முக்குணமும் திருநீறணிந்த ஓர் ஈசனுக்கு
அகமலரிட்டு வணங்கி புலனின்பம் விலக்கி
அனைத்தும் ஒழிந்து தணிந்து தனிமையின்
உயர்வும் போய் பேரொளியில் நின்றிடவேண்டும்
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 13)
இப்பாடலில் இடம்பெறும் தியானமே உலகின் அனைத்து பெருமதங்களிலும் போதிக்கப்பட்டு விவாதிக்கப்படுவது. செமிடிக் மதங்களில் இது மனிதனின் கவனத்தை திருப்பி அவனை தன் ஆன்மீக இயல்பிலிருந்து விலக்கி புற உலகின் பொறிகளில் சிக்கவைக்கும் வெளித் தூண்டலாக சொல்லப்படுகிறது. சிலகாலம் இதில் திளைத்துவிட்டு நாம் விழுந்துவிட்டோம் என்பதை கண்டடையும் அவன் பெரும்துயரில் மூழ்குகிறான். தன் தெய்வீகத் தன்மையை மீண்டும் பெற விழைந்து தூண்டல்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மீண்டும் அதை எய்துகிறான். இதுவே வீழ்ச்சி-கழிவிரக்கம்-திரும்புதல் எனப்படுவது. வீழ்ச்சி என்பது இயல்பான தெய்வீகத்தன்மையிலிருந்து வீழ்தல். கழிவிரக்கம் தற்போதைய நிலைக்காக வருந்துதல். அடுத்ததாக புலனின்ப உலகிலிருந்து ஆன்மாவின் உலகிற்கு ஒரு புனிதப்பயணம் மேற்கொள்கிறீர்கள்.
இதே பேசுபொருள் சங்கரரின் பெரும்படைப்புகளில் ஒன்றான சௌந்தர்யலஹரியில் மிக அழகாக ஒரு உருவகமாக இடம்பெறுகிறது. அதில் இயற்கை படைப்பின் பெரும் தெய்வீக அவாவாக, பலவற்றையும் பெற்றெடுக்கும், பெரும் படைப்பூக்கம் கொண்ட அன்னையாக கருதப்படுகிறது. அவள் தேவி எனப்படுகிறாள். தேவ என்பது ஒளியென பொருள்படுவது. ஒளியேயானவன் தேவனெனப்படுகிறான்; அதன் பெண்பால் வடிவம் தேவி. ஆக தேவியே அனைத்துப் படைப்புகளுக்கும் அன்னை. இது கவிதை சுதந்திரம்தான். உண்மையில் அனைத்தையும் படைத்தளிப்பவர் என்று எவரும் இல்லை. ஆனால் பிரபஞ்சமனைத்தையும் படைப்பூக்கத்தின் ஒரு தெய்வீகமான அறிவுத்திறமாக கொள்ளலாம்.
இந்தியத் தொன்மவியலில் படைக்கும் அன்னையின் பாத தூளியை போற்றுபவர் படைப்புக்கு தெய்வமான பிரம்மா. இந்த தூளியே பல வடிவங்களில் உருவெடுக்கும் இருத்தல். இந்த ஒன்றைப்பற்றி அறிதலே படைக்கப்பட்ட ஒன்றிற்கும் பிறிதொன்றிற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. பல நிலைகளில் படைப்பு மெய்ப்பிக்கப்படுகிறது. வேதிநிலையில் மூலக்கூறு செயல்பாடுகளாகவும், வேதிச் சேர்மங்களாகவும், பல வடிவான கலவைகளாகவும் காணப்படுகின்றது. இயற்பியல் நிலையில் பருவடிவ அமைப்புகள் கொண்டு புவியீர்ப்பு, மின்காந்தப்புலன்கள் மற்றும் வெப்பவிசையால் இயக்கப்படுகின்றது. உளவியல் நிலையில் படைப்பு என்பது பரஸ்பர ஈர்ப்பு மற்றும் வெறுப்புகளால் புலனாகிறது.
