சௌந்தர்யலஹரீ – 3

Standard

அவித்யானாமந்தஸ்திமிரமிஹிரத்வீபநரீ

டானாம் சைதன்யஸ்தகமகரந்ஸ்ருதிஜரீ

ரித்ராணாம் சிந்தாமணிகுணனிகா ஜன்மஜலதௌ*

நிமக்னானாம் ம்ஷ்ட்ரா முரரிபுவராஹஸ்ய ப*வதீ 

பாடல் – 3

உனது இணையடித் துகள்

அறியாமையில் மூழ்கியோருக்கு இருளகற்றும் ஒளிர்தீவாகவும்

அசைவற்றிருப்போர்க்கு நனவெனும் மலரின் மகரந்த ஒழுக்காகவும்

ஏழ்மையிலிருப்போர்க்கு விரும்பியதையளிக்கும் அருமணியாகவும்

பிறவிப்பெருங்கடலில் மூழ்கியோர்க்கு அழிவிலிருந்து உலகைக்காத்த

வராகத்தின் கொம்பாகவும் இருக்கிறது.

**

“அர்ஜுனா, துயருற்றோர், அறிவுத்தேட்டம் கொண்டோர், வாழ்வின் நன்மைகளை நாடுவோர், விவேகிகள் என்ற நான்கு வகை மக்கள் என்னை உளம்கொள்கின்றனர்” – இது பகவத்கீதையில் கிருஷ்ணன் சொல்வது. இதே போன்ற நான்குவகை மக்கள் தேவியின் திருவடிகளில் அடைக்கலம் பெறுவதை சௌந்தர்யலஹரீயில் காண்கிறோம். பிறப்பிறப்பு, கர்மவினைத் தொடர்ச்சி என்பனவற்றால் ஆன, அனைத்துவகை இருமைகளாலும் நிரம்பிய இவ்வுலகு சம்சாரம் அல்லது பவா*ப்தி (இருத்தல் எனும் ஆழி) எனப்படுகிறது. தூய ஆன்மாவின் மேல் வைக்கப்படும் இவ்வியல்நிகழ்வு அறியாமையால் (அவித்யா) தோன்றுவது. வேதாந்தத்தில், தனி மனதில் ஏற்படக்கூடிய பிழை அவித்யா எனப்படுகிறது; பிரபஞ்ச மனம் அல்லது கடவுளின் (ஈஶ்வரன்) மனதில் தோன்றும் பொதுவான பிறழ்வு மாயை எனப்படுகிறது. தனியொருவனின் அறியாமையே துன்பத்திற்கான ஆதி காரணம் என்பதால் முதலில் அறியாமையில் மூழ்கியிருப்போர் (அவித்யானாம்) சுட்டப்படுகின்றனர். பொதுவாக, தனியரின் ஆன்மா கடலின் மேற்பரப்பில் தோன்றும் அலையோடு ஒப்பிடப்படுகிறது. கடலின் நீரைத் தாண்டி அதற்கென பொருண்மையான இருப்பு ஒன்றில்லை. எனவே, இங்கே தனி ஆன்மாவின் அக-புறச் சூழல் இருண்ட கடலோடு ஒப்பிடப்படுகிறது. அன்னையின் அருள் ஒளிர்தீவொன்றில் தோன்றும் ஞாயிறாக உருவகிக்கப்படுகிறது. வடமொழியில் இருளை அகற்றுபவர் குரு எனப்படுகிறார். இங்கே தேடல்கொண்டவனின் இதயத்தில் உறையும் மெய் குருவாக தேவியே இருக்கிறாள். மந்திரம் என்பது இறைவியின் ஒலியுடல் என்பதால் இங்கே தேவியே குருவாக கருதப்படுகிறாள்.

