சௌந்தர்யலஹரீ – 2

Standard

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹப*வம்

விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்

வஹத்யேனம் ஶௌரி: கத*மபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்

ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப*ஜதி ப*ஸிதோத்தூ*லன விதி*ம்

பாடல் – 2

உன் தாமரை இணையடிக் கீழிருந்து மென்பொடி சேர்த்தெடுத்து

இவ்வுலகெலாம் படைக்கிறான் பிரம்மன்

அவை தம்மில் கலந்து குழம்பிவிடாமல் 

அனந்தனின் ஆயிரம் தலைகொண்டு காக்கிறான் விஷ்ணு

அப்பொடியை மேலும் நுண்ணிதாக்கி

உடலெங்கும் பூசி அணிசெய்துகொண்டு 

ஊழ்கத்திலிருக்கிறான் சிவன்.

இந்திய மதச் சடங்குகளிலும் பக்தி வழிபாடுகளிலும் இறைவனின் திருவடிகளை வணங்குவதே தொடக்கமாக இருக்கும். அதேபோல், சீடன் குருவை சந்திக்கையில் அவர் பாதம் பணிகிறான். இங்கே பாதம் என்பது ஆன்மீகப் பாதையை குறிக்கிறது. குரு நடப்பது பிரம்மத்தின் பாதையில். வடமொழியில் ‘சர்ய’ என்பது பாதையை குறிக்கும் சொல். ஆக, பிரம்மத்தின் பாதையில் நடப்பது பிரம்மசர்யம், குருவானவர் ஒரு பிரம்மசாரி. மெய் மண் பட விழுந்து வணங்குவதன் மூலம், பாதம் பணிவதன் மூலம் குரு செல்லும் பாதையை தான் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறான் சீடன். இங்கு பிரபஞ்ச அன்னையின் பாதங்கள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் ஊற்றுமுகமாக வணங்கப்படுகின்றன. இந்தப் பாடலோடு தியானிப்பதற்கென பரிந்துரைக்கப்படும் யந்திரம் பிரம்மன், விஷ்ணு, மஹேஶ்வரன் ஆகியோரின் இம்முத்தொழில்களின் குறியீடாக உள்ளது. தலைகீழ் முக்கோணமாக இது வரையப்படுகிறது. இதில் ஏறுமுகமான இடதுபுறம் பிரம்மனையும், அடித்தளம் விஷ்ணுவையும், ஏறுமுகமான வலதுபுறம் ருத்ரனையும் குறிக்கின்றன.

‘ஹ்ரீம்’ என்பது இங்கே பீஜ (கரு) மந்திரம். இந்த யந்திரத்தின் துணையோடு, ஒருவரது கீழ்மை நிறைந்த வேட்கைகளை மேன்மையான தளமொன்றிற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்படும் தாந்த்ரீக தியானத்தில், அண்டம் முழுதும் பரவியிருக்கும் இயல்நிகழ்வுகள் அனைத்தும் பிரபஞ்ச அன்னையின் திருவடிகள் மீது படிந்த மென் துகள்களாக உருவகிக்கப்படுகின்றன. தேவியின் இணையடிகள் ஒரு தாமரையெனவும், துகள்கள் அத்தாமரையடிகளின் மகரந்தமெனவும் கொள்ளப்படுகின்றன. பூந்தாது செழிப்பை குறிப்பது. அதன் மிகுதி இனப்பெருக்க வளமையை சுட்டுவது. அண்டத்தில் உள்ள உலகுகள் முடிவற்றவை என்பதால் அவை பாதம் மீது படிந்த எண்ணற்ற துகள்களாக கொள்ளப்படுகின்றன. அவற்றை தியானிப்பது மனதை முடிவற்ற பிரபஞ்ச வெளியிலிருந்து மிக நுண்ணிய புள்ளியை நோக்கி நகர்த்துவது. குறுக்கல்-விரித்தல் என்ற செயல்முறை வழியாக இயல் உலகில் உள்ள தனிப்பட்ட பண்புகள் எல்லாம் மெய்யானவை அல்ல, அவை வெறும் தோற்றங்களே என்பது உணர்த்தப்படுகிறது.