படைப்புக்கு சத்வ ரஜஸ் தமஸ் எனும் முக்குணங்களும் தேவை. சத்வம் இருப்பை தெளிவாக காட்டும் திறம். ரஜஸ் என்பது இயக்க ஆற்றல், விசை, செயலை தூண்டுவது – ஆக்கலையும் அழித்தலையும் செய்யும் ஆற்றல். தமஸ் என்பது படைப்பை நிலைநிறுத்தும் திண்மையாக்கும் ஜட ஆற்றல். புராண மரபில், படைப்பவன் முக்குணங்கைளையும் கொண்டு முழு உலகையும் படைக்கிறான். இச்செயலை தத்துவமாக புரிந்துகொள்வீர்கள் என்றால், புறத்தில் உள்ள படைப்பாளியைப் பற்றி நீங்கள் எண்ணவே தேவையில்லை. நம் அகமே படைப்பாளி. தனக்கு எதையும் படைத்தளிக்கும் திறன் கொண்டது அது. ஒன்று அளிக்கப்படும்போது உணரப்படும்போது அது இருக்கிறது. ஆக, அகம் இருப்பின் வடிவங்களை ஒன்றன்பின் ஒன்றாய் படைக்கிறது.
ஒன்றன் இருப்பை படைத்தபின் அகம் நோக்கிநிற்பவனின் செயலை செய்கிறது. படைப்பு நோக்கப்படுவதாகிறது. பார்ப்பவனுக்கும் பார்க்கப்படுவதற்கும் இடையே ஒரு தொடர்பு கட்டவிழ்க்கப்படுகிறது. ‘நான் அறிபவன்’ என்றெண்ணுகிறது அகம். அறியப்படுவதன், பார்க்கப்படுவதன் மீது ஒரு பிணைப்பு தோன்றி ‘நான் துய்க்கிறேன்’ என்று அறிகிறது. அதே அகம்தான் அது. அங்கே ஒரு தன்முனைப்பு மையம் உள்ளது. சூழலை அது அளக்கிறது, மதிப்பிடுகிறது. ‘நான் அறிபவன், அதை துய்ப்பவன், நான் இன்பத்தை நாடுகிறேன். இன்னும் தோன்றாததில் எது இன்பம் தருவது என நானறிவேன். அதை மெய்மையாக்க விழைகிறேன்’ என்கிறது. இங்கே நடிப்பவனின் நிலையையும் அதே தன்முனைப்பு அடைகிறது.
“நோக்கிநிற்பவன் நானே; நடிப்பவன் நானே; மகிழ்பவன் நானே.” இம்மூன்றும் ஒன்றாகும்போது நா ஒரு ஒற்றை ஆர்வ உலகில் இருக்கிறோம். ஓர் ஆர்வம் சில சமயங்களில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே நீடிக்கும், சில சமயம் இரண்டு நிமிடங்கள்; ஒரு நாள் முழுக்க, சில நாட்கள், மாதங்கள் ஏன் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். அதன் நீளம் வேறுபட்டாலும் நாம் ஒரு ஆர்வத்திலிருந்து மற்றொன்றிற்கு ஒருதொடர் வரிசையில் சென்று கொண்டிருக்கிறோம். இது சங்கரரின் சௌந்தர்யலஹரியில் பிரம்மன் முக்குணங்களிலிருந்து படைத்த பல உலகங்களாக உருவகிக்கப்படுகிறது. நம் வாழ்வில் நாம் இதை புரிந்துகொள்ளும்போது நம் அகமே இம்முக்குணங்களிலிருந்து உலகங்களை ஒவ்வொன்றாக படைக்கும் படைப்பாளியாகிறது.
