திரிபுவன சீம கடந்நு திங்கிவீங்கும்
திரிபுடி முடிஞ்ஞு தெளிஞ்ஞிடுன்ன தீபம்
கபடயதிக்கு கரஸ்தமாகுவீலெ
ன்னுபநிஷதுக்தி ரஹஸ்யமோர்த்திடேணம்
மூவுலகெல்லை கடந்து பொங்கும்
மும்மடி அறிவொடுங்கி ஒளிரும் தீபம்
கபடமுனிக்கு கைவசமாகாதென்னும்
உபநிடத மறையை மனதிலிருத்துவாய்.
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 14)
அனைத்தையும் நிறைக்கும் ஒளிர்வுடன் மூவுலகின் எல்லை கடந்து
மூவிதழ் அறிவு மங்கியபின் ஒளிரும் தீபம்
கபடமுனிக்கு இது ஒருபோதும் கைவசமாவதில்லை
என்னும் உபநிடத மறையை நினைவிலிருத்திட வேண்டும்
கத்தோலிக்க திருச்சபை பொதுமக்களில் தொடங்கி, சகோதர்ர், தந்தையர் எனும் புதுவர், குருமார்கள், தலைமை குருமார், போப்பாண்டவ மன்ற உறுப்பினர் என தொடர்ந்து இறுதியாக போப்பாண்டவரை கொண்டுள்ளது. இந்தப்படிநிலையில் ஒருவித முதிர்ச்சி நிலை கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரு எல்லையைக் கடந்து அடுத்த நிலைக்கு செல்ல முயன்றுகொண்டேயிருப்பர். முழுநிறைவை நோக்கிய வளரும் அளவீடு ஒன்று இதில் உள்ளது. போப்பாண்டவர் நிலையை நெருங்கும்போதும் முழுநிறைவு என்பது எட்டப்படாததாகவே உள்ளது. அந்நிலையை கடந்த பின் அவர் புனிதராகிறார். அதற்கும் அடுத்த நிலையில் இருப்பது கிறித்துவே. கிறித்துவின் தனிப்பண்புக்கும் அப்பால் மேலே உள்ளது சொல் அல்லது புனித ஆவி என்னும் இறையின் அழியா ஆன்மா. அதற்கும் மேலே உள்ளது இறையே.
ஆக, அனைத்திலும் நிறைந்திருக்கும் மெய்மையை அடைய நாம் பல படிநிலைகளை கடந்துவர வேண்டியுள்ளது. காட்டாக, ஒரு மனிதன் ஆன்மிக குருவால் ஞான மார்கத்தில் வழிப்படுத்தப்படுகிறான். ஹரே கிருஷ்ணா இயக்கத்திலென்றால், அவன் தன் தலையை மழித்துக்கொண்டு ஒரு சிறு குடுமியுடன், மஞ்சள் பழுப்புடுத்தி குறிப்பிட்ட வழியில் ஹரே க்ருஷ்ணா என்று பஜனை செய்தல் வேண்டும். அவன் ஒரு நாள் சைதன்ய மகாபிரபுவாக, கிருஷ்ணனாக ஏன் முழுமுதலாகவே ஆக முடிவெடுத்தாலும் அதற்கு அவன் முயல்கிறான் என்பதே உண்மை. இந்த நிலையில் அவன் செய்வது பாவனை மட்டுமே.
பாவனை செய்யும்போது நீங்கள் எதுவாக விரும்புகிறீர்களோ அதுவாக ஆகிவிட்டதாக கூறாதீர்கள். ஒன்றாக ஆக விரும்புவது வேறு அதுவாகவே ஆகிவிடுவது வேறு. அது நீண்ட பயணம். ஒரே நாளில் அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என எண்ணாதீர். அது ஒரு வாழ்நாளுக்குரியது. எளிதாக கருதுங்கள், அதே சமயத்தில் அதை முக்கியமானதாகவும் கருதுங்கள்.
