சௌந்தர்யலஹரீ – 5

Standard

ஹரிஸ்த்வாமாரத்*ய ப்ரணதஜனஸௌபா*க்யஜனனீம்

புரா நாரீ பூ*த்வா புரரிபுமபி க்ஷோப*மனயத்

ஸ்மரோ அபி த்வாம் நத்வா ரதிநயனலேஹ்யேன வபுஷா

முனீனாமப்யந்த: ப்ரப*வதி ஹி மோஹாய மஹதாம

பாடல் – 5

அடியார்க்கருளும் உன் அருள் பெற்ற அரி

அழகியின் வடிவு கொண்டான்

முப்புரம் எரித்த அரன் மனதில் 

மோக அலையை எழுப்பினான்

மன்மதனோ உன் அடி வணங்கி

தன் இணை ரதி மகிழும் வடிவு கொண்டான்

உன் அருளால் முனிவர் மனதிலும் மோகம் எழச்செய்யும் 

கலை கைவரப்பெற்றான்.

**

தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்த கதை இங்கு கூறப்படுகிறது. இத் தொன்மத்தின்படி அண்டத்தைக் காக்கும் கடவுளான விஷ்ணுவின் வாழிடம் பாற்கடல். அனைத்து விழுமியங்களின் வெளியும் அதுவே. மெய்யான வாழ்வு திகழும் வெளி அது என்பதால் ஒளியாற்றலும் இருளாற்றலும் போரிடும் களமும் அதுவே. தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போர். இவ்விரண்டு ஆற்றல்களும் அழிவின்மை வேண்டியும் வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெறும் நோக்குடனும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. வாழ்வெனும் கடலைக் கடைந்து அமிழ்தத்தை எடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினான் பிரம்மன். ஒரு குழுவால் மட்டும் அது இயலாது என்பதால் அனைவரும் இணைந்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மந்தார மலை மத்தாக கொள்ளப்பட்டது. வாழ்வெனும் ஆழிக்கு தொடக்கம் கிடையாது என்பதால் அதற்கு அடியாழமும் இல்லை. எனவே, மத்தை ஊன்றிக்கொள்ள ஒரு நிலம் தேவைப்பட்டது. காக்கும் தெய்வமான விஷ்ணு ஒரு ஆமையென மாறி அந்த நிலமாக ஆனார். முடிவிலாக் காலமான அனந்தன் என்னும் பெருநாகம் கயிறாக ஆனது. தேவர்கள் அதன் வாலையும் அரக்கர்கள் தலையையும் பிடித்துக் கடைந்தனர்.

அந்தக் கடையலில் பாலாழியின்  மேற்பரப்பில் ஐராவதமென்னும் வெள்ளை யானை, கதை, பாரிஜாத மரம், உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை, காமதேனு, சங்கு, திங்கள், திருமகள், வில், விண்மீன்களின் கன்னி, கௌஸ்துபம் எனும் அணி, ரம்பை, தன்வந்திரி (மருத்துவத்துக்கான கடவுள்), அமிழ்தம் ஆகிய பதினான்கு அரிய பொருள்கள் திரண்டு வந்தன.

கடைந்து முடிந்ததும் அமைதிகுலைந்த நாகம் காலகூடம் என்னும் நஞ்சை கக்கியது. அதைக் கண்டு தேவரும் அசுரரும் அஞ்சி நடுங்கினர். அனைவரின் அச்சத்தையும் போக்குவதற்கென சிவன் அந்நஞ்சை விழுங்கி உலகை காத்தார். அமுதம் வந்த உடனேயே தன்வந்திரியின் கைகளில் இருந்து அதை கவர்ந்துகொண்டு ஓட்டம் பிடித்தான் ஓர் அசுரன். அசுரர் அதை அருந்தி இறவாமை பெற்றுவிடக்கூடாது என்று அனைத்து தெய்வங்களும் எண்ணின. இந்த இக்கட்டான நிலையில் விஷ்ணு பிரபஞ்ச அன்னையை வேண்டி நின்றான். அவள் அருளால் மோகினி என்னும் அழகியாக உருவெடுத்தான் விஷ்ணு. அவளைக் கண்டு அனைவரும் மயங்கி நிற்க அமுதை எடுத்துக்கொண்டு ஓடிய அசுரனும் வந்து அதை அவளிடம் அளித்தான். இது முடிந்தவுடன், ஒரு பெண்ணாக விஷ்ணு எவ்வளவு அழகாக இருந்தான் என்று எண்ணிய சிவன் அந்த வடிவை மீண்டும் காண விழைந்தான். இதுவே, இங்கே சிவன் உள்ளத்தை விஷ்ணு கலைத்ததாக கூறப்படுகிறது.