சங்கரர் இரண்டாவது உருவகம் ஒன்றை பயன்படுத்துகிறார். காக்கும் கடவுல் விஷ்ணு, அவர் துணை ஶ்ரீ எனும் லக்ஷ்மி. இங்கே கடவுள் என்பது நம் அகத்தில் உள்ள ஆர்வங்கள் மட்டுமே. ஓர் உலகம் படைக்கப்படும்போது, அதில் ஓர் ஆர்வம் இருத்தல் வேண்டும், அதனுடன் உங்களை பிணைக்கும் ஒரு மையக் களிப்பு இருத்தல் வேண்டும். கவர்ச்சியுடன் மின்னும் ஒரு மதிப்பு தேவை. நம் ஆர்வத்தை சுண்டி இழுக்கக்கூடிய ஒளிரும் மதிப்பு இங்கே லக்ஷ்மிதான்.
எடுத்துக்காட்டாக, காலை சிற்றுண்டியை பார்ப்போம். அதன் சுவையும், அன்புடன் பரிமாறப்படும் விதமும் உங்களது பசியுடன் சேர்ந்து ஒரு அருமையான அனுபவமாகிறது. உண்டு முடித்தபின் அதில் உள்ள மதிப்பு, கவர்ச்சி எல்லாம் போய்விடுகின்றன. இப்போது பசி ஆறிவிட்டது. நாள் முழுவதும் உங்களால் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருக்க முடியாது. ஓருலகின் மதிப்பு எவ்வளவு பெரியதாயினும் அது நீண்டநேரம் நீடிக்க முடியாது. வேறொன்று உங்களுக்காக காத்திருக்கிறது – அலுவலகப்பணி, பள்ளி, நண்பர்கள், இன்னும் பிற. காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கு வேலைப்பளு அதிகம் என்கிறார் சங்கரர். ஆர்வம் ஒவ்வொன்றையாக உங்களுக்கு அளித்துக்கொண்டேயிருக்க வேன்டும் அவர். எப்படியோ, அனந்தம் என்னும் இம்முடிவிலியை – கோடிக்கணக்கான உலகுகளை அவர் காக்கிறார். ஆர்வங்களின் உலகுகள் முடிவற்றவை.
அகம் படைப்பது எதுவானாலும், பல்வேறு பண்புகள் அளிக்கும் மதிப்புகள் எதுவானாலும் காலம் அவற்றையெல்லாம் விழுங்கிவிடுகிறது. எனவேதான் சங்கரர் ஒப்புயர்வற்ற பரம்பொருளை இவ்வுலகனைத்தையும் தன் உள்ளங்கையில் நொறுக்கி எரித்து சாம்பலாக்கும் பேரிறை என்கிறார். அந்த இறை அச்சாம்பலை தன் மேனி முழுவதும் பூசிக்கொள்கிறது. பெரும் மெய்மை என நாம் காண்பது அனைத்தும் கடந்த இறையின் மேல் பூசப்பட்ட சாம்பல் மட்டுமே. தோலாழம் கூட கொண்டதல்ல அது.
உங்களில் உள்ள துய்க்கும் அகம் பல கவர்ச்சிக் கருத்தாக்கங்கள் கொண்டது, ஆனால் நீங்கள் உங்களது அக மெய்மையை நோக்கி திரும்பும்போது இவையெல்லாம் பொய்யாகின்றன. அக்கணத்தில் நீங்கள் திரும்பத்தொடங்குகிறீர்கள். மெய்யல்லாததிலிருந்து மெய்மையை நோக்கிய ஆன்மீகப் பயணம் அது. உங்கள் புலன் சார்பிலிருந்து தெய்வீக மையம் நோக்கிய பயணம். இது எப்போது நிகழ்கிறது? ஒவ்வொரு நாளும், எல்லா நேரமும், நமது புலன்கள் எல்லாம் பொருள்களை நோக்கி ஈர்க்கப்படும்போதெல்லாம் ஒரு பெரும் மனவெழுச்சி ஏற்படுகிறது. இந்தத் தருணத்தில்தான், நாம் எப்போதும் செய்வதுபோல புறவயமான சூழ்நிலையுடன் நமது மனவெழுச்சியை அடையாளப்படுத்தாமல் நம் ஆன்மீக அகத்தின் மையக்கருவை நோக்கி திருப்ப வேண்டும். அழகான பொருளொன்று உங்களை கவரும்போதெல்லாம் நீங்கள் இரப்பவராக, அருவருக்கத்தக்க ஏழையாக, ஆசையால் பீடிக்கப்பட்டு அதற்காக கையேந்தி அழுகிறீர்கள். பரிதாபத்திற்குரியவராகிறீர்கள். அது உங்களுக்குக் கிடைத்ததும் இச்சிறு பொருளுக்கா நாம் இத்தனை நேரத்தை வீணாக்கினோம் என்று உணர்கிறீர்கள். அது உங்களுடையது என ஆனபின் அதை ஒருபுறமாக ஒதுக்குகிறீர்கள்.