வினைமுதல் மிகமிகச் சிறிதாக இருந்தாலும் விளைவு கால-இட வெளியில் அனுபவத்தால் அறியப்படக்கூடியதாக இருக்கிறது. நடைமுறை தளத்தில் செல்லுபடியாகும் தகுதி அதற்கு ஏற்படுகிறது. ஆகவே, அனைத்துச் செயல்களும் பொருட்களுக்கு நடைமுறை இருப்பை உண்டாக்குவதற்கும் அத்தகுதியை தக்கவைப்பதற்கெனவுமே நடைபெறுகின்றன. இங்கு, விஷ்ணு மிகுந்த இன்னல்களுக்கிடையே, தன் ஆயிரம் தலைகள் கொண்டு ஒருவாறாக இந்த உலகுகளை பாதுகாக்கிறான் என்பது வலியுறுத்தப்படுகிறது. தனிப்பண்பு எதுவும் முழுமுதலின் இயல்பல்ல. எனவே, இயல்நிகழ்வுகள் மாற்றம் பெறாமல் இருப்பதும் இயல்பானதல்ல. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்பதோடு, அது முழுமையான இன்மையில் போய் முடிவதும் கூட. எனவேதான், அண்டங்கள் எல்லாம் ஓரிடத்தில்  சேர்க்கப்பட்டு, அழிக்கும் கடவுளான ருத்ரன் தன் நெற்றியில் அணிந்துகொள்வதற்கென பொடியாக்கியதைவிட, நுண்ணிய துகள்களாக்கப்படுவதாக கூறப்படுகிறது. பிரபஞ்ச அன்னையின் காலடியிலிருந்து எடுக்கப்பட்ட, தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும் பூந்தாது இறுதியில் சிவனின் – முழுமுதலின் – நெற்றியில் மாற்றமில்லா நிலையை அடைகிறது.

முதல் பாடலுக்கான உரையில் பட்டியலிடப்பட்ட வகைமைகள் இந்த தியானம் மூலம் முறையான மீள்பார்வைக்கு உள்ளாகின்றன. அத்தகைய ஒரு உளப்பயிற்சி மூலம் புலன் சார்ந்த, உளரீதியான கவனச்சிதறல்களை களைய முடியும். இந்த தியானத்தின் நோக்கம் நிறைவேற பிரபஞ்ச அன்னை மீதான முதல் துதியின் நடு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. முதல் துதி என்பது இங்கே ‘பாலா’ என்பதை குறிக்கிறது. பாலா என்றால் சிறுமி என்று பொருள். முதலில் பிரபஞ்ச அன்னையானவள் ‘ஐம் ஹ்ரீம் சௌம்’ என்ற சிறப்பு மந்திரம் மூலம் சிறுமியாக துதிக்கப்படுகிறாள். இந்த மந்திரத்தை முறையாக குருவிடமிருந்து பெற்ற பிறகு, ‘ஹ்ரீம்’ என்ற பீஜ மந்திரத்தைக் கொண்ட யந்திரத்தை பயன்படுத்த வேண்டும். மெய்த்தேட்டம் கொண்டவன் எளிதாக தன்முனைப்பை அழித்து கால-இட பரிமாணங்கள் அற்ற நனவு நிலைக்குள் அனைத்தையும் அடக்கிவிடும் நிலை ஏற்படும் வரை இதை பயில வேண்டும். இதன் உடனிகழ்வாக, அனைத்திலும் திகழும் பிரபஞ்ச ஆன்மாவோடு அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வும் செறிவடைகிறது.

ஹ்ரீம்

ஶ்ரீ சக்ர தியானம்

அ: ஶரீராகர்ஷிணீ

முப்புரங்களையும் எழிலூட்டுபவளே! உயிர் ஒவ்வொன்றிற்கும் உடலொன்றை அளித்து இவ்வுலகைப் படைத்து ஒவ்வொன்றையும் காப்பவள் நீ. என்றென்றைக்கும் நன்றியோடு உன்னை பணிகிறேன். உன் கருணை மகத்தானது. சிவ-சக்தி இணைவின் மையமான பிந்துவில் வெறும் இயல்கைகளாக இருந்த விந்துவும் கருமுட்டையும் உன் கவர்ச்சியின் ஆற்றலால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்படுத்தப்படுகின்றன. புலனுறுப்புகளும், செயலுறுப்புகளும், அக உறுப்பின் நான்குநிலைகளிலான இயக்க ஒழுங்கமைவும் கொண்ட உடலுடன் கூடிய உயிராக வளரும் நல்லூழை ஒரு உயிரணுவுக்கு அளித்தாய். இந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உடல், உன் விருப்பப்படி, உன் வழிகாட்டலில் அருமையான நலன்கள் கொண்ட எனது இவ்வுயிரென மலர்ந்துள்ளது.