அழகை மேலான மெய்மையாக, நன்மையாகக் கொண்டாடும் வகையில் இயற்றப்பட்ட சௌந்தர்யலஹரீ அழகை மயக்கும் ஆற்றலாகவும் வீடுபேறளிக்கக்கூடிய ஒன்றாகவும் சித்தரிக்கிறது. இதில், மெய்யியலின் முக்கியமான முரண் ஒன்றும் உணர்த்தப்படுகிறது. ஒன்று-பல, இருத்தல்-மாற்றம் (being-becoming), அறிவெல்லை கடந்தது-நிலைபேறானது போன்ற பல சிக்கல்களும் இந்த முரணைச் சுற்றியே நிகழ்கின்றன. அழிக்கும் கடவுளான திரிபுராந்தகன் அழகின் இறைவியான திரிபுரசுந்தரியின் மேல் மையல் கொண்டவனாக உருவகிக்கப்படுகிறான். அவன் தன் இயல்பிலிருந்து திரியாமல் இது நிகழ முடியாது. இந்த முரண் மெய்யியலின் மிகக் கடினமான சிக்கல். சங்கரரின் அநிர்வசனீய க்யாதியை (தெளிவின்மையெனும் பிழை) திருத்தியமைத்து இதை கடக்கிறார் ராமானுஜர். சங்கரரின் கூற்றுப்படி, ‘அலைக்கு நீரல்லாத ஒரு மெய்மை உண்டு’ அல்லது ‘வானின் நீல நிறத்திற்கு வானல்லாத ஒரு மெய்மை உண்டு’ போன்ற ஊகங்களை ஒத்தது இம்முரண். அவரைப் பொறுத்தவரை, இவையெல்லாம் நிலையற்ற புறத்தெறிவுகள். அவை மெய்யும் அல்ல, மெய்யற்றதும் அல்ல. மேற்சொன்ன கதையில், கவர்ச்சிக் கன்னியின்  அழகு என்பது, ஒருபோதும் பெண்ணாக இருந்திராத விஷ்ணுவின் மெய்மை மீது ஏற்றப்பட்ட ஒரு கணநேர இயல்நிகழ்வு மட்டுமே. அதே போல், பிரபஞ்சம் என்பது இயற்கை என்னும் வடிவில் சிவன் மீது ஏற்றப்பட்ட இயல்நிகழ்வு. இங்கு சிவன் என்பது இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட அறிவெல்லை கடந்த நிலைபேறு. மெய் என்பது மாறாதது. நீர் மெய்யானது, அது அலையை மெய்யற்றதாக்குவது. அதே போல், உலகம் மெய்யற்றது, சிவன் மட்டுமே மெய்.

சங்கரரின் இந்த நிலைபாட்டை மதிப்பிட்டு, குறையுள்ளது என்று விலக்குகிறார் ராமானுஜர். நீர் இருக்கும் வரை அலைகள் தோன்றிகொண்டே இருக்கும். அலையைத் தோற்றுவிக்கும் நீரின் இயல்பு நீரளவுக்கே மெய்யானது. எனவே, அலைகள் என்பதில் ஒரு மெய்மை உண்டு. அதில் நீரின் மெய்மையே திகழ்கிறது. இதே நிலைபாட்டை சங்கரரின் இந்தப் பாடலில் நாம் காண்கிறோம். பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகிவற்றுக்கெல்லாம் உரை எழுதிய பின்னர் இதை எழுதிய அவர் தன் முந்தைய நிலைபாட்டை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இதன்படி நோக்குகையில், முப்புரம் எரிக்கும் சிவனே முப்புரத்திலும் அழகு தோன்றுவதற்கான நிலைக்களனையும் அளிக்கிறான்.

சொற்பொருளியல் ‘ஸ்போடதர்ஶனம்’ எனப்படுகிறது. ஸ்போடம் என்றால் வெடித்தல் அல்லது தெறித்தல் என்று பொருள். திடீரென சடுதியில் நிகழ்வது. சொல்லைக் கேட்ட பிறகு பொருள் மனதிலாவதற்கு நேரம் தேவைப்படுவதில்லை. உச்சரிக்கப்பட்ட ஒலியே சொல்லின் பொருளை கடத்தும் செயலை தொடக்கிவிடுகிறது. அழகுக்கும் கருத்தை ஈர்க்கும் இப்பண்பு உண்டு. அது புலன்களையும் மனதையும் பாதிப்பது மின்னல் போல நிகழ்கிறது. ‘ஸாத்ய சித்த ஆசன வித்யா’ என்பதே இங்கே கற்பிக்கப்படும் மறைபொருள். ‘சாத்ய’ என்பது அடையக்கூடிய இயல்கை. ‘சித்த’ என்பது உண்மையில் அடையப்படுவது. ‘ஆசன’ என்பது பாங்கு அல்லது நிலைகோடல். ‘வித்யா’ என்பது அறிவியல். அதாவது, இயல்கையில் உள்ளுறையும் ஆற்றலை எய்தும் அறிவியல் எனலாம். 