நானும் சிலபோது இதையே செய்கிறேன். Book-of-the-Month Club–இலிருந்து வரப்போகும் பெரிய புத்தகத்திற்காக காத்திருப்பேன். அதன் வரவை எதிர்நோக்கி பெரும் ஆவலோடிருப்பேன். அது வந்தவுடன், “ஆஹா, அருமை! அலமாரியில் வை” என்பேன். அதை படிக்கிறேனா? இல்லை, அதற்கு எனக்கு நேரமிருப்பதில்லை. வேறு வேலைகள் உள்ளன. அந்தப் பெரிய மதிப்பிற்கு, ஆவலுக்கு என்ன நேர்ந்த்து? அது அடுத்த மாத வரவுக்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த மாத புத்தகம் என்னுடையதாகிவிட்ட்து. எப்போது வேண்டுமானாலும் அலமாரியிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.
மனிதர்களிடையேயும் இது நிகழ்கிறது. நண்பனையோ, காதலனையோ, மனைவியையோ, கணவனையோ அடையும் முன்பாக, எப்படி நாம் இணையப்போகிறோம் என்றெண்ணி வருந்தி பல நாளும் இரவும் கழிகின்றன. பல சூழ்ச்சிகளும் தோரணைகளும் அரங்கேறுகின்றன. ஆனால் அவர்கள் உங்களுடையவர்களான பின்னரோ, அது இக்கட்டாகிறது. பெரும்பாலும் நீங்கள் மாட்டிக்கொண்டதாக உணர்கிறீர்கள், அடுத்தவரிடம் உங்கள் சாகசத்தை காட்ட முடியாமலாகிறது. புத்தகங்களைப் போல நண்பர்களை அலமாரியில் அடுக்குவது எளிதல்ல!
இறைவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்து அவர்களுக்கு ஏதன் தோட்டத்தையும் அளித்தான். அவர்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. பின்னர் அவர்களது கவனம் புலனின்பக் கனியை நோக்கி திரும்பியது. அவர்கள் அதை நுகர்ந்தனர். பின்னர் இரங்கத்தக்கவராக உணர்ந்தனர். தாங்கள் நிர்வாணமாக இருப்பதையும் ஆடையின் தேவையையும் சடுதியில் கண்டடைந்தனர். அக்கணத்திலிருந்து அவர்கள் அவமானம், அச்சம், ஏக்கம் என புறவயப்பட்ட நனவின் நோவுகளை உணர்ந்தனர். அதுவரை முழு விடுதலையுடன் பெரும் கரவின்மையுடன் வாழ்ந்தவர்கள் தேவைகளின் உலகில் நுழைந்து குற்றவுணர்வுக்கு ஆளாயினர். அவர்களது வழித்தோன்றல்கள் அவர்களுக்கு இறையால் வழங்கப்பட்ட பாரம்பரியத்திற்கு இன்னும் திரும்பவேயில்லை.