விரிஞ்சி (பிரம்மன்) உன் தாமரயடிகளிலிருந்து எடுத்த துகள்களைக் கொண்டு அக்கறையோடு இந்த அண்டத்தின் உடல்களை இடையறாது படைத்துக்கொண்டிருக்கிறான். தன் கருணையால் அவன் தன் படைப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டதால் இவ்வுலகில் வாழவந்த பல்லாயிரம் உயிர்களில் ஓர் எளிய உயிரியாக நானும் இருக்கிறேன். எவ்விதத் தூண்டலுமின்றி, என்னையறியாமல் தன்னுணர்வற்ற ஆழ் மௌனத்தில் என் தாயின் கருவில் நான் கிடந்தேன். அந்நாட்களில் என் புலன் நலன்களை என்னுள் ஒருங்கமைத்தவள் நீ. என் செயலுறுப்புகளின் இயக்கத்தை கச்சிதமாக ஒருங்கமைத்தவள் நீ. இவ்வுடலை அடைகையில் நான் தன்னந்தனியனாய் இருந்தேன். நீ என்னை ஒரு மானுடனெனப் படைத்து இக் கால-இட வெளியில் சேர்த்து, உன் படைப்புக் காட்சியகத்தை அலங்கரிக்கும் எண்ணிறந்த பிற உயிரிகளுடன் நான என் மகிழ்வையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ளும்படி செய்திருப்பது பெருவிந்தைதான். 

முடிவிலா வெளியில், நனவின் ஆழுறக்கத்தில் ஒரு அசைவை நீ உண்டாக்கினாய். அந்த அசைவு தொடர்ந்து ஒலிக்கும் அலையானது. ஆதி படைப்பியக்கமானது. பருவெளியின் அதிர்வுகள் இன்னிசையோடு தோன்றின. ஒன்றன் அலைவரிசை மற்றொரு அதிர்வின் அலைவரிசையிலிருந்து வேறுபட்டது. இப்படியாக, ஒலிக்கோவையாலான உலகில் நான் வந்து பிறந்தேன். சுதி வேறுபாடுகளையும் ஒலிதரும் பொருள்களையும் உணரும் மதிநுட்பத்தை விரைவிலேயே நீ எனக்கருளினாய். ஒலிகள் ஒவ்வொன்றின் பொருளும் இருத்தலியல் மெய்மை கொண்ட கருத்தாக்கங்களாக என்னுள் தங்கிவிட்டன.

ஆக, பிரம்மனுடன் நானும் ஒரு படைப்பாளி ஆகிவிட்டேன். படிமங்களையும் குறியீடுகளையும் படைத்து இவ்வுலகை மேலும் சிறப்புறச் செய்கிறேன். இதனால் நான் வாழும் இவ்வுலகு ஒவ்வொரு கணமும் கவிதையாக, பாடலாக ஆகிறது. கருத்துக்கள் பெருகி என் நினைவு செழிப்படைகிறது. நான் இயங்கும் நினைவின் இறைவனான விஷ்ணுவுக்கு உதவும் கருவியாகிறேன்.

என் மனதில் நான் சேமித்து வைத்திருக்கும் பயனற்ற உதிரி எண்ணங்களையும் உருவங்களையும் ஒரு நாள் உன் பேரிறையாகிய பரமேஶ்வரன் சாம்பலென ஆக்கி தன் உடலில் பூசிக்கொள்வான். அப்பேரழிவு நாளில் அனைத்தும் மறைந்த பின்னரும் உன் இறைவனின் நெற்றியில் நான் தூசாக எஞ்சுவேன். அதன் மூலம் நான் மாயையிலிருந்து மெய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து இறவாமைக்கும் செல்வேன்.

ஆகவே, அன்னையே, உன்னுடனான எனது அணுக்கம் ஒருபோதும் மறையப்போவதில்லை. படைப்புச் சுழற்சியின் ஊழிப்பெருக்கிலும் உன்னுடன் சேர்ந்து நானும் உனது மெய்யான இருப்பான ஆழ் நனவிலிக்குள் செல்வேன்.

|| அ: ஶரீராகர்ஷிணீ ||

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s