தையும் (இருப்புக் கூறு), ஸ்வாதிஷ்டானம்-ஆஞா இணை ‘சித்’ தையும் (பிழைத்திருத்தல் கூறு) மணிபூரகம்-விசுத்தி இணை ‘ஆனந்த’த்தையும் (மதிப்புக் கூறு) குறிப்பவை.

க்லீம்

ஶ்ரீசக்ர தியானம்

ஐம் நாமாகர்ஷிணீ

நில்லா நீங்கா ஒலியின் இறைவியே! சிவனது வில்லே உன் இயக்கமாய் இருக்கிறது. சொற்களை எண்ணியெடுத்து அம்புகளெனத் தொடுத்து என் நாவில் செலுத்துகிறாய். அம்பு உடலை காயப்படுத்துவது. ஆனால், உனது அம்புகள் அழிவின்மை எனும் அமுதை என் நெஞ்சில் செலுத்துகின்றன. என்னை பேரின்பத்தில் ஆழ்த்துகின்றன. அன்பே உருவான தாயே, ஒவ்வொரு சொல்லும் உன் பெருமையைப் பாடும் பாடலாய் அமைகிறது. வசந்தத்தில் மலரும் பூப்போல, அதன் நறுமணம் என் மூச்சுக்காற்றை நிறைக்கிறது. என் பார்வைக்கு இனியதாய் இருக்கிறது. தேனாய் இனிக்கிறது. பகலவனால் எரிக்கப்படும் நிலமும், வாடிப்போகவிருக்கும் செடிகொடிகளும் மலையிலிருந்து வீசும் தென்றலின் தண்மையில் புத்துயிர் பெறுகின்றன. அதேபோல், உன்னைப் போற்றும் சொற்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் இனிய தென்றலென வீசுகின்றன.

இமையவன் மகளே, பனிமலையின் அருள்நிரம்பிய கண்ணீர் போல, விண் கங்கை இம்மண்ணில் இறங்குகிறாள். நிலத்தை புதுப்பித்து பலகோடி உயிர்களுக்கு உணவு விளைவிக்கிறாள். உணவால் உடல் செழிக்கிறது. அதுபோல், அறிவுப் புலங்களுக்கும், கவிதைக்கும், இசைக்கும் எல்லாம் தாயாக, நீ கலையின் ஆராதகர்கள் மனதில் பேரின்பத்தை நிறைக்கிறாய்.

இருவரிடையே பரிமாறிக்கொள்ளப்படும் சொற்கள், உடலிலியான மன்மதனைப் போன்றவை. கண்ணுக்குப் புலப்படாதவை. எனினும், இதயங்களை பிணைப்பவை. அன்பு நிறைந்த ஒரு சொல் என்பது நட்போடு நீட்டப்படும் நேசக்கரம். உன் சொல்லைக் கொண்டே நாங்கள் ஒருவரையொருவர் சீர்செய்து கொள்கிறோம், வாக்குறுதிகள் பரிமாறிக் கொள்கிறோம், அகமலர்வை பகிர்ந்து கொள்கிறோம். இதயமற்றோர் பெருங்கூச்சலோடு போருக்கெழுந்து தாக்க முற்படுகையில், நீ புன்முறுவலோடு தோன்றி அவர்கள் ஆயுதம் துறக்கும்படி செய்கிறாய். உன் இனிய சொல் கொண்டு அவர்களை அமைதிப்படுத்துகிறாய். மனதை குளிர்விக்கிறாய்.

உன் யாழிலிருந்து ஆன்மாவின் இசை எழுந்து தன் இனிமையால் இவ்வுலகை நிறைக்கிறது. மக்கள் உடல் சோர்ந்து மனம் வெதும்பி நம்பிக்கையிழந்து வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும்போது ஒரு குருவென நீ தோன்றி ஒளிரும் சொல் ஒன்றால் அவர்களில் அறிவொளி ஏற்றுகிறாய். அதுவே அவர்களுக்கு நிரந்தரமான வழிகாட்டியாய் அமைகிறது. சொல் வடிவானவளே, உன் அருள்தான் என்னே!

|| ஐம் நாமாகர்ஷிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s