ஶ்ரீசக்ர தியானம்

ஓம் பீஜாகர்ஷிணீ

இப்பேரண்டத்தின் முதல் விதை நீ. பிரபஞ்சக் கருவறையான உன்னிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. உன்னிலிருந்ந்து தோன்றாத விளைவென்று ஒன்றுமில்லை. அவையனைத்தும் சிறிதும் சிதைவில்லாமல் உன்னில் மீளக் கலக்கின்றன. அன்னையே, எண்ணற்ற உருக்களின் விதையாக என்னை சுருக்கி எத்தனை கருவறைகளில் விதைத்தாய்! புத்தம் புது மலரென எத்தனையெத்தனை அன்னையரிலிருந்து என்னை பிறக்க வைத்தாய்! உன் ஆணைப்படி பிரம்மனும், மாலும், ஈசனும் இடையறாது படைத்தல், காத்தல், அழித்தலெனும் முத்தொழிலை புரிந்துகொண்டிருக்கின்றனர். கழிநிகழ்எதிர்வெனும் முக்காலத்திற்கும் இறையான விஷ்ணுவையே அரைக்கணத்தில் மயக்குறு பாவையென மாற்றினாய் நீ. காமத்தால் தீண்டப்படாத, இறையோருக்கெல்லாம் இறையான ஈசனை காதல் பித்தனாக்கினாய். உன் யோக மாயையால் உன்னால் செய்யக் கூடாதென ஏதுமில்லை.

இயற்கையின் முக்குணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நீ விண், வெளி, மண் என்ற மூவுலகங்களையும்  கழி நிகழ் எதிர் எனும் மூன்று காலங்களையும் எப்போதும் எழிலூட்டுபவள். இன்று என் நனவிலியில் விதையெனக் கிடக்கும் ஒன்றுதான் நாளை என் எண்ணமாக, செயல்திட்டமாக, நான் அடையும் நிறைவாக ஆகிறது. விதையொன்று முளைவிடுகையில் வானோக்கி வளர்ந்து கிளைவிடும் மரத்தில் எத்தனை இலைகள் தோன்றும் என எவரும் சொல்லிவிட முடியாது. என் நனவிலியில் நீ தளிர்க்கச் செய்யும் எண்ணங்களோ அவற்றைவிட ஏராளம். புலப்படுவனவற்றின் மீது கருத்துகளை ஏற்றவும் நீ படைத்தளிக்கும் வடிவங்களுக்கெல்லாம் எப்படி பெயரிடுவதெனவும் என் அகத்தில் இருந்தபடியே எனக்கு வழிகாட்டுகிறாய் நீ.

என்னுள்ளிருக்கும் நீ கனவு காண்கையில், அக்கனவுக்கு இணையான பெயரும் வடிவும் கொண்ட மாய உலகம் ஒன்று என்னைச் சுற்றி விரிகிறது.  அனைத்தையும் ருசிக்கும் என் நாவுபோல, என் புலன்கள் ஒவ்வொன்றையும் ருசிக்கின்றன. உனதன்பின் ஒரு துளியால் அல்ல, பல்லாயிரம் இனிமைகளால் நான் வாழ்த்தப்பட்டவனாகிறேன். வால்மீகி, வியாசன் போன்ற பெருங்கவிஞரெல்லாம் உன் படைப்பின் எழிலில் மயங்கி, தம் படைப்புத் திறன் கொண்டு பெருங்காப்பியங்களை எழுதினர். கலையார்வலர்கள பல நூற்றாண்டுகளாக அப்படைப்புகளில் திளைத்து வருகின்றனர்.

இன்பம் தரும் அழகையெல்லாம் சுருளவிழ்த்து பின் அனைத்தையும் உன் மாய ஆற்றலுக்குள் மறைத்துக்கொள்கிறாய். இதுவே உனது பெரும் ஆடலாக இருக்கிறது. உருவம் சொல்லுக்குள் திரும்புகிறது. சொல் ஒலியுடன் கலக்கிறது. ஒலி மனதிற்குள் அமைகிறது. மனம் உயிர்மூச்சுக்குள் (ப்ராணனுக்குள்) ஒடுங்குகிறது. ப்ராணன் உனது இளவெம்மை கொண்ட ஒளியில் (தேஜஸில்) இரண்டறக் கலக்கிறது. அறுதியாக, அனைத்தும் சிவ சைதன்யமாகிய உன் ஒளிர்வுக்கே திரும்புகின்றன. ஆதி முதல் அன்னையே, வினைமுதலுக்கெல்லாம் முதலானவளே, உன் உருமாற்றத்தில் கடந்தநிலை என்பது இடைநிறுத்தமாக இருக்கிறது.

|| ஓம் பீஜாகர்ஷிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s