முழுமுதலோடு இணைவதில் நமக்கு இரண்டு தடைகள் உள்ளன. ஒன்று அண்டம் சார்ந்த்து, இன்னொன்று உளவியல் ரீதியானது. நம் உடல் ஒரு தனி அலகு என்பது அண்டவியல் சார்ந்தது. அது உளவியல் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால் இயற்பியல் விதிகளுக்கும் வேதியியல் நிகழ்வுகளுக்கும் ஆட்படுவது.
மண்ணுலகம், வளிமண்டலம், விண்ணுலகம் என மூன்று உலகங்களை சுட்டுகிறது இப்பாடல். புவியீர்ப்பு நம்மை மண்நோக்கி கீழே இழுக்கிறது. அதனால் நாம் மன்னுயிராய் இருக்கிறோம், உறுதியான் மண்ணை நம் காலடியில் எப்போதும் உணர்கிறோம். ஒன்று பல என இந்நிலவுலகில் உள்ள அனைத்தையும் நோக்கிக்கொண்டு பல்வேறு வகையான அனுபவங்களை நாள்தோறும் பெறுகிறோம். வளிமண்டலத்தைப் பொறுத்தவரை, சூரியஒளியை காணும்போது ஆஹா அருமை என்கிறோம். ஆனால் இருள் கவியத் தொடங்கும்போது அது நம்மை எதிர்மறையாக பாதிக்கிறது. மேகங்களும் வான்மழையும் நம் மனநிலையை மாற்றக்கூடும். வானகம் கதிரவனுக்கும், நிலவுக்கும், விண்மீன்களுக்கும் இருப்பிடம். முதலில் நம் கண்கள் கொண்டு வானை நோக்கும் நாம் பின்னர் தொலைநோக்கிகள் கொண்டு பார்க்கிறோம். அவை நம் கண்கள் பார்க்கக்கூடிய தொலைவினை மேலும் நீட்டிக்கின்றன. இப்போது அருகிலுள்ள கோள்களுக்கு ஏவுகணைகளை அனுப்புவதன் மூலம் நம் கைகால்களை நீட்டுகிறோம். இவையெல்லாம் ஒரு பெரும் வியப்புணர்வை ஊட்டுகின்றன.
ஆக, நாம் மூன்று புற உலகுகளின் இருப்பு குறித்த ஒரு முடிவுக்கு வருகிறோம். இந்த பற்றுக்கோளை அடைந்தபின் அதனை நம் அகத்திலிருந்து நீக்கி, ஒவ்வொன்றும் ஒற்றை மெய்மையின் வெளிப்பாடே என்பதை உணரவேண்டும். நாம் கற்றவை அனைத்தையும் துறக்க வேண்டும். அது அத்துணை எளிதல்ல.