இரண்டாவதாக குறிப்பிடப்படுவோர் மந்தமான அறிவாற்றல் கொண்டோர். வடமொழியில் ஜடம் என்பது இதற்கான சொல். சைதன்யம் என்பதன் எதிர்ச்சொல் ஜடம். சைதன்யம் என்பது உருவற்றது, ஜடம் என்பதன் முக்கியப் பண்பே அதன் நோயுற்ற தன்மை. விருத்தி என்பது நவீன உளவியல் கூறும் முன்வரையறை செய்யப்பட்ட நிலை (conditioned state). ஒருவரது அகம் குழந்தைப்பருவ மனப்பதிவுகளாலும், குறுகிய சமூக ஆசாரங்களாலும் நோயுற்றிருந்தால் அதற்கு முழுமுதலை தரிசிக்கும் விரிந்த பார்வை இருப்பதில்லை. அந்த நிலையில், ஒரு புதிய திறப்பு தேவைப்படுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது எல்லாவற்றையும் நன்மை, அழகு என்ற விழுமியங்களின் வெளிப்பாடுகளாக ஒருங்கமைக்கும் தொடர் செயல்பாடே. அத்தகைய புரிதலுக்கான திறப்பைத் தேடி ஏங்குவோர் வாழ்வின் இடர்களை அதிகமாகவே உணர்வார்கள். அத்தகைய ஒருவர் உண்மையை அறிய தன்னால் இயலவில்லை என்று புலம்புகிறார். அதற்கான தூண்டலை அருளும்படி இறைவனை வேண்டுகிறார். ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் இடம்பெறும் காயத்ரி மந்திரம் இதையே வேண்டுகிறது. அக இருட்டை நீக்கி அறிவாற்றலைத் தூண்டும்படி இறையொளியிடம் கோருகிறது. நாராயண குரு அத்தகைய திறப்பொன்றை விவரிக்கிறார்:

ஓராயிரம் சூரியன் ஒன்றாகச் சேர்ந்து 

ஒரேசமயம் எழுவதுபோல ஞானமது எழும்

அறிவினை மூடியிருக்கும் நிலையாமையே மாயை என்பது

அவ்விருளினைக் கிழித்தெழுவான் ஆதிசூரியன்

(ஆத்மோபதேச சதகம் – பாடல் – 35)

இந்தக் கருணையே நனவெனும் புனித மலரின் தேனொழுக்காகக் குறிப்பிடப்படுகிறது. 

இங்கே ஏழைகள் என்று சொல்லப்படுவோர் வாழ்வின் நன்மைகளை நாடுவோர் (அர்த்தார்த்திகளை போன்றோர்). அன்றாட வழக்கில் இது செல்வம் நாடும் எளியோரை குறிப்பதாகத் தோன்றினாலும் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்றை குறிக்கிறது. செல்வச் செழிப்பில் திளைப்பவனுக்கு தான் அனுபவிப்பதில் ஆன்மிகச் சிறப்பு ஒன்றுமில்லை என்று தோன்றும் தருணம் ஒன்று உருவாகும். அப்போது அவன் தன்னை இழிந்தவனாக மதிப்பற்றவனாக உணர்கிறான். இத்தகைய ஆன்மீக ஏழ்மை குறித்த விழிப்புணர்வுக்கு உதாரணமாக தன் செல்வ வாழ்வை உதறி யேசு கிறிஸ்துவை நோக்கி சென்ற மேரி மகதலேனாவை சொல்லலாம். அத்தகைய திருப்புமுனைத் தேடலின் நிறைவேற்றமே சிந்தாமணியில் இருந்து வரும் அருள் என்கிறது இப்பாடல். வடமொழியில் சிந்தா என்பது கடந்தகாலத்திற்காக வருந்தும், எதிர்காலத்தை எண்ணி பதற்றம் கொள்ளூம் மனதை குறிப்பது. மணி என்பது அருமணியை குறிப்பது. இங்கே, அதனை கடந்தகாலத்தின் துயர்களை நீக்கும், எதிர்கால விழைவுகளையெல்லாம் நிறைவேற்றும் அருளாக புரிந்துகொள்ளவேண்டும்.

இன்னொரு வகையில் சிந்தாமணி என்பதை ஒருவரது விழுமியத்தின் சாரமாக கொள்ளலாம். ஒரு பொருளின் புறவயமான மதிப்பை காணும்போதுதான் அதை அடைய விழைகிறான் மனிதன். முறையான தியானம் மூலம் அகம்-புறம் என்ற இருமையை கடக்கும்போது தன் சுயம் என்பதைவிட மதிப்புள்ளது வேறொன்றில்லை என்பதை அவன் உணர்கிறான். அதாவது, சிந்தாமணியை தன்னுள் கண்டடைகிறான்.