ஆகவே, ஏதோ ஒன்றை அடையும்போது பெறக்கூடிய இன்பத்தின் உச்சத்தில், அதனை ஒரு ஆன்மீக அனுபவமாக மாற்றிக்கொள்ளும்பொருட்டு, அடிப்படையான மையக்கருவோடு உங்களை தொடர்புறுத்திக் கொள்ளும்படி கோரப்படுகிறீர்கள். அந்த இன்பத்தை நீங்கள் அழிக்கத் தேவையில்லை. அதன் சாரத்தை அவதானித்தால் போதும். அந்த இன்பம் பொருளொன்றால் உண்டாக்கப்பட்டதல்ல; மாறாக உங்கள் தெய்வீக இயல்பின் அடிப்படையான பகுதியே அது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஒரு ஆளிலோ, மனதிற்குகந்த பொருளிலோ நாம் காணும் இன்பம் நம்முடையதேயான அகமெனும் இறையை, முழுமுதலை, தெய்வத்தை காணும் சாளரமொன்றை திறக்குமென்றால் ஒவ்வொன்றும் நம் அக ஆழமெனும் கருவறைக்குச் செல்லும் வாயில்கதவாகிவிடும். முதலிரு வரிகளில் இந்த முக்கியமான நிகழ்வினை விளக்கப்படுகிறது: “உங்கள் அகச்செயல்பாடுகளை மலர்களாக சேர்த்து உலகத் தேவைகளனைத்தையும் கடந்த மீமுதலுக்கு அவியாக்குங்கள்.”
எல்லாவற்றிலிருந்தும் விலகும்படியல்ல; எல்லாவற்றையும் கடந்துசெல்லவே கோரப்படுகிறீர்கள். ஆன்மீகப்படுத்தல் மூலம், எல்லாவற்றையும் இறைத்தன்மை உடையதாய் காண்பதன் மூலம் இது இயல்கிறது. பணிவுகூடிய பக்தி உங்களில் நிறைய வேண்டும். உங்களுடையதேயான, உங்களிலிருந்து தோன்றிய ஒரு குழந்தையின் முன் நீங்கள் நின்றிருக்கிறீர்கள். இந்த தரிசனத்தோடு நீங்கள் நோக்குவீர்களேயென்றால் வெறும் குழந்தையாக அல்லாமல் இறைத்தன்மை கூடிய ஒன்றை நீங்கள் காண்பீர்கள். இறையோடு நீங்கள் இணைவதை உங்களால் காணமுடியும்; அது உங்கள் உள்ளம் குழந்தையின் உள்ளத்தோடு இணையும்படி செய்கிறது. குழந்தை உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை காணமுடிகிறது. அந்த இணைவை நீங்கள் உணரும்போது அது ஒரு இடராக இராமல் ஒரு அர்ப்பணிப்பாக மாறுகிறது. நீங்கள் தளைக்கப்படுவதில்லை. அவ்வாறில்லையெனில், உங்கள் புலன்கள் உங்களை எதற்கெல்லாம் இட்டுச் செல்கிறதோ அவற்றால் எல்லாம் தளைக்கப்படுகிறீர்கள். உங்கள் மெய்மையோடு நீங்கள் இணைவதற்கு ஒரு பெரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறது. உங்களில் நிறையும் பக்தி உங்கள் செயலை அர்ப்பணிப்பாக்குகிறது. அது ஒரு சேவையாக, படையலாக, ஒப்புக்கொடுத்தலாக ஆகிறது.
’சகலம் அழிந்து’ என்பது இனி மனித உடலெனும் ஒரு ஓட்டுக்குள் சிக்கியவரல்ல என்பதை சுட்டுகிறது. நீங்கள் விரிவடைகிறீர்கள். அவ்விரிவு அனைத்தையும் நிறைத்து அனைத்தையும் அரவணைத்துக் கொள்கிறது. ஆன்மா எல்லாவற்றையும் சூழ்ந்துகொள்ள நீங்கள் அதனுடன் ஒன்றாகிறீர்கள். நீங்கள் இப்போது விடுதலை பெற்றவர், ஆன்மா விடுதலை பெற்றதால் உங்களுக்கும் விடுதலை.