நாம் காணும் அண்டம்சார் உலகு ஒரு தனித்த முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாய் நாம் அதை அறிந்துள்ளமையால், பல எல்லைகளாலும் பிரிவுகளாலும் நம் அக இயல்பிலிருந்து நாம் விலக்கப்பட்டுள்ளோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பல பலருக்கும் அதனை ஒன்றாகக் காணவேண்டுமென்ற கனவாக இருந்துள்ளது. சார்பியலின் பொது மற்றும் சிறப்புக் கூறுகளையெல்லாம் ஒரு மைய ஏற்பாடாக ஒருங்கிணைக்கும் ஒரு கருதுகோள் இருக்கவேண்டும் என்று ஐன்ஸ்டீன் எண்ணினார். தொல்பழங்காலம் தொட்டே கணிதவியலாளரும் இயற்பியலாளரும் பொருட்களை அளந்துகொண்டிருந்தனர். யூக்ளிடியன் காலத்தில் எல்லாவற்றையும் முப்பரிமாண கட்டகமாக துல்லியமாக எப்படி அளக்கலாம் என்று அறிந்திருந்தனர். தெகார்தேயின் காலத்திலிருந்தே ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்த பொருட்களிடையேயான உறவை காலத்தை இடத்துடனும், வடிவவியலை இயற்கணிதத்துடனும் ஒருங்கிணைத்து புரிந்துகொள்ள விழைந்தனர். இதன் நீட்சியாக, நேரத்தை நான்காவது பரிமாணமாக சேர்த்து, நிலைத்த அண்டத்திற்கு பதிலாக ஒரு சார்புலகை ஐன்ஸ்டீன் முன்வைத்தபோது செவ்வியற்பியலாளரின் உலகுகுறித்த பார்வை பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. அதன் பின்னர், தாளில் தெரியுமளவு இல்லை என்றாலும் நாம் இயல் உலகை வேறுவிதமாக பார்க்கத் துவங்கினோம். எம்பயர் ஸ்டேட் கட்டடம் முப்பரிமாண நோக்கில் கட்டப்பட்டதுதான். ஆனால் ஐன்ஸ்டீன் இல்லை அது நாற்பரிமாணம் என்றபோது, அக்கட்டடம் இடிந்துவிடவில்லை. தொடர்ந்து நின்றுகொண்டுதானிருந்தது. அப்படியென்றால், பொருட்களை புதிய கோணத்தில் பார்ப்பது எவ்வித பாதிப்பை ஏற்படுத்துகிறது?
இப்போதும் ஒரு பென்சிலை கொண்டு ஒரு தாளில் முக்கோணம் ஒன்றை வரைந்தீர்கள் என்றால், மூன்று நேர்கோடுகளும் மொத்தம் 180o கொண்ட மூன்று கோணங்களும் கிடைக்கும். மொத்த பிரபஞ்ச அளவிலான ஒரு தாளில் மூன்று நேர்கோடுகளை வரைவது உம்மால் ஆகாது. கோடுகள் வளைவதோடு கோணங்களும் 180o க்கு மேலிருக்கும். ஆனால் பிரபஞ்ச அளவிலான இந்த வளைவு ஒரு தச்சன் அளப்பதற்கு பயன்படுத்தும் நேர்கோடுகளை இல்லாமலாக்கிவிடுவதில்லை. செவ்வியற்பியல் இன்னும் தினசரி வாழ்வில் சரியாகவே செயல்படுகிறது.
ஏதோ ஒரு புள்ளியில் நாம் இவ்விரண்டையும் தொடர்புறுத்தவேண்டும்: பிரபஞ்ச அளவில் உண்மையான ஒன்று ஒரு வகையில் உண்மையாக இல்லை, ஒரு குறிப்பிட்ட வகையில் உண்மையான ஒன்று பொதுவான உண்மையாக இருப்பதில்லை. நம்மைச் சூழ்ந்துள்ள பேரண்ட உலகை நாம் கணிதம் மூலமே அறியமுடியும். அதை அணுக வேறு வழியே இல்லை. அதில் உள்ளவை சிலதை நாம் பார்க்க முடியும். ஆனால் அதை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் கணக்கீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் நம்மால் காணவே முடியாத நுண்ணுலகம் உள்ளது. அதையும் கணிதம் மூலமே நாம் அறியமுடியும். ஒரு உயிரணுக்கோலை நுண்ணோக்கியைக் கொண்டே காணமுடியும். அதற்குள்ளிருப்பது, ஒவ்வொரு இழையிலும் இருபது பில்லியன் நியூக்ளியோடைடு இணைகளைக் கொண்ட டிஎன்ஏ. அதனை கற்பனை செய்து பார்ப்பதே இயலாது என்றாலும் அறிவியலாளர் அதனை தகவமைக்கத் துவங்கிவிட்டனர்.