இந்திய மறைநூல்களின்படி வாழ்வின் அறுதிக் குறிக்கோள் என்பது தன்னை அறிதலும், அனைத்துப் பிணைப்புகளிலிருந்தும் முன்வரையறைகளிலிருந்தும்  விடுபடுதலுமே. கட்டுண்ட மனநிலை என்பது இங்கே சம்சாரமெனும் ஆழியில் மூழ்கியிருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. அனைத்து மதங்களும் இறைவனை மீட்பவன் என்று குறிப்பிடுகின்றன. தனியனின் மீட்பில், தேடல் கொண்டவனளவுக்கே இறையும் ஆர்வம் கொண்டிருக்கிறது. எனவே அருளென்பது இங்கே தேடல் கொண்டவனின் காலடியிலிருந்து எழும் உண்மையான மீட்புக் காரணியாக சுட்டப்படுகிறது. அன்றாட நிகழ்வுகள் மெய்த்தேடல் கொண்டவனின் காலடிகளை மீட்பின் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதே இங்கே உணர்த்தப்படுகிறது. எனவேதான் விஷ்ணுவின் அவதாரமான வராகமென்னும் பன்றியின் தேற்றையோடு அது ஒப்பிடப்படுகிறது. 

இங்கு தியானத்திற்கான யந்திரம் ஶ்ரீ சக்ரத்தின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் இருக்கிறது. ஒன்றையொன்று குறுக்கிடும் இரு சமபக்க முக்கோணங்களை கொண்டது. ‘ஶ்ரீம்’ என்பது பீஜ மந்திரம்.

ஶ்ரீம்

ஶ்ரீ சக்ர தியானம்

ம் அம்ருதாகர்ஷிணி

என்றும் வாழும் அன்னையே! நிலைபேறென்னும் அமிழ்தத்தை எப்போதும் பொழிந்துகொண்டிருப்பவளே! மாறிக்கொண்டே இருக்கும் ஒழுக்கான இவ்வுலகில் ஒரு சிறு மினுக்கமென வந்து பிறக்கும்படி என்னை விதித்தாய். எங்கிருந்து வருகிறேன் நான்? எதில் சென்று மறைகிறேன்? நானறியேன். என் தற்காலிக உறைவிடமென சிதைவுறும் இவ்வுடலை அளித்திருக்கிறாய். இங்குள்ள வாழ்வு நிலையில்லாததுதான் என்றாலும், நீ மாற்றமில்லாதவள் என்பதற்கும் உன் வியத்தகு நாடகத்தில் ஒரு தொடர்ச்சி உள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

ஆற்றுப்படுத்தப்படாத புலன்களும் நெறிப்படுத்தப்படாத மனமும் கொண்டவன் நான். என்றாலும், என் புலன்கள் ஒளிபெறுவதும், உன் இருப்பெனும் புதிரை நான் புரிந்துகொள்வதும் உன் கருணையால்தான் என்பதை நான் உணர்கிறேன். எனது இப்பருவுடலை தனித்த ஒன்றாக உணரச்செய்யவே அறியாமை எனும் எல்லையை எனக்கு விதித்திருக்கிறாய் போலும். மானுடனென விலகிநின்று, அணையிடமுடியாமல் என்னுள்ளில் பெருகும் அன்பால் உன்னை போற்றிப்பாடும் வாய்ப்பை அந்த அறியாமையே அளிக்கிறது. உன் முடிவிலா மெய்மையெனும் ஆழியில் ஒரு நீரணுவைப் போல் நான் இருக்கிறேன். அதனால்தான் பேரன்பின் முழுமையில் கரைந்துவிடாமல் என்னை உன் அன்பன் என தனித்தறிய முடிகிறது.