இந்த ஒருமை உணர்வால் நீங்கள் கிளர்ச்சியடையும்போது சிலபொழுது நீங்கள் நகைப்புக்குரியவராகக் கூடும். நீங்கள் பெற்றதை அனைவருக்கும் அறிவிக்க விழைகிறீர்கள். அவர்கள் பின் ஓடி “நான் காண்பதை நீங்கள் காண்கிறீர்களா? நான் வழியை கண்டடைந்தேன். நான் அடைந்தேன். உங்களுக்கும் அது வேண்டும்” என்கிறீர்கள். நாம் இவ்வாறு செய்வதால் பிறருக்கு எந்தவிதத்திலும் பயன்படுவதில்லை. மாறாக, தொந்தரவு தருகிறோம். அமைதி! அதை ஆறவிடுங்கள்! நீங்கள் உணர்ச்சிவசப்பட இதில் ஏதுமில்லை. நீங்கள் மெய்யெனவே ஆகிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களால் கண்டடைய முடியுமென்றால் பிறருக்கும் அது இயல்வதே. அவர்களும் அச்செயலில் ஏற்கெனவே ஈடுபடத்தொடங்கியவர்தாம். அவர்களுக்குத் தேவையான நேரத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். அவர்களுக்கேயான வழியில் அவர்கள் செல்லட்டும். நீங்கள் பரபரப்படையவேண்டாம்.
உலகம் மேலும் சிறந்ததாக ஆகிறது. பேய்களால் நிறைந்த உலகம் இப்போது தெய்வீகம் கொண்டதாகிறது. தளைக்கப்பட்ட ஒருவர் விடுதலையாகிவிட்டார். ஆர்வங்களாலான உலகுகள் கனவுகள் போல வரும் போம். கனவுகள் போல அவை மகிழ்வுடன் துய்க்கப்படுகின்றன. கடந்துசெல்லும் ஒரு காட்சிக்குக் கூட அதற்கேயான மதிப்பை கொடுங்கள். பின்னர் உலகே உங்களுடையதாகிறது. கூடவே நீங்கள் அவற்றின் பின் உள்ள இறையோடு ஒன்றுகிறீர்கள். நிலைபேறான உலகிலேயே நீங்கள் கடந்தநிலையை அறிகிறீர்கள்.
இதுவே இன்றைய தியானத்திற்கான கரு. இவ்விடத்தை விட்டு அகலும்போது நாம் பல உலகாயத விஷயங்களில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு முறையும் ஆர்வ உலகொன்று படைக்கப்படும்போது அதை நோக்கி நீங்கள் எப்படி வருகிறீர்கள் என்பதையும் அதன் மைய ஆர்வம் என்ன என்பதையும் கவனியுங்கள். பின்னர் அது மறைந்து அதிலிருந்து வேறொன்று அதிலிருந்து பிறிதொன்று என நீங்கள் சென்று கொண்டே இருப்பதை பாருங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உலகில் நீங்கள் நுழையும்போதும் அதன் மைய விழுமியத்தை இறையோடு, எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் மெய்மையோடு இணைத்துப்பாருங்கள். இதுவே உங்களது புனிதப்பயணம். மாலையில் நாள் முழுதும் மலர்ந்து விரிந்த வடிவத்தை கவனியுங்கள். இடையறா வாழும் மெய்மை ஒன்றே இதன் அடிப்படை நோக்கம். உங்கள் அகத்தில் அதை விடாமல் எண்ணிக்கொண்டேயிருங்கள்.
//உங்களால் கண்டடைய முடியுமென்றால் பிறருக்கும் அது இயல்வதே. அவர்களும் அச்செயலில் ஏற்கெனவே ஈடுபடத்தொடங்கியவர்தாம். அவர்களுக்குத் தேவையான நேரத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். அவர்களுக்கேயான வழியில் அவர்கள் செல்லட்டும். நீங்கள் பரபரப்படையவேண்டாம்.//..
ஆஹா….இந்த வரிகள் ‘ இங்கிருக்கும் ஒவ்வொன்றும் அதன் மெய்மையை நோக்கிய பயணத்தில் இருக்கிறது’ என்கிற புத்த தரிசனத்தையும் இந்த சுலோகத்தில் கொண்டுவந்து இணைப்பதை காட்டுகிறது…