உலகம் பேருருக் கொண்டதாய், செயலறிவு சார்ந்ததாய், மீநுண்ணியதாய் பிரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பார்வையை நீங்கள் எங்ஙனம் அடைய முடியும்? நாராயண குரு இங்கே கோருவது ஒருங்கிணைந்த பார்வையை அல்ல, ஒருமித்த [ஒன்றென உணரும்] பார்வையை. ’ஒருங்கிணைந்த’ எனும்போது, ஒன்றை இன்னொன்றோடு இணைத்து ஒரு ஒட்டுமொத்த பார்வையை பெறுவது. ஒருமித்த பார்வை என்பதோ அகம் வழியே அனைத்தையும் ஒரு விழிப்புணர்வாய் ஒரு அனுபவமாய் காண்பது. அப்போதுதான் நீங்கள் மூவகை இயல் உலகின் எல்லைகளையும் கடக்கிறீர்கள். புறவுலகு என்று நீங்கள் சொல்வது மூன்று பிரிவுகளாக பகுக்கப்பட்டது. நம் அகத்தில் இது குறித்த ஒருமித்த புரிதல் இருக்குமென்றால் எல்லா தனித்துவங்களும் மறைந்துபோகும்.
அகம்சார் நனவுநிலையிலும் மூன்று உளவியல் தடைகள் உள்ளன. ‘நானறிகிறேன் என நான் அறிகிறேன்’ என்பது முதலாவது. நான் எப்படி அறிகிறேன் என்பது இரண்டாவது. நீங்கள் எல்லோரும் இங்கிருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் ஒவ்வொருவரும் யார் என்பதையும் நானறிவேன். மூன்றாவதாக, உங்களில் பணிபுரியக்கூடிய ஒருவரும் இன்று இங்கே இருப்பதால் நான் மகிழ்கிறேன் என்பதையும் நானறிகிறேன். இம்மூன்றும் எனது அக அனுபவத்தில் உறைகின்றன. ஆக உலகம் அண்டம்சார்ந்தும் உளவியல் சார்ந்தும் பிரிக்கப்பட்டிருப்பதோடு புறவயமாகவும் அகவயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கடந்துசெல்வது எங்ஙனம்?
இன்று நீங்கள் உங்களை தயார் செய்துகொள்ளலாம். ஆனால் அது கடந்தநிலைக்கான ஒரு பாவனை மட்டுமே. இந்த பாவனை என்பதை எதிர்மறை பொருளில் கொள்ள வேண்டியதில்லை. போப்பாண்டவர் செய்வது பாவனைதான். ஏனெனில் அவர் இன்னும் சிலுவையிலறையப்படவில்லை. ஆனால் அவர் செய்வது பாசாங்கும் அல்ல. திருத்தூதரின் நிலையை அடைய அவர் முயல்கிறார். அவர்களது மனநிலையைப் பெற்று இறையாணைகளை ஏற்று இறையோடு ஒன்ற விழைகிறார்.
இந்தியாவில் ஒளியும் நிழலும் கொண்ட ஒரு படிமத்தை பயன்படுத்துகிறோம். அறிபவன், அறியப்படுவது, அறிவு என்னும் முப்பிரிவுகளின் நிழல்களை ஒளி விலகச்செய்கிறது. இம்மறை உண்மை கபடமுனி என்னும் பாசாங்கு செய்பவனுக்கு தெரிவதில்லை. வடமொழியில் ‘படம்’ என்பது துணியையும் ‘க’ என்பது ‘என்ன’ அல்லது ‘ஏன்’ என்பதையும் குறிப்பன. “இவ்வுடையை ஏன் அணிகிறீர்கள்?” என்று மக்கள் வினவக்கூடும்.
”நான் ஒரு யதி என்பதால்” என்று நான் பதிலளிக்கிறேன்.