தன்முனைப்பும், அது தோற்றுவிக்கும் நரகமும், தீமையும் எல்லாம் அறியாமையின் விளைவுகளே. அச்சுறுத்தும் அறியாமையின் இருண்ட கணத்தில் கூட என் காலடிக்கீழ் உன் துணையென்னும் நிலையான அடித்தளத்தை என்னால் உணரமுடிகிறது. அத்தகைய கொடுங்கனவிலிருது என்னை விழிக்கச் செய்து ஞாயிறும் திங்களும் மினுங்கும் விண்மீன்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உனது நட்பு திகழும் பேரில்லத்தில் கிடைக்கும் விடுதலையுணர்வை எனக்களிக்கிறாய். ஒவ்வொரு இரவும் என் எளிய உடலிலிருந்து நீங்கி உன்னுடன் கலந்து உன் இடையறா அமைதியில் திளைக்க என்னை நீ அழைக்கிறாய். மீட்பெனும் கரையை அடைய ஒரு வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் என்னை காத்திருக்க வைப்பதில்லை நீ.  இயக்கமில்லா உடலில் இருக்கும் உயிரிழந்த தன்முனைப்பை உதறி ஆழுறக்கத்தில் ஆழ்கையில் எனக்கு எந்தக் கவலையும் தவிப்பும் இருப்பதில்லை. என் உடலின் செயல்பாடுகளில் எத்தனை இடையூறுகள் இருந்தாலும் என் உடல் எப்போதும் உன் பராமரிப்பில்தான் உள்ளது. நான் உறங்குகையில் நீ அதை கவனித்துக் கொள்கிறாய். கிழக்கில் பொன்வண்ணக் கதிரவன் எழுகையில் அவன் என்னைத் தீண்டி என் உடலை உயிர்ப்பிக்கும்படி செய்கிறாய். எனது நாட்செயல்களை ஆற்றுவதற்கு என்னை மீட்டு வருகிறாய். இப்படியாக, ஒவ்வோர் இரவும் அமைதியான உறக்கத்தில் என்னை ஏந்துகிறாய், ஒவ்வொரு பகலும் வாழ்வுக்கான வேட்கையை என்னில் நிறைக்கிறாய். காலையில் நான் எழுகையில், நனவுலகின் மெய்மை எனக்கே உரியதென உணர்கிறேன். பொறுப்புகளை ஒவ்வொன்றாய் ஏற்கிறேன். தொடரும் வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு என் இன்பமெனும் வண்ணத் திரையை நெய்கிறேன்.

என் அன்னையே! உன்னிடம் அணிகளையும் செல்வத்தையும் நான் கோரவில்லை. தெளிந்த நோக்கையும் மெய்மையின் உறுதிப்பாடையும் நீ எனக்களிப்பாய் என எதிர்பார்க்கிறேன். உன் குழந்தைகளை விவேகியராக்க அவர்கள் தலையில் நீ சூட்டி அழகுபார்க்கும் சிந்தாமணியே உன்னிடமிருந்து பெறக்கூடிய ஆகச்சிறந்த செல்வம். ஆழியானது எண்ணற்கரிய ஆழமும் அகலமும் கொண்டிருந்தாலும் அதன்மேல் மிதக்கும் ஒரு தோணியில் பாதுகாப்பாக சாய்ந்திருக்க முடியுமென்றால் கரையின் தொலைவு குறித்தோ நீரின் ஆழம் குறித்தோ எண்ணி கலங்கத் தேவையில்லை. என் நம்பிக்கை எனும் துடுப்பு கொண்டே என் இலக்கை அடைந்துவிடமுடியும்.

வாழ்வின் இன்னல்கள் இடையறாதவை, சவாலானவை. ஆனால் உன் கடைக்கண் பார்வையை வீசியே எளியோரை நீ காத்துவிடுகிறாய். அலை ஒன்றை கடலின் ஆழத்திற்கு திருப்பிச் செலுத்தவும் இன்னொரு அலையை எழுப்பி அதை பகலவனின் ஒளியில் மின்னச் செய்யவும் உரிமை கொண்டவள் நீ. நீயே இறைவி, இறைமையே உன் ஆடல். உன் மெய்மையின் மேல், உன் ஞானத்தின் மேல், உன் அழகின் மேல் மையல் கொள்வதுதான் எத்துணை எளிது! இயல்பாலும் அருளாலும் செல்வி நீ என்பதால் உன் மடி மேல் தலை சாய்கிறேன். மீண்டும் என் ஆனந்த அமைதிக்குள் ஆழ்கிறேன்.

|| ம் அம்ருதாகர்ஷிணீ || 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s