”மென்மஞ்சளாடை அணிவதாலேயே நீங்கள் யதியாகி விடுகிறீர்களா?” உங்கள் உடையால் மட்டுமே நீங்கள் யதி என்றால் அதில் எந்தப் பொருளுமில்லை. ‘படம்’ (உடை) காரணமாக துறவியாகின்றவர் புறக்கூறுகளில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவருக்கு எந்தவிதமான ‘அறிதலு’ம் நிகழ்வதில்லை. உடையால் துறவியானவரைப் பற்றி நாம் இழிவாகக் கூறவில்லை. அவர் இன்னும் வந்துசேரவில்லை. வந்துகொண்டிருக்கிறார்; வரிசையில் உள்ளார். ஒருவர் அவ்வழியில் மெல்ல மெல்ல முன்னேறுகிறார்; ஒருநாள் ஒருமித்த புரிதல் அவர் உள்ளிலிருந்து நிகழும்.
எப்போதாவது அறிவியலாளர் இயலாத சிலவற்றை கண்டடையக்கூடும். ஒளியானது ஒரே சமயத்தில் துகள்களுடையதும் அலைகளுடையதுமான பண்புகளை காட்டக்கூடும். துகள்போன்ற அலைகளால் ஆனதென்றோ அலைபோன்ற துகள்களால் ஆனதென்றோ அதை நாம் சுட்டுவோம். அலைபோன்ற துகள் எனும்போது இருவேறுபட்ட கருதுகோள்களை உங்கள் எண்ணத்தில் நீங்கள் இயலாத வகையில் இணைத்துப் பார்க்கவேண்டும். ஒன்று எப்படி துகள்போன்ற அலையாகவோ அலைபோன்ற துகளாகவோ எப்படி இருக்கமுடியும்? ஆனால், குவாண்டம் இயற்பியலை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த இயலா நிலைபாட்டை நீங்கள் ஒப்புக்கொண்டேயாக வேண்டும். இல்லையெனில் இதை ஒப்புக்கொள்ளா துகள் இயற்பியலாளர் என்றும் அலை இயற்பியலாளர் என்றும் இரு அணிகள் இருக்கவேண்டும். இயற்பியலுக்கு ஒருமித்த தரம் இருக்கவேண்டுமென்றால் அவர்கள் அலை துகள்போன்றதென்றும் துகள் அலைபோன்றதென்றும் ஒரு சமரசத்திற்கு வரவேண்டும். இந்த இணக்கம் என்பது சொற்களில் மட்டுமே. சதுர வட்டம்? ஆம், சதுரம்போன்ற வட்டம், வட்டம்போன்ற சதுரம். இவையெல்லாமே வெறும் அறிவுசார் விளையாட்டுக்கள் மட்டுமே.
இங்கு நாம் நமது கருதுகோள்களையெல்லாம் மாற்றி ஒரு அறிவுசார் விளையாட்டை மேற்கொள்ளும்படி கோரப்படவில்லை. மாறாக புற உலகின் ஒருமையையும் அக உலகின் ஒருமையையும் உள்ளிலிருந்து உணரவேண்டும் என்பதே நோக்கம். இவ்விரு ஒருமையும் ஒரு மறைமெய் நிலையில் மட்டுமே அறியக்கூடுவன. அறிவுபூர்வமாக அடையப்படக்கூடியவை அல்ல. அடுத்த பாடலில் நாராயணகுரு ஒரு மறைமெய் நிலையைப் பற்றி கூறுவார். இப்போதைக்கு நாம் அதை ஒரு அகப்படிமமாக மட்டுமே உணரமுடியும். ஒருநாள் நீங்கள் அதை மெய்யாகவே அடையக்கூடும்.
உங்களிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? ஒரு யதியாக, முனியாக ஆவதற்கு சில வழிமுறைகளை நமக்கு அளித்துள்ளனர் அறிவோர். ஒன்று ‘அமான்விதம்’ – “நான் உன்னைவிட சிறந்தவன்” என்று நீங்கள் சொல்லாத நிலை. ஒரு அளவுகோலைக் கொண்டு உங்களை அளந்தபின் ஒவ்வொருவராக பிறரை அளந்து வேறுபாடுகளை ஆராயும்போது உங்களிடம் ஒரு மேட்டிமை கூடுகிறது. இது ஒருமித்த தரிசனத்திற்கு எதிரானது. உங்களை ஒரு தனித்த இருப்பாக நினையாமல் பொதுமையில் ஒரு பகுதி என்று உணரவேண்டும். அதுவே அமான்விதம்.
அதம்பித்வம் என்பது இன்னொரு கருத்து. அவ்வப்போது ‘என்னால் இதை செய்ய முடியும்’ என்ற ஒரு தற்பெருமை நமக்கு உண்டாகிறது. இந்தப் பெருமிதத்தை நாம் துறக்கவேண்டும். அடுத்ததாக க்ஷாந்தி – பொறுமை. நாமெல்லோரும் இருளில் வாழ்கிறோம். இருளில் அலையும் நாம் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்ள நேரும். அதற்காக எரிச்சலடையாதீர். பொறுமையை கடைபிடியுங்கள். அதை எளிதாக நினையுங்கள். அடுத்து ஆர்ஜவம். மனதை நேராக்குங்கள், விழிப்புடன் இருங்கள், நிமிர்ந்திருங்கள். மெய்மை என்று வரும்போது எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்காதிருங்கள். அறிவுபூர்வமாக மெய்மை பாராட்டுவதோடு உணர்வுரீதியாக அதை காக்கவும் வேண்டும். இந்த நேர்மையை வளர்த்துக்கொள்வதே ஆர்ஜவம்.
அடுத்து சாமதானம்: உங்கள் வாழ்வில் நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையில் செல்லுங்கள். எந்த கவனச்சிதறலும் வேண்டாம். மனம் தரும் தொந்தரவுகளை கணக்கில் கொள்ளாதீர்கள். அகப்புறத் தொல்லைகளால் நீங்கள் எந்த பாதிப்பும் அடையக்கூடாது. நீங்கள் வளர்த்துக்கொள்ளும் ஆர்வம் அனைத்தையும் நிறைவடையச் செய்வதாய், உங்கள் வாழ்வின் மொத்த இன்பமும் அதில் இருப்பதாய், ஒவ்வொரு கணத்தையும் பொருள் கொள்ளச் செய்வதாய் இருக்கட்டும். உங்களை எந்த மெய்மைக்கு அர்ப்பணம் செய்தீர்களோ அது உங்கள் பகலையும் இரவையும் இன்பத்தால் நிறைக்கும். இதில் தவறுகளோ தோல்விகளோ நேர்ந்தாலும் அவற்றை எதிர்கொள்ளுங்கள். உங்கள் மையத்திலிருந்து விலகாதீர்கள். உறுதியுடன் இருங்கள். இதை செய்யவேண்டுமென்றால், உங்கள் நோக்கம் என்ன என்பதிலும் அதற்கென நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியை குறித்தும் நீங்கள் தெளிவாக இருத்தல் வேண்டும். இதை செய்யும்போது இயற்கை தன் பெருங்கருணையால் உங்களுக்கே என தரும் பங்கினை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பிறரிடமிருந்து எதையும் பறித்துக்கொள்ளாதீர்கள். வாழ்வை அனைவருடனும் கச்சிதமாக பகிர்ந்து கொள்ளல் வேண்டும். மொத்த உலகுடனும் பகிர்ந்து வாழும் ஒரு வாழ்க்கை முறைக்கேற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். முழுமையான் ஒத்துழைப்பு நல்கப்படும். உங்களது மகிழ்வில் அனைவருடைய மகிழ்வையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் மகிழ்வையே மிதித்துச் செல்லாமலிருங்கள். பிறருடைய நண்பனாய் இருப்பதுபோலவே உங்களுக்கே நீங்கள் நண்பனாய் இருங்கள். உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு சுய பகைமையை வளர்த்துக்கொள்ளாதீர்கள். பிறரோடும் பகைமை இல்லை; தன்னுடனும் பகை இல்லை. உலகு உங்களுக்கு தொல்லை தர அனுமதிக்காதீர்கள்; உலகை நீங்கள் தொந்தரவு செய்யாதீர்கள். மேலும் மேலும் ஒத்திசைவை நோக்கி செல்லுங்கள்.
ஞானிகளான நம் முன்னோர் வேதம், கவிதை, இலக்கியம், வரலாறு என தமது ஞானத்தை பதிவு செய்து தொடர்ந்து நம்முடன் பகிர்ந்துகொண்டே உள்ளனர். அவர்களிடமிருந்து ஒளியை பெறுங்கள். சில மணிநேரங்கள் படித்து, எண்ணியிருந்து, தியானித்து பயனடையுங்கள். இவ்வழிகள் எல்லா மதகுருக்களாலும் ஏதோ ஒரு வழியில் அளிக்கப்பட்டுள்ளன. நம்மிடம் அறிவுரைக்கு பஞ்சமில்லை. நம் மேசைகளை ஒழித்து எல்லாவற்றையும் அதனதன் இடத்தில் வைத்து தொடங்கவேண்டியதுதான். அதன் பின்னர் நாளும் வளர்ச்சிதான்.
பழங்காலத்தில் நேர்மையாளனை கண்டுகொள்ள ஒரு வழி இருந்தது. அரசனுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தப்படும் கள்வன், கனலும் மழுவை கையால் எடுக்கும்படி பணிக்கப்படுவான். அவன் நேர்மையானவன் என்றால் அது அவனை சுடாது; திருடன் என்றால் எரிக்கும். சாந்தோக்கிய உபநிடதம் இதை மெய்மைக்கான ஒரு தேர்வாக கூறுகிறது. உண்மை என்பதும் பொய்மை என்பதும் அகச்சார்புடையவை. ஆனால் கனலும் இரும்பை பிடிப்பதென்பது புறவயமானது. ஆயினும், அகவய உலகையும் புறவய உலகையும் ஒன்றாய் ஆளும் ஒரு மெய்மை உண்டெனவும் ஒருவன் உண்மையானவனாக இருந்தால் அவனுக்கு எதுவும் நேராது எனவும் ரிஷிகள் நம்பினர். அது ஒருமைகூடிய பார்வை. நமக்கு அது அபத்தமானதாக தோன்றலாம். ஆயினும், இன்றும் எரிபடாமல் நெருப்பில் நடப்போர் உள்ளனர். உடலியல் மாற்றங்கள் உளவியல் மனோபாவம் காரணமாக வரக்கூடும். மனமும் உடலமும் அவற்றை இணைக்கும் சக்திவாய்ந்த வேறொரு நிலையால் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன.
பிருகதாரண்யக உபநிடதம் சத்யம் என்பதற்கு உண்மை என்று பொருள் கூறுகிறது. ச, த, ய என்னும் மூன்று உறுப்புகள் கொண்ட சொல். ‘ச’ என்பதும் ‘ய’ என்பது இருப்பதை குறிப்பன; ‘த’ என்பது இல்லாததை குறிப்பது. ஆக, இருபுறமும் மெய்மை இருக்க நடுவே மெய்யின்மை உள்ளது. சத்யம் என்ற சொல்லே மெய்மை இருபக்கமும் இருக்க நடுவே மெய்யின்மை இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் மெய்மை இருக்கும்போது மெய்யின்மை அங்கு இருக்கமுடியாது, ‘ஆகவே கவலைப்படாதே!’ என்கிறது அச்சொல். அதேபோல்தான் நம் உலகும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரும் மெய்மை (அங்கே-புறத்தே) இருக்கிறது; நமக்குள்ளும் ஒரு பெரும் மெய்மை உள்ளது. நமது அன்றாட வாழ்வில் நிகழக்கூடிய எந்த மெய்யின்மையையும் இவ்விரண்டு மெய்மைகளும் இல்லாமலாக்கிவிடும்.